ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -8
(From the Book : அருளமுதம்)
- திரு. கர்மயோகி அவர்கள்
வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும், நமக்கும் உள்ள அர்த்தபூர்வமான தொடர்பினை உணர்ந்து அன்னை வழியில் நடப்பது :
ஆன்மீக அடிப்படையின்படி நாமும், நாம் வாழும் சூழ்நிலையும், பிரம்மம் என்றதனால் ஆனதே. மனிதனுடைய ஊனக் கண்ணுக்கே நாம் வேறு, எதிரில் உள்ள சுவர் வேறு என்றுத் தெரிகிறது. இரண்டும் பிரம்மத்தால் ஆனதே. இதுவே ஆன்மீக அடிப்படை.
புற நிகழ்ச்சிகள் அக உணர்ச்சிகளின் பிரதிபலிப்பே என்பது அன்னையின் வாக்கு. ஆன்மீகத் தெளிவுள்ள யோகி புற நிகழ்ச்சிகளைத் தம் உள்ளுணர்வால் தெரிந்துகொள்கிறான். இதை மனக்கண் (inner eye) எனலாம். முதிர்ந்த யோகிக்கு ஞானதிருஷ்டி இருக்கிறது. எதிர்காலத்தை அறிவதற்கும் அவர் தம்முள்ளே இருப்பதைக்கொண்டே தெரிந்துகொள்கிறார்.
சாதாரண மனிதனுக்குத் தன் உள்ளுணர்வு பெரும்பாலும் புரிவதில்லை. தனக்குள்ள அறிவின் திறனை மாணவன் தனக்குக் கிடைக்கும் மார்க்கைக் கொண்டுதான் புரிந்துகொள்ள முடிகிறது. சொந்தமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மாணவன் 9ஆம் வகுப்பு வரை கணக்கில் பொதுவாக பூஜ்யமும், சில சமயங்களில் 7, 8, 10 மார்க்கும் வாங்குவது வழக்கம். 10ஆம் வகுப்பில் புதிய ஆசிரியர் வந்தார். அவன் 92 மார்க் வாங்கி, இரண்டாம் மாணவனாக வந்தான். தனக்குள்ள திறமையை அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. மார்க் என்ற கண்ணாடி வளைவாக இருந்ததால் அவனது திறமையை
அது தலைகீழாகப் பிரதிபத்தது. தனக்குள்ள குறைகளை மனிதன் லேசாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவனது புற நிகழ்ச்சிகள் துல்லியமாக அவற்றைப் பிரதிபலிக்கும். புற நிகழ்ச்சிகளைக் கொண்டு தன்னை உணர மனிதன் ஆரம்பித்தால் அவனுக்குப் புரியாததே ஒன்றும் இருக்காது. தன்னைச் சரிவர புரிந்துகொள்பவனுக்குப் பிரச்சினை இருக்க முடியாது. அன்னையை வழிபட அதைவிடச் சிறந்த முறை ஒன்று இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் எந்த அளவு நாம் மனதில் அன்னையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரதிபலிக்கும்.
ஆறு மாதத்திற்கொருமுறை நாம் ஒருவர் வீட்டிற்குப் போவோம். ஒவ்வொரு முறையும் அங்கு வேறொருவரைச் சந்திப்போம். இதைத் தற்செயலாக நடந்ததாகக்கொள்ளலாம். அப்படிக் கொள்வதால் அந்த நிகழ்ச்சியில் பொதிந்துள்ள அர்த்தத்தை இழந்துவிடுவோம். ஏதோ அதில் ஓர் உண்மை பிரதிபலிக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், பிற்காலத்தில் வேறு சந்தர்ப்ப விசேஷங்களால் அவரும், நாமும் சேர்ந்து செயல்பட நேரிடும்பொழுது முந்தைய நிகழ்ச்சி இதைச் சுட்டிக் காட்டியது தெரியும். எந்த ஒரு செயலுக்கும் அர்த்தம் உண்டு. அதை நாம் புரிந்துகொள்ள முயல்வது நல்லது. 40 வயதிற்கு மேற்பட்ட பின் நம் இளம்வயது நிகழ்ச்சிகளை இன்று கூர்ந்து ஆராய்ந்தால், பின்வரும் நிகழ்ச்சிகளை முன் நடந்தவை அறிவுறுத்தியுள்ளது தெரியும்.
ஒருவர் தம் மாணவ நாட்களில் தம் அனுபவத்தைச் சொல்லும் பொழுது, "எனக்கு B.A. பாஸ் செய்யும்வரை ஒரு வகுப்பில்கூட நல்ல ஆசிரியர் அமைந்ததில்லை. பள்ளியில் இருப்பதிலேயே சொத்தையான ஆசிரியரே அமைவது வழக்கம்'' என்றார். அவர் ஆசிரியரானார். அவரும் சொத்தை ஆசிரியராக ரிடையர் ஆனார். மற்றொருவர் சாதாரண பள்ளிகளிலும், பிரபலம் இல்லாத கல்லூரிகளிலும் பயின்றவர். ஸ்தாபனத்தில் உள்ள சிறப்பான ஆசிரியர்கள் எனக்குத் தவறாது கடைசிவரை அமைந்தார்கள் என்றார். பிற்காலத்தில் இவர் சிறந்த கருத்துகளை, உயர்ந்த முறையில் பலருக்குச் சொல்லக்கூடிய நிலைக்கு வந்தார். மனம் போல் மாங்கல்யம் என்ற வழக்கில் இந்த உண்மை தெரிகிறது.
ஒரு கல்லூரி ஆசிரியர் இலட்சியவாதி, தேசீயவாதி, நிறையப் படித்தவர். பெரிய லைப்ரரியை வீட்டில் வைத்திருப்பவர். நேருவின் (Glimpses of World History) புதிய பதிப்பு வந்தவுடன் ஆர்வமாக அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். இவர் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதி. 3 பக்கம் படித்தவுடன் தவறான செய்தி வந்தது. புத்தகத்தை மூடிவிட்டு, செய்தியை நாடிச் சென்றார். "அந்தப் புத்தகத்தை எப்பொழுது எடுத்துப் படித்தாலும் ஏதாவது தவறான செய்தி வருகிறது. 20 பக்கத்திற்கு மேல் நான் படிக்கவில்லை. என் பகுத்தறிவு மனச்சாட்சி என்னை உறுத்துகிறது'' என்று நண்பர்களிடமும், மேடையிலும் பேசுவார். ஒரு முறை புத்தகத்தை எடுத்து, இம்முறை முடிக்காமல் வைக்கப்போவது இல்லை' என்று திடமாக உட்கார்ந்தார். தந்தி வந்தது. ஒரே தம்பி, 32 வயதான இன்ஜீனியர் விபத்தில் மாட்டி இறந்துவிட்டான் என்றது செய்தி. "இனிமேல் எனக்கு ஆராய்ச்சியும் தேவையில்லை. பகுத்தறிவும் தேவையில்லை. இந்தப் புத்தகத்தை இனி தொட மாட்டேன்'' என்றார். எது உண்மையோ, இல்லையோ, அந்தப் புத்தகத்திற்கும், அவருக்குக் கிடைத்த செய்திக்கும் தொடர்புண்டு. இந்தத் தொடர்பே நமக்கு முக்கியம். தொடர்பை அறிவது அவசியம். அதன் மூலம் நம்மை அறிவது பலன் தரும். எதிர்ப்பார்த்தால் நடக்காது. இச்சை அற்றுப்போனால் சித்திக்கும் என்பவை நம் பழக்கத்திலுள்ள கருத்துகள். அவற்றின் உண்மையை நாம் அனுபவத்தில் அறிவோம்.
பலன் கருதாது கடமையைச் செய்ய வேண்டும் என்பது கீதை. பலனை மறந்து காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டால் கிடைக்கும் பலன் அபரிமிதமானது என்பது அனுபவம். பலனை மறந்து, காரியத்தைச் சமர்ப்பணம் செய்து, அன்னை நினைவுடன் தன்னை மறந்து செயல்பட்டால், உள்ளே ஆனந்தம் பிறக்கும். காரியம் வெற்றியா,
தோல்வியா எனக் கேட்க வேண்டாம். பருத்தி புடவையாகக் காய்த்தது போலிருக்கும் பலன். புற நிகழ்ச்சி அக உணர்வை முழுவதுமாகப் பிரதிபலிக்கின்றது. திறமையாகச் செயல்பட்டால் முழுமையான பலன் கிடைக்கும். கடமையை மட்டும் கருதிச் செயல்பட்டால், பலன் அடுத்த உயர்ந்த கட்டத்தில் கிடைக்கும். கடமையையும் சமர்ப்பணம் செய்து செயலாற்றினால், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இந்தச் செயல் அழைத்துச் செல்லும். ஒருவர் பரிசை நாடிப் போனார். அவருக்கே பரிசைக் கொடுப்பதாகக் கமிட்டி ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அவர் பதட்டத்துடனிருந்தார். கடைசிக் கட்டத்தில் அவர் பெயரை அடித்து, கமிட்டியின் சிபாரிசைப் புறக்கணித்து வேறு ஒருவருக்குப் பரிசளித்தனர். அவர் பரிசை மறந்தார். தமக்குரிய மற்றக் கடமைகளில் ஈடுபட்டு சிறப்பாகச் செயலாற்றினார். ஒரு முறை இரவு வெகுநேரம் கண் விழித்து காரியங்களை முடிக்கவேண்டிய சமயம். அர்த்த இராத்திரியில் கதவைத் தட்டி, "உங்களுக்குப் பரிசளித்தாய்விட்டது. எந்நேரமானாலும் சொல்லவேண்டுமென வந்தேன். சென்ற ஆண்டு தவறியது இந்த ஆண்டு கிடைத்தது'' என்று வீடு தேடி வந்தது செய்தி. மேலும் அவர் கடமைகளை அர்ப்பணித்துச் செயல்பட ஆரம்பித்தார். பரிசளிக்கும் கமிட்டி மெம்பர் பதவி அவரைத் தேடி வந்தது. மனநிலையை வெளி நிகழ்ச்சிகள் பிரதிபலிக்கின்றன.
விருப்பு, வெறுப்பின்றி நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் கூர்ந்து கவனித்து, நமக்கு வரும் கடிதங்கள், வரும் விசிட்டர்கள், நம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேயிருந்தால், இந்தத் தொடர்பு பூரணமாகத் தெரியவரும். அது ஒரு முழுமையான ஞானம் (total knowledge), நம் வாழ்க்கையின் எதிர்காலப் பாதையை வகுத்துக்கொள்ள உதவும். பிரச்சினைகள் ஏற்பட்டால், மனதில் எதை மாற்றி வெளியில் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என விளங்கும்; பிரச்சினைகள் விலகும்; வாழ்க்கை புரியும்; நம் கட்டுப்பாட்டில் வரும்.
மனதில் உள்ள அன்னை நினைவுக்குப் புற வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது பூரணமாகத் தெரியவரும். மானஸீக வழிபாட்டின் சிறப்பையும் அதனால் வாழ்க்கையில் ஏற்படும் பெரும் பலனையும் அறியலாம்.
மனத்தைத் தெளிவாக வைத்துக்கொள்ளுதல் சிறப்பு. மனத்தில் அன்னையின் நினைவை ஆர்வமாக, நிரந்தரமாக இருத்திக் கொள்ளுதல் உயர்வு. இந்த உயர்ந்த மனப்பான்மையை ஒரு முறை பூரணமாக ஏற்படுத்தி, சில நாள் அப்படியே தொடர்ந்தால், வாழ்க்கை இதுவரை நமக்களிக்காத பரிசுகளை எல்லாம் தொடர்ந்து, இனிமையாக வழங்கிக்கொண்டேயிருக்கும் என்பதைக் காணலாம்.
இதுபோன்ற நிலையில் மனம் நிலைத்து நிற்கும்பொழுது கண்ணில் படும் நிகழ்ச்சிகள், காதால் கேட்கும் சொற்கள், நம் இன்றைய மனநிலையையும், நாளை நடக்கப்போவதையும் பூரணமாக எதிரொப்பதைப் பார்க்கலாம்.
இந்த அறிவைப் பெற்றபின் எந்தப் புற நிகழ்ச்சியை, எந்த உள்ளுணர்வால் மாற்றலாம் என்பது தெரியும். மனமாற்றத்தால் நிகழ்ச்சி மாறுவதைக் கண்கூடாகக் காணலாம்.
இப்படிப்பட்ட ஞானத்தால் வழிபாடு செய்யவேண்டுமானால், அன்னையை என் உணர்ச்சிகளில் நான் பிரதிஷ்டை செய்கிறேன். அன்னை எனக்களிக்கும் வாழ்வை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்ற முடிவுக்கு வந்தால் வழிபாடு பக்தியாகும்; வாழ்க்கை ஒளிமயமாகும்.
----------------------------------------------------------
பிரச்சினைகளைத் தீர்க்கவும், வாய்ப்பைப் பெறவும், அன்னையின் அருளை அதிகமாகப் பெறவும் சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்துதல்.
ஆத்மாவை அடைய ஞானத்தைத் தேடுகிறோம். ஞானம் என்பது அறிவு; ஆனால் ஆத்மாவை அறியும் அறிவு. பூவுலகத்தில் பெறக் கூடியவற்றில் சிறந்தது ஞானம். அதனுடைய ஆரம்பத்தை ஞானோதயம் என்கிறோம்.
மகான்களுக்குரியது ஞானமானால், மக்களுக்குரியது அறிவு. எளிய பாஷையில் புத்திசாலித்தனம் என்பர். அன்னையை வழிபடுவதற்கு உரிய முறைகளில் சிந்தனை என்பதையும் நாம் ஒன்றாகக் கொள்ளலாம். மனத்தின் கருவியான சிந்தனை சிறப்பாக இருந்தால், நம் வழிபாடு சிறப்பாக இருக்கும். இந்தக் கட்டுரையில் அன்பர்கள் தங்கள் வழிபாட்டை வாழ்க்கை விளக்கம் பெற்றதாக அமைப்பதெப்படி என்றே முதலிலிருந்து கருதி வருவதால், பிரச்சினைகள் தீர சிந்தனை எப்படிப் பயன்படும் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
தெளிவில்லாததால் பிரச்சினைகள் உற்பத்தியாகின்றன. தெளிவு ஏற்பட்டால் பிரச்சினை விலகும் என்பது நாம் அறிந்த ஒன்று. தெளிவிருந்தாலும் தீராத பிரச்சினைகள் இல்லையா என்று ஒரு கேள்வி. அதற்கு இரு வகைகளில் பதில் சொல்லலாம். (1) தீராத பிரச்சினைக்குரிய தெளிவு ஏற்பட்டால் அது தீரும். (2) அப்படி ஒரு பிரச்சினை இருந்தால், அது நூற்றுக்கு ஒன்றாக இருக்கும். தற்சமயம் அதை மட்டும் விலக்கிப் பொதுவாக எல்லோரையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்குச் சிந்தனை எப்படிப் பயன்படும் என்பதை மட்டும் கவனிப்போம்.
எந்த ஒரு காரியத்தையும் நாம் கற்றுக்கொள்ளும்போதும் நுணுக்கமாகக் கற்றுக்கொள்கிறோம். அக்காரியத்திற்கே உரிய நுணுக்கத்தைக் கூர்ந்து அறிந்து பற்றிக்கொள்கிறோம். இது அனுபவத்தால் பெறக்கூடியது. சூட்சுமமாகக் கவனிப்பதால் சீக்கிரமாகப் புரிந்துகொள்ளலாம். கொச்சை மொழியில் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும்பொழுது "சூட்டிகை''யான குழந்தை; ஒரு முறைக்கு மேல் சொல்ல வேண்டியதில்லை என்பது இந்தச் சூட்சும அறிவைக் குறிக்கிறது. இதை வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். இது இல்லாதவர்களுக்குக் காரியம் மெதுவாக முடியும்; கடினமாக
இருக்கும்; அவர்களுக்குத் தடை ஏற்படும்; பிரச்சினை வரும். 40 பேருக்கு தினம் கூலி கொடுக்கும் இடத்தில் பணத்தை ரூ.100, 50 நோட்டாகக் கொண்டுவந்து பிரித்துக் கொடுக்கச் சிரமப்பட்டு, சண்டை வளர்த்து, பட்டுவாடாவுக்கு இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதேபோல் மற்றோர் இடத்தில் பாங்கில் பணம் வாங்கும்பொழுதே சில்லறையாக வாங்கி வந்து, தலைக்கு என்ன கூலி என்று 1 மணி நேரம் முன்னதாக எடுத்து, தனிக் கவர்களில் போட்டு வைத்து 40 பேருக்கும் 10 நிமிஷத்தில் பட்டுவாடாவை முடித்துவிடுகிறார். இது ஒரு வகை அறிவு.
4 வருஷமாகத் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. அந்தத் தலைவலி மருந்துக்கும் கட்டுப்படவில்லை என ஒரு கிராமவாசி படித்தவரிடம் சொன்னபொழுது, கண் பார்வையைச் சோதனை செய்யச் சொன்னார்; பார்வை குறைவாயிருந்தது; கண்ணாடி போட்டவுடன் வலி போய்விட்டது. கிராமவாசிக்கு, தலைவலிக்கும், கண் பார்வைக்கும் உள்ள தொடர்பு தெரியவே முடியாது. விவரம் தெரியாததால் ஏற்படும் குறை இது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உண்டு. ஆனால் அவனுக்குத் தெரியவில்லை.
1946இல் ஒரு நெசவாளியின் மகள் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தாள். கணக்கில் எப்பொழுதும் 100க்கு 100உம், பௌதிகத்திலும், இரசாயனத்திலும் 90க்கு மேலும் மார்க் வாங்குவது வழக்கம். தமிழில் மட்டும் எப்பொழுதும் முதல் மார்க்குக்குரிய பெண் அவள். இரண்டாம் வருஷம் செலக்க்ஷனில் இப்பெண்ணைப் பெயிலாக்கி, பெயிலான 6 பேரில் ஒருத்தியாக அறிவித்தார்கள். 500 பேரில் 6 பேர் மட்டுமே பெயில். அந்த ஆறு பேர்களில் இவளும் ஒருத்தி; காரணம் புரியவில்லை. அவளுடைய கிராமத்தைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து சுமார் 10, 12 மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக ஒரே தெருவில் குடியிருந்தார்கள். சிறப்பான மாணவிக்குச் சிக்கல் வந்துவிட்டது. எல்லோரும் கூடிப் புலம்பினார்கள். வண்டி அழைத்து வந்தார் தகப்பனார். பெட்டி, படுக்கைகளை ஏற்றி
விட்டார்கள். அந்தச் சமயம் அதே தெருவில் இருந்த மற்றொரு மாணவன் வந்து என்ன விஷயம் என்று விசாரித்தார். அவர் விபரம் தெரிந்தவர். இந்த மாணவியின் வகுப்பில் படிப்பவர். ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டு இந்த மாணவி கல்லூரிக்கு வரவில்லை. அதற்கான டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுக்கவில்லை. அதனால் போதுமான வருகை (attendance) இல்லாததால் (unselected) தேர்வு ஆகவில்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. பெண்ணின் தகப்பனாரிடம் விளக்கிச் சொன்னார். 20 பேர் சொல்லும்பொழுது ஒருவர் மட்டும் மாற்றிச் சொல்வதை எப்படி நம்புவது? பெண்ணை அழைத்துக்கொண்டு கல்லூரி புரொபஸரிடம் போய்க் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரியவரும், மகளும் இசைந்தார்கள். புரொபசர், "சர்ட்டிபிகேட் வேண்டும்; வந்தால் போதும்'' என்றார். மாணவி பரீட்சை எழுதி, முதல் வகுப்பில் (I class) பாஸ் செய்து, 3 பாடங்களில் முதலாவதாக வந்து பரிசு பெற்றாள்.
அவர்களுக்குப் பிரச்சினை மிகப்பெரியது. ரிஜிஸ்ட்ரார் கையெழுத்திட்டு, நோட்டீஸ் போட்டபின் மாற்ற முடியாது என்று உடனிருந்த கிராமத்து மாணவர்கள் அனைவரும் சொன்னார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு. தன்னைவிட அதிக விவரம் தெரிந்தவர்களை விசாரிக்க வேண்டும், அல்லது ஒரு புரொபஸரை விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாக அதிக விபரம் தெரிந்தவர்களைக் கேட்க வேண்டும். பலரானாலும், எல்லோரும் நம்மைப் போன்றவர்களானால், அவர்களுடைய யோசனைக்கு அர்த்தமில்லை.
விவரம் தெரியாமல், விஷயம் தெரியாமல், விதிகள் தெரியாமல், சட்டம் தெரியாமல், வாழ்க்கை நுணுக்கம் அறியாமல், இங்கிதம் உணராமல், நாட்டு வழக்கம் புரியாமல், பிரச்சினைக்குரிய அனுபவமில்லாமல் தமக்குத் தெரிந்ததையே நம்பும் பழக்கத்தாலும், இழந்த சொத்துகள், விட்டுப்போன பிரமோஷன், பிரிந்துபோன
குடும்பங்கள், உடைந்துபோன கட்சிகள், விரயமான பெருந் தொகைகள் ஏராளம்.
பிரச்சினை என்று ஒன்று ஏற்பட்டால், ஆயிரத்தில் ஒன்று தவிர, அதற்கு அறிவுபூர்வமான தீர்வுண்டு. அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். எவருக்குமே இந்தப் பிரச்சினை வந்து தீர்ந்ததில்லை என்றால் அதற்குத் தீர்வில்லை எனலாம். ஒருவருக்குத் தீர்ந்துள்ளது என்றால், அவருக்கு ஏற்பட்ட மார்க்கம் எது, அது நமக்குக் கிடைக்குமா என ஆராய்ந்து பார்க்கலாம்.
பொதுவாகப் பிரச்சினைகள் வந்தபின், அது தீராது என்று முடிவு செய்வதை விட்டு, நாமே யோசனை செய்தால் பாதி பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும். நம்மைவிட அறிவாளிகள், அனுபவசாலிகளைக் கேட்டால், முக்கால்வாசி பிரச்சினைக்கு வழி உண்டு. அதே துறையில் உள்ளவர்களை அணுகினால் சிக்கலும் உடையும். நுணுக்கமானவரைக் கலந்தால் எதற்கும் வழி பிறக்கும். இதையெல்லாம் தாண்டி ஒரு பிரச்சினை மிச்சமானால், பிறகு செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்கும்.
படித்தவர் ஒருவருக்கு ஏதாவது ஒரு கொப்புளம் வருகிறது. ஒன்று மறைந்தால் மற்றது தோன்றுகிறது. பல டாக்டர்களுக்குப் பிடிபடவில்லை. கவலையுடன் இருந்த அவரை ஓர் அமெரிக்கர் கேட்டார். "எத்தனை நாளாக இது இருக்கிறது? அப்பொழுது என்ன பழக்கம் மேற்கொண்டீர்கள்? குறிப்பாக, உணவில் என்ன பழக்கம் ஏற்பட்டது?'' என்று. தாம் காப்பி சாப்பிடுவதில்லை; புதியதாகக் காப்பி சாப்பிட ஆரம்பித்ததாகச் சொன்னார். "அப்படியானால் காபியை நிறுத்திப் பார்த்தால் தேவலை'' என்றார். காபியை நிறுத்தினார். கொப்புளம் நின்றுவிட்டது.
ஆராய்ச்சி, சிந்தனை என்பது நல்லது. சிந்திக்கும் மனத்தில் அன்னையின் சக்தி சிறப்பாகச் செயல்படும். சிந்தனையே பிரச்சினையைத் தீர்க்கும். அது தீர்க்காவிட்டாலும், மனம் சிந்தித்தால் சிறப்படையும்; அன்னை சிறப்பாகச் செயல்படுவார்; பிரச்சினை தீரும்.
பிரச்சினையைத் தீர்க்கும். அது தீர்க்காவிட்டாலும், மனம் சிந்தித்தால் சிறப்படையும்; அன்னை சிறப்பாகச் செயல்படுவார்; பிரச்சினை தீரும்.
31 வயது வரை திருமணம் தட்டிப்போகும் ஒரு செல்வர் மகளை விசாரித்தவர், அப்பெண் முதலில் வந்த வரன்களை வேண்டாம் என்று சொல்லும் பழக்கம் உடையவர் எனத் தெரிந்து, அதில் உள்ள சூட்சுமத்தைத் தெரிவித்தார். ஒரு வரனை நமக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு; வருகிற வரனை வேண்டாம் என்று சொல்வது வேறு. அப்படிச் சொன்னால் மேலும் வரும் வரன் தவறிவிடும் என்பது (subtle truth) சூட்சுமமான உண்மை. அப்பெண் அதை உணர்ந்து ஏற்றுக்கொண்டபின் வந்த முதல் வரனுக்குத் திருமணம் முடிந்தது.
பிரச்சினைகளைத் தீர்க்க சிந்தனை உதவுவதுபோல், வாய்ப்புகளை உற்பத்தி செய்யவும் உதவும்.
S.S.L.C. சிரமப்பட்டு முடித்து (complete) attenderஆக இருந்து கிளார்க்கானவர் ஒருவர், யாராவது சரளமாக இங்கிலீஷ் பேசினால், அவரைத் தேவலோகப் பிறவியாகப் பாவிப்பார். ஆங்கிலம் பேச முழு ஆசை. அமைப்பு அப்படியில்லை. அவருடைய அவாவைக் கண்ணுற்ற ஒருவர், மொழி நுணுக்கத்தை அறிந்தவர். மொழியைக் கற்றுக்கொள்ள அறிவு தேவையில்லை என்பது சர்வதேச நிபுணர்கள் அறிந்த ஒன்று. எந்த நாட்டிலும் அறிவில்லாதவர்கள் உண்டு. அவர்கள் அந்த நாட்டு மொழியைப் பேசுகிறார்கள். ஒரு மொழியை அறிந்தவனுக்கு மற்றெந்த மொழியையும் பயிலும் திறன் உண்டு. சர்வதேச வல்லுனர்கள் அறிந்த இந்த மொழியியல் நுணுக்கங்களை நம் நாட்டில் படித்த அறிஞர்களே ஆங்கிலம் சம்பந்தப்பட்ட வரை ஒத்துக்கொள்ளத் தயங்குவார்கள். இந்தியாவில் ஆங்கிலத்திற்குள்ள அந்தஸ்து அது. இந்த கிளார்க் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்? அவருடைய ஆர்வம் கருதி, அவரை ஆங்கிலம் பேச வைக்க முயன்று, அதில் உள்ள நுணுக்கத்தில் முக்கியமான ஒன்றை விளக்கி, ஒரு முறையையும் சொல்லிக்கொடுத்தார். "உங்கள் சிந்தனையை
முழுமையாக மாற்றி, ஆங்கிலத்திலேயே சிந்திக்க முயன்று, சிந்தனையில் பூரண வெற்றி பெற்றால், பிறகு பேசுவது பலிக்கும்'' என்று சொன்னார். அவரும் முப்பதாம் நாள் பேச ஆரம்பித்து, சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார்.
பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வித்தானது இது போன்ற ஒரு நுட்ப அறிவுதான். விவசாயி ஓர் ஏக்கரில் 15 மூட்டை மகசூலை 17 மூட்டையாக மாற்றி, நாட்டின் உற்பத்தியைப் பெருக்கத் தான் பரம்பரையாகக் கையாளும் பழக்கத்தை விட்டு, புதிய முறையைக் கற்றுக்கொள்ள முன்வரமாட்டான். 15 மூட்டை விளைந்த இடத்தில் 25 மூட்டை விளையுமானால், விவசாயி புதிய முறையைக் கற்றுக் கொள்வான். உற்பத்தி பெருகி, விலை குறைந்தால், விவசாயி பழைய பழக்கத்திற்குப் போய்விடுவான். அவன் எவ்வளவு உற்பத்தி செய்தாலும் சர்க்கார் நல்ல விலைக்கு வாங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இரு நுட்பங்களே பசுமைப் புரட்சியின் வெற்றிக்குக் காரணம். ஈ. சுப்ரமணியம் பரம்பரை விவசாயக் குடும்பத்தினர். அக்காரணத்தாலேயே அவருக்கு இந்த சூட்சுமங்கள் விளங்கின.
பிரச்சினைகளைத் தீர்க்கவும், வாய்ப்பைப் பெறவும், அன்னையின் அருளை அதிகமாகப் பெறவும் சிந்திக்கும் ஆற்றல் துணை புரியும்.
- தொடரும் ...
No comments:
Post a Comment