Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, August 13, 2013

சிறு கதை - நம்பிக்கை

"அன்னை இலக்கியம்'' 
ஜுலை 2000, மலர்ந்த ஜீவியத்தில் இருந்து..


அன்னையின் பால்கனி தரிசனம் 

நம்பிக்கை   -   S. அன்னபூரணி

பச்சைப் பசேலென்று நெற்கதிர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் கண்ணுக்குக் குளிர்ச்சியாயிருந்த நிலமகளை, கந்தனும், வேலாயியும் உற்சாகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.அருகிலிருந்த மர நிழலில் சாப்பாட்டுத் தூக்கை வைத்துவிட்டு அமர்ந்தாள் வேலாயி.கந்தனும் தலையில் கட்டியிருந்த முண்டாசை உதறித் தரையில் விரித்துவிட்டு அமர்ந்தான். அவனுக்குக் கவளம் கவளமாகச் சோற்றை உருட்டிக் கையில் போட ஆரம்பித்தாள்.சாப்பிட்டுக் கொண்டே பேசினான் கந்தன்."புள்ளே, அம்மா புண்ணியத்தில அறுவடை நல்லபடியா முடிஞ்ச உடனே மகசூலைக் காசாக்கிவிட்டு அதை எடுத்துக்கிட்டு காணிக்கையா கொண்டு போய்க்கொடுக்கப் போறேன்.நீ என்ன சொல்ற?''

"இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு மச்சான்?நானே ஒரு கைநாட்டுப் பேர்வழி.நீ எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்.ஆனா நீ போகும்போது என்னையும் கூட்டிக்கிட்டுப் போவியா?'' "ம் போகலாம்'' என்று பச்சைக்கொடி காட்டியவுடன் வேலாயி முகம் மலர்ந்தாள்.

"என்ன கந்தா நல்ல மகசூல் போல இருக்கே.ஒன்னோட நெலத்தில விளைஞ்சது நல்ல தரமான நெல்லு.இந்தா இந்த பத்தாயிரம் ரூபாயை எண்ணி எடுத்துக்கோ.ஆனா நீ இதுக்கு எவ்வளவு ஒழைச்சிருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்'' என்றார் அந்தக் கூட்டுறவு நிலவளச் சங்கத்தின் அதிகாரி.

 "என் கையிலே என்னங்க இருக்கு?எல்லாம் ஒங்களை மாதிரி பெரிய மனுஷங்க தயவுதான்.வாரேனுங்க'' என்று சொல்லியவாறு பணத்தை வாங்கிக்கொண்டு நடந்தான்.

"என்ன மச்சான் இது புதுசா ஒரு பெட்டி வாங்கிட்டு வந்திருக்கே?'' "ஆமாம் இந்தப் பெட்டியிலே பணத்தை வெச்சு, இந்த பேப்பரை அதுக்கு மேலே போட்டு மூடி எடுத்துக்கிட்டுப் போகலாம்னு இருக்கேன்''.

முதன் முறையாக அவ்வளவு தூரம் பஸ்ஸில் பயணம் செய்த வேலாயிக்கு மிகவும் குதூகலமாக இருந்தது.பாண்டி பஸ் ஸ்டாண்டில் இறங்கி விசாரித்துக்கொண்டு ஆசிரம வாயிலை அடைந்தனர்.

"நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?''

"நாங்க அம்மாவைப் பார்க்க வந்திருக்கோம்''

"அந்தப் பக்கமா உள்ளே போங்க, அனுமதி கொடுத்தால் நீங்கள் பார்க்கலாம்''.கந்தனுக்கு உள்ளூறப் பயமாக இருந்தது.ஏதொவொரு குருட்டு தைரியத்தில் கிளம்பி விட்டோமே, இந்த இடத்தில் இருக்கிறவங்க எல்லாம் பெரிய மனஷங்களா தெரியறாங்க.நம்மளை மதிச்சு உள்ளே அனுமதிப்பாங்களா? நம்ம ஊருல, அந்தச் சின்னப் பெண்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இங்க வந்தது தவறோ?என்று ஒரு கணம் நினைத்தான்.மறுகணம்."சே, சே, அப்படி நினைக்கிறதே தப்பு.அம்மா, நீ எல்லோருக்குமே அம்மான்னு அந்தப் பொண்ணுங்க சொன்னாங்களே.நான் ஒங்களைப் பாக்காம போகக் கூடாது'' என்று வேண்டிக் கொண்டான்.

"உங்களை வரச் சொன்னார்கள்'' என்று உத்தரவு கிடைத்ததும் மிக பவ்யமாகத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கையில் பணத்துடன் கூடிய அந்தச் சிறு பெட்டியையும் எடுத்துக்கொண்டு அன்னையைத் தரிசிக்கச் சென்றான்.அவரைப் பார்த்ததும் மனம் உருகிப்போய் பேச வாயெழாமல் நின்றான்.

 "அம்மாடி இவங்க செக்கச்செவேல்னு ராசாத்தி மாதிரி இருக்காங்க.முகத்தில என்ன கருணை?இவங்க என்னைத் தன் குழந்தையா ஏத்துப்பாங்களா?நானோ படிப்பறிவேயில்லாத ஏழை விவசாயி.எனக்குத் தமிழைத் தவிர வேற பாஷை தெரியாது.இவங்க கிட்ட சொல்ல வந்ததை எப்படி நான் சொல்வேன்?'' அவன் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்துகொண்டது போல அருகிலிருந்த உதவியாளரிடம் அன்னை கண்ஜாடை காட்டவே அவர் கந்தனிடம் சென்று தமிழில், "என்ன வேணுமென்று கேட்கறாங்க அம்மா'' என்றார்.

"கும்பிடறேனுங்க, எனக்குத் தமிழ் தவிர வேற பாஷை தெரியாது. அம்மாவைப் பத்திக் கேள்விப்பட்டேன்.அவங்க புண்ணியத்தில் என் பரம்பரை நிலம் என் கைக்குக் கிடைச்சதுங்க.நல்ல மகசூலும் ஆயிடுச்சு.அதைக் காசாக்கி அம்மாவுக்குக் காணிக்கையா கொடுக்க வந்தேனுங்க, அம்மா ஆசீர்வாதம் வேணும்.''

உதவியாளர் அன்னையிடம் சென்று கந்தன் சொன்னதைத் தெரிவிக்க, அதை அங்கீகரிக்கும்விதமாக தலையசைத்து அவர்கள் இருவரையும் அருகில் அழைத்தார்.இருவரும் அவர் காலடியில் விழுந்து நமஸ்கரித்தனர்.அவர்கள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.அவர் கை தலையில் பட்டவுடன் ஜிவ்வென்று உடலில் மின்சாரம் பாய்ந்தாற் போலிருந்தது.அப்புறம் தன் கருணை நிறைந்த கண்களால் முருகனின் ஆன்மாவைத் துளைப்பதுபோல் பார்த்தார்.அந்த அமுத ஊற்றைப் பருகிய வண்ணம் சிறிது நேரம் நின்ற கந்தன் சட்டென்று நினைவுக்கு வந்தவனாக தன் கையிலிருந்த பெட்டியை அன்னையின் காலடியில் வைத்தான்.உடனே அன்னை ஏதோ கூறினார்."இந்த காணிக்கையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டுமா?'' என்று அம்மா கேட்கிறாங்க.

"ஆமாங்க அவங்க வாங்கிக்கிட்டா எனக்கு திருப்தியா இருக்கும். காணிக்கை செலுத்தறதா நேர்ந்துகிட்டிருக்கேன்'' என்றான் தனக்கேயுரிய கிராமீய பாணியில்.உடனே அதை வாங்கிக் கொள்ள சம்மதிப்பதுபோல் தலையசைக்கவே அந்த நீல நிறப்பெட்டியை வாங்கிக் கொண்டார் உதவியாளர்.அன்னை அவரிடம் "அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு போய் பீரோவில் வைத்துப் பூட்டு'' என்று சொல்லிவிட்டுக் கந்தனுக்கு விடையளித்தார்.

அரக்கு நிறச் சுங்குடிச் சேலையைப் பின் கொசுவம் வைத்துக்கட்டி முகத்தில் கஸ்தூரி மஞ்சள் மினுமினுக்க வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே வந்தாள்.வேலாயி.

"ஆமாம் புள்ளே குடிசை வீட்டில இருந்த நாம இப்ப ஓட்டு வீட்டுக்கு மாறியாச்சு.கந்தல் சேலை கட்டியிருந்த நீ புதுச்சேலை உடுத்த ஆரம்பிச்சிட்டே, மூணுவேளை அரிசிச் சோறு கிடைக்குது. அம்மாவோட அருளைப் பாத்தியா?'' "ஆமாம் மச்சான்.மறுபடியும் அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு''."அட நான் கூட அதே தான் நெனச்சேன்.நீ சரியா சொல்லிட்டே.இந்த மாச முடிவிலே அறு வடை ஆனபிறகு பார்க்கலாம்.சரி அந்த ரேடியோ பெட்டியை எடு.''

அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்ததற்கு அடையாளமாக கட்டியம் கூறிய அந்த சிறிய "டிரான்ஸிஸ்டரை ஆன் செய்தான். வானிலை அறிக்கை, "வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.பலத்த கடற்காற்றும், சூறாவளியும் வீசும். மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போக வேண்டாமென்று எச்சரிக்கப்படுகிறார்கள்'' என்று அறிவித்தது.

செய்தி கேட்ட கந்தனின் முகம் லேசாக வாடியதைக் கண்ட வேலாயி, "என்ன மச்சான், திடீர்னு சோர்ந்து போயிட்டே?'' என்று கேட்டாள் "இங்க புயல் அடிச்சதுன்னா அவ்வளவுதான்.நம்ம பயிர் அத்தனையும் நாசம்தான்.''

"அய்யோ இப்ப என்ன பண்றது?'' பதறினாள் வேலாயி."எதுக்கு பதட்டப்படறே?என்ன கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது?நிதான மாக இரு.எல்லாம் அம்மா பாத்துக்குவாங்க'' கந்தன் சமநிலையுடன் இதைச் சொல்லிவிட்டுப் படுத்துவிட்டான்.திடீரென மின்னல், இடி, மழை சர்சர்ரென்று காற்று வீச ஆரம்பித்தது.இரவு முழுவதும் வேலாயி தூங்கவில்லை.

"இந்த மழைக்கும் காற்றுக்கும் பயிர் நிச்சயமா தாங்காது. இந்த மனுஷனைப் பாரேன், எதுக்கும் பயப்படாம நிம்மதியா தூங்கறாரு.ஏதாவது கேட்டா "அம்மா பாத்துக்குவாங்க' என்கிறாரு'' என்று அதிசயப்பட்டாள்.

இரண்டு நாள் பேயாட்டம் ஆடிவிட்டு ஓய்ந்தது மழை.தெருவிலிருந்த தண்ணீரெல்லாம் வடிய ஆரம்பித்தது.சூரியன் லேசாகத் தலை காட்டினான்.நாளிதழ்களும், வானொலி, டி.வி.செய்திகளும் வெள்ளச் சேதத்தை புள்ளி விவரக் கணக்குச் சொல்லி விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தன.கந்தனும் வேலாயியும் தங்கள் நிலத்தின் வரம்பில் நின்று கொண்டு மழையால் நனைந்து தொய்ந்து போய் தலை சாய்ந்து கிடந்த நெற்கதிர்களை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன மச்சான் இது?அம்மா பாத்துப்பாங்கன்னு எவ்வளவு நம்பிக்கையோட சொன்னே.இப்ப அம்மா கை விட்டுட்டாங்களே'' என்று அங்கலாய்த்தாள்.கந்தன் மன வேதனையுடன், "வேலாயி அந்த வார்த்தை மட்டும் சொல்லாதே.இதுவும் நல்லதுக்காகத்தான் இருக்கும்.அம்மா எப்பவுமே கை விடறேதேயில்லை.நடக்கிற ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.''

சாப்பாட்டுக்குக் கஷ்டம் இல்லையென்றாலும் கந்தனுக்கு மகசூலில் வரும் வரும்படி இல்லாமல் சிரமப்பட்டுத்தான் போனான். ஆனால் அவன் மனம் தளரவில்லை.ஆனால் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்றுதான் தெரியவில்லை.இப்ப பெய்த மழையினால் அடுத்த போகம் நன்றாக விளையக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.ஆனால் விதை நெல் வாங்கக்கூட பணமில்லாத நிலையில் என்ன செய்வது?யாரைப் போய்க் கடன் கேட்பது?

மறுநாள் காலையில் எழுந்ததும் "வேலாயி சீக்கிரம் குளிச்சிட்டு நல்ல புடவையா கட்டிக்கோ நாம பாண்டி போய் அம்மாவைப் பாத்துட்டு வரலாம்.''

"என்ன மச்சான் திடீர்னு?''

"என்னமோ தோணிச்சு.கிளம்பு கிளம்பு'' இருவரும் இந்த முறை தடுமாறாமல் போய்ச் சேர்ந்தனர்.ஆசிரமத்தில் போன முறையை விடக் கூட்டம் அதிகமிருந்ததால் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளே அழைக்கப்பட்டனர். என்னவெல்லாமோ கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு வந்தவன் அம்மாவைப் பார்த்ததும் வேறு யோசனை எதுவும் தோன்றாமல் அவரையே பார்த்தவாறு நின்று விட்டான். வேலாயிதான் லேசாக அவன் தோளில் தட்டி "மச்சான் சொல்ல வந்ததை சொல்லு'' என்று ஞாபகமூட்டினாள்.அன்னையின் அருகிலிருந்த உதவியாளரிடம் "ஐயா இந்த முறை புயல்ல சிக்கி என் பயிரெல்லாம் அழிஞ்சு போயிடுச்சு எங்க குறையை அம்மாகிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்'' என்று சொன்னான் கந்தன். தான் ஏற்கனவே ஒருமுறை வந்து போனதை அம்மாவிடம் சொல்லலாமா என்று யோசித்தவன், வேண்டாம் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தான்.இதற்குள் அன்னையிடம் அவன் கூறியதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் அன்னை ஆங்கிலத்தில் அவரிடம் ஏதோ கூறினார்.

உடனே அவர் உள்ளே சென்றார்.கந்தனுக்கு ஒன்றும் புரிய வில்லை.இருந்தாலும் அம்மாவின் எதிரில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் விலை மதிக்க முடியாதது என்றுணர்ந்தவனாய் அம்மாவின் பாதத்தில் மானஸீகமாக நமஸ்கரித்துக் கொண்டிருந்தான்.இதற்குள் உள்ளே நுழைந்தவர், கையில் ஏதோ பொருளுடன் வெளியே வந்தார். அன்னை தம் கண்களாலேயே அதைக் கந்தனிடம் கொடுக்கும்படி ஜாடை காட்டினார்.அவர் கொடுத்ததை வாங்கிய கந்தன் ஸ்தம்பித்துப் போய் விட்டான்.அவன் போன முறை கொடுத்த

அதே நீல நிறப்பெட்டி!"பெட்டியைத் திற'' என்று அன்னை சொன்னதைப் புரிந்து கொண்ட கந்தன் அதில், தான் வைத்திருந்த அதே செய்தித் தாளின் கீழ் பத்தாயிரம் ரூபாய் பணமும் இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான்.

"ஐயா இந்தப் பணத்தை அம்மா உங்ககிட்ட கொடுத்து விதை நெல் வாங்கிப் பயிரிடச் சொல்றாங்க'' என்று விளக்கம் கூறினார் உதவியாளர்.நெடுஞ்சாண்கிடையாக கந்தன் விழுந்து வணங்கிய விதம் பூரண சரணாகதியின் விளக்கமாக அமைந்தது.

"என்னாலே நம்பவே முடியவில்லை மச்சான்.நடந்ததெல்லாம் நினைச்சா ஆச்சரியமாயிருக்கு.அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் போல இருக்கு இப்படி நடக்குமின்னு''."அதை விட ஆச்சரியம் என்னன்னா, நாம போன முறை வந்து போனதை அம்மா கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சேன்.அவங்க என்னடான்னா நாம கொடுத்த பெட்டியைக் கூட ஞாபகம் வெச்சிக்கிட்டு எடுத்துக் கொடுக்கச் சொன்னாங்க.என்னோட அறியாமையை நெனச்சா எனக்கு சிரிப்பா வருது''."இனிமே நமக்கு கவலையில்லை மச்சான்''

"இரு இரு அவசரப்படாதே வேலாயி.நமக்கு நல்ல நிலைமை வந்ததுக்கும் ஒரேயடியா நான் சந்தோசப்பட்டுடல்லை.பயிர் நாசமா போன போதும் நான் பெரிசா வருத்தப்படலே.இப்ப பழைய நிலை வந்ததுக்கும் ஒரேயடியா மகிழ்ந்திடப் போறதில்லை.காரணம் என்ன தெரியுமா?நாம இந்த ஒலகத்துக்கு வந்த போது எதைக் கொண்டு வந்தோம்?போகும்போது எதைக் கொண்டு போகப் போகிறோம்? ஒரே ஒரு பெரிய விஷயம் நாம அம்மாவைத் தெரிஞ்சுகிட்டதுதான். அவங்க மேலே இருக்கிற நம்பிக்கைதான் நமக்கிருக்கிற மூலதனம். எந்த நிலையிலும் "அம்மா நீயே கதி' என்று சரணடைந்தவரை அவங்க கைவிடமாட்டாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இன்னொன்னு பாத்தியா, நாம பேசற பாஷை அம்மாவுக்குப் புரியாதே, அம்மாவோட பாஷை நமக்குப் புரியாதேன்னு நினைச்சேன்.

 இப்பதான் தெரியுது.இதயத்தின் ஆழத்திலிருந்து நாம பேசின எந்த பாஷையாயிருந்தாலும் அம்மா புரிஞ்சுக்குவாங்க.நாமும் அம்மாவோட பார்வையிலிருந்தே அவங்க என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சுக்க முடியுது'' என்று ஒரு பெரிய விஷயத்தைச் சாதாரணமாக ஒரு ஞானியைப்போல் சொல்லிவிட்டு பயிர்களைப் பார்வையிட நிலத்தை நோக்கி நடந்தான்.கீழ்வானத்தில் உதயமாகிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்த வேலாயி அம்மாவைத் தெரிந்து கொண்ட அனைவரின் வாழ்விலும் இந்த விடிவெள்ளி முளைக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுக்கடங்காத உணர்வைக் கட்டுப்படுத்தினால், உள்ளிருந்து இறைவன் எழுகிறான்.அவன் பிரகிருதிக்குக் கட்டுப்படாத நிலையில் எழுவான்.


இம்மாதத்தில் வரும் தரிசனநாள்

ஆகஸ்ட் 15 பகவானின் ஜென்மதினம்.

No comments:

Post a Comment

Followers