ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழிமுறைகள் -5
(From the Book : அருளமுதம்)
- திரு. கர்மயோகி அவர்கள்
ஒழுங்கு (Orderliness):
ஒழுங்கு என்பது (discipline) கட்டுப்பாட்டைக் குறிக்கும். இங்கு Orderliness என்ற கருத்தை ஒழுங்கு என்ற சொல்லால் குறிக்கின்றேன். Discipline, regularity என்பவற்றுக்கும், ஒழுங்கு என்ற தமிழ்ச் சொல் பொருந்தும். என்றாலும், Orderliness என்பதே என் தலைப்பு. அதைக் குறிக்கவே ஒழுங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
பொதுவாக (discipline) கட்டுப்பாடு என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் regularity என்றாலும் தெரியும். இவை இரண்டையும் நீக்கி (orderliness) ஒழுங்கு என்ற கருத்தை மட்டுமே இங்கு நான் கருதுகிறேன். மேலும் தெளிவுபடுத்த வேண்டுமானால் (clumsiness) குழறுபடி என்ற கருத்துக்கு எதிரானது ஒழுங்கு என்று நான் குறிப்பிடுவது.
அலமாரியில் உள்ள புத்தகங்கள், மேஜை மீதுள்ள பொருள்கள், ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே இங்கு கூறப்படும் கருத்து. அலமாரி, மேஜையில் ஆரம்பித்து, வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களும் - தலையணை, பாய், பெட்டி, படுக்கை, சமையல் சாமான்கள், மற்ற அறைகளில் உள்ள பொருள்கள் - வேலை நடக்காத நேரத்தில் அழகாகவும்,அடுக்காகவும், வரிசையாகவும், ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதையே ஒழுங்கு என்று நான் குறிப்பிடுகிறேன். ஒழுங்கு இருந்தால், அதற்குரிய சுத்தம் தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வீட்டில் உள்ள பொருள்கள் பலவகைப்பட்டவை; சமையல் சாமான்கள், கடப்பாரை, அரிவாள் போன்ற கருவிகள், புத்தகங்கள், படுக்கை சம்பந்தப்பட்டவை, எப்பொழுதோ உபயோகிக்கப்படும் பொருள்கள் எனப் பல தரப்பட்டவை. அவையெல்லாம் உபயோகமில்லாதபொழுது ஒழுங்காக, சுத்தமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும்.
ஓர் எலெக்டிரிக் பில் வேண்டுமானால், L.I.C. ரசீது வேண்டுமானால், B.A. சர்ட்டிபிகேட் வேண்டுமானால் வீடு முழுவதும் தேடுவது பெரும்பாலோர் பழக்கம். அப்படியின்றி, எவை, எங்கு இருக்கின்றன என்ற தெளிவுடன் வைக்கப்பட்டு இருந்தால், ஒன்று வேண்டும் எனும்பொழுது நேராகச் சென்று எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ஒழுங்குமுறை தேவை. இம்முறையின் சிறப்பு மனதில் இருக்கிறது. மனம் முறையாக இருந்தால்தான், பொருள்களை முறையாக வைக்க முடியும் (பொருள்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்பதன் மூலம், மனத்தை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்). முறைப்படுத்தப்பட்ட மனத்தில் அன்னையின் சக்தி தீவிரமாகச் செயல்படும்.
இதைச் செய்வதில் என்ன கஷ்டம்? ஒருவர் இதைக் கையாள ஆரம்பித்தால் 2, 3 நாட்களுக்குப்பின் அதை விட்டுவிடுவார். அப்படியே அவர் தொடர்ந்து செய்தாலும், இவர் அடுக்கி வைப்பதையெல்லாம் மற்றவர் கலைத்துக்கொண்டே வருவார். அவருக்குப் பயித்தியம் பிடித்துவிடும்.
வெற்றிகரமாக, தொடர்ந்து, சிறப்பாக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவேண்டுமானால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் வீடு முழுவதையும் ஒழுங்குபடுத்தியபின் அவரவர்கள் தங்கள், தங்கள் பகுதியில் ஒழுங்கைக் கலைக்காமல் தொடர்ந்து கடைப்பிடிக்க ஒத்துக்கொள்ள வேண்டும். அந்த ஒத்துழைப்பில்லாமல் இதைச் செய்ய முடியாது.
சுத்தம் (Supramental Force) அன்னையின் சக்தி வந்து தங்க அவசியம் என்பதைப்போல், ஒழுங்கு, குறிப்பாக மனத்தில் ஒழுங்கு, அன்னையின் சக்தி நம்முள் வந்து செயல்படவும், தங்கவும் அவசியம். சிறப்பாக இதைச் செய்து முடிக்க வேண்டுமானால்,
1. நாம் முதலில் நம் மனத்தில் தீர்க்கமான முடிவை எடுத்து, ஒழுங்கைப் பூரணமாக ஏற்படுத்தி, தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.
2. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற தீவிர முடிவுக்கு வரவில்லை என்றாலும், செய்து வைத்த ஏற்பாடுகளைக் கலைக்கக்கூடாது. தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அளவிலாவது தீவிரம் கொள்ள வேண்டும்.
3. ஒழுங்கைப் பூரணமாக நிலைநாட்டத் தேவையான மற்ற பழக்கங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4. மாதம் ஒரு முறை அல்லது இரு முறை முதலில் ஏற்படுத்திய அளவுக்கு ஒழுங்கை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டும் (Every month the original level of orderliness must be restored).
5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் ஒழுங்கின் தரத்தைச் சிறிதளவு உயர்த்த வேண்டும்.
---------------------------------
மந்திர ஜெபம்:
மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. தொடர்ந்து அவற்றை ஜெபிப்பதால் அந்தச் சக்தி நம்முள் செயல்படும். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஸ்ரீ அரவிந்தரின் காயத்ரி மந்திரம் அன்னையைப் பற்றி எழுதிய மந்திரம் சிறப்பானவை. அன்னை விரும்பி ஜபித்த மந்திரம் "ஓம் நமோ பகவதே''. அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் திருநாமங்களே இந்த யோகத்தில் எல்லா மந்திரங்களைவிட உயர்ந்தவை என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
மந்திர ஜபத்தால் தியானம் பலிக்கும். நம் பிரார்த்தனைகளுக்கும் வலிமை கூடும். மந்திர ஜபத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு இது ஏற்ற முறையாகும்.
----------------------------------------------------
புரளி பேசாதிருத்தல்: சில்லறையான பழக்கங்களை ஒதுக்குதல்:
அன்னையை ஏற்றுக்கொள்பவர்கள் பொதுவாகச் சிறப்பான குணங்களையுடையவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் உயர்ந்த பக்தியும், சின்ன புத்தியும் சேர்ந்து காணப்படுவதுண்டு. பக்தியின் உயர்வால் அன்னையிடம் வந்துவிடுகிறார்கள். பழக்கத்தை விட டிவதில்லை. இந்தப் பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே இம்முறை பலன் அளிக்கும். தணிவான பேச்சை ஏற்றுக் கொள்ளுதல், தியானம் பழகுதல் எவ்வளவு கடினமோ, அந்த அளவு இப்பழக்கங்களை விடுதல் கடினம். அந்தக் கடினமான முயற்சியை மேற்கொள்வதால்தான் உயர்ந்த பலன் கிடைக்கிறது. இம்முறையில் முழுப் பலன் கிடைக்க வேண்டுமானால் இப்பழக்கங்களை விட்டு விடுவதுடன், இவற்றின் மீது மனதில் உள்ள ஆசையையும் முழுவதுமாக நீக்க வேண்டும்.
--------------------------------------------------------
ஒவ்வொரு நாளும் அன்னையை நோக்கி ஓர் அடியெடுத்து வைக்க வேண்டும்:
இதுவரை சொல்லிய முறைகளில் எல்லாவற்றையும்விட இது கடுமையானது. சாதாரண அமெரிக்கர் ஒருவர் Larry Apply என்று பெயருடையவர், நூறு கோடி ரூபாய் செலாவணி உள்ள கம்பெனியின் தலைவராக வந்தார். படிப்படியாக அவரது வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, எளிமையான நிலையிருந்து உயர்வுக்கு எட்டினார். இவர் "தினமும் ஏதாவது புதியதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். தம் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு நுணுக்கத்தை அவசியமாக அன்றாடம் அவர் கற்றுக்கொள்வார். இரவு தூங்கப் போகுமுன் இன்று எதைக் கற்றுக்கொண்டோம் எனத் தம்மையே கேட்டுக்கொள்வார். ஒரு நாள் தம்மால் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று அறிந்து, அன்று அவரால் தூங்க டியவில்லை. அகராதியை (dictionary) எடுத்துத் தமக்குப் புதிய சொல் ஒன்றைக் கற்றுக் கொண்டார். அதன் பின்னரே அவரால் தூங்க முடிந்தது. இது ஒரு அற்புதமான கொள்கை.
அன்னையிடம் வந்தபின் ஆயுளில் ஒரு முறை அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் அது தவம் பலித்ததற்கு நிகராகும். தினமும் ஏதாவது ஒரு விஷயத்தில் செய்வதெப்படி? கடினம்தான். அந்தக் கடினமாக முறையைக் கைக்கொண்டு பலன் அடைய வேண்டும் என்பதே கொள்கை. இதிலும் ஒரு சிறப்பு; மனம் பக்குவம் அடைந்து இக்கொள்கையை ஏற்றுக்கொண்டால், அன்னை கடினமான முறையையும், சந்தோஷமான முறையாக மாற்றிக் கொடுப்பார். பின்னர் ஒவ்வொரு செயலிலும் எப்படி அன்னையை நோக்கி முன்னேறுவது என்பதை அன்னையே புரிய வைக்கிறார். வாழ்வின் கூறுகள் ஆயிரம். ஒவ்வொரு செயலுக்கும் நூறு பகுதிகள் உள்ளன. ஒரு பகுதியிலாயினும் நாம் அங்கு ஒரு முன்னேற்றத்தைக் காண முடியும். இதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் ஒருவர்
ஏற்றுக்கொண்டால், இது போன்ற புதுமை இல்லை என்பதை அவர் காண்பார். அன்னையின் சிறப்பான பார்வைக்குரியவராவார் அவர்.
- தொடரும் ...
No comments:
Post a Comment