திருவருள் விலாசம்
-T.S. ராமனுஜம்
அன்னை இலக்கியம் - மலர்ந்த ஜீவியம் Oct -2000
**********************
"என்னங்க நான் மட்டும் இங்கே எவ்வளவு நேரந்தான் கஷ்டப்படுவேன்?நாளைக்குப் புது வீட்டிற்கு மாறவேண்டும் என்ற நெனப்பு கொஞ்சமாவது இருக்கா உங்களுக்கு?கொஞ்சம் இந்தப் பொண்ணையாவது கவனிச்சுக்கக் கூடாதா'' என்று அமுதா கத்த ஆரம்பித்தாள்.
"சே, இது என்ன வீடா!மனுஷனுக்குக் கொஞ்சமாவது நிம்மதி கெடைக்குதா'' என்று உறுமிக் கொண்டே வந்த அன்பரசன் தன் மகள் வளர்மதியின் மேல் எல்லாக் கோபத்தையும் காட்டினான். தன் பங்குக்கு வளர்மதியும் கதற ஆரம்பித்ததில் அன்றைய மகாபாரதம் அந்த வீட்டில் ஒருவாறாக அரங்கேறியது.
இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான்.அமுதா, அன்பரசன் குடும்பத்தினர் குடித்தனம் மாறுவது வருடங்கள் பருவகாலம் தவறினாலும் தவறாது, இவர்கள் வீடு மாற்றுவது மட்டும் ஆறு மாதங்களுக்கொருமுறை அவசியம் நடந்தாக வேண்டிய விஷயம். வீட்டுக்காரர் தொந்தரவு வேண்டாம், கூட்டுக் குடித்தனக்காரர்கள் அனுசரித்துப் போகமாட்டேன் என்கிறார்கள் என்ற காரணங்கள் சாதாரண வீட்டில் வாழும் மனிதர்களுக்குத்தான், இவர்கள் குடித்தனம் மாறுவதற்கு காரணமே அவசியமிருக்காது.ஒரு சிறிய விஷயத்தை அமுதா பூதாகாரமாக்குவதில் மகா கெட்டிக்காரி. விளைவு வீடு மாற்ற வேண்டியதுதான்.
சென்ற ஓராண்டு காலமாகவே அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.அன்பரசன் தான் நடத்தும் தொழிற்சாலைக்காக வாங்கிய வங்கிக்கடனால் பாக்கி அதிகமாகி விட்டது.வங்கி அதிகாரிகள் கடனைத் திருப்பிக் கட்டும்படி வக்கீல் நோட்டீஸ் விட்டிருந்தார்கள்.இந்தக் குழப்பங்கள் அன்பரசனை ஓர்அரக்கனாக மாற்றிக் கொண்டிருந்தன.எதற்கெடுத்தாலும் கோபம்! ஆயிற்று, புது வீடு வந்து ஒரு வாரகாலம் ஆகிவிட்டது. அண்டைவீட்டாரோடு அமுதா பழகி சகஜநிலைக்கு வந்து விட்டாள். தொழிற்சாலை விவகாரம் அப்படியேதான் இருக்கிறது.ஒரு வியாழக்கிழமை மூவரும் கிளம்பி புதுவைக்கு வந்தார்கள்.30கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் புதுவைக்கு மூவருமாகச் சேர்ந்து வருவது அதுதான் முதல் தடவை.ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தைப் பார்க்கலாம் என்று தம்பதியர் வாழ்க்கையில் முதன் முதலாக ஏகோபித்த முடிவுக்கு வந்தனர்.உள்ளே நுழையும்பொழுதே இருவருக்கும் ஒரு புத்துணர்வு வந்ததுபோல ஒளிப்பொறி தெரிய ஆரம்பித்த உணர்வு சமாதியின் அருகே சென்று அமர்ந்தவுடன் இருவரையும் ஓர் ஆழ்ந்த அமைதி ஆட்கொண்டது.அமுதா அங்கு நிலவிய சுத்தத்தைத் தன் கருத்தில் பதிய வைத்துக் கொண்டாள்.அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் திருவுருவப் படங்களை வாங்கிக் கொண்டனர்.வேறு எங்கும் போகப் பிடிக்காமல் நேராக வீடு திரும்பினார்கள்.
ஆசிரமத்தில் பார்த்த சுத்தமான சூழல் மீண்டும் மீண்டும் அமுதாவின் மனதில் வலம் வந்தபடி இருந்தது.தன் வீட்டைச் சுத்தம் செய்வது என்று ஆரம்பித்தாள்.ஆரம்பித்த பிறகுதான் புரிந்தது, தான் இதுவரை எவ்வளவு அசுத்தமான சூழலில் இருந்தோம் என்று. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் துப்புரவு செய்த பிறகு கூட அவளுக்குக் கொஞ்சமும் அலுப்பே வாராதது ஆச்சரியம்!இறுதியாக அன்பரசன் வைத்திருந்த பேப்பர்களைச் சீராக அடுக்கியவளுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30000க்கு வாங்கியிருந்த தேசீய சேமிப்புப் பத்திரம் கிடைத்தது.அன்பரசன் வீட்டிற்கு வந்ததும் அவனிடம் விஷயத்தைச் சொன்னாள்.சுத்தம் செய்ததற்கு அன்னை கைமேல் பலன் தந்துவிட்டார்கள்.அந்தச் சேமிப்புப் பத்திரம் இப்பொழுது ரூ.60000/-பெற்றுத் தரும் என்று கூறினான் அன்பரசன்.அமுதா என்னங்க வீடுமாற்றி எனக்குப் போதும் என்றாகிவிட்டது, நமக்கு என்று ஒரு வீட்டு மனை வாங்கலாமா? என்றாள்.அன்பரசனுக்கும் அது சரியாகப்பட்டது.
அடுத்தநாளே தேசீயச் சேமிப்புப் பத்திரப் பணத்தை புதுவைக்கு அருகில் ஒரு மனை வாங்க உபயோகப்படுத்திக் கொண்டார்கள். மனைப்பத்திரம் பதிவாகி வந்தவுடன் அமுதா அதை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆசிரமம் சென்றாள்.சென்ற முறை ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் சென்றதிலிருந்து எதையும் அன்னையைக் கேட்காமல் செய்வதில்லை என்ற பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டாள் அமுதா.மனைப் பத்திரத்தைச் சமாதியின் மீது வைத்து, "அன்னையே எங்களுக்கு நல்ல வீடாகக் கட்டிக் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என வேண்டிக் கொண்டாள்.சமாதியிலிருந்து திரும்பும்போது அவள் கண்ணில் அங்கே வைக்கப்பட்டிருந்த ''Silence'' என்ற போர்டு பட்டது.அதைப் படித்தவுடன் ஏதோ புரிந்தது போல இருந்தது அமுதாவுக்கு.
வீடு திரும்பிய அமுதாவின் மனதில் Silence என்ற வார்த்தை எதிரொலித்துக் கொண்டே இருந்தது.வாய் ஓயாமல் பேசும் அமுதா மௌனத்தை மனப்பூர்வமாகச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டாள்.பாக்டரியிலிருந்து திரும்பிய அன்பரசனுக்கு வீட்டுச்சூழலில் ஏதோ ஒரு வரவேற்கத்தக்க மாறுதல் இருப்பதை உணர்ந்தான்.உடனே காரணம் புரிந்தது அவனுக்கு.அமுதாவின் குரல் அந்த வீட்டில் ஒலிக்காமலிருந்ததுதான்.
அதிசயத்தால் ஸ்தம்பித்துப் போனவனாக அன்பரசன் அமுதாவை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டான்.நடந்த விஷயங்களை விவரித்த அமுதா இனிமேல் தேவை இருந்தால் கூட நான்கில் ஒரு பங்குதான் பேசப் போகிறேன் என்று தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.
மறுநாள் அன்பரசன் பாக்டரி போனபோது இரண்டு வெளிநாட்டவர் வந்திருந்தனர்.அவர்கள் ஒரு பெரிய நூற்புஆலை நடத்துவதாகவும் புதுவையிலிருந்த தொழிற்சாலைக்கு வந்தபோது ஒரு முக்கியமான dye கிடைக்குமா என்று விசாரித்ததில் அன்பரசனின் தொழிற்சாலையை யாரோ அடையாளம் காட்டியதாகச் சொன்னார்கள்.தன்னிடம் தயாராக இருந்த dye-ஐக் காண்பித்து அதில் கொஞ்சம் மாறுதல்கள் செய்து மறுநாள் அவர்களுடைய தொழிற்சாலைக்கே வருவதாகச் சொன்னான்.அற்புதங்களை நிகழ்த்தும் அன்னையை அழைத்து தன் வேலையைத் தொடர ஆசி கோரிவிட்டு dye தயார் செய்யும் வேலையில் இறங்கினான்.தான் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு தொழில்நுட்பம் வாய்த்ததாக அந்த dye வந்ததில் அவனுக்குப் பூரண திருப்தி.
அடுத்த நாள் புதுவையிலிருந்த விசைத்தறியில் தன்னுடைய தயாரிப்பைக் கொடுத்தான்.Test run சோதனை ஓட்டம் மிக திருப்திகரமாக வந்தது.நேற்று தன்னைச் சந்தித்த அதிகாரிகளிடம் போனபோது அவர்கள் சொன்ன விஷயம் அன்பரசனை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.
தங்கள் தறியில் உள்ள "ஊடு'' என்ற யந்திரம் திடீரென பழுதடைந்ததால் பிரான்சிலிருந்து வரவழைக்க ஒரு மாதகாலம் ஆகும்.இதன் நடுவில் வேலையை நிறுத்த முடியாது என்று அன்பரசனை அணுகினர்.அவன் செய்து கொடுத்த dye இறக்குமதி செய்யும் dye-ஐ விட அதிவேகமாகச் செயல்படுவதால் ஒரு தறியில் ஒரு நாளைக்கு 25சதவீதம் அதிகமான உற்பத்தி செய்ய முடியும் என்று அறிந்து கொண்டார்கள்.அன்பரசனே அவர்களுக்குத் தேவையான dye முழுவதையும் செய்து தந்தால் ரூ4 லட்சம் தொகை தருவதாகக் கூறினார்கள்.அதற்கு ஒரு வார அவகாசம் தருவதாகவும் சொன்னார்கள்.
நேரே வீடு திரும்பிய அன்பரசன் அன்னையிடம் நன்றி கூறிவிட்டு, "அமுதா நீ silence மேற்கொண்டதால் பேச வேண்டியவர்கள் இன்று பேசி இருக்கிறார்கள்'' என்று நடந்த விஷயத்தைக் கூறினான்.அன்னையே உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் என்று அமைதியாக உறங்கினார்கள் அன்று. மறுநாள் "அமுதா இன்டஸ்ட்ரீஸ்'' அதுதான் அன்பரசன் நடத்தும் தொழிற்சாலை, சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது.அன்னையை முன்நிறுத்தி வேலையைச் செய்ததில் ஒரு வார அவகாசம் தேவைப்படவே இல்லை.நான்கு நாட்களுக்குள் தொழிற்சாலையில் அவர்கள் கேட்ட dyeகளைக் கொண்டு போய் கொடுத்தான். அவனுடைய ஆர்வத்தைப் பாராட்டிய அதிகாரிகள் பேசியபடி தொகையைக் கொடுத்ததோடு ஒவ்வொரு மாதமும் ரூ4 லட்சத்துக்கான ஆர்டரைக் கொடுத்தார்கள்.நேராகச் செக்கை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போய் கடனை முழுவதுமாக அடைத்தான்.கையில் மீதம் ரூ75000/- இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து அன்னையை முன்நிறுத்தித் தன் வீட்டு மனையில் அஸ்திவாரம் போட்டார்கள்.ஆரம்பித்த வேகத்தில் வீடு முடிந்தது.இறுதியாக வீடு காலி செய்யும் படலம்.அமுதாவிற்கு அன்னையின் படத்தைக் கையில் எடுத்தபோது கண்கள் குளம் கட்டின.தன் வாழ்க்கையை மாற்றி அமைத்த அன்னையை - ஆன்மாவில் - ஏற்றுக் கொண்டு நிறைந்த மனத்தவர்களாக 'திருவருள் விலாசம்' என்ற தங்கள் வீட்டிற்குக் குடி பெயர்ந்தார்கள். அன்பரசன் தன் தொழிலை விரிவுபடுத்தினான்.அன்னையும் சந்தோஷமும் மட்டுமே அவர்கள் வாழ்வில் அங்கங்களாயின.
-------------------
No comments:
Post a Comment