உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு. அவர்களுடைய நல்ல குணங்களைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை அறிவதாகும். அவர்களுடைய குறைகளைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை உயர்ந்த முறையில் அறிவதாகும்.
நம்மை நமக்கு உணர்த்தும் பிள்ளைகள்.
பெற்றோருக்குக் குழந்தைகள் மீது இயற்கையான பாசம் உண்டு. பற்று, பாசம், பிரியம், அன்பு என்ற நான்கு நிலைகளில் அது அமையும். உடலையுடையவன் மனிதன் என்பதால் உடலுக்குரிய பற்று இயல்பாக இருக்கும். உணர்விருப்பதால் பாசம் இருக்கும். பல குழந்தைகளிருந்தால் எல்லாக் குழந்தைகளிடமும் பற்றிருக்கும். பாசம் சில குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும். பாசம் பழக்கத்தைப் பொருத்தது. பற்று பிறப்பில் வருவது. பிரியம் ஏதோ ஒருவருக்குத் தானிருக்கும். அவர்களுக்கும் அந்தப் பிரியம் குழந்தைகளிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது. பிரியமுள்ளவருக்கு அப்பிரியத்தைப் பொதுவாக ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். பலருக்குத் தன் பிரியத்தைக் கொடுப்பது சிரமம். பிரியத்தை நண்பனுக்குக் கொடுக்கலாம். அண்ணனுக்கும் அளிக்கலாம், மனைவி அதற்குரியவளாக அமையலாம். சில குழந்தைகள் பெறலாம். எப்படி அமைவதானாலும் மனிதனுக்குள்ள பிரியத்தை ஓரிருவரே பெறுவர். அவர்கள் யார் என்பதைச் சந்தர்ப்பம் நிர்ணயம் செய்யும். அதனால் உன் குழந்தை மீது நிச்சயமாகப் பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வாகும்.
நம் நல்ல குணங்களை அவர்களிடம் காண்பதால், அவற்றை அறிவது நாம் நம்மை அறிவதாகும். நாம் உலகத்திடமிருந்து மறைத்த குறைகள் நம் குழந்தைகளிடம் காண்பதால், அதை அறிந்து ஏற்றுக் கொள்வது நாமே நம்மை முழுவதுமாக அறிவதாகும்.
No comments:
Post a Comment