மனித வாழ்வு பொய்மைக்கும், இருளுக்கும் அடிமைப்பட்டுள்ளது. மனிதன் இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். அந்த விடுதலையை உலகத்திற்கு அன்னை கொண்டு வந்திருக்கிறார். அன்னையைத் தெய்வமாக உணர்ந்தால், உணர்ந்து வழிபட்டால், பொய்யிலிருந்து விடுதலை பெற வழியுண்டு. பூரணமாக ஏற்றுக்கொண்டால், பூரண விடுதலையுண்டு. 1930, 1940-இல் ஆங்கிலேயர் இந்நாட்டை விட்டுப் போகக்கூடாது, அவர்களால் நாடு பெருநன்மையை அடைந்துள்ளது என்றவர் பலருண்டு. அதுபோல் மனிதனுக்குப் பொய் அவசியம், அதனால் பல சௌகரியங்களுண்டு என்பவரும் உண்டு.
பொய்ம்மையிலிருந்து விடுதலையை விழைபவருண்டு. அவர்களுக்கு உதவியான சக்தி இன்று உலகில் இல்லை. பொய்யிலிருந்து முழு விடுதலை பெற விழைபவர்க்கு உறுதுணையாக அன்னை உலகுக்கு வந்துள்ளார். அவரை ஏற்றுக்கொண்டால், பொய்யை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் வெற்றியுண்டு. ஜனநாயகத்தைப் பல உயர்ந்த கட்டங்களில் ஏற்றுக்கொள்வதைப்போல் அன்னையையும் பல கட்டங்களில் ஏற்றுக்கொள்ளலாம். எத்தனை நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்பதைப் பல வழிகளில் குறிப்பிடலாம்.
மனத்தாலும், அடுத்தாற்போல் உணர்வாலும், அடுத்த கட்டத்தில் உயிராலும், கடைசி கட்டத்தில் உடலாலும் ஏற்றுக்கொள்வது ஒரு வகை.
வழிபடும் தெய்வமாகவும், வாழ்க்கை விளக்கமாகவும், பிறப்பின் சிறப்பாகவும், ஆன்ம ஜோதியாகவும் ஏற்றுக்கொள்ளுதல் மற்றொரு வகை.
கீழ்கண்ட முறைகளிலும் அன்னையை ஏற்பவர்கள் உள்ளனர்.
- ஏதோ ஒரு சமயம் நினைப்பவர், வேலைகளை அன்னையை நம்பிச் செய்பவர்;
- இடையறாது நினைப்பவர், (சாதகர்) அன்னைக்குப் பிடிக்கும் என்பதால் ஒரு காரியத்தைச் செய்பவர்,
- அன்னைக்குப் பிடிக்காது என்பதால் ஒரு காரியத்தை விலக்குபவர்.
- அன்னைக்காகத் தம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முன்வருபவர்,
- அன்னைக்காகத் தம் சுபாவத்தை மாற்றிக்கொள்பவர்,
- அன்னைக்காகத் தம்மைப் பூரணமாக மாற்றிக்கொள்பவர்,
- அன்னையின் குழந்தையாகி, பிரார்த்தனையும் தேவையில்லாத புனிதராக மாறுபவர்.
No comments:
Post a Comment