Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, July 16, 2013

ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகம்

திரு கர்மயோகி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.




பல வகையான யோகாசனங்கள் மூலமாக உடலைத் தூய்மைப்படுத்துகின்றவன் ஹட யோகி. தூய்மைப்படுத்தப்பட்ட உடல், உன்னதமான பொலிவைப் பெறுகின்றது. நரை, திரை, மூப்பு என்பவை ஹட யோகியை நெருங்குவதில்லை. மூலாதாரத்தில் முடங்கிக் கிடக்கும் குண்டலினிச் சக்தியை எழுப்பி, ‘உடல்’ என்னும் கட்டை அறுக்கின்றான் அவன். ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையில் (சஹஸ்ரதளம்) விளங்கும் ஆன்மாவை அறிகின்றான். அவன் விரும்புகின்றபோது உடலை உதறித் தள்ளிவிட்டு ஆன்மாவோடு இரண்டரக் கலந்து மோட்சம் அடைகின்றான்.

பிறப்பு, இறப்புகளில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவதுதான் மேற்கூறிய யோகங்களின் குறிக்கோளாகும். இதற்குத் திறவுகோலாக ஏதாவது ஒரு கருவி தேவை. அந்தக் கருவி மனமாகவோ, உணர்ச்சியாகவோ, உடலாகவோ இருக்கலாம்.

‘இறைவனுடைய நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே ஆன்மாக்கள் உடலில் புகுந்து பல பல உயிர்களாக விளங்குகின்றன. உடலை உதறித் தள்ளுவதற்காக ஆன்மாக்கள் உடலில் பிரவேசிப்பதில்லை. ஆன்மா தன்னுடைய இயல்பான குணங்களோடு விளங்கவும், உடலால் கட்டுப்படாமலும், அதே சமயத்தில் அவ்வுடலில் சகல திவ்ய குணங்களை வெளிப்படுத்தவும்தான் அது உடலில் புகுந்துள்ளது. இதை உணராமல் ‘மோட்சமே குறிக்கோள்’ எனக் கொண்டு, பூத உடலை உதறிவிட்டுச் செல்வது இறைவன் உலகைப் படைத்த நோக்கத்துக்கு மாறானது’ என்று ஸ்ரீ அரவிந்தர் சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய யோகத்தை ‘பூரண யோகம்’ என்று குறிப்பிடுகின்றார். யோகத்தில் ஆன்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு அதன் கருவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதாரண மனிதனிடத்தில் எப்படி ஆன்மாவும், மற்ற கருவிகளும் இணை பிரியாமல் இருக்கின்றனவோ, அப்படியே யோகியிடமும் அவை இணை பிரியாமல் இருக்கவேண்டும். அவற்றின் உறவுகள்தாம் மாறுகின்றன; இணைப்பு மாறுவது இல்லை. ஆம், பூரண யோகியிடத்தில் அவற்றின் உறவு முறைகள் மட்டும்தான் மாறுகின்றன. அவனிடத்தில் ஆன்மாவுக்கும், ஆன்மாவின் கருவிகளுக்கும் எந்தவித முரண்பாடும் கிடையாது. அந்தக் கருவிகளும் ஆன்மாவைப் போல் தூய்மை அடைந்து, ஒளி பெற்று, ஆன்மாவுக்கு அனுசரணையாக விளங்குகின்றன. பூரண யோகிக்கு ஆன்மாவும் ஒரு கருவியே தவிர, முடிந்த முடிவன்று.

பூரண யோகியின் நோக்கம் ஆன்ம விடுதலையன்று. மனம், உணர்வு, உடல் ஆகிய இம்மூன்றையும் தூய்மைப்படுத்துதல் பூரண யோகத்தின் முதல் கட்டமாகும். மனத்திலிருந்து அறியாமையை நீக்க வேண்டும்; உணர்ச்சிகளை இன்ப, துன்ப நுகர்ச்சிகளிலிருந்து விடுவிக்க வேண்டும்; தமோ குணத்தை நீக்க வேண்டும்.

ஞான, பக்தி, ஹட யோகங்களால் ஒருசேரக் கிடைக்கும் ஆரம்ப பலனானது, இங்கு முதற்கட்ட அநுபவமாக அமைகிறது.

ஆன்மா தன் சுயரூபத்தை உணர வேண்டுமானால், அது ‘அகங்காரம்’ என்னும் கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். அகங்காரம் முற்றும் நீங்கிய பிறகு ஆன்மா தன் இயல்பான நிலையை அடைகின்றது. இது பூரண யோகத்தின் இரண்டாவது கட்டமாகும். ஆன்மா தூய்மை அடைந்த தன் கருவிகளோடு கூடி நின்று இறைவனின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றும் வகையில் இவ்வுலகத்திலிருந்து செயல்படுகின்றது. இவ்வுடலையோ, இவ்வுலகத்தையோ உதறித் தள்ளிவிட்டு அது இறைவனை அடைய விரும்புவதில்லை.

மற்ற ஆன்மாக்களும் இந்தப் பக்குவத்தை அடைய வேண்டும் என்பது பூரண யோகத்தின் முக்கிய குறிக்கோள். ஆகவே, பக்குவம் அடைந்த ஓர் ஆன்மா, மற்ற ஆன்மாக்களும் பக்குவம் அடைவதற்காக, இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் தன்னை ஒரு பாலமாக அமைத்துக்கொண்டு செயல்படுகின்றது. இது பூரண யோகத்தின் முதற் கட்டமாகும்.

சாதாரண மனிதன் தன்னை உடலாகக் காண்கின்றான்; மற்றவர்களையும் உடல்களாகவே பார்க்கின்றான். ஆனால் பூரண யோகி தன்னை ஆன்மாவாகக் காண்கின்றான். மற்றவர்களையும் அவன் ஆன்மாக்களாகக் காண்கின்றான். அவன் இறைவனின் கருவியாக இருந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆன்ம விளக்கத்திற்குத் தொண்டு செய்கின்றான். இவ்வுலகம் பொய்ம்மையிலிருந்து விடுபடவும், இங்கே சத்தியத்தின் ஆட்சி நிலைக்கவும் அவன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்கின்றான்.

மகான் ஸ்ரீ அரவிந்தர் நமக்குத் தந்துள்ள பரிபூரண யோகத்தின் அடிப்படைக் கருத்துகள் இவை.

No comments:

Post a Comment

Followers