ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள் - திரு. கர்மயோகி அவர்கள்
விதி வலியது அன்று. உரமான எண்ணங்கொண்ட மனித உள்ளத்தின் முன் விதி பின்வாங்கும்.
விதி என்பது இறைவனால் ஏற்பட்டது அன்று. நம் முந்தைய பிறப்புகளில் ஏற்பட்ட செயல்களின் பலனே விதி என்று நாம் கூறுவது. புருஷன் என்ற ஆத்மாவும், பிரகிருதி என்ற இயற்கையும் சேர்ந்ததே சிருஷ்டி. விதி, பிரகிருதியினால் உற்பத்தியாவது. மனிதன் தன் ஆத்ம பலம் வெளிப்படும் வகையில் தெளிவு பெற்றால் விதி அதற்குக் கட்டுப்பட வேண்டியது நியாயமன்றோ? தொன்றுதொட்டு வாழ்ந்த மனிதன் ஆத்ம பலன் துறவிக்கும், பிரகிருதியின் விதி குடும்பஸ்த- னுக்கும் என வாழ்ந்துவருகிறான். பிரகிருதியின் சூழலில் வாழும் மனிதன் விதியின் விலக்க முடியாத பிடியில் இருப்பதும் நியாயமே. ஸ்ரீ அரவிந்தர் மனித வாழ்வை, தெய்வீக வாழ்வாக மாற்றுவதை இலட்சியமாகக் கொண்டவர். இந்த நிலையில் உள்ள வாழ்க்கை பிரகிருதியின் பிடியில் இல்லாமல், ஆத்மாவின் ஆதிக்கத்திலிருக்கும். ஆகையால் விதி வலிதன்று.
-------------------------------------
கர்மம் பாதிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.
விதி என்பதும் கர்மம் என்று நாம் குறிப்பிடுவதும் அடிப்படையில் ஒரே அமைப்பையுடையவை. இவை இரண்டும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டவையில்லை. மனிதன் தன் முந்தையச் செயல்களால் நிர்ணயித்துக்கொண்டவை. அதிக வலிமையுடைய கர்மத்தை விதி என்றும், மற்றவற்றை கர்மம் என்றும் நாம் குறிப்பிடுகிறோம். தன் சுபாவத்தின் பிடியில் உள்ள மனிதன் கர்மத்திற்கும், விதிக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். தான் பிரகிருதியின் (இயற்கை) அம்சமான சுபாவத்தின் கூறு இல்லை; புருஷனான ஆத்மாவின் அம்சம் என உணர்ந்து, அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மனிதனுக்கு, தானே ஏற்படுத்திக்கொண்ட பழைய நிலைகளை - கர்மாவை - மாற்றிக்கொள்ளும் திறன் உண்டு.
No comments:
Post a Comment