ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -11
(From the Book "அருளமுதம்")
- திரு. கர்மயோகி அவர்கள்
சண்டைகளைத் தவிர்த்தல்:
வாய்ச்சண்டை (quarrel), வாக்குவாதம் (discussion), ஒருவரோடு ஒருவர் பேசாமருத்தல் (disharmony), பிணக்கு (conflict), விதண்டாவாதம் (contention) ஆகியவை நம் வாழ்வில் பங்குபெறுகின்றன. "நாலு பேர் சேர்ந்தால் சண்டை வராமல் இருக்காது'', "எவ்வளவு பெரிய இடமானால் என்ன, அங்கே போய்ப் பார்த்தால் தெரியும். எங்கேயும் இதெல்லாம் இருக்கும்'', "சென்ட்ரல் காபினெட்டிருந்து, உள்ளூர் காலேஜ்வரை சண்டையில்லாத இடமே இல்லை'', "பெரிய மதாசாரியார்களெல்லாம் தவிர்க்க முடியாததை, நம் வீட்டில் இருக்கக்கூடாது என்றால் எப்படி அது நடக்கும்?'' என்றெல்லாம் சொல்லி, நாம் சண்டையிடுவது சகஜம் என்று கொள்கிறோம்.
நாம் பழகும் இடத்தில் எந்தச் சண்டையும் என்னால் வரக் கூடாது என்ற முடிவை ஓர் அன்பர் கொண்டால், சண்டைகளைத் தவிர்ப்பதே என் கொள்கை என்றொருவர் ஆரம்பித்து அதில் வெற்றி பெற்றால், அன்னையிடம் அவர் பரிசு பெறலாம். இப்படி ஒருவர் சொன்னால் அதற்கென்ன அர்த்தம்? அவர் மனதில் வெறுப்பு, கசப்பு, பிணக்கு, பொறாமை இல்லை என்று பொருள். அந்த வெற்றியை அவர் பெற்றபின் அவர் நெஞ்சம், அன்னையின் பொக்கிஷம்.
சண்டைகளைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?
1. சண்டை அன்னைக்குப் பிடிக்காது என்பதால், அதை அறவே நீக்க வேண்டுமென முடிவு செய்தல்.
2. நம்முடன் ஒருவர் சண்டைக்கு வந்தால், "இதற்கு நான் எப்படித் துணையாவேன், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து
விலக்குவேன்'' என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.
3. பிறர் சொல்வதில் உள்ள உண்மையை அலசிப் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. நம் கருத்தில் உள்ள தவற்றை ஆராய்ந்து விலக்க வேண்டும்.
5. நம் பழக்கத்தில் சண்டையை வளர்ப்பதற்குத் துணையானவற்றைக் கண்டு விலக்க வேண்டும்.
குறை கூற மறுத்தல்:
அன்னை (psychic education) சைத்தியப்புருஷனை முன் கொண்டுவரும் கல்வி என்ற பகுதியில் 10 சட்டங்களைச் சொல்கிறார். இது அவற்றில் ஒன்று.
மேல்நாட்டு மனநூல் (psycology) துறையில் ஒரு வாசகம் உண்டு. "உனக்கு ஒருவரைப் பற்றித் தெரிய வேண்டுமானால், அவரைத் தூண்டி பிறரைக் குறைகூறச் சொல். பிறர் மீது அவர் கூறும் எல்லாக் குறைகளும் அவரிடம் இருக்கும்''. நம்மிடம் உள்ள குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே, நம் குறைகளை - நமக்குத் தெரியாதவற்றை - நாம் விரும்புவது இல்லை; வெறுப்பதும் உண்டு. பிறரிடம் நம் குறைகளைக் கண்டவுடன் நம் வெறுப்பு வெளிப்படுகிறது. பிறர் மீது நாம் குறை கூறுவதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறோம். நாம் அவர் மீது குறை சொல்லிவிட்டால் மனம் திருப்தியாகிவிடுகிறது. குறை சொல்லாவிட்டால் அந்தச் சக்தி ( energy) நம்மைத் திருத்திக்கொள்ள உதவும். குறையைச் சொல்லிவிட்டால் நம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.
"பிறரைத் திருத்த முடியவில்லை என்றால், அவர் மீது குறை கூறாதே'' என்கிறார் அன்னை.
பிறரிடம் ஒரு குறையைக் கண்டபின், அதைப் பேச மனம் துடிக்கும். அந்தத் துடிப்பு நமக்குக் கட்டுப்படாது. அவருடைய குறைக்குக் காரணம் புரிந்துவிட்டால், குறை சொல்லத் தோன்றாது. ஆகவே குறையைச் சொல்வதற்குப் பதிலாக, அதன் காரணத்தை அறிய முற்பட வேண்டும். அந்தக் குறையுள்ள மனிதனுடன் நாம் பழகவேண்டியது எதனால்? நம்மிடம் உள்ள ஒரு குறையே குறை உள்ள ஒரு மனிதனை நம்மிடம் கொண்டு வந்துள்ளது என்று உணர வேண்டும். நம் குறையை அகற்றினால், அவர் மாறுவார் அல்லது நம்மை விட்டகலுவார்.
ஓர் இளைஞன் தன்னைவிட 10 வயது பெரியவர் ஒருவருடன் பழகினான். பெரியவருடைய முழு சுயநலம் இளைஞனைப் பாதித்தது. ஏன் சுயநலமி என்னிடம் வரவேண்டும்? என யோசனை செய்தான். சுயநலம் நிரம்பியவருடனும், அவர் மனம் கோணாமல் தன்னால் பழக டியும் என்று தான் பெருமைப்படுவதை உணர்ந்தான். அடுத்த நாளிலிருந்து அந்தச் சுயநலமிக்கு வேறு வேலை வர இவர்களுடைய சந்திப்பு 1%ஆகக் குறைந்துவிட்டது.
யார் மீதுள்ள குறையையும் வெளியில் சொல்ல முழுவதுமாக மறுத்தால், நம் மனத்திலுள்ள குறைகளை அகற்ற முடியும். இது அன்னை விரும்பும் மனப்பாங்கு. இதை ஏற்று பூரணமாகப் பயின்றால், அன்னை நம்மிடம் பூரணமாக வந்து தங்குவார்கள்.
No comments:
Post a Comment