அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான முறைகள் -3
(Ref : நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை எப்படிப் பெறலாம்? -From the Book : அருளமுதம்.
- திரு. கர்மயோகி அவர்கள்
3. அழைப்பு:
அன்னையை அல்லது ஆன்மாவை அழைப்பதில், பலரும் வெற்றி அடைய முடியும். அவர்களுக்கு, இதை மேலும் எப்படி வலுப்படுத்துவது என்பதுதான் கேள்வி. அதை செயல்படுத்த முடியாதவர்களுக்கு ஒரு வழி உண்டு. ஒருவர் அடிக்கடி கோபப்படும் பொழுது, மற்றவர்கள் அவரை அந்த இடத்தை விட்டு அகன்று, தனிமையில் அமர்ந்து சிந்திக்கும்படி அறிவுறுத்துவார்கள். அப்பொழுது அவருடைய கோபம் பெரும்பாலும் மறைந்து விடுகிறது. கோபம் போனவுடன், சிந்திக்க முடிகிறது. கோப உணர்வுக்கு அடுத்த உயர்ந்த நிலை மனம். ஆன்மா மனத்தைவிட உயர்ந்த நிலை. ஒருவர் ஆன்மாவை அழைக்கும் பொழுது, எண்ணங்கள் குறிக்கிட்டு அதைத் தடுக்கிறது. எண்ணங்கள் குறுக்கிடுவதற்குக் காரணம், மனிதன் எண்ணங்களோடு ஒன்றிப்போய் விடுகிறான். இதை உணர்ந்து கொண்ட ஒருவர், சிந்தனையிலிருந்து எண்ணங்களை விலக்கினால், ஆன்மாவை அழைப்பது சுலபமாகிவிடும். மீண்டும் ஒருவர் அது முடியாது என்று சொல்லக் கூடும்.
இப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ஒரு நேரத்தை ஒதுக்கி அன்னையை அழைக்க வேண்டும். அதில் நேரம் போகப் போக எண்ணங்கள் குறைந்து அமைதி எழும். அன்னை, ஆன்மாவைவிட சக்திவாய்ந்தவர். இவ்வாறாக அன்னையை தினந்தோறும் சில நாட்கள் வரை தன்னுள் அழைத்த பிறகு, ஒரு நாள் முழுவதும் 12 மணி நேரம் அழைக்க மாற்ற வேண்டும். பிறகு 12 மணி நேரம் முழு நாள் பிரார்த்தனையை, மூன்று நாட்கள் அழைப்பாக அன்னையை அழைக்கும் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.
அன்னையையோ, அல்லது ஆன்மாவையோ, அழைக்கும் முயற்சியை மேற்கொண்டபின், மூன்று நாட்கள் பிரார்த்தனைக்குப் பின், அன்னை ஒருவரின் ஜீவனின் மேல்நிலையில் வந்து வெளிப்பட்டதும், உடனே சில மாற்றம் ஏற்பட்டு, சில நிகழ்ச்சிகள் மூலம் செயல்படுவதை அவர் காண்பார்.
பயிற்சி முறை:
வீட்டில் உள்ள அனைவரும் அழைப்பை ஏற்றுக்கொள்ள- வில்லையானால், ஒருவர் மட்டும் ஆரம்பிக்கலாம். இந்த முறையை எப்படி ஆரம்பிப்பது என்பதைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவற்றை வரிசைக்கிரமமாக எழுதுகிறேன். பூரண நம்பிக்கையுள்ளவர்களுக்கே உரிய முறை இது. அதுவே அடிப்படை.
- குறிப்பிட்ட நேரத்தை - ஒரு மணி அல்லது அரை மணி - ஒதுக்கி, நாள்தோறும் தவறாது அதே நேரத்தில் பயில வேண்டும். முதலில் Mother, அன்னை, அம்மா என்பனவற்றில் ஒன்றை வாயால் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.
- சில நாட்களுக்குப் பின், வாயால் சொல்வதைப் படிப்படியாக நிறுத்திவிடவேண்டும்.
- மனதால் செய்யும் உச்சாடனம் மனதை முழுமைப்படுத்தி நிரப்புவதையும், அதிலிருந்து பெருகி வாழ்வில் ஓடி வருவதையும் பார்க்கலாம்.
- மனம் நிறைந்த பின் (after saturation of mind) மனதால் சொல்வதை லேசாக மாற்றி நெஞ்சால் (heart) சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
- நெஞ்சம் நிரம்பி வழியும் நிலை வந்தபின், உச்சரிப்பை நிறுத்திக்கொண்டால், தானே Mother என்ற சொல் தானாக நெஞ்சிருந்து உற்பத்தியாகும். அதுவே அழைப்பு.
---------------------------------------
4. பொதுவான ஆத்ம சமர்ப்பணம்:
சமர்ப்பணம் என்பதன் பொருள் மனிதன் தன்னை விலக்கி, அந்த இடத்தில் இறைவனை வைப்பதையே, ஒவ்வொரு செயலிலும் நாம் சமர்ப்பணம் என்று குறிக்கிறோம்.
பரீட்சை அடுத்த மாதம் வரும்பொழுது இந்த மாதமே படிக்க ஆரம்பித்தால்தான் நல்ல மார்க் வாங்க முடியும் என அறிவு சொல்கிறது. டென்னிஸ் விளையாட்டு ஆர்வம் அதைப் புறக்கணித்து விளையாடச் சொல்கிறது. மனிதனுக்குள்ளே அறிவுக்கும், ஆசைக்கும் உள்ள முரண்பாடு இது. இதேபோல, மனிதனுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற நியதியை அவனுடைய ஆசை சில இடங்களிலும், அறிவு சில இடங்களிலும், பண்பு மற்ற இடங்களிலும் நிர்ணயிக்கின்றன. இவையெல்லாம் இறைவனின் நியதியிருந்து வேறுபட்டிருக்கலாம், மாறுபட்டிருக்கலாம், முரணாக இருக்கலாம். ஆதலால் ஒரு செயலைச் செய்யும் முன் ஆசையை, அறிவை, பண்பைக் கேட்பதற்குப் பதிலாக உள்ளுறையும் இறைவனைக் கேட்டு, அவன் நியதிப்படி அதைச் செய்வதே ஆத்ம சமர்ப்பணமாகும்.
பொதுவான ஆத்ம சமர்ப்பணம் என நான் இங்கு குறிப்பிடுவதும் இதையே என்றாலும், சிறப்பான மற்ற சில சமர்ப்பணங்களிலிருந்து ஓரளவு வேறுபடுகிறது. நம் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து, பின்னர் செயல்படுவதைப் பொதுவான சமர்ப்பணம் என்றேன். அழைப்புக்கும், சமர்ப்பணத்திற்கும், நினைவே வழிபாடு என்பதற்கும் என்ன வேறுபாடு என்றொரு கேள்வியை எழுப்பி சுருக்கமாகப் பதில் அளித்துவிட்டு மேலும் தொடருகிறேன்.
நினைவே வழிபாடு; சமர்ப்பணத்தைவிட எளியது. அதனால் நினைவை நாள் முழுவதும் மேற்கொள்வதால், அது சமர்ப்பணத்தின் பலனை அளிக்கும். போஸ்ட் ஆபீஸுக்குப் போக வேண்டும் என்றால் அன்னையை நினைத்துப் பிறகு போகிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது அண்ணன் நினைவு வந்தால், அன்னையை நினைத்துப் பிறகு அண்ணனை நினைக்கிறோம். இடைவிடாது ஒவ்வோர் எண்ணத்திற்கும், செயலுக்கும் முன்பாக அன்னையை நினைப்பதை "நினைவே வழிபாடு'' என்கிறோம்.
சமர்ப்பணம் என்பதைச் சும்மா இருக்கும்பொழுது செய்வதில்லை. ஒரு காரியத்தைச் செய்யுமுன் அதை ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் அது விட்ட வழியே அக்காரியத்தைச் செய்வதை, சமர்ப்பணம் என்கிறோம். ஆகவே நினைவு எப்பொழுதும் உள்ளது. அன்னையை நினைத்துவிட்டு நம் இஷ்டப்படிச் செயல்படுகிறோம். சமர்ப்பணம் என்பது செயல்களுக்கு முன்னர் மட்டுமே எழுவது. சமர்ப்பணம் செய்தபின் அச்செயலை நம் இஷ்டப்படிச் செய்ய முடியாது. ஆத்மாவின் ஆணைப்படியேதான் செய்ய வேண்டும். அழைப்பு என்பதன் மூலம் அன்னையின் சக்தியை நம்முள் கொண்டுவருகிறோம். அந்தச் சக்தி நம் செயலை, நம் விருப்பப்படி, தீவிரமாகச் செய்ய உதவும். நினைவு (Memory) என்பது மனத்தின் ஒரு பகுதி. சமர்ப்பணத்தைச் செய்வது நினைவில்லை, (will power) மனத்தின் செயல் திறன். அழைப்பதும் (will power) அதுதான். (Memory,will) நினைவு, செயல்திறன் என்பவை மனத்தின் வெவ்வேறு பகுதிகள்.
அழைப்பின் மூலம் அன்னை சக்தி உள்ளே வருகிறது. சமர்ப்பணத்தில் நம் (will) விருப்பத்தை விட்டுக்கொடுக்கிறோம். ஆகவே, நினைவு, அழைப்பு, சமர்ப்பணம் ஆகியவை இந்த அளவில் வேறுபட்டவை ஆகும்.
பொதுவான சமர்ப்பணம் நாம் எடுத்துக்கொண்ட நோன்பானால், நம் அனைத்துச் செயல்களும் கதவைத் திறப்பது, ஒருவருக்கு இல்லை என்பது, மற்றொருவருக்கு உடன்படுதல், சாப்பிடுதல், பாங்கில் பணம் போடுதல், பேப்பர் படித்தல், பிரமோஷனுக்கு விண்ணப்பம் போடுதல் ஆகிய அனைத்துச் செயல்களையும், சிறியவை, பெரியவை எல்லாவற்றையும் ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் செய்தல் என்று பொருள். அப்படிச் செய்வதால் மனிதனுடைய (ego) அகந்தை விலகி, ஆன்மாவின் ஆதிக்கம் நம் முழு வாழ்வையும் சூழ்ந்து கொள்ளும். அது சிறப்பு. அச்சிறப்பின் மூலம் அன்னை பெருவாரியாகச் செயல்படுவார். இம்முறை ஒரு வகையில் எளிமையானது.
சமர்ப்பணம் செய்தபின் சில சமயங்களில் நம் அறிவின்படியே நடக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் நம் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மற்ற சமயங்களில் நம் விருப்பத்திற்கு மாறாக நடக்க வேண்டியிருக்கும். என்றாலும் பொதுவாகச் சமர்ப்பணத்தை மேற்கொள்வது எளிது. வேறொரு வகையாகப் பார்த்தால், கடினமானது. எல்லாச் செயலையும் தவறாது சமர்ப்பணம் செய்ய வேண்டியிருப்பதால், சமர்ப்பணத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கடினம் என்றாகும்.
ஒரு செயலைச் சமர்ப்பணம் செய்யும்பொழுது அது சம்பந்தப்பட்ட எண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் சமர்ப்பணம் செய்வதே முறை. அந்த முறையைக் குறிப்பான சமர்ப்பணம், பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல், வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்தல், ஆகியவற்றில் எடுத்துக்கொள்கிறோம். பொதுவான சமர்ப்பணம் என்பதால் செயலில் செயல் பகுதியை மட்டுமே சமர்ப்பணம் செய்வதை இங்குக் கருதுகிறோம். அந்த வகையில் இது எளிது. வாழ்வின் எல்லாச் செயல்களையும் தழுவுவதால் கடினம். அகலம் கருதுதல் கடினமான முறை. ஆழம் கருதுதல் எளிமையான முறை.
---------------------------------------
5. ஒரு குறிப்பிட்ட செயலைப் பூரண சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளுதல் (Consecration of a complete act & all acts of that type):
சமர்ப்பணத்தை வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் கைக்கொள்ளுதல் யோகத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். சாதகரில்லை, அன்பர் என்பதால், நான் சொல்லும் முறையின் பூரணப் புனிதம் யோகத்தைச் சார்ந்ததெனினும், அளவை அன்பரின் சந்தர்ப்பங்களைப் பொருத்துக் குறைத்து, சாதாரண பக்தனுக்கும் சாத்தியமாகும்படிச் செய்ய முயல்கின்றேன்.
ஆனால், ஏதாவது ஒரு வகையான காரியத்தை மட்டும் குறிப்பிட்டு அதன் எல்லைக்குள் சமர்ப்பணத்தைப் பூரணமாகக் கடைப்பிடிப்பது என்ற முறை இது.
நம் வாழ்வு, செயல்களால் நிரம்பியது. செயல்கள் பலதரப் பட்டவை. அளவு கருதியும், வகை கருதியும், செயல்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக நம் செயல்களை வீடு, ஆபீஸ், மற்ற இடங்கள் என்று பிரிக்கலாம். பணம் சம்பந்தப்பட்டவை, மனிதர் சம்பந்தப்பட்டவை, விசேஷங்களை ஒட்டியவை எனப் பிரிக்கலாம். குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது, குடும்ப நிர்வாகம், ஆபீஸ் கடமை, கடன் கொடுப்பது, வாங்குவது, கடைக்குச் சென்று சாமான் வாங்குவது, கடிதம் எழுதுவது போன்ற சுமார் 100, 200 செயல்களைக் கொண்டது நம் வாழ்வு. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். உதாரணமாக, பஸ்ஸில் பயணம் செய்வதை எடுத்துக்கொள்வோம். அது சம்பந்தப்பட்ட எல்லா (1) எண்ணங்களையும், (2) உணர்ச்சிகளையும், (3) செயல்களையும் சமர்ப்பணத்திற்குப் பூரணமாக, நூற்றுக்கு நூறு உட்படுத்துவோம். செயல் சமர்ப்பணத்தால் நிரம்பியவுடன் (saturated) அன்னையின் அருட்பிரவாகம் அதில் தெரியும். அதிசயிக்கத்தக்க முறையில் தெரியும். இந்த யோகப்
பலனைப் பார்த்த பின், நமக்கு எந்த ஒரு செயலும் சமர்ப்பணத்தால் பூரண அருள் பெறும் திறன் ஏற்பட்டு விடுகிறது.
--------------------------------
- தொடரும் ...
No comments:
Post a Comment