- யோகவாழ்க்கை விளக்கம் - திரு. கர்மயோகி அவர்கள்
ஆதாயம், இலாபம், பொருள் நம் இலட்சியத்தை இன்று நிர்ணயிக்கின்றன. இது மாறி, இலட்சியம் இவற்றை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டால், அன்னையை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வதாகும். இதற்கு முதற்படியாக இலாபத்தைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயிப்பதை விட்டுவிட வேண்டும்.
இலட்சியத்தை நிர்ணயிக்க இலாபம் அளவுகோலன்று.
நாமுள்ள நிலைக்கும், அன்னையுள்ள நிலைக்கும் 4 அல்லது 5 நிலைகள் இடையில் உள்ளன. ஐந்தாம் நிலையை எட்டுவது குறிக்கோள். நாம் மனத்திலிருந்து செயல்பட்டால் 4 நிலை உயர்ந்து அன்னையை அடையவேண்டும். உணர்விலிருந்து செயல்பட்டால் 5 நிலையுயர வேண்டும். ஒவ்வொரு நிலையையும் உயர்ந்தது, தாழ்ந்தது என இரண்டாகப் பிரிக்கலாம். ஆதாயம், இலாபம் உணர்வைச் சேர்ந்தவை. பொருள் உடலைச் சார்ந்தது. இலட்சியம் மனதைச் சேர்ந்தது. ஆதாயத்தைவிட்டு இலட்சியத்தை ஏற்றுக்கொண்டால் அன்னையை நோக்கி ஒரு படி முன்னேறியதாகும். அதுவே அன்னையை ஏற்றுக்கொள்வதாகும். இலட்சியம் உயர்ந்தது, இலாபம் தாழ்ந்தது. இலாபம் கண்ணுக்குத் தெரிவது. இலட்சியம் கண்ணுக்குத் தெரியாதது, இலட்சியத்தை மனிதன் இலாபத்திற்காகவும் ஏற்க மாட்டான். இலாபத்திற்காகவாவது ஏற்றால் போதும் என்பது சாதாரண மனிதன் நிலை. அன்னையை நோக்கி வர அது போதாது.
புது டிரஸ் வாங்கித் தருவேன், முதல் மார்க்கு வாங்கு என்று சிறு குழந்தைக்குச் சொல்லலாம். அதையே பெரிய பையனிடம் சொல்லி, பெரிய படிப்பை படிக்கச் சொல்ல முடியாது. படிப்பின் முக்கியத்துவம் அறியப்பட வேண்டும். இல்லை எனில் படிப்பு வாராது. இலாபத்தைவிட்டு இலட்சியத்தை ஏற்பது உணர்விலிருந்து மனத்திற்கு வருவதாகும். அதுவே நம் யாத்திரையின் முதற்கட்டம். இலட்சியத்தை ஏற்க, இதனால் என்ன இலாபம் வரும் என்ற நோக்கம் உள்ளவரை நாம் ஏற்பது இலட்சியமில்லை, இலாபமே. நம் நோக்கம் மாறியபின்னரே இலட்சியம் நம் வாழ்வில் இடம் பெறும்.
அன்னை வழிபாடு உள்பட எந்த வழிபாட்டிற்கும் நம்பிக்கை அடிப்படை. நம்பிக்கை என்றால் அன்னையை நம்புவதாகும். எனக்குப் புரியும்போல் சொல்லிவிட்டால் போதும் நான் நம்புவேன் என்பதைப் பெரும்பாலான பக்தரிடையே காணலாம். புரிந்துவிட்டால் பக்தர் ஏற்றுக்கொள்வது அன்னையையா? தனக்குப் புரிவதையா? தனக்குப் புரிகிறது, என்றால் பக்தர் மனம் புரிந்து கொள்கிறது. அதை நம்பினால் பக்தர் தம் மனத்தை நம்புகிறார். அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர். தன்னம்பிக்கையுள்ளவன் திறமையோடு செயல்படுவான். அது அன்னைமீது நம்பிக்கையாகாது. புரிவதை நம்பினால் அதற்கு நம்பிக்கை எனப் பெயரன்று. புரியாததை நம்பினால் அதற்கு நம்பிக்கை என்று பெயர். நாம் டாக்டரை நம்புகிறோம். துணி வாங்கினால் கடையை நம்புகிறோம். ரூபாய் நோட்டு வாங்கினால் சர்க்காரை நம்புகிறோம். கடையில் வாங்கும் துணி சாயம் போகாது எனக் கடைக்காரன் சொல்கிறான். நமக்குத் தெரியாது. இனிமேல் போய் பார்க்க வேண்டும். தெரியாத விஷயத்தை ஒருவர் சொல்லக்கேட்டு நம்புவது நம்பிக்கை. தெரியாத விஷயம், தெரிந்துவிட்டால் இனி நம்புவது அவரையன்று, நம்மை நம்புகிறோம். இலட்சியம் எவ்வளவு இலாபம் தரும் எனக் கணக்குப்போட்டு இலட்சியத்தை ஏற்றுக் கொண்டால், நாம் இலாபத்தையே ஏற்கிறோம். இலட்சியத்தையன்று. எனவே இலாபத்தைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயிக்கும் மனப்பான்மை போகவேண்டும்.
இலாபத்தை மனம் நாடுவது ஒரு நிலை. இலட்சியத்தை நாடும்பொழுது இலாபத்தால் இலட்சியத்தை நிர்ணயிப்பது வேறு. முந்தையது சரியில்லை. அடுத்தது தவறு. மனச்சாட்சிப்படி இறைவனை வழிபடும் இயக்கம் (Quakers) ஐரோப்பாவில் சென்ற நூற்றாண்டில் எழுந்தது. அவர்கள் வியாபாரத்தில் வந்தால் இலாபம் பெறச் சம்மதிக்கவில்லை. தமக்குச் சம்பளமாகத் தேவைப்பட்ட அளவே இலாபம் பெற வேண்டும் என்று கருதினர். இவர்கள் இன்றும் இங்குமங்குமாகத் தொழிலிலிருக்கின்றனர். ஆனால் இலாபத்தைத் தேடாத மனப்பான்மை இவர்கள் தொழிலை நசித்துவிட்டது. இலாபமில்லாமல் தொழில் செய்யமுடியாது. இலாபத்தை நாடுவது என்றால் அதையே மனம் குறியாக நாடுவது என்றாகும். அது சரியில்லை. நடைமுறையில் இலட்சியமாகக் காரியங்களைச் செய்யும்பொழுது - பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தும்போது - எவ்வளவு இலாபம் வரும் என்று பார்த்து அதைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயிக்கும் எண்ணம் தவறு. Life Divine இல் இதை Matter over mind பொருள் மனத்தை நிர்ணயிப்பது என்கிறார். மனம் பொருளை நிர்ணயிப்பதைச் சரி என்கிறார். Life Divine இல் கருவாக உள்ள 20, 30 கருத்துகளில் இதுவும் ஒன்று*. உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. எங்குமே பின்னே போவதில்லை. நாட்டில் லஞ்சம், ஊழல், தரக்குறைவு ஏற்பட்டதைக் கண்டு நல்லவர் மனம் நடுங்குகிறார்கள். தூய்மை, தரம் மூலமாக முன்னேற முடியாத பிற்பட்ட சமூகங்கள் ஊழல், தரக்குறைவு மூலமாக முன்னேறுகிறார்கள். இவை மந்த நாடுகள் - சமுதாயங்களைப் - பார்த்தால் அடுத்த 30 ஆண்டுகளில் ஊழலைவிட்டுத் தூய்மையை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கலாம். கடத்தல், லஞ்சம், மோசடி, பித்தலாட்டம் செய்த குடும்பங்கன் வாரிசுகளைப் பார்த்தால், நேர்மை, நிர்ணயம், நாணயத்தை மூன்றாம் தலைமுறை, நாலாம் தலைமுறைகளில் ஏற்றிருப்பார்கள். இவை தவறு என்பதை உணர இரண்டு மூன்று தலைமுறைகள் ஆகின்றன.
ஆதாயத்தை இன்று கருதினால், அதைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயித்தால், நமக்கு முன்னேற்றம் வரும் முன் ஆதாயம் பலன் தாராது என்று உணரவேண்டும். அதற்கு ஓரிரு தலைமுறைகளாகும். இதை அறிவால் ஏற்றால் பலன் உடனடியாகக் கிடைக்கும். அனுபவத்தால் ஏற்க நெடுநாளாகும். இந்தியாவிலும், உலகத்திலும் பெரிய கம்பனிகளாக இருப்பவர்களும், பெருஞ்செல்வர்களாக இருப்பவர்களும், இலட்சியத்தை ஏதோ ஒரு வகையில் சிறப்பாக ஏற்றுக் கொண்டவர்களே. ஆதாயத்தை மட்டும் தேடியவர்கள் அந்த தலைமுறையுடன் அழிந்துவிடுகிறார்கள்.
No comments:
Post a Comment