குறை என்பது குணக்குறை. வழக்கம் மாறினாலும் குணம் மாறாது. குணம் மாறுவது என்பது சுபாவமாகும். அப்படியே மாறினாலும் நிரந்தரமாக மாறாது. கோபக்காரர் தம் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றால் இதன் முக்கியத்துவம் புரியும். குறை என்பது சுபாவத்தை வெளிப்படுத்துவது. கர்மம் சுபாவக் குணத்தின் மூலம் தன்னை நிலைநாட்டுவது. குறைகளை விலக்குவது என்பது சுபாவத்தை மாற்றுவதாகும். கர்மத்தை அழிப்பதாகும்.
சுபாவத்தின் வலிமையை அறிந்த கீதை அதன் பெருமையைக் கூறுகிறது. அவரவருக்கு ஏற்பட்ட சுபாவம் அவரவர்களுக்குப் பொருத்தமானது, உயர்ந்தது என்று கூறுகிறது.பிறருடைய உயர்ந்த சுபாவத்தைப் பின்பற்றுவதைவிட நம் தாழ்ந்த சுபாவத்தைப் பின்பற்றுவது பலன் தருவது என்று கீதை கூறுகிறது.
ஸ்ரீ அரவிந்தம் சுபாவத்தை மாற்றவேண்டும் என்று சொல்வதில்லை. அழிக்கவேண்டும் என்று கூறுகிறது. சுபாவத்தின் வலிமையை அறிந்த ஸ்ரீ அரவிந்தம் சுபாவத்தை மாற்றும் முயற்சியையும் அதை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறது. இதன் பின்னுள்ள ஆன்மீகத் தத்துவத்தை சற்றுக் கருதுவோம். அவசரமானவன் பொறுமையைக் கைக்கொண்டால் அதைச் சாதிக்க அவசரப்படுவான். அது அவசரத்தின் வலிமை. வாய் ஓயாமல் பேசுபவர் பேச்சை நிறுத்த முடிவு செய்தால் ஏன் பேசக்கூடாது என்று ஆயிரம் பேரிடம் விளக்கம் கூறுவார். அப்படியானால் இதைச் சாதிப்பது எப்படி? மனிதனுக்குள்ள உயர்ந்த கருவி மனம்.மனத்தில், அதிகபட்ச உயர்வான அம்சம் அறிவு.
பொறுமையைக் கைக்கொள்ளவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
- நம் மனம் பொறுமையின் அவசியத்தை உணரவேண்டும்.
- அந்த முடிவைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.
- பொறுமையின் காரணங்களை அறியவேண்டும்.
- அவசரம் உள்ளிருந்து உணர்ச்சியில் எழுவதைக் காணவேண்டும்.
- உடலில் அதன் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.
இந்த முடிவைச் சமர்ப்பணம் செய்த பிறகு அடுத்த முறை அவசரம் எழும்போது அதன் முனை மழுங்கி இருப்பது தெரியும். கவனித்துப் பார்த்தால் அவசரம் ஆசையால் வருகின்றது என்று புரியும். மேலும் கவனித்துப் பார்த்தால் அனுபவம் இல்லாததால் வருகின்றது என்று தெரியும்.
குறைகள் வெளிப்படும் முறைகளும், அதனை விலக்கும் முறைகளும்
குறைகளின் பெயர் நீண்ட பட்டியல். பெருமை, பொறாமை, பயம், பேராசை, குறுக்கே பேசுவது என ஆயிரம் உண்டு. நாம் வீண் பெருமையை ஆராய்வோம். வீண் பெருமை தன் குறை என்று அறிந்து சமர்ப்பணத்தால் விலக்க ஒருவன் முயன்றால் கீழ்க்கண்டவை அவர் முன் படிப்படியாகத் தோன்றும்.
நம்மையறியாமல் பெருமையை நம்முள் நாடுபவை நம்மை மீறி எழுவதைக் காணலாம். இதை மனம் கண்டு அதை ஏற்காமல் அதிலிருந்து விலகிச் சமர்ப்பணம் செய்தால் அதுவும் விலகும்.
- நாம் சும்மா இருக்கும்பொழுது நம் மனம் அடங்கி இருக்கும்பொழுது நாம் எதிலிருந்து விலகி இருக்கிறோமோ அதைச் செய்யும்படி பிறர் தூண்டுவர். இதுவரை நாம் செய்த காரியங்களை அழிக்கும் வழி, அவர் தூண்டுவதற்கு இரையாகி நாம் முன்போல் நடப்போம். அதைச் சமர்ப்பணம் செய்வது சிரமம். அதுவும் சமர்ப்பணம் ஆனபிறகு,
- எண்ணத்தின் பின்னிலிருந்து உணர்ச்சி உந்தும். இதைச் சமர்ப்பணம் செய்ய எண்ணத்திற்குண்டான மூன்று கட்டங்களை மீண்டும் பின்பற்றவேண்டும். அவற்றில் வெற்றி கண்டால்,
- அதேபோல் உணர்ச்சியின் அடியில் உடல் தானே இயங்குவது தெரியும். அதுபோல் இயங்கும்போது நாம் "என்ன நடந்தது என்று தெரியவில்லை, போனேன், நண்பரைக் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்த பிறகு என்னை அறியாமல் நான் phone-இல் அவரைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்கும்போது என்னை மீறி நான் செயல்படுவது எனக்கு நினைவு வந்தது'' என்று கூறுகிறோம்.
- எண்ணமும், உணர்வும், உடல் அசைவுகளும் அடங்கியபின் சூட்சுமப் பகுதிகளில் அதே எண்ணம் எழும்.
- அதேபோல் உணர்விலும், உடலிலும் சூட்சுமத்தில் உந்தல்கள் எழும்.
ஓர் எண்ணத்திற்குப் பின்னால் நம்முள் (inner life) இத்தனைக் கட்டங்களில் எழுவனவற்றை காண்பது முதல் அவசியம். சமர்ப்பணத்தால் ஒவ்வொன்றாகக் களைவது அடுத்தது. சிரமப்பட்டு அகத்தில் வென்றதை அர்த்தமற்ற புறச்செயல் அழிப்பது மனித சுபாவம். நாம் யாரை phone-இல் கூப்பிடவேண்டாம் என்று இருக்கிறோமோ அவரிடம் நம் வீட்டில் மற்றொருவர் phone-இல் பேசுவார். நம்மைப் பேச அழைப்பார். நாம் சம்மதித்தால் இத்தனைக் கட்டுப்பாடும் வீண்போகும். சமர்ப்பணத்தில் நமக்கொரு பங்குண்டு என்றால் அது இதுதான். இதையும் அன்னை செய்யவேண்டும் என்று கூறுபவர் உண்டு. அது நம்மவருக்கே உரிய குதர்க்கவாதத்தின் உச்சகட்டம். அதைச் சொல்லும் உரிமை நமக்கில்லை. பெரிய மஹான்கள் அப்படிப் பேசி இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் செய்த சரணாகதியை (ஜீவனைச் சரணம் செய்து இருப்பார்கள்) நாம் செய்த பிறகு பேசலாம். அவரை அப்படிப் பேசும் உரிமை நமக்கு இல்லை. அப்படிப் பேசும்போது அப்பேச்சு இதுவரை செய்த முயற்சியை வீணடிக்கும்.
நம் குறை அன்னைக்கு தடையா?
நம் குறை அன்னைக்குத் தடையில்லை. அதைமீறி அன்னை செயல்படுவார் என நாம் அறியவேண்டும்.
٭தாழ்ந்து பிறந்தவனுக்குப் பிறப்புத் தடை. அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனால், சர்க்கார் அதிகாரம் அவன் குறையை மீறிச் செயல்படும். அன்னை அதுபோல் செயல்படுவார்.
٭ஊனமுற்றது குறை, மார்க் குறைவு குறை, தாழ்ந்த சாதி குறை, ஏழ்மை குறை, இல்லை என்பது குறை. இன்று நிலைமை மாறிய நேரம். நேரம் இக்குறைகளை மீறி ஊனமுற்றவனுக்கு வேலை தருகிறது. குறைந்த மார்க்குக்கு quota உண்டு, தாழ்ந்த ஜாதியை, ஏழ்மையைமீறி வேலை, படிப்பு, கடன் வசதி வருகிறது. அது காலம் மாறியதால் ஏற்படுவது.
அன்னையை ஏற்றால் அனைத்தும் மாறும் எனப் புரியவேண்டும்.
மாறிய காலம் செய்வதை அன்னை செய்வார்.
குறை தடையில்லை. ஆனால், குறையை வலியுறுத்தக்கூடாது.
காலம் மாறும், சட்டம் மாறும், ஆட்சி மாறும், பருவம் மாறும், மனநிலை மாறும் என மாறுபவை பல. அன்னையை ஏற்றால் அனைத்தும் மாறும் என அறிவது அவரைப் புரிந்துகொள்வது.
குறையால் ஏற்படும் பெருநிறைவு
குறை நிறையாக மாறுவது திருவுருமாற்றம். எப்படி அது வரும்?
அன்னை குறையை மீறிச் செயல்படுவார். அடுத்த கட்டத்தில் குறையை நிறையாக்குவார். அதற்கும் அடுத்த கட்டம் உண்டு. குறை எவ்வளவு பெரியதானதோ, அன்னை அதை அவ்வளவு பெரிய நிறையாக்குவார்.
இதற்கு உதாரணம் உண்டா? இதன் தத்துவத்தை விளக்கலாமா?
இன்று எழும் பெரிய புள்ளிகள் எல்லாம், மிகத் தாழ்ந்தவர் என்பதை அரசியலிலும், பணத்திலும் காண்கிறோம். காலம் மாறுவதால், பெரும்குறை வாழ்வில் பெருநிறைவாகிறது என்பது நம் தொடர்ந்த அனுபவம். ஜீவியம் (consciousness) அன்னையால் மாறுவதால், காலத்தைவிடப் பெரியதை அன்னை சாதிக்கிறார்.
இப்படி அன்னையைப் புரிந்துகொள்வது, அன்னையைப் புரிவதாகும்.
தத்துவம் ஏதேனும் உண்டா?
வாழ்வுஎன்பது முழுமை. நிறைவு ஒருபகுதி. குறை அடுத்த பகுதி. நிறைவு முழுநிறைவு பெற்றாலும், அதன் ஆட்சி ஒருபகுதியுடன் முடிந்துவிடும். அது பகுதியின் நிறைவு. குறை அடுத்த பகுதி. குறையும் நிறைவும் சேர்ந்தது முழுமை. குறை நிறையாக மாறுவது முழு நிறைவாகும். அம்மாற்றம் திருவுருமாற்றம் எனப்படும்.
பெரிய குறை பெரிய நிறைவாக மாறச் சரணாகதி பெரியதாக இருக்கவேண்டும்.
சரணாகதி திருவுருமாற்றத்தால் பெரிய குறையைப் பெரிய நிறைவாக்குவது அன்னையின் சக்தி.
பெரிய குறை, பெரிய நிறைவு.
No comments:
Post a Comment