ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 10
அண்டை மாநிலத்திலிருந்து அந்த ‘அமுதசுரபி’ பெண் வாசகர், தன் குடும்ப நிலையை விளக்கி திரு. கர்மயோகி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
("எல்லாம் தரும் அன்னை " என்ற நூலில் இந்தக் கட்டுரையை திரு கர்மயோகி அவர்கள் எழுதியுள்ளார்.
அந்தப் பெண் வாசகருடைய கணவர் பாதுகாப்புத் துறையில் பணி புரிகின்றார். அவருக்கு ஐந்து குழந்தைகள். அதுவன்று பிரச்சினை. அவர் கணவர் பாரதத்தின் ஏதோ ஒரு மூலையில் வேலை செய்கிறார். குடும்பமோ இன்னொரு மூலையில் வாழ்ந்து வருகிறது. பாதுகாப்புத் துறையின் கிளைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவர் பறந்து போய்ப் பணி செய்ய வேண்டியதாயிருக்கும். குடும்பத்தையும்கூடத் தூக்கிக் கொண்டு பறக்க முடியுமோ? ‘முடியாது’ என்பதால், அவர் ஓர் இடம்; அவர் குடும்பம் ஓர் இடம். இதுதான் பிரச்சினை. ஓர் அவசரம் என்றால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளப் பல நாட்கள் பயணம் செய்தாக வேண்டும்.
பிரிவு ஒரு சோதனை என்றால், அந்தப் பெண்மணிக்குக் குடும்பப் பொறுப்பு இன்னொரு சுமை. ‘தந்தைக்குத் தந்தையாக இருந்து தம் குழந்தைகளைக் கட்டிக் காக்கவும், வழி காட்டி நடத்திச் செல்லவும், அன்புடன் ஆறுதல் சொல்லவும் தம் அன்புக் கணவர் அண்மையில் இல்லையே’ என்று விழிகள் எல்லாம் வியர்த்துத் துன்புற்றார் அவர்.
இன்னொரு வகையிலும் அவருக்குத் துயரம் தொடர் கதையாக இருந்தது. அவருடைய கணவர் கடுமையான உழைப்பாளி, அப்படி இரு ஆண்டுகள் உண்மையாக உழைத்த பிறகும்கூட அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லை. இது வாசக அன்பருக்கும், அவர் கணவருக்கும் மிகுந்த வேதனையை அளித்தது.
துயரம் அதோடு முடிந்துவிடவில்லை. மேலும் தொடர்ந்தது.
அந்த அன்பர் ஒரு முறை தம் கணவரின் பொருட்டு குழந்தைகளையும், குடும்பத்தையும் தம் பெரிய பெண்ணின் பொறுப்பில்விட்டுச் செல்ல நேர்ந்தது. ஆனால், அவர் தம் கணவரோடு வசித்த காலத்தில் ஊரில் இருந்த குழந்தைகளைச் சுற்றியே அவர் மனம் அலைந்தது. அவருக்கு வேதனையே விடியலாக வந்து, பொழுதாகக் கழிந்தது. இந்த நிலையில் ஒரு நாள் அவரும், அவர் கணவரும் தம் குழந்தைகளைப் பார்ப்பதற்காக ஆவலோடு ஊருக்கு வந்தபொழுது, வீட்டில் இரண்டாவது மகள் இறந்து கிடந்த காட்சியைத்தான் அவர்களால் காண முடிந்தது.
இத்தகைய சூழ்நிலையில் அந்த அன்பர், ‘அமுதசுரபி’யில் வெளியாகிக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அரிதினும் அரிய கொடைகளை எளிதினும் எளிதாகப் பக்தர்களுக்கு அருளும் அன்னையின் சிறப்பை அறிந்தார் அவர்.
‘இனிக் கவலைப்பட வேண்டியதில்லை, அதை அன்னை பனி போல் நீக்கிவிடுவார்’ என்று அவர் தெளிந்தார்.
அவருடைய மிகப் பெரிய கவலை என்ன? நெடுந்தொலைவில் கணவர் வேலை பார்ப்பது. அவர் ஊருக்கே மாற்றலாகி வந்தால், நல்லதுதான். ஆனால், அது சாத்தியம் அன்று. தமிழ்நாட்டில்தான் அவர் பணியாற்றிய துறைக்கு கிளை இருந்தது. அவர் தமிழ் நாட்டிற்கு மாற்றலாகி வந்துவிட்டால்கூட அது சொந்த ஊரில் பணியாற்றுவது போலத்தான். ஏனென்றால், அவர் சில மணி நேரப் பயணத்தின் மூலம் ஊருக்கு வந்து தம் குடும்பத்தினரைச் சந்தித்துவிடலாம்.
ஆகவே, அந்த அன்பர் தம் கணவருக்குத் தமிழ்நாட்டில் மாற்றல் கிடைக்க வேண்டும் என்று அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டு ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைத்தார்.
அன்னையின் அருளால் விரைவிலேயே அவருடைய கணவரைச் சென்னைக்கு மாற்றல் செய்துவிட்டார்கள். அந்த அளவில் அன்பரின் மனக் கவலை தீர்ந்தது. கவலைகளின் தொகுப்பானது வாழ்க்கை. அதில் ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை முண்டிக் கொண்டு வரும். இப்பொழுது அந்த அன்பருக்குத் தம் மூத்த பெண்ணின் திருமணத்தைப் பற்றிக் கவலை.
அந்தப் பெண் பி.யூ.சி.வரை படித்திருந்தாள். நல்ல குணங்களும், கலகலப்பான சுபாவமும் கொண்ட அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிகழ்ந்தாக வேண்டும். ஆனால், ஊர் ஊராக வலை போட்டுத் தேடி நல்லதொரு மணமகனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே அந்தப் பெண்ணை மணந்து கொள்ள ஒருவன் காத்திருந்தான். பெரியவர்கள் முன்நின்று திருமணத்தை முடிக்க வேண்டியதுதான் பாக்கி. இரு வீட்டுப் பெரியவர்களும் திருமணத்தை விரைவில் நடத்திவிட மிக ஆர்வமாக இருந்தார்கள். இது வரையில் சிக்கல் இல்லை. திருமணத்தை நடத்தப் பெருந்தொகை தேவைப்படுகின்றதே, அதுதான் பெண்ணின் பெற்றோருக்குப் பெரிய சிக்கலாக இருந்தது.
குடும்பத் தலைவர் ஒரு புறமும், குடும்பம் மற்றொரு புறமுமாக இருக்க நேர்ந்ததால் அவர்களுக்குச் செலவைச் சமாளிப்பதே மரணக் கிணற்றைத் தாண்டுவது போல் இருந்தது. இந்த நிலையில் ஒரு தொலை நோக்கோடு பெண்ணின் திருமணத்திற்குப் பணத்தைச் சேமித்து வைப்பது என்பது நடைமுறைச் சாத்தியம் அன்று. குடும்பத்தை ஓட்டுவதே ‘உன்னைப் பிடி, என்னைப் பிடி’ என்று இருக்கும்பொழுது, திருமணத்திற்காகத் திடீரென்று ஆயிரக் கணக்கில் பணத்தைப் புரட்டுவது எப்படி?
அவர்களுக்கு இரண்டு வீட்டு மனை நிலத்தைத் தவிர வேறு சொத்தில்லை. அவர்கள் அந்த மனைகளை விற்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவற்றை வாங்குவதற்கு யாராவது உடனடியாக முன்வர வேண்டும். அப்படியே வந்தாலும் திருமணத்திற்குத் தேவைப்படும் பணம் முழுதும் கிடைக்குமா என்பது சந்தேகம்.
இந்தச் செய்திகளை எல்லாம் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்த அந்த அன்பர், “எங்களுக்குத் தெய்வத்தைத் தவிர வேறு யாரும் துணை இல்லை. எங்கள் பெண்ணின் திருமணம் எந்த விதத் தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும். அதை நிகழ்த்தி அருளக் கூடிய அன்னையை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதைப் பற்றி விவரமாக எழுதுங்கள்” என்று கோரிக் கடிதத்தை முடித்திருந்தார்.
நான் அந்த அன்பருக்கு உடன் பதில் எழுதினேன். அதன் சுருக்கம் இது: “அன்னையின் அன்பர்களுக்குத் தேவையானவை இரண்டு. அவை நம்பிக்கையும், பக்தியுமாகும். ‘நாம் கோரியதை அன்னையின் அருள் பெற்றுத் தரும்’ என்று உறுதியாக இருப்பது நம்பிக்கை. எதைக் கோருகின்றோமோ, அது செயல்படுவதற்கான முயற்சியைப் பூரணமாகக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கோரியதைப் பெறுகின்றவரை, அதோடு சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்களையும் அன்னையைப் பணிந்து செய்துவர வேண்டும். இப்படிச் செய்வது பக்தி. இந்த இரண்டும் (நம்பிக்கையும், பக்தியும்) நிறைந்தவர்களுக்கு, தடையற்ற செல்வமும், குறைவற்ற சுகங்களும் பெருகிக் கொண்டே இருக்கும்”.
“ஆகவே, உங்கள் கணவருடைய உத்தியோக உயர்வு, உங்கள் பெண்ணின் திருமணம் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள மேற்கூறியவாறு அன்னையை வணங்கி வாருங்கள். அன்னை அருள் செய்வார். அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டு ஆசிரமத்திற்கு ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வையுங்கள்”.
நான் அந்தக் கடிதத்தை 1985, ஜூன் கடைசி வாரத்தில் எழுதி இருந்தேன்.
அந்த அன்பர் சில நாட்களுக்குள், அதாவது ஜூலை முதல் வாரத்தில் பதில் எழுதி இருந்தார். அதில், “உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் படித்ததிலிருந்து என் மனத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்பட்டுள்ளன. என் துன்பங்கள் யாவும் மறைந்து விட்டன போன்ற ஓர் உணர்வு. அன்னையே எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டதைப் போன்றதோர் எண்ணம். ஒரு மகிழ்ச்சியான செய்தி. என் கணவருக்கு உத்தியோக உயர்வு கிடைத்துவிட்டது. 19 வருடங்களுக்கு முன்னால் கிடைத்திருக்க வேண்டிய இந்தப் பதவி உயர்வு, இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இது அன்னையின் அருளாலேயே கிடைத்திருக்கிறது”.
“உங்கள் அறிவுரைப்படி உடனே அன்னைக்குக் காணிக்கையை அனுப்பிவிட்டேன். பெண்ணின் திருமணத்தை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு தினமும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து வருகின்றேன். மாப்பிள்ளை வீட்டார் விரைவில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று விரும்புவதால், திருமணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவதாக முடிவு செய்துள்ளோம். அன்னைதான் குறித்த நாளில் திருமணத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்” என்று எழுதி இருந்தார்.
நாட்கள் பறந்தன. திருமணத்திற்குத் தேவையான பணம் இன்னும் அவர்கள் கைக்குக் கிடைத்தபாடாக இல்லை. திருமண நாளோ நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வது? அவர்களால் செய்ய முடிந்தது எல்லாம் அன்னையை முழுமையாக நம்புவதுதான். அந்த அன்பரும், அவர் கணவரும் பாண்டிச்சேரிக்கு வந்து, ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியை வணங்கிப் பிரார்த்தனை செய்து கொண்டு ஊருக்குத் திரும்பிப் போனார்கள். இது நிகழ்ந்தது, 1986, ஜனவரி மாதத்தில் என்று நினைக்கின்றேன்.
பின்னர் அந்த அன்பரிடமிருந்து வந்த கடிதம் மிக ஆறுதலாக இருந்தது. அதில், தம் பெண்ணின் திருமணம் சிறப்பாக நிகழ்ந்ததாகவும், அன்னையின் அருள் வியக்கும் விதத்தில் துணை புரிந்ததாகவும் எழுதி இருந்த அவர், மேலும் கூறுவார்:
“எங்களைப் பொறுத்தவரை என் மகளின் திருமணத்தை அன்னைதான் நடத்திக் கொடுத்துள்ளார். பார்த்தவர்கள் வியக்கும் வண்ணம் திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அந்தப் பெருமை அன்னையையே சேரும். ஏனெனில், திருமணம் நிச்சயிக்கப்பட்டபொழுது எங்களிடம் பணம் இல்லை. எங்களுக்கு ஒரே சொத்தாக இருந்த இரண்டு வீட்டு மனைகளை விற்றுத் திருமணத்தை முடித்துவிடலாம் என்று சுலபமாக நினைத்து விட்டோம். ஆனால், அவற்றை விற்றபொழுதுதான் சிரமமே ஆரம்பமாகியது. விற்பனையின் மூலம் கிடைத்த பணம் திருமணச் செலவிற்குப் போதுமானதாக இல்லை. துண்டு விழும் தொகையை எங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து கடனாகப் பெற முயன்றோம். அவர்களும் தருவதாக வாக்களித்து இருந்தார்கள்”.
“திருமணத்திற்கு இன்னும் நான்கே நாட்கள்தாம் இருந்தன. அது வரையில் கடன் கொடுப்பதாகக் கூறியவர்களிடமிருந்து எங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. என்றாலும் பணம் கேட்டு நாங்கள் யாரையும் வற்புறுத்த முடியாது. என்ன செய்வது? இது போன்ற சூழ்நிலையில் மிகவும் தைரியமாக இருக்கக் கூடிய என் கணவர்கூட அதிகம் குழம்பிப் போய்விட்டார். “மேற்கொண்டு நாம் எப்படிச் சமாளிப்பது?” என்று என்னைக் கேட்டார். “இந்தத் திருமணத்திற்கு ஆரம்பம் முதல் இன்றுவரை அன்னைதான் துணையாக இருக்கிறார். ஆகவே, அவர் எப்படியும் திருமணத்தை நல்லபடியாக முடித்துக் கொடுப்பார்” என்று கூறினேன் நான். அன்று இரவு முழுதும் நானும், அவரும் அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தோம்”.
“மறு நாளும் வந்துவிட்டது. திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. கலக்கத்துடன் நாங்கள் அன்றையக் காலைப் பொழுதை வரவேற்றபொழுது, ‘கலங்காதீர்கள்’ என்று கூறுவதைப் போல எங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்த ஒருவர் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து வேறு இடங்களில் நாங்கள் எதிர்பார்த்த பணமும் மளமளவென்று மழை போல் வந்து சேர்ந்துவிட்டது. திருமணமும் எந்த விதத் தடங்கலும் இன்றிச் சிறப்பாக நிகழ்ந்தது. எங்களை வாழ வைத்து, எங்கள் பெண்ணுக்கும் சிறப்பான வாழ்வைக் கொடுத்த அன்னையின் அருளை, மரணத் தறுவாயில்கூட நாங்கள் மறக்க மாட்டோம்”.
அந்த அன்பரைப் போன்று நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள், அன்னையால் ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள். அவர்கள் நாளும் நன்மைகள் பலவற்றைப் பெற்று வாழ்வில் சிறக்கின்றார்கள்.
Previous Part -
ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 9
----------------------------------------------------------------------
No comments:
Post a Comment