அன்னை சொன்ன கதைகள்
- ஸ்ரீ கர்மயோகி அவர்கள்
கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் என்று மேலை நாடுகளில் சொல்வார்கள். மேலை நாடுகளில் கதைகள் சொல்வதில்லை, உதாரணத்தால் விளக்குவதில்லை. அவையில்லாமல் புரிந்து கொள்ளும் திறனுடையவர்கள் அவர்கள். பேசும்பொழுது ஒரு விஷயத்தை உதாரணத்தால் விளக்க முயன்றால் அவர்களுக்குப் பிடிக்காது. அவர்களை நாம் அறிவில்லாதவர்கள் என நினைப்பதாகக் கருதி வருத்தமடைவார்கள். உதாரணம் தேவையில்லை என்பார்கள். அன்னை இந்தியாவுக்கு வந்த புதிதில் அவரிடம் பேசுபவர்கள் கதை சொல்வதைக் கேட்டு வியந்தார்கள். அன்னை கதை சொல்வதில்லை. குழந்தைகளுக்காக அன்னை சொல்லிய கதைகள் "Tales of Long Ago'' பழங்காலத்துக் கதைகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. அது தவிரவும் அன்னை சொல்லிய சில கதைகளை இக் கட்டுரையில் சுருக்கமாக எழுதுகிறேன்.
1. மனிதனைவிட அறிவுள்ள குரங்கு
ஆப்பிரிக்காவில் ஒருவர் குரங்கு வளர்த்தார். அதை மனிதர்கள் செய்வனவெல்லாம் செய்யும் அளவுக்குப் பழக்கியிருந்தார். சாப்பிடும் பொழுது மேஜையைச் சுற்றி விருந்தினர்
உட்கார்ந்திருக்கும்பொழுது,அக்குரங்கும் ஒரு நாற்காயில் உட்கார்ந்து மனிதனைப் போல் சாப்பிடும். ஒருநாள் அதுபோல் அனைவரும் உட்கார்ந்த பொழுது, சாப்பாட்டுக்கு முன் (wine) திராட்சை ரசம் பரிமாறி னார்கள். குரங்குக்கு ஒரு டம்ளர் கொடுத்தார்கள். குரங்கு குடித்தது. அதற்கு மயக்கம் வந்து போதை மீறியது. முதல் முறை போதைப் பொருள் சாப்பிடுபவர் படும் அவஸ்தை குரங்குக்கு வந்தது. நாற்காலியிலிருந்து கீழே விழுந்தது. தரையில் விழுந்து புரண்டு, மரணத்தின் வாயிலை எட்டியது. எப்படியோ பிழைத்துக் கொண்டது. பலநாள் கழித்து நடந்த ஒரு விருந்தில் குரங்கையும் உட்கார வைத்தனர். மீண்டும் திராட்சை ரசம் பரிமாறினார்கள். குரங்குக்கு ஒரு டம்ளர் கொடுத்தனர். குரங்கு அதைக் கையில் எடுத்தது. ஆவேசமாகக் கோபத்துடன் கொடுத்தவர் தலையில் டம்ளரை அடித்தது. மனிதனுக்கில்லா இந்த அறிவு குரங்குக்கு இருக்கின்றது என்கிறார் அன்னை.
2. தீட்சை
ஜூனுன் என்று ஒரு மகானிருந்தார். அநேகம் பேர் அவரை நாடி வருவது வழக்கம். யூசப் என்ற இளைஞன் ஆவலுடன் அவரிடம் வந்தான். அவனை எதுவும் விசாரிக்காமல் அவனை அங்கேயே இருக்கச் சொன்னார். நான்கு வருஷம் கழிந்தது. ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு மகான் விசாரித்தார். "எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார். "தீட்சை பெற வேண்டி தங்களிடம் வந்தேன்'' என்றான்.
அங்கிருந்த ஒருவரை அழைத்து ஒரு பெட்டியை எடுத்து வரச் சொன்னார். அதை யூசப்பிடம் கொடுத்து வெகுதூரத்தில் ஒரு விலாசம் கொடுத்து, "அங்குள்ள ஒருவரைச் சந்தித்து இப்பெட்டியை அவரிடம் சேர்த்து விடு. திரும்பி வந்தவுடன் தீட்சை அக்கிறேன்'' என்றார்.
அந்த ஊரை நோக்கி யூசப் நடந்தான். வெயிலில் களைத்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். நடக்கும்பொழுது அவன் மனம் நடை மீதிருந்தது. பெட்டியைப் பற்றி நினைவில்லை. அது பூட்டப்பட வில்லை என்பதையும் அவன் கவனிக்கவில்லை. உட்கார்ந்தவுடன் மனம் வேலை செய்ய ஆரம்பித்தது. ஏன் இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார். எளிதில் திறக்கலாம் போலிருக்கின்றதே? இதனுள் என்ன இருக்கும்? பார்க்கலாமா? பார்த்தால் என்ன தவறு? என்று மனம் நினைத்தபொழுது, "அது தவறு. குரு இட்ட ஆணை. அவர் பேச்சை மீறக் கூடாது. எது இருந்தால் எனக்கென்ன?'' என்று மனத்தைச் சமாதானம் செய்தான். சிறிது நேரம் கழித்து மனம் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டது. மீண்டும் அமைதியடைந்தான். பல போராட்டங்களுக்குப் பின், அவன் தோற்று விட்டான். அவன் மனம் வெற்றியடைந்தது.
பெட்டியைத் திறந்தான். திடீரென ஒரு சுண்டெலி குதித்தோடியது. யூசப் வருத்தப்பட்டான். மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்து, அந்த விலாசத்தைத் தேடிப் போனான். அவரும் ஒரு மகான். அவரிடம் பெட்டியைக் கொடுத்தான். திறந்து பார்த்தார். அவன் முகத்தையும்
ஏறிட்டுப் பார்த்தார். நடந்தது முழுவதும் அவருக்குத் தெரிந்தது. அவனுக்கு உபதேசம் செய்தார். "உன் குரு உன்னை நம்பவில்லை. மனோதிடத்தைச் சோதிக்க இதைச் செய்திருக்கின்றார். நீ தோற்றுவிட்டாய். இது தவறு'' என்றார்.
வருத்தத்துடன் குருவை நாடி வந்து செய்த தவற்றையும், நடந்தவை அனைத்தையும் யூசப் சொன்னான். "உன்னால் ஒரு சுண்டெலியைக் காப்பாற்ற முடியவில்லை. பெரிய ஞானத்தை உன்னை நம்பி எப்படிக் கொடுக்க முடியும்?'' என்றார். யூசப் தன்னிருப்பிடம் சென்றான். மனோதிடத்தை வளர்க்கப் பாடுபட்டு வெற்றி கண்டான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவிடம் வந்து தீட்சை பெற்றுப் பெரிய மகானாக வாழ்ந்தான்.
3. தியானத்தில் வந்த புலி
புத்த குருவை நாடி முதன் முதலாக ஐரோப்பாவிலிருந்து வந்த பெண்மணி, தியானம் பயின்றார். தியானத்தை முறைப்படிப் பயின்றதுடன் ஒருநாள் தவறாமல், மணி தவறாமல் தியானத்தைக் கடைப் பிடித்தார்.
குருவின் ஆசிரமத்திலிருந்து காட்டினுள் சென்று (camp or picnic) சில நாள்கள் கழிக்கப் பலர் சேர்ந்து புறப்பட்டனர். இப் பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் போகும் இடம் புலி யுள்ள இடமானதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒருநாள் இப் பெண்மணியின் தியான நேரம் வந்தது. மற்றவர் காட்டினுள் செல்லப் புறப்படும் பொழுது, இப் பெண் தியானத்தை மேற்கொள்ள விரும்பினார். புலி வரும், தனியாக இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்தார்.
ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். புலி வந்தது. தியானம் கலைந்தது. புலி எதிரில் நின்றது. "இதுவே என் முடிவானால் ஆகட்டும். நான் தியானத்தை நடுவில் நிறுத்தப் போவதில்லை'' என மீண்டும் கண்ணை மூடினார். ஆழ்ந்த தியானம் மீண்டும் அமைந்தது. புலி நினைவில்லை. தானாக தியானம் கலைந்தது. புலியைக் காணவில்லை. மனம் அமைதியிலி ருந்து மீளச் சற்று நேரமாயிற்று. புலி நினைவில் வர நெடு நேரமாயிற்று.
No comments:
Post a Comment