அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு முறைகள் -2:
(Ref : நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை எப்படிப் பெறலாம்? -From the Book : அருளமுதம்.
- திரு. கர்மயோகி அவர்கள்
1. காலை, மாலை தியானம்:
தியானம் உயர்ந்தது. பெரும்பாலோர்க்கு அது பலிப்பதில்லை. தியானத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள், தங்களுக்கு ஓரளவு தியானம் பிடிபட்டால்தான் அதைத் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தியானத்திற்குரிய சிறப்பான நேரம் காலை 6 மணிக்கு முன் உள்ள நேரம். 6 மணிக்கு முன், அதாவது 5 அல்லது ஐந்தரை மணிக்குள் குளித்துவிட்டு, தியான அறையைச் சுத்தம் செய்துவிட்டு தியானத்திற்குரிய மனச் சூழ்நிலையுடன் தயாராக முடியும் என்பவர்களுக்கு இது உகந்தது. மனச் சூழலைப் போல் புறச் சூழலும் (house circumstances) பெரிய அளவுக்கு அமைதியாக இருத்தல் நலம். நேரமும், மனமும், சூழ்நிலையும், எழுந்திருக்கும் பழக்கமும் ஒத்து வந்தபின், தியானத்தின் அடுத்த அம்சங்களைப் பார்ப்போம்.
எல்லா முறைகளுக்கும் பெரும்பாலும் பொதுவான ஒரு நிலையுண்டு. அதாவது முறைகளுக்கு ஜீவன் உண்டு. முறை என்பதே நாம் ஏற்படுத்தியதுதான் என்றாலும் அவற்றிற்கும் ஜீவன் உண்டு. தியானம் என்பதற்கு ஜீவன் பூரணமாக உண்டு. நாம் தியானத்தை மேற்கொண்டு முழுப் பலன் அடைய வேண்டுமானால், தியானம் ஜீவனுள்ளதாக இருக்க வேண்டும். தியானத்தின் ஜீவனும், நாமும், உயிருள்ள, உணர்வுள்ள தொடர்பு கொள்ள வேண்டும். அது போன்ற தொடர்பு ஏற்பட வேண்டியவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.
மேஜைக்கும், நாய்க்குட்டிக்கும் உயிரைப் பொருத்தவரை ஒரு வித்தியாசமிருந்தால் குட்டியை நாம் உயிருள்ள ஜீவனாக நடத்துகிறோம். அதேபோல் தியானத்தை உயிருள்ளதாக அறிந்து அறிவிலும், உணர்விலும் அத்துடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பை உள்ளூர ஏற்படுத்தி, அதை நாளாவட்டத்தில் வளர்த்து வர வேண்டும். இதற்குச் சில உபாயங்கள் உதவும்.
- அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் தியானத்தைப் பற்றி சுமார் 100, 200 இடங்களில் குறிப்பாகவும், சிறப்பாகவும், பொதுவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார்கள். ஒரு சிரமத்தை மேற்கொண்டு அவையெல்லாவற்றையும் திரட்டி, (a small booklet "Meditation" is sold by Sri Aurobindo Society) அவற்றைப் பயின்று, அங்குள்ள கருத்துகளை வெறுங் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல், யோக ரகஸ்யங்களாகக் கருதி, மனதில் பதிய வைத்து, ஜீவனில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு புத்தகங்களில் தியானத்தால் பல மகான்கள் அடைந்த சிறப்புகளைத் திரட்டிப் படித்து, தியானத்தின் உன்னதமான மேன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- நம்முள் தியானத்துடன் ஓர் உறவு பிறந்து வளர வேண்டும்.
- நாள் முழுவதும் தியானத்தின் நினைவு நம் செயல்களுக்குப் பின்னணியாக இருந்தால், அது அன்றைய தியானத்திற்கு உதவும். 4 நாள் கழித்து வெளியூரிருந்து மகன் வரப் போகிறான் என்றால், அவ்வெண்ணம் நம் மனத்தின் அடியில் இருப்பதைப் போல், தியானம் இருக்க வேண்டும்.
- எந்த இடத்தில், எந்த முறையில் (pose) உட்கார்ந்தால் தியானத்திற்கு அதிகப் பொருத்தமாக இருக்குமோ, அந்த முறையை நாமே நமக்கு வகுத்துக்கொள்ள வேண்டும் (most comfortable sitting posture is best suited).
- தியானம் வரும்பொழுது குறுக்கிடும் எண்ணங்களைக் கவனித்தால் பெரும்பாலானவற்றை விலக்க முடியும். உதாரணமாக ஒரு கடிதம் எழுதும் எண்ணம் தியானத்தில் குறுக்கிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த முறை அதுபோன்ற கடிதம் எழுத வேண்டியிருந்தால், அதை முன்கூட்டி எழுதிவிட்டால், அவ்வெண்ணம் விலகிவிடும். நம்மால் முடிந்த விஷயங்களைச் சரி செய்து தியானம் பூரணமாக உதவ வேண்டும்.
- மனத்தில் குறையாக ஒரு பிரச்சினையிருந்தால் - e.g. எதிர்பார்த்த ஆர்டர் வரவில்லை, வராது போலிருக்கிறது - அதைத் தியானத்திற்கு முன் பிரார்த்தனையாகச் செய்தால் நல்லது. அப்பிரச்சினையைத் தீர்க்கும் திறன் தியானத்திற்கு ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அந்நிலைக்கு வந்துவிட்டால், அந்நிலையைக் காப்பாற்றும்படி நாம் நம் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். தியானத்தின் திறனைப் பாதிக்கும் எந்தக் காரியத்தையும் விலக்க வேண்டும்.
இந்த அளவில் தியானத்தை மேற்கொண்டால், நாம் இருக்கும் நிலையில் தியானம் அன்னையின் அருளை எவ்வளவு அதிகமாகப் பெற்றுத் தர முடியுமோ அதைத் தரும் திறனுடையதாகும்.
----------------------------
2. நாம ஜெபம்:
மிக எளிமையான முறை. எல்லோரும் கையாளக்கூடியது. எளிமையான முறை என்பதால் இதனால் பெரும்பலனை அடைய முடியாது என்றில்லை. எளிமையான முறையை, எளிமையாகப் பின்பற்றினால் பெரும் பலன் கிடைக்காது. எளிமையான முறையானாலும், அதற்குரிய கரு உருப்பெறும்வண்ணம் அதைக் கடைப்பிடித்தால் அதனால் அதிகபட்சம் நாம் எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெறலாம்.
நாம ஜெபத்தின் தத்துவம் என்ன? மனிதனுடைய அழைப்புக்கு ஆண்டவன் செவிசாய்க்கின்றான் என்பதே இதன் அடிப்படைக் கரு. நாம ஜெபம் செறிந்து அடுத்த கட்டத்திற்குப் போனால் அழைப்பு எழும். ஜெபத்தின் அதிகபட்சப் பலனைப் பெற நாம் ஜெபம் செய்யும்பொழுது நம் முழுச் சக்தியும் (energy) அதில் வெளிப்பட வேண்டும். அது வேண்டுமானால் மனம் மௌனமாக இருக்க வேண்டும். அது உயர்ந்த நிலை. அது இல்லை என்றால், மனம் ஒரு நிலையாக இருக்க வேண்டும்.
பொதுவாக நாம ஜெபத்தை ஏற்றுக்கொண்டு அனுதினமும் அனுஷ்டிப்பவர்கள் மனம் ஓரிடத்திலும், ஜெபம் வேறிடத்திலும் எனப் பிரிந்து நிற்கும். அந்நிலையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது வாய் ஜெபத்தைச் சொல்லும், மனம் வேறு சிந்தனையில் இருக்கும். இந்த நிலையில் ஜெபத்திற்குக் குறைந்தபட்ச பலன்கூட வாராது. ஜெபம் செய்பவர்கள் மனத்தை மௌனமாக்கிக்கொள்வது சிறந்தது. அது கடினம் என்பதால் நான் அதைக் கருதவில்லை.
அதற்கு அடுத்த படியாக, நாம ஜெபத்தை (Mother, அம்மா, மா, அன்னை) மேற்கொள்ளுமுன் மனத்தை ஒரு நிலைப்படுத்தி, அந்நிலையில் இருந்து ஜெபம் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அந்நிலை 6, 7 நிமிஷத்தில் கலைந்தால், ஜெபத்தை அத்துடன் நிறுத்திக்கொண்டு அடுத்த முறை ஜெபம் 7, 8 நிமிஷம் வரை ஒரே நிலையிருந்து சொல்ல முயல வேண்டும். அதேபோல் 20, 30 நிமிஷம் வரை பழகிக்கொண்டால், ஜெபம் ஆரம்பித்தவுடன் மனம் அலைவது நிற்கும். இதுவே ஜெபத்திற்குத் திறனளிப்பது. காலை, மாலை தியான நேரத்தில் நிலைத்த மனத்துடன் ஜெபத்தைப் பழகுவது முதற்கட்டம்.
இரண்டாம் கட்டம் முக்கியமானது; திறனுடையது; உயர்ந்தது. அதாவது நாள் முழுவதும் நாம் வேலை செய்யாமலிருக்கும் நேரங்களில் மனம் அலைபாய்வதும், சலனம் அடைவதும், கவலைகளை ஊன்றிப் பார்த்து வளர்ப்பதும் போன்ற காரியங்களில் ஈடுபடும்.
வேறு வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது, சுமார் 2, 3 நிமிஷம் மனம் நிலைத்து ஜெபம் செய்யப் பழகி, அது பலித்தால், நாம் சும்மா இருக்கும் நேரம் முழுவதையும் ஜெபத்தின் பிடியில் நாளாவட்டத்தில் கொண்டுவந்துவிடலாம். பொறுமையாக நாம் இதைச் செய்து வெற்றி பெற்று, 7 அல்லது 10 நாள் பலித்துவிட்டால், பின்னர் காலை, மாலை அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஜெபம் செய்தால் போதும். நாள் முழுவதும் மற்ற நேரங்களில் ஜெபம் உயிருடன் மனத்தின் அடியில் இருக்கும். முடிந்தவரை ஜெபித்தால் நல்லது. முடியாவிட்டால் மனம் தானே ஜெபிக்கும். நாம ஜெபத்தால் பெரும்பலன் அடைய இது உதவும். மனம் மௌனமாக (silent repetition) ஜெபத்தை ஏற்றுக்கொண்டால் நாமஜெபத்தின் உச்சியை நாம் அடைவோம்.
- தொடரும் ...
No comments:
Post a Comment