(திரு கர்மயோகி அவர்களின் "புண்ணிய பூமி" என்ற புத்தகத்திலிருந்து.)
கர்மம் அழியக் கூடியது
தலைவிதி, கர்மம் என்பவை அவை போன்றவை எவரும் தப்ப முடியாதவை. ஸ்ரீ அரவிந்த அவதாரம், கர்மம் அழியக் கூடியது என்று அறிவிக்கின்றது. மனிதனுடைய ஆத்மா வெளிவந்து அவன் தலைவிதியை உற்று நோக்கினால், அதன் முன் விதி தலைகுனிந்து திரும்பிப் போகும் என்கிறார். 75 ஆம் வயதில் ஆசிரம மானேஜர் திடீரென வயிற்றுப் போக்கால் 3 நாள் உடல்நலம் குன்றியிருந்து காலமானார். அவர் நண்பர்கள் அன்னையை அணுகி, "நல்ல ஆரோக்கியத் துடன் இருந்தவர்தாமே? எப்படிக் காலமானார்?'' என்று கேட்டார்கள். "அவருக்கு 50 இல் வயது முடிந்துவிட்டது. மேலும் 25 ஆண்டு அவர் ஆயுளை நான் நீட்டினேன்'' என்றார் அன்னை.
அன்னையிடம் வந்தபின் ஜாதகம் பலிப்பதில்லை
இந்த ஆன்மீக உண்மையை அன்பர்கள் தங்கள் வாழ்வில் காணலாம்.
. அன்னையை அறியும்வரை ஜாதகம் பலித்ததையும்,
. அன்னையிடம் வந்தபின் ஜாதகம் பலிக்காததையும்,
. அன்னையிடம் வந்தபின் நடப்பனவெல்லாம் ஏற்கனவே நாம் விரும்பி மறந்துபோன பழைய எண்ணங்கள் எனக் காணலாம்.
. ஜாதகத்திலில்லாத நம் ஆசைகள் ஆழ் மனத்திலிருந்தவை இன்று பலித்தன என்பது நாம் நம் உலகை சிருஷ்டிக்கின்றோம் என்பதாகும்.
. தங்கள் வாழ்விலும், பிறர் வாழ்விலும் இதை அன்பர்கள் காணலாம்.
ஜாதகப்படி திவாலாகி, குடும்பம் சிதறியிருக்க வேண்டியவர் அந்நிலையைத் தவிர்த்து, அன்னை அருளால் ஓர் அதிர்ஷ்டத்தையும் பெற்ற நிகழ்ச்சியுண்டு.
மரணத்தை அழிக்க முற்படுவது பூரணயோகம். யோகம் பலித்தவர்க்கு மரணம் தவிர்க்க முடியாததில்லை. யோகத்தை மேற்கொள்ளாத பக்தனுக்கு மரணம் தவிர மற்றவை தவிர்க்க முடியாதவையில்லை. அன்னையை எந்த அளவில் ஏற்றுக் கொள்கிறானோ, அந்த அளவில் உள்ள தவிர்க்க முடியாதவை அவனுக்கு தவிர்க்க முடியும் என்கிறார்.
அன்னை அன்பர் வீட்டுப் பெண்ணை ஒருவர் மணந்தார். திருமணத்திற்குப் பின் சமாதி தரிசனம் செய்ய வர அவர் மறுத்தார். பெண்ணின் திருமணத்திற்கு அன்னை தன் 50 படங்கள் நிரம்பிய புத்தகத்தை நீண்ட ஆசிச் செய்தியுடன் கொடுத்தார். கணவன் அன்னையைப் பார்க்க மறுத்துவிட்டார். ஸ்ரீ அரவிந்த சமாதிக்கு வர ஒத்துக்கொண்டவர் ஆசிரம வாயிலில் மனதை மாற்றிக்கொண்டு திரும்பப் போய்விட்டார். தம் மாநிலத்திற்குச் சென்றார். மாமனார் வாங்கிக் கொடுத்த புதிய காரை கிருஷ்ணா நதிக்கரையில் ஓட்டிக்கொண்டிருந்தபோது கார் ஆற்றில் விழுந்துவிட்டது. எப்படியோ அதிலிருந்து வெளிவந்து நீந்தித் தப்பித்துக் கொண்டார். இதுவரை ஜாதகம் பார்க்காதவர் அப்பொழுது பார்த்தார். அது தப்பக்கூடிய கண்டமில்லை என்று தெரிந்தது. தற்செயலாக அவர் வாழ்வு அன்னையை நோக்கி வந்தது. ஆனால் அவர் மனமும் செயலும் தடையாக இருந்தன. தடையை மீறி அருள் காப்பாற்றுவதுண்டு.
மனிதன் தானே அருளை விட்டு விலகும் சந்தர்பங்கள்
முடியாத காரியங்கள் பல நிலைகளில் அமைந்துள்ளன. அதன் சிகரம் தலைவிதி, கர்மம். அதேபோல் அன்னையின் சக்தியும் பல நிலைகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரிய முறைகள் உண்டு, நிபந்தனைகள் உண்டு. அவற்றை ஏற்றுக் கொள்பவர்க்கு அந்த நிலையில் பலன் ஏற்படும். எந்த நேரத்திலும் முறைகளை ஒருவர் மறக்கலாம். மறந்த நிலையில், சக்தி குறையும். கிடைத்த பலன் நிற்காது. பெரிய சொத்தைப் பெற்றவர் பெருமுயற்சியால் பெற்றார். எந்த நிலையிலும் அவர் கவனம் குறையலாம். அலட்சியம் ஏற்படலாம். அது ஏற்பட்டால் சொத்து அவரை விட்டுப் போகும். அது தவிர்க்க முடியாததன்று. மனிதன் தானே வரவழைத்துக் கொள்வது.
ஆசிரமப் பள்ளியிலிருந்து மாணவர்கள் செஞ்சிக்குச் சென்றார்கள். சுனையில் இறங்கிக் குளித்தார்கள். புறப்படும் முன்பே அன்னை அந்தச் சுனை நீரைப் பற்றி எச்சரிக்கை செய்திருந்தார்கள். ஒரு மாணவன் மூழ்கிவிட்டான். அன்னையின் அருள் என்னவாயிற்று என்று மற்றவர்கள் கேட்டார்கள்? அருளின் பாதுகாப்பைத் தாண்டிச் செல்பவர்களை அருள் எப்படிக் காப்பாற்ற முடியும் என்று அன்னை கூறினார்கள்.
நமக்குள்ள ஓர் உயர்ந்த குணத்தால் நம்மிடம் அன்னை அதிகமாகச் செயல்பட்டு வாழ்வு முன்னேறி, தவிர்க்க முடியாதவை விலகியுள்ள நிலையில், அந்த உயர்ந்த குணத்தைப் புறக்கணித்தால், அதனால் இதுவரை கிடைத்த பாதுகாப்பு இனி இல்லை என்றாகிறது. 55 வயதுவரை நாணயத்திற்கே எடுத்துக் காட்டாக இருந்த ஆபீசர், அதன் பின் நாணயத்தைக் கைவிடுவதுண்டு. எந்த நிலையிலும், எவரும் தம் விசுவாசத்தை மாற்றிக்கொள்வதுண்டு. செல்வம் அதிகமாகும் பொழுது அடக்கம் குறைவது இயல்பு. அவர் என்று பேசுபவர்களை அவன் என்று பேசும் மனநிலை ஏற்படுவதுண்டு.
10 வருடங்களாக நட்புக்கு எடுத்துக்காட்டாக இருந்த இரு கூட்டாகளில் ஒருவருக்கு, மற்றவரை விலக்கிவிட்டால் நல்லது என்று தோன்றுவ துண்டு. உன்னுடைய விசுவாசத்தால் அன்னை உன் வாழ்வில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது விசுவாசத்தை நீ கைவிட்டால் அன்னையின் பாதுகாப்பு குறையும். நேற்றுவரை விலகியிருந்த ஆபத்துகள் இன்று விலக்க முடியாதவையாகிவிடும்.
அருள் விலகுவதில்லை. மனிதன் அருளை விட்டு விலகுவதுண்டு.
மனிதனின் முந்தைய செயல்களைப் பொருத்து, அவன் விலகும்பொழுதும், சில நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகி அதன் மூலம் அவன் காப்பாற்றப்படுவதுண்டு. அவனது மற்ற நல்ல குணங்களாலும் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. தானே முனைந்து அதுபோல் தொடர்ந்து வரும் சந்தர்ப்பங்களிருந்தும் மனிதன் விலகுவதுண்டு, அதற்கு வழியில்லை. சந்தர்ப்பங்களிருந்து விலகு வதுபோல், நல்ல பழக்கங்களிருந்தும் விலகுவதுண்டு. விலகியவரை அன்னை விலக்குவதில்லை. மீண்டும் திரும்ப வரும்வரைக் காத்திருப்பார்.
அன்னையை ஏற்றுக் கொண்டபின் உலக வாழ்விலிருந்து மனித வாழ்வு மாறும்.
- சிறுமை மாறிப் பெருமையாகும்;
- சிரமம் வசதியாக மாறும்;
- நடக்காது என்பது நடக்க ஆரம்பிக்கும்;
- துன்பம் துடைக்கப்படும்;
- மூப்பு தள்ளிப்போகும்;
- யோகம் பலித்தால் மரணத்தை வெல்லும் திறனும் ஏற்படும்.
யோகம் சாதகனுக்கு. பக்தன் எளியவன். எளியவனுக்கும் எல்லாம் உண்டு.
ஆனால் அவன் அளவில் உண்டு. பக்தியுள்ளவனுக்குப் பக்குவம் ஏற்பட்டால், அவன் பவித்திரத்தை மேற்கொண்டால் வாழ்வு மாறும். வாழ்க்கையின் அஸ்திவாரங்கள் மாறி வருவது தெரியும். இது நாம் அறிந்த வாழ்வுபோல் இல்லை என்பது விளங்கும். பக்தியையும், பக்குவத்தையும், பவித்திரத்தையும் பக்தன் தன் நிலைக்கேற்ப, தன் அளவிலேயே ஏற்றுக் கொள்கிறான். அவற்றின் பூரண புனிதத்தின் சிகரத்தைத் தொடும் அளவில் ஏற்றுக் கொள்வதில்லை.
அவன் அன்னையை ஏற்றுக்கொண்ட அளவில், பக்தியையும், பக்குவத்தையும், பவித்திரத்தையும் ஏற்றுக் கொண்ட அளவில், வாழ்க்கையின் அஸ்திவாரங்கள் தெய்விக அஸ்திவாரமாக மாறும். நடக்காதது நடக்கும். தவிர்க்க முடியாதது என்பதில்லை என்று காண்பான். அவை உயர்ந்த பெருமாறுதல்களானாலும், அதிசயிக்கக் கூடியவையானாலும், அவனுடைய அளவிலேயே அவை அமைந்திருக்கும்.
அவற்றுக்கேயுரிய பெருஞ்சிறப்பின் அளவிருக்காது. அதை அவன் பேணி வளர்க்க வேண்டும். தானே அவற்றிலிருந்து விலகக் கூடாது.
அன்னையை நினைவாலும், நெகிழ்ந்த உணர்வாலும், உயர்ந்த பண்பாலும், ஆத்மச் சமர்ப்பணத்தாலும் ஏற்றுக்கொண்ட அளவில் தவிர்க்க முடியாதது என்பது அன்பருக்கில்லை.
No comments:
Post a Comment