எதை நாம் நாடுகிறோம் என்பது நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.
நாடுவதே நாம். நாம் நல்லவரா, கெட்டவரா என்றறிய முயல்வதைவிட நாம் யார் என்று அறிய முயன்றால் நல்லது. பழக்கத்தால் நாம் யார், சுபாவத்தால் நாம் யார், பரம்பரையால் நாம் யார், ஆபத்தான நிலையில் நம்முள்ளிருந்து எது கிளம்புகிறது, யார் கண்ணிலும் படமாட்டோம் என்றவுடன் மனம் முதலில் எதை நாடுகிறது, நிச்சயமாகத் தண்டிக்க ஒருவருமில்லை என்ற பின் எந்தக் காரியத்தை செய்யத் தயங்க மாட்டோம், அவசரம் எப்பொழுது புறப்படுகிறது, அயல்நாட்டிலிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் மனம் நினைக்கின்றது, நிர்ப்பந்தமேயில்லை என்றால் எந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வோம், எந்தக் கடமைகளைப் புறக்கணிப்போம் என்று தன்னையறிய முற்பட்டால் நாம் யார் என்பது நமக்கு விளங்கும். அதை நாம் நாடும் பொருள் விளக்கும். நம்மைப்பற்றி பிறர் சொல்வதைவிட, நம்மைப்பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நாம் நாடும் விஷயங்கள் நம் உண்மையை நமக்கு அறிவுறுத்தும்.
அன்னையின் அணுக்களும் சத்தியத்திற்காகத் துடிக்கின்றன. நாம் எதற்காகத் துடிக்கின்றோம்? எந்த அளவில், எந்த நிலையில் அத்துடிப்புள்ளது?
சத்தியதாகமுள்ள அன்னை உடல். மனம் ஒரு விஷயத்தை ஆழ்ந்து நாடினாலும், அதையடைய தீவிர முயற்சி பலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது. தாம் விரும்புவதையே தீவிர ஆர்வத்துடன் அடைய முயற்சியுள்ளவராக அனைவரும் இருக்கமாட்டார்கள். நாம் யார் என்று நாம் அறிந்துகொள்ளும்பொழுது நம் முயற்சியின் அளவு நமக்குத் தெரிந்துவிடும்.
எதற்காக உடல் அணுக்கள் துடிக்கின்றனவோ, அதை மனிதன் அடைந்தே தீருவான். ஒருவர் அதுபோன்ற துடிப்புள்ளவர் என்று தம்மை அறிந்தவரானால், அவர் எதற்காகத் தாம் துடிப்புள்ளவராக இருக்கின்றார் என அறியமாட்டார். நாள் தவறினாலும், சீட்டாட்டம் தவறுவதில்லை என்பவரிடம் ''குழந்தைக்கு உடம்பு சரியில்லை டாக்டரிடம் போகவேண்டும், பையனை காலேஜில் சேர்க்கவேண்டும், முக்கியமான கல்யாணத்திற்குப் போக வேண்டும்' என்றால், அவற்றை இரண்டாம் பட்சமாகக் கருதுவார். ஏற்றுக் கொண்டாலும், சீட்டாட்டம் தவறாதபடி இக்கடமைகளை ஏற்றுக் கொள்வார். தமக்குச் சீட்டாட்டம் முக்கியம்; மற்றவை முக்கியமில்லை என்று தம்மை அறிந்தவராக அவரிருக்கலாம்.
ஒருமுறை குழந்தைக்கு ஜுரம் தினமும் வருவதை டாக்டரிடம் காண்பித்தபோது, டாக்டர் இன்னும் 3 நாட்களுக்குப் பின் சொல்கிறேன் என்ற நாளில் அவர் சீட்டாட்டத்திற்குப் போவதை தம்மையறியாமல் மறந்துவிட்டார் என்றால், இவருக்குச் சீட்டாட்டம் முக்கியம்தான் ஆனால், மற்றவர்கள் மற்ற கடமைகளை நிறைவேற்றும்வரை சீட்டாட்டம் முக்கியம். குழந்தைக்கு ஏன் ஜுரம் நிற்கவில்லை என்று டாக்டர் சொல்லவில்லை என்றவுடன் இவர் மனதில் கவலை ஏற்பட்டது. ஏதோ ஆபத்தாக இருக்கும் போருக்கிறது என்று பட்டவுடன், சீட்டாட்டம் மறந்துவிடுகிறது என்றால், ஆழ்ந்த துடிப்பு தம் குழந்தை மேருக்கிறது, சீட்டாட்டத்தின் மீதில்லை என்பது இவருக்கு இப்பொழுதுதான் புரியும்.
வாழ்க்கை ஒரு எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு சமயம் எல்லையைத் தாண்டி விடுகிறது. அப்பொழுது உத்தியோகத்திற்கு ஆபத்து, உயிருக்கு ஆபத்து, அந்தஸ்து ஆட்டம் கண்டுவிட்டது, மரியாதைக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும். அந்த நேரம் நாம் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகள், பண்புகள் நாம் எதிராக செயல்படுவதைத் தடுக்கும். நம்மால் அந்தத் துரோகத்தைச் செய்ய முடியாது என்று மனம் கூறும். புதிய ஆசைகள் திடீரென உற்பத்தியாகும். இதை எப்படி விட முடியும் என்று தோன்றும். அது போன்ற போராட்டம் மனதில் எழுந்த பின் ஆழ்ந்த துடிப்பு கொள்கைக்காக இருக்கிறதா, ஆதாயத்திற்காக இருக்கிறதா, ஆசைக்காக இருக்கிறதா என்று தெரியும். ஏற்கனவே நம் வாழ்வில் அது போன்ற நேரங்களை நினைவுபடுத்தினால், இன்றும் அத்துடிப்பு தெளிவாக நமக்கு அறிவுறுத்தும்.
எந்த விஷயத்திற்காக அத்துடிப்பு இருக்கிறதோ, அது நாம் யார், நம் நிலைமையென்ன என்று நமக்கு விளங்கும்.
No comments:
Post a Comment