ஸ்ரீ அன்னையின் நான்கு அம்சங்கள் - மகாகாளி, மகாலக்ஷ்மி, மகேஸ்வரி, மகாசரஸ்வதி
நாம் தெய்வீக அன்னை என்று சொல்பவர் இறைவனுடைய செயல்படும் சக்தியாக உள்ளார்.சித்சக்திதான் அவருடைய பிறப்பிடம்.
- அன்னையினுடைய மகேஸ்வரி அம்சம் அவருடைய விவேகத்தைக் குறிக்கும். மகேஸ்வரி மனிதர்களை அவர்களுடைய சுபாவத்திற்கேற்பக் கையாண்டு அவர்களுக்கு ஒத்துப்போகின்ற வகைகளில் அவர்களுடைய திருவுருமாற்றத்தை விரைவுபடுத்துகின்றார்.
- அன்னையினுடைய மகாகாளி அம்சம் அன்னையின் சக்தியைக் குறிக்கின்ற அம்சமாகும். அவர் தம்முடைய இறைபலத்தை பயன்படுத்தி இறை விரோத சக்திகளை முறியடிக்கின்றார். இப்படி இறை விரோத சக்திகளை அழிப்பதன் மூலம் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்துகிறார்.
- மகாலட்சுமி அம்சமாவது அன்னையினுடைய அன்பு, அழகு, சுமுகம் ஆகிய அம்சங்களைக் குறிக்கும். இவைகளைப் பூவுலகத்தில் வெளிப்படுத்துவதுதான் மகாலட்சுமியின் நோக்கமாகும்.
- மகாசரஸ்வதி அம்சம் அன்னையினுடைய வேலைத்திறனைக் குறிக்கும் அம்சமாகும். அவர் எல்லாவற்றையும் நிர்மாணித்து அவருடைய வேலையில் நேர்த்தியை வெளிப்படுத்துகிறார்.
அன்னையினுடைய ஆனந்த அம்சம் தற்பொழுது பின்னணியில் இருக்கிறது. அன்னையின் மற்ற நான்கு அம்சங்களும் திருவுருமாற்றத்திற்கான வேலையை முடித்தபின்னர் இந்த ஆனந்த அம்சம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-Thiru. Ashokan Avarkal (Aanmeeka marrum manothathuva Sinthanaikal)
ஸ்ரீ அன்னையின் நான்கு அம்சங்களும் அவற்றிற்கான விளக்கமும்:
மஹேஸ்வரி:
சர்க்கார், சட்டத்தின் மூலம் ஒழுங்கை நிலைநிறுத்துகிறது. சட்டத்திற்கு எல்லையுண்டு. நியாயம் அதைவிட உயர்ந்தது. குடும்பத்தைக் கவனிக்காத மனிதனைச் சட்டம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சமூகம் செயல்பட முடியும். சமூகம் சர்க்காரைவிட இவ்விஷயத்தில் உயர்ந்தது. நாலு பேர் திரண்டு வந்து குடும்பத்தைப் புறக்கணிப்பவரை நியாயம் எடுத்துச் சொல்லி கட்டுப்படுத்த முடியும். அவர்களை மீறி அவரால் செயல்பட முடியாது. சட்டம் செயலற்ற இடத்தில் நியாயம் செயல்படும். தன் குழந்தை மீது பிரியமில்லாத தாயார், தகப்பனார் உண்டு. சட்டத்திற்கோ, நியாயத்திற்கோ இவர்கள் கட்டுப்படமாட்டார்கள். நியாயத்தை எடுத்துச் சொன்னால் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். குழந்தையின் தேவைகளைத் தவறாமல் பூர்த்தி செய்வார்கள். ஆனால் குழந்தை அன்பிற்கு ஏங்குகிறது. தாயின் மடியில் இருக்க விழைகிறது. கருணையுள்ளம் உள்ளவர் ஒருவர் அத்தாயின் இதயத்தில் அன்பை உற்பத்தி செய்ய முடிவதுண்டு. தாயிடம் பெறாத அன்பை அக்குழந்தை கருணை வடிவான மற்றவரிடம் பெற வாய்ப்புண்டு. உலகம் சட்டத்திற்கும், நியாயத்திற்கும், கருணைக்கும் கட்டுப்பட்டு இயங்குவது. இதற்கடுத்த நிலைகளும் உலகத்திற்குண்டு. அவை அருளால் மட்டும் இயங்குபவை. அன்னை அந்நிலையில் செயல்படுகிறார். மற்ற அம்சங்களைக் காட்டிலும் அதிகத் தாய்மையுணர்வையுடையவர் மஹேஸ்வரி. அறிவிலிகளும், ராட்சசர்களும், பிசாசுகளும், தீய சக்திகளும் நிரம்பியது உலகம். அவரைக் கண்டு அஞ்சி நாம் ஒதுங்குகிறோம். மஹேஸ்வரி "அவர்களும் என் குழந்தைகள் அல்லவா?"என நினைத்து, அவர்களுக்கும் தம் தாய்மைப் பரிவை அளிக்கின்றார்.
காரிலிருந்து அன்னை இறங்கியபொழுது ஒரு கருநாகம் அவரை நோக்கி தாழம்பூச் செடிகளிலிருந்து புறப்பட்டு விரைந்து வந்தது. அன்னை நாகத்தைப் பாம்பாகக் கருதவில்லை; அஞ்சி ஒதுங்கவில்லை; எதிர்கொண்டார்; புன்முறுவல் செய்தார்; "என்ன வேண்டும்?" என்று நாகத்தைப் பரிவுடன் கேட்டார். நாகம் படம் எடுத்து, தரையில் தன் தலையால் அடித்து வணக்கம் செய்து, அடங்கி, சில நிமிஷம் அயர்ந்து நின்று, வேகமாகத் திரும்பிச் சென்றது.
மஹேஸ்வரியின் ஞானம், பரமனின் ஞானம். புத்திக்குச் சிகரம் உண்டு. சிகரத்தின் எல்லையைக் கடந்தால், எல்லையற்ற பரவெளி உண்டு. அவருக்கும் மேலேயுள்ள லோகங்களும் உண்டு. அங்கு உறையும் ஞானம் அற்புதம் நிறைந்தது. குறுகிய உலகத்திற்கு எதிரான உலகம் அது. அனந்தத்தின் இருப்பிடம் அது. காலத்தைக் கடந்த உலகம் அவ்வுலகம். அதனால் அளவிறந்த சக்தியுறையும் இடம் அது. மஹேஸ்வரி விவேகத்தின் உற்பத்தி ஸ்தானம். உலகின் சர்வ ஜீவராசிகளின் சுபாவங்களை அவர் அறிவார். சுபாவம் என்பது மனிதனுடன் பிறந்தது. சுபாவமே அவனுடைய சூட்சும உருவம். இறைவன் மனிதனிடம் செயல்படும்பொழுது அவனுடைய சுபாவத்தை ஒட்டியே செல்கிறார். சுபாவத்தை மீறிச் செயல்படுவது மஹேஸ்வரிக்கு உரிய பாணியில்லை. ஞானம் உயர்ந்தது என்பதால், அறிவற்றவர்களுக்கு ஞானத்தை வலியுறுத்திக் கொடுப்பது அவர் வழக்கமன்று. நிதானமாகச் செயல்படுபவரை அவசரமாகச் செயல்படும்படி நிர்ப்பந்தப்படுத்தினால் அவர் செயலற்றுவிடுவார். அவசரக்காரனை நிதானமாகச் செயல்படும்படிச் சொன்னால் அவனுக்கு உயிர் போகும். அவரவர் சுபாவத்திற்கு ஏற்ற அளவில் ஞானத்தை அளிப்பதே மஹேஸ்வரியின் பாங்கு. மனிதனுக்குச் சுபாவம் இருப்பதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு சக்தியுண்டு. அந்நிகழ்ச்சி உருப்பெற்ற வரலாற்றைப் பொருத்தது அது. அதன் சக்தியை நிர்ணயிப்பது அதன் வரலாறு ஆகும். மனித சுபாவத்தை ஏற்றுக்கொள்ளும் மஹேஸ்வரி, நிகழ்ச்சிகளில் பொதிந்துள்ள சக்தியையும் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறார். அதனால் அவர் செயல்கள் அமைதியாகவும், நிதானமாகவும், சமத்துவத்துடனும் அமைகின்றன.
பரமனின் இஷ்டமே அவரது சட்டம். அதனால், பாரபட்சத்திற்கு அங்கு இடம் இல்லை. தம்மை நாடும் மனிதர்களின் நிலைக்கேற்ப, சுபாவத்திற்கேற்ப, பரமனின் இஷ்டப்படி அவர்களை ஏற்றுக் கருணை செய்வது மஹேஸ்வரியின் வழக்கம். பலரை இதுபோல் உயர்த்துவது உண்டு. சிலரை இருளில் தள்ளுவதும் உண்டு. தண்டனையாக இதை அவர் செய்வதில்லை. அவரவர் ஆன்மாவின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்கிறார். விவேகிகள் அவரை நாடி அனுக்கிரஹம் பெற வந்தால், ஜோதிமயமான விவேகத்தைப் பரிசாக அவர்களுக்கு மஹேஸ்வரி அளிக்கிறார். ஞானதிருஷ்டியுள்ளவரைத் தம் ஞானத்தோடு ஐக்கியப் படுத்திக்கொள்கிறார். தீய சக்திகள் அவரை நாடி வந்தால், அவர்களுடைய செயலின் பலனை அவரே அனுபவிக்க அனுமதிப்பார். மடமையும், இருளும் நிரம்பியவர்களை அவரவர் நிலைக்கேற்ப வழிகாட்டுவார். மஹேஸ்வரியின் இலட்சியம் சத்தியம். ஞானமே அவளுக்குத் திறனளிக்கிறது. மனித ஆன்மாவையும், சுபாவத்தையும் தெய்வீகச் சத்தியத்தின் கருவிகளாக்குவதே மஹேஸ்வரியின் இலட்சியம்.
மஹாகாளி:
ஆக்கல், அழித்தல், காத்தல் தொழில்களை அன்னை பூவுலகத்தில் நடத்த தெய்வங்களைத் துணை கொண்டு செயல்படுகின்றார். ஞானமும், அமைதியும், திறமையும் ஆக்கல் தொழிலுக்குத் தேவை என்பதை நாம் அறிவோம். வீரமும், வீராவேசமும் ஆக்கலுக்குத் தேவை என்பதை நாம் அதுபோல் உணருவதில்லை. அழித்தலும், ஆக்கலுக்குத் தேவையானதே. பல காரியங்களை புதியதாகச் செய்யும்பொழுது அவை நிறைவேறுகின்றன. ஆனால் சில காரியங்களைப் புதியதாகச் செய்யும்பொழுது வேறு சிலவற்றை அழிக்க வேண்டும். அப்படி அழிபவை எதிர்ப்பில்லாமல் அழிவதுண்டு. கடும் எதிர்ப்புக் காண்பிப்பதும் உண்டு. மேல்நாட்டுப் படிப்பு நம் நாட்டில் ஏற்பட்டபொழுது நம் நாட்டுப் பாடமுறை குரல் கொடுத்து அழத் தெம்பில்லாமல் அழிந்துவிட்டது. படிப்பும், நாகரிகமும், அரசியலும் வளரும்பொழுது, ஜாதி, மதம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது. எதிர்ப்பை அழிப்பது ஆக்கலுக்கு அவசியம். தானே எதிர்ப்பு அழிய நூறு ஆண்டுகளாகும். முனைந்து நின்று ஆவேசமாக அழித்தால் குறுகிய காலத்தில் அழிக்கலாம். உலகில் புது சிருஷ்டி ஏற்படும்பொழுது எதிர்ப்புத் தெரிவிக்கும் பழைய அமைப்பை அழிக்க ஆவேசமான சக்தி தேவை. எதிர்ப்பு இல்லாத காலத்தும் ஒரு பெரிய காரியத்தை நிர்மாணிக்க அதிக அளவு சக்தி தேவை. அது ஆவேசம் நிறைந்ததானால் காரியம் எளிதில் முடியும். ஆவேசம் பொருந்திய சக்தியை அளவுகடந்து கொடுத்து ஆயிரம் ஆண்டுகளில் பூர்த்தி செய்வதை க்ஷணத்தில் முடிப்பது மஹாகாளியின் அருள் நிறைந்த செயலாகும். ஆனந்தத்திற்கு ஜீவனளித்து, செறிவையும், நிறைவையும் அளிப்பது அவ்வீரம். ஞானத்திற்குத் தேவையான வலிமையை அளிப்பதும் அதுவே. அழகுக்கு உயர்வை அளித்து, அதன் சக்தியைப் பெருக்குவதும் அவ்வாவேசமே. ஞானம் நிதானமாகச் செயல்படுவது. அதன் தன்மை பரந்து விரிவதாகும். ஆவேசத்தின் தன்மை வேகம், எழுச்சியாகும். வேகமும், செறிவும் நிறைந்திருப்பதால்தான் வீரம் க்ஷணத்தில் செயல்படுகிறது. ரௌத்திரத்தின் வேகம் அழிக்கமட்டும் வல்லது. காளியின் வேகம் அழிப்பதன் மூலம் ஆக்க வல்லது என்பதால் அதன் செறிவு ஆனந்த மயமானது. ஆனந்தம் சிருஷ்டியின் உற்பத்தி ஸ்தானம். மஹாகாளியின் வீராவேசம் புதியவற்றைச் சிருஷ்டிப்பதால் வெறும் உயர்வை மட்டும் நாடினால் அதற்குப் போதாது. உயர்வில் உயர்ந்தவற்றையும், உன்னதத்தில் சிறந்தவற்றையும் ஏற்று, அகன்ற குறிக்கோளை அடைய முற்படுதல் மஹாகாளியின் இலட்சணம்.
இத்திறமைகள் மஹாகாளியிடம் முயன்று பெறும் முக்திகளாகக் காணப்படவில்லை. பிறப்பில் அமைந்த சுபாவமாகவே இருக்கின்றன. செயல் முன்னும், இடைவெளிவிட்டு, பலன் பின்னும் அமைந்துள்ளது உலக இயல்பு. மஹாகாளியின் செயல்களுக்கும், பலனுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவு. காலத்தின் வேகத்தைக் கடந்து மனோ வேகத்தைத் தாண்டும் தன்மையுடையவை அவள் செயல்கள் என்பதால் இடைவெளியின்றி பலன் ஏற்படுகிறது. செயலும், பலனும் சேர்ந்துள்ள விரைவு மஹாகாளிக்குச் சொந்தமானது. காமிராவில் படம் எடுத்து, அதை ஸ்டூடியோவில் கொடுத்து போட்டோவாக மாற்றுவது பழைய வழக்கம். புதிய காமிராக்கள் சிலவற்றில் படம் எடுத்தால் போட்டோவாகவே விழும். தடைகளை அழிப்பது வலிமை. செயல்களை முடிப்பது திறமை. வ-மையும், திறமையும் தனித்தனியே செயல்படும்பொழுது முதலில் தடைகளை அழித்து, பிறகு செயலைப் பூர்த்தி செய்கிறோம். மஹாகாளியின் வலிமை, திறமை நிறைந்தது என்பதால் ஒரே மூச்சில் அழித்து, பலனை உற்பத்தி செய்கிறது அவள் தன்மை. பெருகிவரும் காளியின் வலிமை முதிர்ச்சியடையுமுன் தடைகளை அழிக்கிறது. முதிர்ச்சி அடைந்த நேரம் திறமையை வெளிப்படுத்துகிறது. அந்நேரம் பலனைக் கொடுக்கிறது. பலன் ஏற்பட்ட நேரம் அழகு வெளிப்படுகிறது. எனவேதான் அவள் வேகம் சூறாவளியின் தன்மையுடையதாகிறது. அழிக்க வேண்டியவற்றை மஹாகாளி இயல்பாக அழிப்பதும் அதனால்தான். அவளது வேகம் பேரிடியாக மேலே விழுந்து தடைகளை வேருடன் களைகிறது. சேனை முழுவதும் ஒரே சமயத்தில் தாக்குவது போன்றது அவளது எதிர்ப்பு. அசுரன் எவரையும் ஏமாற்றுபவன். பரமசிவனைப் பல முறை ஏமாற்றிய அசுரன் மஹாகாளி முன்பு பீதி கொண்டு நிற்கிறான். எந்தச் சிறு அளவில் அஞ்ஞானமிருந்தாலும் அசுரனுக்கு அடிபணிய வேண்டி வரும். மஹாகாளி அஞ்ஞானம் சிறிதும் இல்லாத சத்தியஜீவ லோகத்தைச் சேர்ந்தவள் என்பதால், அசுரனுக்கு அவள் பார்வை அடிவயிற்றைக் கலக்கும். இறைவனின் எதிரிகள் இவளுக்கு எதிரி. ஈவு, இரக்கமின்றி அவர்களை நிர்மூலமாக்குவதில் மஹாகாளிக்கு நிகரில்லை.
உலக அரங்கில் போர் புரியும் தெய்வம் அவள். கொட்டும் போர் முரசும் மஹாகாளியைக் கொக்கரிக்கச் செய்யும். நிறைவிலுள்ள குறை, மஹாகாளியின் சொந்தச் சுபாவத்தைச் செயல்படுத்தச் செய்யும். விருப்பமில்லாதவர்க்கு விபரீதப் பலனை அளிப்பதும், கண்மூடித்தனமாகக் காலம் காலமாகச் செயல்படுபவரை கசக்கிப் பிழிவதும் தன் கடமையாக மஹாகாளி ஏற்றுக்கொண்டவையாகும். துரோகிகளை க்ஷணத்தில் சுட்டெரிப்பது அவள் கோபம். பொய்மையும், கெட்ட எண்ணமும் அவளிடம் பூரண அழிவைப் பரிசாகப் பெறுகின்றன. கெட்ட எண்ணம் என்ற நாகப்பாம்பிற்கு மஹாகாளி கருடனாகும்.
அன்னையின் நான்கு அம்சங்களுக்கும் தாய்மை உணர்வுண்டு. மஹாகாளியின் தாய்மை தீவிரமான உச்சக்கட்டத்தை எட்டியதாகும். மென்மையான கருணையை அவள் வெளிப்படுத்தினாலும், அதுவும் அவள் சுபாவத்தால் ஆவேசமடையும். அர்த்தமற்றவை அனந்தம். யோகத்தை மேற்கொண்டால் உலகமே அவனுக்கு எதிரி. அவனைச் சுற்றியுள்ள தடைகள் அவனை ஜடமாக்குகின்றன. அவனுக்கேற்ற சக்தி மஹாகாளியே. யுகாந்தர முயற்சியை இன்றே பூர்த்தி செய்பவள் அவள். சாதகன் காளியை அழைத்தால், தன்னுள் மஹாகாளிக்கு அனுமதியளித்தால், சிருஷ்டியின் தடைகளும், இறைவனின் எதிரிகளும் புயலில் சிக்கிய சருகுபோல் பறப்பார்கள்.
இன்றைய அரசியலில் ஜனாதிபதி பதவி சிகரமானது. ஆனால் உண்மையான அதிகாரம் பிரதமர் கையில்தான் இருக்கின்றது. அது போன்ற நிலைகள் வாழ்வில் பல உள்ளன. பெரிய சொத்து, வருமானம் இல்லை; பெரிய பதவி, அனைவரும் அடிபணிகின்றனர், ஆனால் அதற்குரிய அறிவில்லை. அதே போல் யோகி தன் தவப்பயனாகப் பலவற்றை அடையலாம்; சித்தி பரந்து விரிந்ததாகவும் இருக்கலாம்; தீவிரமானதாகவும் இருக்கும்; ஆனால் அவையனைத்தும் காளியின் கடாட்சமில்லை என்றால் வானுயரும் அக்னியின் பூரணச் செறிவையும், நிறைவையும் தன்னுட் கொண்ட ஆன்மீகம் ஆனந்தமாக இருக்காது. தவப்பயனையும் ஆனந்தத்தால் நிரப்புவது மஹாகாளியேயாகும்.
மஹாகாளியின் இலட்சியம் உயர்ந்தது. க்ஷணமும் தாமதமின்றி பூர்த்தியாவது. அவளுடைய பாதையில் சோம்பேறிகளுக்கு இடம் இல்லை. பொறுப்பற்றவர் அவரை அணுக முடியாது. கடமையைப் புறக்கணிப்பவரை மஹாகாளி புறக்கணிப்பாள். அன்னார் அவள் பாதையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர் மணிக்கட்டில் கொட்டு கொட்டென்று கொட்டி எழுப்புவாள். சோம்பித் திரிபவனையும், ஊர் சுற்றுபவனையும் வலிந்தணைந்து, வலியைப் பூரணமாக உணரச் செய்து, விழிப்புறச் செய்வது மஹாகாளியின் திருவிளையாடல். அவள் செயல்படும்பொழுது வெற்றி, தோல்வி என்ற இரு நிலைகள் இல்லை. வெற்றி அவள் பிறப்புரிமை. அவளருள் அனந்தத்தின் எல்லையை நம்மருகில் கொணரவல்லதாகும். வலிமையின் முழுமையில் ஆனந்தத்தின் நிறைவையும், அற்புதத்தின் எளிமையையும் கண்டு, தாய்மையின் கனிவில் தலைசிறந்த வன்மையைப் புகுத்தி, காலத்தின் முடிவை கையில் கொடுக்கும் அம்சம் மஹாகாளியின் அம்சமாகும்.
மஹாலக்ஷ்மி:
அன்னையின் மூன்றாம் அம்சம் மஹாலக்ஷ்மி. உயர்ந்த ஞானம் வழிகாட்டும். திறன் சேர்ந்த பிறகே பலன் தரும். வீரம் கம்பீரமானது; ஆவேசமானது; தடைகளை உடைத்து வழி ஏற்படுத்தும்; உயர்ந்த காரியங்களைப் பூர்த்தி செய்யும் சக்தியையும் அளிக்கும். ஆனால் ஞானமோ, வீரமோ தனித்தோ, இணைந்தோ சிருஷ்டியைப் பூர்த்தி செய்ய முடியாது. அப்பூர்த்தியை அடைய அமைதியும், சுமுகமும் தேவை. அமைதி நிலவி, சுமுகம் ஆட்சி செய்தால்தான் வீரத்திற்கும், ஞானத்திற்கும் பலன் ஏற்படும். சுமுகத்தின் உறைவிடமான அன்னை அம்சம் மஹாலக்ஷ்மி. ஞானம் உயர்ந்து நிற்பதால் பெரும்பாலோர் மஹேஸ்வரியை நாடுவது இல்லை. காளியின் கம்பீரத்தைக் கடுமையாக உணர்ந்து விலகுபவர்கள் அதிகம். மஹாலக்ஷ்மி அமைதியான அன்னை அம்சமாதலால் அனைவரும் அவளால் கவரப்படுகிறார்கள். பூர்த்தி பெற்ற காரியம் எழிலுடையதாக இருப்பதால் இவளை அன்னையின் எழில் அம்சமாகக் கருதுகிறார்கள். புற எழில் செழித்துப் பூரித்து, அக அழகான லாவண்யமாக மிளிருகிறது. மஹாலக்ஷ்மி அக அழகான லாவண்யத்தை தன் புற எழிலாகப் பெற்றிருக்கின்றாள். இதுவே அவளை நோக்கி உலகம் விரைந்து வரும் காரணம். மஹாலக்ஷ்மியின் அழகு ஆன்மீக அழகு என்பதால் மனிதர்கள் ஈர்க்கப்படுவது போல் மற்ற பொருள்களும், ஜீவராசிகளும் அவளால் கவரப்படுகின்றன. மஹாகாளியின் ஆவேசம் நிறைந்த ஆனந்தம் மஹாலக்ஷ்மியால் அற்புதமாக மாற்றப்படுகிறது. அவளுடைய இனிமை மந்தஹாசம் பொருந்தியதால் மனித இதயம் அவளைக் கண்டு, தன்னை இழந்து, மயக்கமுறுகிறது. மஹாகாளியின் பிரகாசம் சூரிய வெப்பம் போன்றது. மஹாலக்ஷ்மியின் பொலிவு தண்ணிலவு சூரிய பிரகாசத்தையுடையது போன்றது. இனிமையும், மென்மையும் அளவிறந்து பெருக்கெடுக்கும் அற்புத ஊற்று மஹாலக்ஷ்மி. ஆனந்தம் சிருஷ்டியின் அஸ்திவாரம். ஆனந்தத்தில் உற்பத்தி ஆகும் உலகம் தான் பூர்த்தியடையும் நேரத்தில் ஆனந்தத்தை அமைதியாக வெளிப்படுத்துவதை நாம் அழகு என அறிகிறோம். அதற்குரிய அன்னை அம்சம் மஹாலக்ஷ்மி. உச்சி முதல் உள்ளந்தாள் வரை அவள் ஆனந்தத்தின் பூரணச் செறிவாகும். அதனால் அவள் பாதங்கள் பதிந்த இடத்தில் ஆனந்தம் பெருக்கெடுக்கின்றது. ஆழங்காண முடியாத ஆனந்த அனுபவத்தை அவளருகில் வந்து, அவளைக் கண்டு, அவள் பார்வையின் பவித்திரத்தால் சூழப்பட்டு, புன்முறுவலின் இனிமையில் மலர்ந்து, ஆன்மா பெற்றுத் திளைக்கின்றது. காந்தமே அவள் கைகள். அவளுடைய மென்மையான சூட்சும உணர்வு மனதைப் புனிதப்படுத்துகிறது. மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் இருந்தால் மற்றவைகளைப் பற்றி கவலையில்லை. சுத்தம் குறைவாக இருந்து சௌகரியம் இருந்தால், அசுத்தத்தைப் பொருட்படுத்தமாட்டான். சச்சரவு இருந்தாலும் எந்தக் காரியமும் தடையாகவில்லை எனில் சச்சரவை அழிக்க முயலமாட்டான். அடிப்படைத் தேவைகளான உணவு, வீடு, உடை போன்றவை குறைந்தால், குறையை நீக்க உடனடியாகச் செயல்படுவான். பொதுவாக இதுவே மனித சுபாவம். மஹாலக்ஷ்மி ஓரிடத்திற்கு வர அடிப்படைத் தேவைகள் இரண்டு: சுமுகம், சௌஜன்யம். அவையில்லாத இடத்திற்கு மஹாலக்ஷ்மி வருவது இல்லை; வந்தால் தங்குவதில்லை. வாழ்வும், மனமும், செயலும், சூழலும், ஆன்மாவும், அது அரவணைக்கும் அனைத்தும் சுமுகமாக உள்ள இடம் அவள் இயல்பாக விரும்பும் இடம். ஆகர்ஷண சக்தி உலகெங்கும் பரவியுள்ளது போல் அவள் சக்தி வியாபித்துள்ளது. மென்மையானது அவள் சூழல். தன்பால் மஹாலக்ஷ்மியை ஈர்க்க மனிதனால் எளிதில் முடியாது. பெரிய உற்பத்தி சாலைகள் சிருஷ்டியின் ஆனந்தத்தின் பிரதிபலிப்பாகும். நளினமான நாட்டியமும், இனிமையான இசையும், அழகின் குரலை எதிரொலிப்பவையாகும். ஜனகரும், அசோகரும், நேருவும் உயர்ந்த ஆன்மா படைத்தவர்கள். அவர்களுடைய ஆன்மாக்கள் ஆற்றொழுக்காக அனந்தனை நோக்கிச் செல்லும் தன்மை உடையன. இத்தகைய சூழ்நிலைகளில் மஹாலக்ஷ்மி வலிய வந்து தன்னை முழுமையாகப் பகிர்ந்துகொள்வாள். வறுமையும், சிறுமையும், வறண்ட உள்ளங்களும், தங்கள் கடுமையை பரவிடும் பாழடைந்த மனித வாழ்வும் உலகில் உண்டு. அவள் வாராத இடங்கள் இவை. அவள் உள்ளே வர முடியாத வாழ்வு இது. உயர்ந்தவை விலக்கும் இடங்கள் இவை. அமைதி, அன்பு, சுமுகம், எழில் இத்தகைய இடங்களுக்கு வரத் தயங்கும். அவற்றின் உறைவிடமான மஹாலக்ஷ்மி எங்ஙனம் அங்கு வர முடியும். உயர்ந்த அன்பை நாடி வரும் மஹாலக்ஷ்மி, வருமுன் ‘அதனுள் கலப்பு உண்டா?’ என்று கணிப்பாள். உயர்ந்த அன்பு கோரத்தோடு கலந்து இருப்பதுண்டு. சிறுமையின் நிழலில் அது இருப்பதுண்டு. அது போன்ற சூழ்நிலையை அவள் அறவே ஒதுக்குவாள். தன் பொக்கிஷத்தை அங்கெல்லாம் அவள் திறப்பதே இல்லை. விரைந்து விலகும் நேரத்திற்காகக் காத்திருப்பாள். துரோகத்தாலும், பேராசையாலும் மனிதன் வெற்றி பெறுவது உண்டு. அவற்றால் தோல்வியடைபவருண்டு. தோல்வி பெற்று பொறாமையடைபவருண்டு; வெறுப்புக்கு ஆளாவதுண்டு. சுயநலத்தில் தோய்ந்துள்ள மனிதருண்டு. வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் இத்தகைய குணங்கள் செயல்படும் இடம் மஹாலக்ஷ்மிக்கு விலக்கு. உயர்ந்த பக்தி ரஜோ குணத்துடன் கலந்திருப்பதுண்டு. பவித்திரம் தமோ குணத்தின் அணைப்பில் வளர்வதுண்டு; நன்றி மறந்த நிலை மலிந்திருப்பதுண்டு. அவளுக்கு இவை கொடிய விஷம் போன்றவை. வலிந்து செயல்பட்டு இந்நிலையை மாற்ற முயல்வது அவளியல்பு அன்று. கொடியவற்றை விலக்கும்வரை தன் கண்மூடி காத்திருப்பாள். அவை விலகவில்லை என்றால்தான் விலகுவாள். அவற்றை விலக்கினால், விலக்கிய இடத்தை அமிர்தத்தால் நிரப்புவாள். விரதமும், நோன்பும் அவளுக்கு விலக்கு. இதயத்தின் எழுச்சியையும், ஆன்மாவின் ஆர்வத்தையும், வாழ்வின் அழகையும் அழிப்பவை கடுமையான விரதங்கள். அவள் அரவணைப்பு அன்பாலும், அழகாலும் நிறைந்தது. வாழ்வு நம் நிலையிலும், கலை தெய்வ நிலையிலும் உள்ளன. வாழ்வின் வளங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி, கலையாக மாற்றும் சிருஷ்டித் திறன் அவளுக்குரியது. நம் அன்றாட வாழ்வு ஜீவனற்றது. புனித காவியமான செயல்கள் அநேகர் வாழ்வில் ஒரு முறையும் உதயமாகாமல் போவதுண்டு. அவள் வரும் நேரம் வந்தால், அதற்குரிய சூழ்நிலை இருந்தால், ஜீவனற்ற சிறு காரியங்களும் கவியின் காவியப் பெருக்காகும். அது அன்றாடம் நடக்கும் அனைத்துச் செயல்களிலும் விரவியிருக்கும். செல்வங்களும், செல்வ வளங்களும் அவளருகே குவியும். எளியவை அவளால் எழில் நிறைந்ததாக மாறும். பரம்பொருளின் வரப்பிரசாதத்தைப் பாமரனுக்கும் வழங்குபவள் அவள். பக்தனின் இதயம் அவளுக்குரியது. அவளை அங்குப் பிரதிஷ்டை செய்தால், அங்குள்ள ஞானத்தை அற்புதச் சிகரத்திற்கு அழைத்துச் செல்வாள். உயர்ந்த புதிர்களை விண்டுரைப்பாள். ஞானத்தைக் கடந்த பேரானந்தப் பெருக்கை உற்பத்தி செய்வாள். பக்தியின் சிறப்புக்கு அவள் காந்தம். வலிமைக்கும், திறமைக்கும் முறைமை அளிப்பவள் அவள். சிறப்புக்கே உரிய கவர்ச்சியை அளிப்பவளும் அவளே.
மஹாசரஸ்வதி:
ஞானத்தால் மலர்ந்து, ஆவேசத்தால் உயர்ந்து, அமைதியான சுமுகத்தால் பூர்த்தி பெற்ற சிருஷ்டி, பூரணம் பெற மேலும் ஓர் அம்சம் தேவை. அது செயலாற்றும் திறன். ஆயிரம் சிறு காரியங்களில் காணும் நுணுக்கம், விளக்கமாகத் தேவைப்பட்ட விவரங்கள் தவறாது சேர்ந்து அந்தப் பூரணத்தை அளிக்கின்றது. ஆயிரம் கோடியில் தீட்டப்பட்ட நெய்வேலி திட்டத்திற்கு ஞானமான அடிப்படையாக இருப்பது தொழில் நுணுக்கம். பிரம்மாண்டமான பள்ளங்களை அசுர வேகத்தில் தோண்டி, அலை அலையாக எழுந்து வரும் எதிர்ப்புகளைத் தகர்த்து, திட்டத்தை நிர்மாணிக்கும் திறன் அடுத்து தேவைப்படுகிறது.எழில் நிறைந்த நகர்ப்புறமும், தொழில் அமைதியும், சுமுக உறவுமே செயலைப் பூர்த்தி செய்கிறது. இத்தனையும் முடித்தபின், ஒரு நாள் வேலை பூரணமடைய டவுன் பஸ் குறித்த நேரத்தில் வர வேண்டும்; டைப் செய்த கடிதங்கள் தவறின்றி இருக்க வேண்டும்; குடியிருப்பில் பைப்பில் நீர் வர வேண்டும்; ஊழியரின் குழந்தைகளுக்குக் கட்டிய பள்ளியில் கல்வியின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும்; பள்ளியில் இருந்து வந்த குழந்தை பாடும் பாட்டு கேட்போர் மனதை நிறைவு செய்ய வேண்டும்; லீக்கோ விற்கும் டெப்போவில் தாமதமின்றி சப்ளை வேண்டும்; இந்த ஆயிரம் சிறு விஷயங்கள் பூரணமடைந்த பின்னரே திட்டம் முழுமை பெறுகிறது. அதற்குத் தேவையானது செயலாற்றும் திறனாகும்.
ஒழுங்குணர்ச்சி உச்சக்கட்டத்திற்கு உயர வேண்டும். ஞானத்திற்கு உரியவர் மஹேஸ்வரி. ஆவேசம் காளியினுடையது. அமைதியை நிலைநிறுத்துவது மஹாலக்ஷ்மி. ஒழுங்குணர்ச்சியையும், செயலாற்றும் திறனையும் அளிப்பது மஹாசரஸ்வதி. நால்வரில் இளையவள் சரஸ்வதி. இயற்கையின் எழில் பலனாக மாற இன்றியமையாதது சரஸ்வதியின் அம்சம். உலகச் சக்திக்கு உருவம் அளிப்பது மஹேஸ்வரியின் ஞானம். அதற்குத் திறனையும், வேகத்தையும் அளிப்பது மஹாகாளி. அவற்றுக்கு நயத்தையும், இனிமையையும் சேர்ப்பது மஹாலக்ஷ்மி. நடைமுறைக் காரியங்களை நயம்படச் சிறக்க அவற்றைச் சேர்த்துக் கோத்து, முறைப்படுத்தி, நெறிபடுத்துபவள் மஹாசரஸ்வதி. சிறியது என்று அவள் விலக்கியது எதுவுமில்லை. முடியாதது என்று எதையும் ஒதுக்குவதில்லை. தளராது, அயராது, விழிப்புடன், ஒவ்வொரு சிறு செயலையும் கூர்ந்து நோக்கி, பொக்கைகளை நிரப்பி, வளைவுகளை நிமிர்த்தி, எங்கும் எதுவும் குறைவற இருக்கும்படிச் செய்வது அவள் கடமை. அவள் பொறுமைக்கு முடிவில்லாதது போல், அவள் பொறுப்புக்கும் முடிவு இல்லை.
மனித சுபாவத்தைத் தெய்வச் சுபாவமாக்கும் கடமையை ஏற்றுக் கொண்டவள் மஹாசரஸ்வதி. அதுவே அவசரம், பொறுமையாக மாறும் திருவுருமாற்றம். காட்டைத் திருத்தி கழனியாக்குவதும், கடலை நிரப்பி மேடாக்குவதும் இவள் கடமை. ஏற்ற வேலையை ஏற்றமிகும்படிச் செய்ய யுகாந்தரக் காலப் பொறுமையை இயல்பாக அவள் மேற்கொள்வது மனித சுபாவத்திற்கு விளங்காத ஒன்று. கலையும், தொழிலும் கலைமகளின் இராஜ்யம். செய்யும் தொழிலின் சிறப்பறியும் உணர்வும், அவற்றின் உள்ளுறை இரகஸ்யங்களும், அவள் விரும்பிக் கொடுப்பன; அவள் பார்வையில் பட்டு, அவள் கவனத்திற்குரியவர்க்கு அவள் அளிக்கும் அன்புப்பிரசாதம். கலையறிவுக்குரிய பொறுமையும், சிறந்த சிறப்புக்குரிய உணர்வுபூர்வமான விரல்களும் அவள் கடாட்சத்தால் உற்பத்தி ஆகுபவை. அயராது உழைப்பவனுக்கும், நுணுக்கமாகச் செயல்படுபவனுக்கும், நீண்ட நெடிய பிரயாணத்தை இலட்சியமாகக் கொண்ட தலைவனுக்கும், புதிய சகாப்தத்தை நிர்மாணிக்கும் விபூதிக்கும் மஹாசரஸ்வதி குலதெய்வமாகும்.
மனிதனுடைய திறமைகள் ஆயிரம். அனைத்தும் நிறைவால் நிரம்பியிருந்தால் மட்டுமே பரமனின் செயல் பூர்த்தியடையும். ஆயிரம் திறமைகளைப் பெற்றுள்ள மனிதன், அனைத்தையும் குறையுடன் பெற்றிருக்கிறான். அவனை நிறைவின் கருவியாக்குவது அவள் செயல். நிறைவுடன் செயல்பட்டு, நிறைவை நிலைநிறுத்த, அவனை வழிநடத்த அவள் படும்பாடு பெரும்பாடு. அதற்காக அவள் நெடுங்காலம் உழைக்கின்றாள். எல்லையற்ற பொறுப்பை, வரையறையின்றி நிறைவேற்ற அவள் முன்வருகிறாள். முழுமையாக, பூரணமாக, சிறப்பாக, உயர்வாக, தெளிவாக முடிப்பதே அவள் செயல்படும் முறை. இழை பிசகாத பூரணச் சிறப்புத் தவிர வேறெதையும் மஹாசரஸ்வதி ஏற்றுக்கொள்வதில்லை. அவளால் முடிந்த செயல் முழுமையாக முடிவு பெற்றிருக்கும். அவளால் பூர்த்தி செய்யப்பட்ட காரியங்களில் குறை என்பது இருப்பதில்லை. மனிதன் செயல்படும்பொழுது அவனருகிலிருந்து, அவன் செயலுக்குத் துணை செய்து, புன்முறுவல் பூத்து, இனிமையாக நடந்து, எதனாலும் மனம் தளராமல் செயல்பட்டு, தோல்வியைக் கண்டு மனம் தளராமல், உண்மையான உழைப்பின் ஒவ்வோர் அம்சத்தையும் உயர்த்திவிடும் மஹாசரஸ்வதி, நடிப்பவரையும், ஏமாற்றுபவரையும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவரையும் இரக்கமின்றி ஒதுக்கிவிடுவாள். தாயாக நம் தேவையைப் பூர்த்தி செய்து, நண்பனாக நலிந்த சமயத்தில் உதவி செய்து, அமைதியான ஆலோசனையை விடாமல் வழங்கும் தலைவியாகி, சோர்ந்த காலத்துத் தன் புன்முறுவலால் ஆதரவு அளித்து, நிலையாகவுள்ள தெய்வத் திருக்கரத்தைச் சுட்டிக்காட்டி, உயர்ந்த மனோபாவத்தை நாடும் இலட்சிய மனப்பான்மையை இடையறாது ஊக்குவிப்பது அவள் இயல்பு. அன்னையின் மற்ற மூன்று அம்சங்களும் தங்கள் செயல் பூர்த்தியாக மஹாசரஸ்வதியையே எதிர்பார்க்கின்றார்கள். ஆழ்ந்த அஸ்திவாரத்தைப் போட்டு, வலுவான கட்டடத்தை எழுப்பி, எல்லாச் சிறு காரியங்களையும் தவறாமல் கவனிப்பதால், மஹாசரஸ்வதியால் மற்ற அம்சங்களின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடிகிறது.
நாடு முன்னேற கல்வி அவசியம். கட்டாயக் கல்வி 5 வகுப்பு வரை சட்டத்திலுள்ளது. மற்ற நாடுகளைப் போல் 16 வயது வரை குழந்தை கட்டாயமாகப் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற சட்டத்தை இயற்றும் உரிமை பார்லிமெண்டுக்கு இருந்தாலும், இதுவரை அந்தச் சட்டம் இயற்றப்படவில்லை. அது வந்த பின்னரே நாட்டில் வளம் பெருகும். அன்னையின் நான்கு அம்சங்களைக் கண்டோம். சத்தியஜீவன் உலகில் உதிக்க இன்னும் ஓர் அன்னை அம்சம் அவதரிக்க வேண்டும். இவற்றுக்கு மேலாக அன்னைக்கு வேறு பெரிய அம்சங்கள் பல உள. பிரபஞ்சத்திலுள்ள அனைத்துச் சக்திகளையும் சத்தியஜீவனுடன் சேர்ப்பது ஆனந்தமும், தெய்வீக அன்புமாகும். ஆனந்தமே பூவுலகை, சத்தியஜீவனாக மாற்றும் இரகஸ்யம். ஆனந்தத்தைத் தாங்கி வரும் அன்னை அம்சம் ஒன்றுண்டு. இதுவரை அது பூவுலகில் அவதரிக்கவில்லை. அகந்தையாலும், சிறுமையாலும், இருளாலும் சூழப்பட்ட மனித சுபாவம் இப்பெரிய அம்சங்களின் பிரம்மாண்டமான சக்தியைத் தாங்கும் நிலையில் இல்லை. இந்த நான்கு அம்சங்களும் வேரூன்றிய பின்னரே மற்ற உயர்ந்த அம்சங்கள் இங்கு வர முடியும். அதன் பிறகே சத்தியஜீவன் தோன்றுவான். அதன் பிறகே அன்னையின் சத்தியஜீவிய மஹாசக்தி தோன்றுவாள். அவள் அவதரித்தபின் தன் ஒளிமயமான உயர்வுகளை விவரிக்க ஒண்ணாத வெளியில் பரப்புவாள். அதன் பலனாக மனித சுபாவம் தெய்வ சுபாவமாகும். சத்தியஜீவன் எனும் வீணையின் நரம்புகளாக மனித சுபாவம் அமைந்து, அதிலிருந்து தெய்வீக கானம் புறப்படும். இத்திருவுருமாற்றம் பரமனின் இலட்சியம். அதுவே பூரண யோகம். மனிதனுடைய அளவில் இது பூர்த்தியாகக்கூடியதன்று. பரமனே உலகில் மனிதனுள் இதைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குரிய கருவியாக அன்னை பூவுலகில் அவதரித்துள்ளார். நீ இத்திருவுருமாற்றத்தை நாடினால், இது பலிக்கும். ஆனால் இதை உன்னால் பூர்த்தி செய்ய முடியாது. உன் பங்கு சரணாகதியேயாகும். அன்னையை நீ சரண் அடைந்தால், அவர் பரமனின் சார்பில் உன்னில் இதைப் பூர்த்தி செய்வார். உன் சமர்ப்பணம் பூரணச் சரணாகதியானால்தான், அன்னை தம்மை உன்னுள் பூர்த்தி செய்துகொள்வார். பூரணச் சரணாகதியும், எல்லாக் கரணங்களின் நெகிழ்ந்த உள்ளுணர்வுமே உனக்குத் தேவை. மனத்தாலும், உணர்வாலும், ஆன்மாவாலும் அன்னையை அறிந்து நீ உணர வேண்டும். அன்னையின் சக்தி உன்னுள் செயல்படுவதை நீ உணர வேண்டும். பொதுவாக மனிதன் கண்மூடித்தனமாகத் தூங்கிய நிலையில் இருக்கிறான். என்றாலும், ஓரளவு அன்னையால் அவனுள் செயல்பட முடியும். அன்னையின் பூரண அருள் பெற மனிதன் பூரண உள்ளுணர்வோடும், அக விழிப்புடனும் இருத்தல் அவசியம்.
மனித மனம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியிருக்கும். மனம் கேட்கும் கேள்வி இறைவன் உள்ளே வரும் கதவை அடைக்கும். கேள்வி கேட்க முடியாத இடத்தில் ஐயத்தை எழுப்பும். ஐயம் அறியாமையின் அறிகுறி; கண்மூடி செயல்படுவதற்கு அடையாளம். அன்னை தொட்ட இடம் துலங்கும். கேள்வியும், ஐயமும் அன்னையின் ஸ்பர்சத்திற்கு எதிரானவை. பிராணன் ஆசை நிறைந்தது; ஆணவம் பொருந்தியது. ஆசையின் கடைசிச் சாயல் அழிந்த பின்னரே ஆனந்தம் உதயமாகும். அன்னையின் ஸ்பர்சம் அரவணைப்பாக மாறிய பின்னரே திருவுருமாற்றம் ஏற்படும். ஆசையும், ஆணவமும் ஸ்பர்சத்தையே ரத்து செய்பவை. தெய்வத்தின் தீண்டுதலை விலக்கக்கூடியவை. உடல் தன் சிறு பழக்கங்களை பற்றுக்கோடாகக் கொண்டது. சிறு சிறு பழக்கங்களும், சிறு சிறு ஆசைகளும் வலைகளாக உடலைப் பின்னிக்கொண்டிருக்கின்றன. இது உடலின் தமோ குணத்தின் அமைப்பு. ஜீவனற்ற அந்தப் பின்னலை அகற்ற முயன்றால் உடல் ஓலமிடும்.
மனத்தின் கேள்வி, பிராணனின் ஆசை, உடலின் தமோ குணம் ஆகியவற்றை அழித்து, சத்தியஜீவனை நாடினால் ஜோதி, ஞானம், அழகு, சுமுகம், சக்தி உன்னுள் வர முயல்கின்றன. அவற்றை பூர்த்தி செய்ய உதவுவது பூரண சரணாகதி. சரணாகதி உடலின் பகுதிகளையும் நெகிழ்வால் நிரம்பும் ஆன்மீக அம்சங்களை உணரச் செய்யும். பூரணன் மேலேயிருக்கின்றான். அருள், கங்கையாக அவனிடமுள்ளது. பூரணத்தை உனக்கு வழங்க அவன் விழைகிறான். சரணாகதியால் உன்னை நீ புனிதப்படுத்திக்கொண்டால், அருள் பிரவாகமாக உன்னுள் நுழையும். ஜடமான உடலும் விழிப்புறும். சத்தியஜீவ சக்தியை உணர முடியாத உடலும், உன் விழிப்பால் தன்னுள் அச்சக்தி பாய்வதை அறியும். அன்பும், ஆனந்தமும் நாலு பக்கங்களிலும் உன்னைச் சூழ்ந்து, உன்னுள் விரைந்து பாய்ந்து மெய்சிலிர்க்கச் செய்யும்.
Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
TN, India.
Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam Spirituality and Prosperity ஆன்மீகம் சிறுகதை அன்னை இலக்கியம் ஸ்ரீ அன்னையைப் பற்றிய சிறுகதைகள்
|
No comments:
Post a Comment