ஸ்ரீ அரவிந்தரும், சுத்த தெய்வீக சக்தி உலகில் வர அவர் செய்த மாபெரும் தியாகமும்:
ஸ்ரீ அரவிந்தர் இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். அவர் இறைவனிடம் செய்துகொண்ட கோரிக்கை இதுதான். ‘இறைவா! நான் உன்னிடம் முக்தியைக் கேட்கவில்லை. இதை நீயே அறிவாய். மற்றவர்கள் கேட்கும் எதையும் நான் உன்னிடம் கேட்கவில்லை. இந்த நாட்டை உயர்த்துவதற்கான வலிமையைக் கொடுக்க வேண்டுமென்றுதான் உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். எந்த மக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேனோ, எந்த மக்களிடம் அன்பு வைத்திருக்கிறேனோ, அவர்களுக்காக ஜீவித்திருக்கவும், சேவை செய்யவும் என்னை அனுமதிக்க வேண்டும்’. அவர் யோகத்தை விரும்பியதற்குக் காரணம் ‘உலகத்தைத் துறந்து இறைவனை அடைய வேண்டும்’என்பதன்று. ‘யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக்கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும்’என்பதுதான்.
இந்தியா 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி பூரணச் சுதந்திரம் அடைந்தது. இந்தத் தேதி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினமாக அமைந்துள்ளது. இது எதிர்பாராதவிதமாக அமைந்தது என்று நினைப்பதற்கில்லை. ஏதோ ஒரு வகையில் அவருடைய தியாகத்தையும், தன்னலமற்ற சேவையையும் பாராட்டுவது போலத்தான் ஆகஸ்ட் 15இல் இந்தியா விடுதலை பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. அது மட்டுமன்று, ஸ்ரீ அரவிந்தர் மனித சமுதாயத்திற்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். இது போலவே இந்தியாவும் உலகத்திற்கு ஒரு முக்கியமான எதிர்காலத்தை உருவாக்குகின்ற பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளப்போகிறது என்பதற்கு அடையாளமாக அத்தேதி அமைந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தில் ஒரு முக்கியமான திருப்பம் 1926, நவம்பர் 24ஆம் தேதி ஏற்பட்டது. இந்த நாளை ‘வெற்றித் திருநாள்’என்று குறிப்பிடுவார்கள். ‘சுத்த தெய்வீக சக்தி மனித உடலில் புகுமாறு செய்து, அதில் பொதிந்துள்ள இறைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்’என்பதுதான் அவருடைய கொள்கையாகும். இந்தச் சக்தியை மனித உடலில் புகுமாறு செய்ய வேண்டுமானால், முதலில் அந்த மனோசக்தியானது புகுந்து மனித உடலைப் பக்குவப்படுத்த வேண்டும். பக்குவப்படுத்தப்பட்டுவிட்டால், சுத்த தெய்வீக சக்தி அவ்வுடலில் புகுந்து செயல்படுவது உறுதியாகிவிடுகிறது. சுத்த மனோசக்தி ஸ்ரீ அரவிந்தரின் உடலில் புகுந்தது நவம்பர் 24ஆம் தேதி. இத்தேதி சுத்த தெய்வீக சக்தி உடலில் புகுந்து செயல்படுவதை உறுதி செய்வதால், இது ‘வெற்றித் திருநாள்’என்றழைக்கப்படுகிறது.
சுத்த தெய்வ சக்தியானது மனித உடலில் புகுந்து செயல்படும் பொருட்டு 1926 முதல் 1950 வரை ஸ்ரீ அரவிந்தர் ஒரு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உடலை விட்டுவிடுவதன் மூலம் அச்சக்தியின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக அதனைத் தம்முடலில் புகுமாறு செய்ய வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஸ்ரீ அரவிந்தருக்கு ஏற்பட்டது. அம்மாபெருந்தியாகத்தைச் செய்து, அச்சக்தி தம்முடலில் புகுமாறு செய்தார், மகான் ஸ்ரீ அரவிந்தர். அத்தினம் 1950, டிசம்பர் 5ஆம் தேதியாகும் அன்று முதல் மூன்று நாள்கள் (அதாவது அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிற) வரை அவருடைய திவ்யமான சரீரம் பொன்மயமாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது.
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
TN, India.
Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam Spirituality and Prosperity ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 05 . பகுதி - 4
|
No comments:
Post a Comment