Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, February 14, 2013

அன்னை அன்பர்கள் என்றும் எதிலும் வெற்றி பெறுவதற்கான வழிகள்


அன்னையைப் பூரணமாக ஏற்று, என்றும் எதிலும் வெற்றி பெறுவது எப்படி?


வெற்றி என்பது தோல்விக்கு எதிரானது.அதனால் வெற்றியைத் தேடுபவர்க்குத் தோல்வியும் உண்டு என்பது நியதி.வெற்றியும் தோல்வியும் எதிரானவை என்பது மட்டுமன்று.இதேபோல் பல இரட்டைகளை நாம் அறிவோம்.ஒளி, இருள், உயர்வு, தாழ்வு, செல்வம், வறுமை, உடல்நலம், நோய் என ஏராளமான இரட்டைகளுண்டு.இவை அனைத்தும் சேர்ந்தது வாழ்வு.

ஏனிந்த இரட்டைகள் ஏற்பட்டன?சீரான வாழ்வுக்கு இரட்டைகள் தேவையில்லை.வாழ்வு உயர்ந்து வளர்ந்து முன்னேறுவதாகும்.முன்னேற்றம் எனில் தாழ்ந்த இடத்திலிருந்து உயர்ந்த இடத்திற்குப் போவதாகும்.எனவே உயர்வும், தாழ்வும் இருக்கின்றன.

இதுவே சட்டமானால் தோல்வியை விலக்கி, வெற்றியை மட்டும் நாடுவது எப்படி?அப்படி அது கிடைத்தால், முன்னேற்றமிருக்காதா? உடலுக்கு வியாதி வரலாம்.வரவேண்டும் என்ற அவசியமில்லை. வியாபாரத்தில் நஷ்டம் உண்டு.அவசியமாக நஷ்டம் ஏற்படவேண்டுமென்பதில்லை.

தாழ்ந்ததிலிருந்து உயர்ந்ததற்குப் போவது ஒரு வகை முன்னேற்றம்.உயர்ந்ததிலிருந்து மேலும் உயர்வுக்குப் போவது அடுத்த வகை முன்னேற்றம்.

நாம் முதல் வகை முன்னேற்றத்தை விலக்கி, அடுத்த வகையை நாடுகிறோம்.இது சாத்தியமா?சாத்தியம் எனில் சாதிப்பது எப்படி?

பயிர் வானத்தைப் பார்த்திருந்தவரை மகசூல் கிடைக்குமா? சாவியாகுமா என்பது நிலை, நிர்ணயிப்பது வானம்.மோட்டார் போட்டு நீர் இறைக்க ஆரம்பித்தபின் பயிர் விளையுமா இல்லையா என்பது போய்விட்டது.முனிசிபல், கார்ப்பரேஷன், சர்க்கார் பள்ளிகளில் பிள்ளைகள் சேர்ந்தால், பாஸாகுமா என்பது கேள்வி. பிரபலமான பள்ளிகளில் சேர்ந்தபின் பாஸா, பெயிலா என்பது கேள்வியில்லை.மார்க் என்ன வரும் என்பதே கேள்வி.விமானப்பிரயாணம், ரயில் பிரயாணம் ஆகியவற்றிலும் ஆரம்பகாலத்து நிலை அடியோடு மாறிவிட்டது.மருந்துகள் பெருவாரியாக வந்தபின் வியாதி வந்தால் பிழைக்குமா என்பது மாறி, எவ்வளவு சீக்கிரம் குணமாகும் என்பதே பிரச்சினை.பல துறைகளிலும் தோல்வி என்பது குறைந்து வருவதை நாம் காண்கிறோம்.

வாழ்வு என்பது அனைத்துத் துறைகளும் சேர்ந்தது. வாழ்வில் தோல்வி குறைந்து, மறையும், என்ற நிலை ஏற்பட வழியுண்டு என்பதை நடைமுறையாலும், அன்னை அருளாலும் விளக்கலாம்.

இது சம்பந்தமான கருத்துகள்:

தோல்வியே இல்லாமல் நாம் இன்று பல காரியங்களைச் செய்கிறோம்.

நாம் அதை அக்கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதில்லை.

அக்காரியங்கள் உடலால் தானே செய்யப்படுபவை sub conscious acts.

உடலால் தானே நடப்பவற்றை அறிவால் நாமே நடத்த முடியுமானால், இனி தோல்வி மறைந்துபோகும்.

உடலால் நடக்கும் காரியங்களை ஆராய்ந்து அவை நடைபெறும் முறைகளைக் காணுதல் எளிது.

 புதியதாகச் செய்யும் காரியங்களில் நாம் ஏற்கனவே தோல்வியேயின்றி செய்யும் காரியங்களுக்குரிய முறைகளை இன்று புறக்கணிக்கிறோம்.

புறக்கணிக்காவிட்டால் தோல்வி அற்றுப்போகும்.

மனம் தான் அறிந்தவற்றைச் செய்தால் வெற்றியாவது, தோல்வியாவது வரும்.

உடல் தான் அறிந்த காரியத்தைச் செய்தால் வெற்றி மட்டுமே வரும்.

இன்று மனத்தாலும், அறிவாலும் செய்வதை, உடலால் அறிய முனைதல் பயன் தரும்.

வெற்றியா, தோல்வியா என்ற இடத்தில் அன்னை வந்தால் வெற்றிமட்டும் உண்டு.

முழு வெற்றி உடலுக்கும், அன்னைக்கும் உண்டு.

நாம் அன்னையை ஏற்று, காரியங்களை உடலின் அறிவால் செய்தால் தோல்வியே எழாது.

ஒரு காரியம் வெற்றி பெறவில்லை என்றால் அங்கு நாம் காண்பதென்ன?உதாரணமாக ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வேலைக்குரிய தகுதியொன்று குறைவாக இருக்கும். அவருக்கு வேலைக்குப் போக விருப்பமிருக்காது, தகுதிக்கு மேற்பட்ட வேலையை நாடுவார், தாம் விரும்பும் இடத்தில் வேலை வேண்டும் என்பார், வேலை நிலவரத்தை அறியாமல் கற்பனை உலகிலிருப்பார். இதுபோன்ற குறைகளால் வெற்றியற்றுப் போவதுண்டு.எல்லாத் தகுதிகளும், எல்லா நிபந்தனைகளும் பூர்த்தியான இடத்தில் வேலை கிடைக்கவில்லை என்பதும் வாழ்வில் உண்டு.அன்னையிடம் அது இல்லை.

ஒரு காரியத்தில்

செயலுக்குரியன (physical components)
 உணர்வுக்குரியன (vital energy)
அறிவுக்குரியன (mental knowledge)

என்றுண்டு.

அவை சரியாக உள்ள இடங்களில் தோல்வி கிடையாது. நாம் கையெழுத்திடுவது, காப்பி போடுவது, நடப்பது, அன்றாட ஆபீஸ் வேலைகளைச் செய்வது, T.V.யைத் திருப்புவது போன்று தினமும் நூறு காரியங்களைச் செய்கிறோம்.அவற்றுள் தோல்வி வருவதில்லை. வருவது மிகக் குறைவு.

இவற்றை எளிமையானவை என நினைக்கின்றோம். ஆரம்பத்தில் இவை எளிமையாக இருக்கவில்லை.இன்றும் பலருக்கு இவை எளிமையாக இல்லை.ரேஷன்கார்டு, gas, வீட்டிற்குக் குடி வைப்பது, அட்மிஷன் பெறுவது, பிரமோஷன், திருமணச் சம்பந்தம் போன்று ஏராளமான காரியங்களில் நமக்கு வெற்றி நிலையில்லை. இக்காரியங்கள் தவறியபோது பார்த்தால் நம் செயலில் விட்டுப்போனது இருக்கும்.நம் செயலில் குறையில்லாமல் செய்தால் பெரும்பாலும் இவை வெற்றியடையும்.தடையானால் அன்னையை அழைத்தவுடன் பூர்த்தியாகும்.

செயலில் குறைவற்ற காரியம் தானே பூர்த்தியாகும்.

அன்னையை அழைத்தால் தவறாது பூர்த்தியாகும்.

அதிர்ஷ்டம் நமக்குண்டு

தினமும் 2000ரூபாய் சம்பாதிப்பவர் தினமும் 30,000 ரூபாய் சம்பாதிக்கும் ஆர்டரை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்.B.A. படித்து பாங்க் கிளார்க், ஏஜெண்ட் வேலைக்குப் பரீட்சை எழுதுபவர் I.A.S. பாஸ் செய்வதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்.எவருக்கும் அவர் நிலையில் அதிர்ஷ்டம் என்பதுண்டு.அப்படிப்பட்ட காரியத்தை எடுத்து அதற்குரிய - செயல், உணர்வு, அறிவு பூர்வமான - காரியங்களைத் தவறாமல், குறைவற ஒருவர் செய்தால், அது பலிக்கும் வாய்ப்பு எழும். பலிக்காவிட்டால், அன்னையை அழைத்தால் தவறாது பலிக்கும்.

ஒரு காரியம் இதுபோல் பலித்தால், அடுத்த அதிர்ஷ்டமான காரியத்தை இதேபோல் குறைவரச் செய்வதுடன், எதிர்பார்ப்பு இன்றி செய்தால், காரியம் பூர்த்தியாகும்.வாழ்வின் எல்லா முக்கியக் காரியங்களையும் ஒருவர் இதுபோல் நிதானமாக, அடக்கமாக செய்தால் அவர் அதிர்ஷ்டத்திற்குரியவர்.

தினமும் 2000ரூபாய் சம்பாதிப்பவர் அன்னையை அறிந்தவுடன், "எனக்கு ஒரு ஆர்டர் கவனத்திலுள்ளது.அது கிடைத்தால் தினமும் 30,000 வரும்'' என்றார்.ஆர்டர் வந்துவிட்டது.என்னால் சமாளிக்க முடியுமா என அவர் மனம் கேள்வி எழுப்புகிறது.

அன்னையை மட்டும் மனம் நிறைவாக ஏற்று அழைத்தால், அதிர்ஷ்டம் வரும்.

செயலைக் குறைவரச் செய்தால் தானே அது பூர்த்தியாகும்.

என்றும், எதிலும் வெற்றி மட்டும் வேண்டுபவர், செயலுக் குரியவற்றைக் குறைவர அளித்து, அன்னையைப் பூரணமாக ஏற்று முயன்றால் அவர் பெறுவது தோல்வி கலப்பில்லாத வெற்றியாகும்.


Source: Malarntha Jeeviyam - Aug 2000 - அன்பர் உரை

(சென்னை பெரம்பூர் ரிஷி இல்லத் தியானமையத்தில் 25.04.1999 அன்று திருமதி ரேவதி சங்கரன் நிகழ்த்திய உரை)

No comments:

Post a Comment

Followers