அதிசயங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன
-S.அன்னபூரணி
அன்னை இலக்கியம் - மலர்ந்த ஜீவியம் செப்.2000
--------------------
**********************
கூட்டத்தில் அமர்ந்திருந்த அர்ச்சனாவிற்கு மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.போன வாரம் அலுவலகத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம்.கூட்டத்தில் பேசிப் பழக்கமில்லை.நிறைய தலைகளைப் பார்த்தாலே கைகால்கள் வெடவெடவென்று நடுங்கும். ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தயக்கத்துடன் எழுந்தாள்.கூட்டத்தினர் அனைவரும் யாராவது எழுந்திருக்க மாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தலைவரும் இவளை ஊக்குவிப்பதுபோல் "வாங்கம்மா ஏன் தயக்கம்?' என்றது தைரியமூட்டவே அர்ச்சனா மனதுக்குள்,"அம்மா கூட்டத்தில் பேசிப் பழக்கமில்லை எனக்கு, இன்று பேசப் போவது நானில்லை நீங்கள்தான்' என்று வேண்டியவாறு மைக் அருகே சென்று பேசத் தொடங்கினாள்.
"நான் ஒரு வங்கியில் வேலை செய்கிறேன்.எங்கள் அலுவலகத்தில் நிறைய அன்னை அன்பர்கள் இருக்கிறார்கள்.உணவு இடைவேளையில் சாவித்திரி படிப்போம்.போன வாரம் ஒரு அதிகாரி என்னிடம் வந்து இது என்ன படம்?பாண்டிச்சேரி அன்னையா?
இது என்ன புத்தகம்?ஒஹோ என்று கேலியாகக் கேட்டுவிட்டுப் போய் விட்டார்.என் மனதுக்குள் ஒரே நடுக்கம்.அவர் கேலியாகப் பேசியது மட்டும் என் மனதை மிகவும் உறுத்திக் கொண்டிருந்தது. அந்த அதிகாரி நல்லவர்தான், வேலையிலும் வல்லவர், ஆனால் பேச்சில் சிறிது கேலி இருக்கும்.இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறப் போகிறவர்.இது நடந்து இரண்டு நாட்கள் கழிந்திருக்கும். வழக்கமில்லாத வழக்கமாக அந்த அதிகாரியின் முகத்தில் கலக்கம். ஒரு முக்கியமான பைலைக் (file) காணவில்லை.பரபரவென்று தேடிக் கொண்டிருந்தார்.எனக்கே அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இது நடந்து மறு நாள் அவர் என்னிடம் வந்தார்."மேடம் நேற்று ஒரு பைலைக் காணவில்லையென்று தேடிக் கொண்டிருந்தேனே, அது கிடைக்கவில்லையென்றால் பெரிய பிரச்சனையாயிருக்கும்.இது வரைக்கும் நான் செய்த வேலைக்கெல்லாம் மதிப்பில்லாமல் போய் எனக்குக் கெட்டபெயர் வந்திருக்கும்.பைலைத் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மின்னலடித்தாற்போல் ஓர் எண்ணம் உதித்தது.நேற்று அர்ச்சனாவிடம் அன்னையைப் பற்றி நான் கேலியாகப் பேசியதன் விளைவோ என்று தோன்றியது.உடனே அம்மா நான் பேசியது தவறு என் தவற்றைத் திருத்திக் கொள்கிறேன். பைலைத் தேடிக் கொடு.நான் ஒரு முறை பாண்டி வந்து உன்னைத் தரிசனம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.என்ன ஆச்சரியம் அடுத்த நிமிடம் பைல் கிடைத்து விட்டது.நிஜமாகவே இவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்தான் என்று மன்னிப்புக் கேட்கும் பாணியில் சொல்லிவிட்டுப் போனார்.என் மனம் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டது.என் மன உறுத்தலை உடனேயே போக்கிவிட்ட அன்னையின் கருணையை நினைக்கையிலேயே என் நெஞ்சம் கசிந்தது.ஒரு சிறிய படத்தை மேஜை டிராயரில் வைத்து நான்கு பூக்களை வைப்பதற்கே அன்னை இப்படி அருள் புரிகிறாரென்றால் அவரது மகிமையை என்னவென்று சொல்வது? இது மட்டுமா?என் தோழி கீதா ஒரு ரோஜாப்பூவைக் கொடுத்து இந்தா இதை அன்னை படத்திற்கு வை என்று சொன்னவுடன் சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து மேடம் நீங்கள் ரோஜாப்பூ
கொடுத்த வேளை இத்தளை நாட்களாக சாங்க்ஷன் ஆகாத வீட்டு வசதிக் கடன் எனக்கு சாங்க்ஷன் ஆகி விட்டது.அது மட்டுமா சனிக்கிழமைகüல் வவுச்சர் போடுவது வழக்கமில்லை ஆனால் அன்னையின் அருளால் சனிக்கிழமை என்று கூடப் பார்க்காமல் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைந்தாள். இன்னொரு தோழி வந்து நீ நாகலிங்கபூ கொடுத்தாய்.இத்தனை நாள் வாராது என்று நினைத்த பணம் வசூலாகிவிட்டது என்று சொலலிமகிழ்ந்தாள்.இது மாதிரி எத்தனையோ சொலலிக் கொண்டே போகலாம்' என்று சொல்லி தன் இடத்திற்குத் திரும்பினாள்.கூட்டத்தில் பலத்த கை தட்டல்.ஏதோ துணிச்சலில் பேசி விட்டாளே தவிர கைகால்கள் நடுக்கம் வெகுநேரம் நீடித்தது. ஏதாவது தப்பும் தவறும் பேசியிருப்போமோ என்று வெட்கம் பிடுங்கித் தின்றது.மறுநாள் அர்ச்சனா ஒரு திருமணத்திற்குப் போக வேண்டியிருந்தது.
கல்யாணக் கூடத்தில் நுழைந்து, அங்கு உட்கார்ந்திருந்தபோது இங்கு சும்மா உட்கார்ந்து கொண்டு புடவை, நகை, வீட்டு வம்பு, மாமியார் கதைகளைப் பேசுவதற்குப் பதிலாக யாராவது அன்னை பக்தர்கள் இருந்தால் உருப்படியாகப் பேசலாமே என்ற எண்ணம் தோன்றியது.அடுத்த ஐந்தாவது நிமிடம் முன்பின் தெரியாத ஒரு பெண்மணி வந்து வணக்கம் என் பெயர் சரோஜா நேற்று தியானக் கூடத்தில் நீங்கள் உங்கள் அனுபவத்தைப் பிசிறு தட்டாமல் அற்புதமாகப் பேசினீர்கள்.நானும் ஒரு அன்னை பக்தைதான்.எனக்குக்கூட என்னுடைய அனுபவத்தைக் கூற வேண்டும் என்று ஆசை, ஆனால் தைரியமில்லை என்று சொன்னவள் தன்னருகிலிருந்த கணவரை அழைத்து இதோ பாருங்களேன் நேற்று தைரியமாகப் பேசினார்கள் என்று கூறினார்களே அவங்க வந்திருக்காங்க என்று அர்ச்சனாவை அறிமுகப்படுத்தினாள்.அர்ச்சனாவிற்கு தலைகால் புரியவில்லை மேடம் நானும் உங்களைப் போலத்தான் கூட்டத்தில் பேசிப் பழக்கமில்லை.நான் எங்கே பேசினேன்?அன்னையல்லவா எனக்குள் இருந்து பேசினார்கள்.அடுத்த முறை தியானக் கூட்டத்தில் உங்கள் அனுபவத்தைப் பேசுங்களேன். சரோஜா உடனே வேகமாகத் தலையை மறுத்து ஆட்டினாள். ஐயோ எனக்கு நினைக்கவே பயமாயிருக்கிறது நான் மாட்டவே மாட்டேன். சரி போகட்டும் கூட்டத்தில் பேச வேண்டாம் என்னிடமாவது உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வீர்களா?ஆக்ஷேபணை இல்லையென்றால் சொல்லுங்கள்.நான் கேட்க மிகவும் ஆவலாயிருக்கிறேன்.
அதற்கென்ன தாராளமாகச் சொல்கிறேன்.நான் முதலிலிருந்து ஆரம்பித்துச் சொல்கிறேன்.என்னைப் பொருத்தவரையில் சிறு வயதிலிருந்து எனக்குத் தெய்வ பக்தி அதிகம்.யார் எந்த தெய்வத்தை அறிமுகப்படுத்தினாலும் ஏற்றுக் கொண்டு வழிபட ஆரம்பித்து விடுவேன்.அதே மாதிரி ஒரு நாள் என் தோழியிடம் அடிக்கடி என் குழந்தைகளுக்கு உடம்பு படுத்துவதைக் கூறி வருத்தப்பட்டேன். அதற்கு அவள் உடனே அன்னையின் படத்தை என்னிடம் கொடுத்து இவரை வழிபட்டு வா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினாள்.நானும் அதை வழக்கம்போல் வைத்து வழிபட்டு வந்தேன்.ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்திருந்தபோது இதோ பார் சரோஜா, அன்னையின் மகிமையைச் சாதாரணமாக எண்ணி விடாதே, நீ வழிபடும் மற்ற தெய்வங்களோடு பத்தோடு பதினொன்றாக வைத்து வழிபடக் கூடாது.அன்னை மனித வடிவம் எடுத்து வந்த பராசக்தியின் அவதாரம்.மற்ற தெய்வங்களை வேண்டிக் கொண்டால் அந்த தெய்வங்கள் உதவிக்கு வரும், வராமலிருக்கும்.ஆனால் அன்னை அப்படியில்லை நாம் கூப்பிட மாட்டோமா, நமக்கு அருள் புரிய மாட்டோமா என்று நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் என்றாள்.அன்னைக்கென்று ஒரு தனியிடம் ஒதுக்கி வேண்டி வரலானேன்.குழந்தைகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது.
ஒரு நாள் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியே கிளம்ப வேண்டியிருந்தது.எங்கள் புகுந்த வீடு பெரிய குடும்பம்.நான்தான் மூத்த மருமகள்.குடும்பம் பெரிதென்பதால் அடிக்கடி ஏதாவது விசேஷங்கள் நிகழ்ந்தபடியிருக்கும் நான் போயே ஆக வேண்டிய சூழ்நிலை.அன்றும் அவசரம் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன் என் கணவரும் வழக்கமான தொனியில் என்ன சரோஜா ஆச்சா?சீக்கிரம் கிளம்பு என்று அவசரப்படுத்தினார்.அவரைக் காக்க வைக்கிறோமே என்ற பதட்டத்தில் மொஸைக் தரையில் சிந்தியிருந்த தண்ணீரில் காலை வைத்தவள் வழுக்கி விழுந்தேன். விழுந்ததுதான் தெரியும் மயக்கமானேன்.விழித்துப் பார்த்தபோது காலில் பெரிய கட்டுடன் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன்.உடம்பில் வலி.மனத்தில் ஒரே வேதனை.அப்புறம் 4 மாதங்களாக நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.பணக் கஷ்டம்.வீட்டில் உதவிக்கு ஆளில்லாமல் அவஸ்தை.ஒரு வழியாக எழுந்து நடமாட ஆரம்பித்தேன்.மனதுக்குள் சங்கடம்.என் கணவர் பொறுமைசாலி தான்.இருந்தாலும் சில சமயம் கோபிப்பார்.வரவர உன் நடையே சரியில்லை பழையபடி நடக்கவே முடியாது போலிருக்கிறது.ஏதோ உடல் ஊனமுற்றவர்கள் நடப்பதுபோல் நடக்கிறாய் என்று சொல்லும்போது மனம் புண்படும்.இப்படியிருக்கும்போது அன்னையின் தரிசன நாள் வந்தது.அன்னையின் அறையை வருடத்தில் 2 நாட்கள்தான் திறப்பார்கள்.அதில் நவம்பர் 17 அன்னையின் சமாதி நாளும் ஒன்று.நான் மெல்ல என் கணவரை அணுகி என்னங்க என்னை இந்தத் தரிசன நாளுக்குப் பாண்டி அழைத்துப் போவீங்களா என்று கேட்டேன்.அவர் திகைத்துப் போய் என்ன விளையாடுகிறாயா?இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிப் பயணம் செய்வாய்?அன்னையின் அறைக்குச் செல்லும் படிகளில் எப்படி ஏறுவாய்?எனக்கென்னவோ போக வேண்டுமென்று தோன்றுகிறது.அன்னைமீது பாரத்தைப் போட்டுவிட்டுக் கிளம்பலாம். இவரும் அதிகம் மறுத்துப் பேசாமல் என்னுடன் கிளம்பினார். அன்னையின் அறைக்குள் நுழைய டோக்கன் வாங்கிக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுப் படிகளில் ஏறினேன் அன்னையின் அறையில் ஒரு சாய்வு நாற்காலியில் Sweet Mother படத்தை ஒரு வெள்ளை சாட்டின் துணியில் வைத்திருந்தார்கள்.New Creation என்று சொல்லப்படும் வெண்ணிற சம்பங்கிப் பூக்களைப் பாங்குடன் நேர்த்தியாக அடுக்கியிருந்தார்கள் மிகவும் பரவசத்துடன் அன்னையைத் தரிசித்து விட்டுத் திரும்பியபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அன்னையின் அறையை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்த உடனேயே என்னுடைய நடையில் ஒரு மிகப் பெரிய மாறுதல் தெரிந்தது.காலை விந்தி விந்தி நடக்காமல் வழக்கம்போல் சாதாரணமாக நடப்பதை உணர்ந்தேன்.மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன்.ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த உடனே என் கணவரை நோக்கி இதோ பாருங்களேன்.நான் முன்பு போல் நன்றாக நடக்கிறேன்.என்னால் நன்றாக நடக்க முடிகிறது என்று என்னையறியாமல் கூக்குரலிட்டேன்.என் கணவர் நம்ப முடியாமல் உனக்கு ஏதாவது பிரமையாயிருக்கும் எங்கே மறுபடி நடந்து காட்டு பார்க்கலாம் என்றார்.நானும் அப்பொழுதுதான் புதிதாக நடக்கக் கற்றுக் கொண்ட குழந்தை போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து காட்டினேன்.அப்புறம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கை விவரித்துச் சொல்லவும் வார்த்தைகளில்லை.நமக்கு எந்த நல்லது நடந்தாலும் அன்னையை நன்றியுடன் நினைத்து மனதார வணங்க வேண்டும் என்று கட்டுரையில் படித்தது ஞாபகம் வர மறுபடியும் சமாதிக்குச் சென்று அன்னைக்குக் கண்ணீர் மல்க நன்றி கூறி வணங்கி வந்தோம்.அன்றிலிருந்து அன்னைதான் எங்கள் இஷ்ட தெய்வம்.குல தெய்வம் எல்லாம்.
அடுத்தமுறை அன்னையின் தரிசன நாளன்று என் பெண்ணுக்கு டைபாய்டு காய்ச்சல், இருந்தாலும், அம்மா நீ குழந்தையைப் பார்த்துக் கொள்.நான் உன் அறையைத் தரிசிக்க வருகிறேன் என்று கூறி டோக்கன் க்யூவில் முதல் நாள் முன்னதாகவே சென்று முதல் ஆளாக நின்று மறுநாள் காலை 7 மணிக்கு அறைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்பினேன்.அது மட்டுமில்லை, மாதம் ஒரு முறை பாண்டிக்குச் சென்று வருவேன். நான் எங்கும் தனியாகப் போய் பழக்கமில்லை.பாண்டிக்கு மட்டும் என் கணவர் வந்து அதிகாலையில் பஸ் ஏற்றி விடுவார்.போய்விட்டு மாலைக்குள் திரும்பி விடுவேன்.அது கூட ஒவ்வொரு முறை போகும் போதும் கணவர் என்ன செய்வாரோ குழந்தைகள் நான் இல்லாமல் என்ன கஷ்டப்படுமோ என்ற நினைவுடன் செல்வேன்.அதற்கு என் தோழி ஒருத்தி நீ அன்னையைப் பார்க்கச் செல்லும்போது வீட்டையும் அதிலுள்ளவர்களையும் அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகச் செல்ல வேண்டும்.அவர்களை நினைத்தால்தான் பிரச்னை வரும் என்றாள்.அதிலிருந்து நானும் பாண்டி கிளம்பு முன்பு அம்மா நான் உன்னைப் பார்க்க வருகிறேன் நான் உன்னுடைய பெண்.இவர் உன்னுடைய மாப்பிள்ளை.இந்தக் குழந்தைகள் உன் பேரன் பேத்திகள்.இவர்களைப் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்று சொல்லிவிட்டு நிம்மதியாய் அம்மாவைத் தரிசித்துவிட்டு வருவேன் என்று சொல்லிக் குழந்தை போல் வெகுளித்தனமாய் கலகலவென்று சிரித்தாள்.
இதைக் கேட்ட அர்ச்சனாவுக்கு உடல் சிலிர்த்தது.எத்தனை அற்புதமான அனுபவம் இது.இன்று இந்தத் திருமணத்திற்கு வந்தது வீண் போகவில்லை.நேரம் உபயோகமாகக் கழிந்தது என்ற ஆழ்ந்த திருப்தியுடனும் மனநிறைவுடனும் வீடு திரும்பினாள்.
--------------------
No comments:
Post a Comment