உன்னை ஏமாற்றவே தீய சக்திகள் உலவுகின்றன. எந்த முறையில் அவற்றின் வலையில் நீ விழுவது வழக்கம் என்று நீ கண்டு கொள்.
தீயசக்திகளின் ஏமாற்றத்தை அறிவது பலம்.
கூட்டமான இடங்களில் பிக்பாக்கட்கள் நிறைந்து இருப்பார்கள். கோர்ட், செக்ரடேரியட், பாங்க் போன்ற இடங்களுக்கு அதிக விவரம் தெரியாதவர்களை எதிர்ப்பார்த்து ஏமாற்று பேர்வழிகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். காட்டு வழியே சென்றால் முள் நிறைந்திருக்கும், கவனமாக இருந்தாலே குத்தும்,
கவனமில்லாவிட்டால் காலே போய்விடும் என்பவை வாழ்க்கையில் நிறைந்தவை. பெரிய அதிர்ஷ்டம் திடீரென வந்தவர்களைக் கேட்டால், அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் அசந்தர்ப்பங்கள் வருவதை அவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்வார்கள். அன்னையை அழைத்து, பெரிய நல்ல காரியங்கள் நடக்க இருக்கும் நேரத்தில் க்ஷண நேரத்தில் மாற்று நடந்து காரியம் கெட்டு விடும். பத்து லக்ஷம் தொழில் நடத்தியவருக்கு 4 கோடி வியாபாரம் கூடி வந்தது. தானே வந்தது. அவர்கள் சந்தித்துப் பேசும் நேரம், அவருடைய பார்ட்னர் சமாதிக்குப் போய் காரியம் முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்தார். அந்த நேரம் வலிப்பு வந்த ஒருவர் சமாதியருகே விழுந்துவிட்டதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகக் கார் உதவி தேவை என்று ஒருவர் வந்து கேட்டார். கேட்டவர் தம் கார் ஷெட்டில் 6 கார்கள் வைத்திருக்கிறார். ஷெட் எதிரேயிருக்கிறது. பார்ட்னருக்குத் தயக்கம். எப்படி உதவியில்லை என்பது தயக்கம். கொடுத்தால் வலிப்புள்ளவன் காரில் உட்கார்ந்தால், தீயசக்திகள் நுழைய வழி ஏற்படும். இன்னும் 1 மணி நேரத்தில் வலிய வந்த பெரிய ஆர்டர் கையெழுத்தாக இருக்கிறது. காரைக் கொடுத்தார். ஆர்டர் ரத்தாகிவிட்டது. இது தீய சக்திகள் செய்யும் சோதனை என்றறிந்தும், இல்லை என்று சொல்லத் தயக்கப்பட்டதால் வந்த விளைவு இது.
இந்தச் சோதனைகள் எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றின் அடிப்படை ஒன்று தான். உன்னால் விலக்க முடியாத மனிதர்கள், நிகழ்ச்சிகள் மூலம் வரும். தீய சக்திகள்ஏராளமாக உலவுவதுபோல் அன்னைக்குச் சேவை செய்ய (good being) நல்ல சக்திகளும் உலவுகின்றன. அவையும் இதேபோல் நமக்கு நல்ல சந்தர்ப்பங்களை முக்கியமான நேரங்களில் அளித்தபடியிருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளுதலோ, விலக்குவதோ, நம் பங்கு, நம் மனநிலையைப் பொருத்தது.
சுமார் 35 வருஷத்திற்கு முன் ஓர் இலட்ச ரூபாய் ரொக்கம் வைத்திருப்பவரிடம், அவரிடம் ரொக்கம் இருப்பது தெரியாத ஒருவர், அந்த ரொக்கம் வருஷத்திற்கு இலட்ச ரூபாய் சம்பாதிக்கும் திட்டத்தைப்
பேச்சுவாக்கில் சொன்னார். தாம் அன்னையை ஏற்றுக் கொண்டவுடன், ஆசிரமத்திலிருந்து வந்தவுடன், இது வருகிறது என்று அவர் அறியவில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டார். இரண்டு நாட்களுக்குள் இவரிடம் ரொக்கமும் இருப்பது தெரிந்து, அதை முழுவதும் அழிக்கும் வழியை அழகாக இருவர் வந்து விவரித்தார்கள். பக்தர் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டார். ஒன்று மூலதனம் பத்திரமாகவும், முயற்சியால் பெரிய இலாபம் வரும் வழி. மற்றது ஏமாற்றுப் பேர்வழி சொல்லும் பேராசைக் கதை. மனம் பேராசையை நாடியது.
சர்க்கார் உத்தியோகத்தில் கெஜட் பதவியிலிருந்து ரிடையரானவர்க்கு இவர் இலாக்காத் தலைவருக்கு மேற்பட்டவருடைய உத்தியோகத்தைக் கொடுக்க நண்பர் முன் வந்து, நண்பர் தொலைதூரம் பிரயாணம் செய்து இவரை அழைத்துப் போய் உத்தியோகம் கொடுப்பவரிடம் அறிமுகப்படுத்த வந்தார். ரிடையரானவர் நண்பரை சந்தித்து வேறொரு நாள் போகலாம் என்று கூறினார். வந்தது போய்விட்டது.
ஆயிர ரூபாய் உத்தியோகத்திலுள்ளவருக்கு ரூ. 20,000 மூலதனம் செய்து பெரிய கம்பெனியில் பங்குதாரராக இருக்கும் வாய்ப்பு வந்தது. ஏற்றுக்கொண்டார். 10 வருஷத்தில் தினமும் 20,000 சம்பாதித்தார்.
பிரபலமான பேராசிரியரை, நீதிபதி உத்தியோகம் வேண்டாம் எனப் பல முறை சொல்லிய வக்கீல் M.L.C ஆக நிற்கும்படிக் கேட்டார். பேராசிரியர் இது அன்னையைப் பார்த்தவுடன் கிடைத்தது என்பதை அறியாமல் தயங்கினார். சந்தர்ப்பம் விலகியது. வக்கீல் மத்திய மந்திரியானார். சிபாரிசு செய்தவர் மத்திய மந்திரியாகவும், கவர்னராகவுமானார். இவருக்கு வந்தது, இவர் மீது நல்லெண்ணமுள்ளவருக்குப் போய்விட்டது.
நமக்குக் கோபம் வருமென்றால், நல்ல சந்தர்ப்பத்தில் தீய சக்திகள் கோபத்தைக் கிளப்பும். மானஸ்தனானால் மானப்பிரச்னையைக் கிளப்பும், பேராசைக்காரனானால், ஆசையைக் கிளப்பும், எதை நம்மால் மறுக்க இயலாதோ அதை நம் முன் தீயசக்திகள் வைக்கும். நம் குணத்தைக் கருதாது, ஏன் இந்நிகழ்ச்சி நடக்கிறது என்று நாம் யோசனை செய்தால், அன்னையை மட்டும் நினைத்தால், தீய சக்திகள் விலகும். நம் குணத்திற்கு இடம் கொடுத்தால் அவை வெற்றி பெறும்.
நல்ல காரியங்கள் நடக்கும்பொழுதும், நம்மால் மறுக்க முடியாதவை குறுக்கிடும். அந்த நேரம் நாம் விழிப்பாக இருந்து, ஏன் இந்த நல்ல காரியம் நடக்கிறது என்று சிந்தித்தால், தவறுதல் வாராது.
-திரு. கர்மயோகி அவர்கள் - யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 2 » பகுதி 1
No comments:
Post a Comment