Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Wednesday, January 9, 2013

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 29


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

முறைகள்:

  •  தவறு என்று தெரிந்ததைச் செய்யும் ஆர்வம் கூடாது.
  •  கடந்ததில் ஒரு தவற்றிலிருந்தாவது விலகு.
  •  அபிப்பிராயம் ஒன்றைக் கைவிடு.
  • நல்லபடியாக நடப்பதை ஆழத்திற்குக் கொண்டு போ.
  • உன்னை அழிக்க விரும்புபவன் தரும் பெரிய பரிசை மறுத்துவிடு.
  • ஒரு குறையை அடிபட்டவர் திருப்திப்படும் அளவுக்கு அகற்று.
  • மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்டு.

இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் -2 என்ற நூலின் தொடர்ச்சி. 
----------------------------------------------------------------------------------

முறை:

 தவறு என்று தெரிந்ததைச் செய்யும் ஆர்வம் கூடாது.

முறைக்கான விளக்கம்:
தவறு என்று தெரியாதது வழக்கம். முக்கியமான விஷயத்தில் தெரிந்தவற்றை விரும்பிச் செய்வதுண்டு.

திரும்பத் திரும்பவும் செய்வதுண்டு.

கடைசி காலம்வரை செய்வதுண்டு.

கறுப்புப்பணத்தைக் கையாலும் தொட மறுப்பவர், வெள்ளைப்பணத்தை கறுப்புப்பணமாக மாற்றுகிறார். காரணம் அவசரம். சிறிய விஷயத்தில் அவசரம், பெரிய விஷயத்தில் ஆபத்தைக் கொண்டு வரும்.

அவசரம், சில்லறை ஆசை, பெருமை, ஆடம்பரம் ஆகியவை தவறு எனத் தெரிந்தாலும், மீண்டும் செய்யத் தூண்டுவது. தூண்டுவது தவறன்று; குணம்.

பிறர் இதே விஷயத்தில் அவரை யோசனை கேட்டால், வேண்டாம் என்பார்.

தனக்கு என்றபொழுது தவறாது செய்வார்.

இதற்கு வழியுண்டா?

இதுபோன்ற விஷயத்தில் நாம் பிறருக்குக் கட்டுப்படுதல் இதைத் தடுக்கும்.

நமக்கு முக்கியமான ஒருவரைக் குறிப்பிட்டு இந்த மாதிரி விஷயங்களில் அவர் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும்என்றால் இத்தவறு தடுக்கப்படும்.

 அன்னைக்குக் கட்டுப்படுவது சமர்ப்பணம்.

சமர்ப்பணம் செய்தால் காரியம் தவறாது.

சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படுவது சிறப்பு.

மனிதருக்குக் கட்டுப்படுவது அடுத்தது.

பொறுப்பற்றவர், பிறரை ஏமாற்ற முயல்பவர், வேலையைத் தட்டிக் கழிப்பவர், வேண்டுமென்று தவற்றை நாடுபவர் போன்றவர் இதற்கு விலக்கு.


தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவருக்கு வழியுண்டு.

தான் கட்டுப்படக்கூடாது என்பவர் அவரிஷ்டப்படி நடக்கிறார்.

பிறருக்கு யோசனை சொல்லக்கூடாது, கேட்டால்தான் சொல்லலாம் என்பது இதன் சாரம்.

சுயநலமிக்குத் தவறு என்று தெரிந்தாலும், அதையும்மீறி இலாபம் வரும் என்ற கற்பனையுண்டு.

திருடன் அகப்படமாட்டான் என்றுதான் திருடப்போகிறான்.

20 கோடி இலஞ்சம் பெற்றதை சர்க்கார் எடுத்துக்கொண்டது. 2000 கோடி சம்பாதித்தார்எனில் அவர் இலஞ்சத்தின்மூலம் முன்னேறக்கூடிய ஆத்மாவாகும்.

அவர் சட்டம் மற்றவர்க்குதவாது.

செய்வனவெல்லாம் தில்லுமுல்லு, பொய், அழிச்சாட்டியம், இருந்தும் வெற்றி வருகிறதுஎனில் அது அவர் ஆத்மநிலை.

நமக்கு அவர் நிலை வழிகாட்டியாக இருக்காது.

              --------------------------------------

முறை:

  கடந்ததில் ஒரு தவற்றிலிருந்தாவது விலகு.

முறைக்கான விளக்கம்:

நமக்குத் தெரிந்த தவறுகள் ஏராளம்.

அவற்றுள் ஒன்றை எடுத்து யோசனை செய்து, இந்தத் தவற்றை இனி செய்யக்கூடாதுஎன முடிவு செய்வது இம்முறை. எல்லாத் தவறுகளையும் விலக்க வேண்டும். ஒன்றை விலக்கினாலும் அதற்குரிய பலன் தெரியும்.

Small Scale Industries பெரிய கம்பனிக்கு சப்ளை செய்தால், பெரிய கம்பனி மாமியார்போலப் பழகும்.

1975இல் 11 இலட்ச ரூபாய்க்குத் தொழிலைச் செய்பவர் அப்படிப்பட்ட நிலையிலிருந்தார்.

34 npக்கு செய்யும் partஐ பெரிய கம்பனி 35 npக்கு வாங்குகிறது. அது மட்டுமன்று, ஆர்டரை எப்பொழுது நினைத்தாலும் இரத்து செய்யும்.

SSIக்கு வரவேண்டிய இலாபம் பெரிய கம்பனிக்குப் போகும்.

போட்டி ஏராளமாக இருப்பதால் SSI செய்வதற்கு ஒன்றுமில்லை.

SSI முதலாளிக்கு அன்னை பரிச்சியமானார்; ஆனால் நம்பிக்கையில்லை.

தரமான சரக்கு என்பதால் பெரிய கம்பனிக்கு அடிமையாக ஊழியம் செய்வது தவறுஎன எடுத்துக் கூறியதை முதலாளி ஏற்றார்.

சொந்தமாக ஒரு சரக்கு product செய்தால், அதை மார்க்கட் ஏற்றுக் கொண்டால், 34 npக்கு அடக்கமானால், 50 npக்கு விற்கலாம், 100 npக்கும் மார்க்கட் ஏற்றுக்கொள்ளும் என்பது விளங்கியது.

புது product செய்தார். தரமான இலாபம் வைத்து விற்றார். கம்பனி 11 இலட்ச வியாபாரம் 50 இலட்சமாயிற்று. இது 3 வருஷத்தில் கிடைத்தது.

இது தொழில் செய்த தவறு.

இதுவே அறிவால் செய்த தவறானால் பலன் அதிகம்.

உணர்வின் தவறு மாறினால் மேலும் பலன் வரும்.

தவற்றிலிருந்து விலகுவதைவிட நல்லதைக் கண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் மனம் ஈடுபட்டு முழுமையாகச் செய்தால் வரவேண்டிய முழுப்பலன், முடிவில் வருவதற்குப்பதிலாக முதலிலேயே வரும்.

வாழ்க்கை கடல் போன்றது.

எதைச் செய்தாலும் பலன் உண்டு.

தவற்றை விலக்குவது ஒரு முறை.

நல்லதைச் சேர்ப்பது அடுத்த முறை.

புதியதைக் கண்டுபிடிப்பது நல்ல முறை.

அன்னையை நினைத்துச் செயல்படுவது அருள் முறை.

வாழ்வைப் போற்றுவது வளம் பெறும் வழி.

           ----------------------------------

முறை:

 அபிப்பிராயம் ஒன்றைக் கைவிடு.

முறைக்கான விளக்கம்:


சூட்சுமப் பார்வைக்கு உலகில் உலவும் அபிப்பிராயங்கள் ஊசிபோல் தெரியும்.

மனம் குறுகியது. அது ஒரு பக்கம் மட்டுமே காணவல்லது.

சிந்தனை அதனுள் ஒரு பகுதி.

அபிப்பிராயம் என்பது

ஒரு விஷயத்தைப் பற்றி நம் மனத்தின் முடிவு.

அதனால் இது உண்மையாக இருக்க முடியாது.

மனம் உண்மையை அறிய முடியாதது.

காமராஜ் பெரியவர் என்பது என் அபிப்பிராயம்.

காமராஜ் பெரியவரல்லர் என்பது மற்றோர் அபிப்பிராயம்.

என் அபிப்பிராயம் நல்ல அபிப்பிராயம் எனலாம்.

காமராஜ் எப்படிப்பட்டவர் என்பதை ஆராயும் திறன் என் அபிப்பிராயத்திற்கில்லை. குறுகிய மனம் ஒரு விஷயத்தைப் பற்றி எடுக்கும் முடிவு மேலும் குறுகியதாக இருக்கும். அதில் விசேஷமில்லை.

அபிப்பிராயமே இல்லாத மனம் (open mind) வெள்ளைமனம் எனப்படும். அதற்கு மனத்தின் சக்தியுண்டு.

அபிப்பிராயம் எப்படி உருவாயிற்றுஎன்று கண்டு, அதைக் கரைத்தால், மனம் அபிப்பிராயம் என்ற தளையிலிருந்து விடுபடும்.

ஒரு தளையிலிருந்து விடுபட்டாலும், மனம் அனுபவிக்கும் சுதந்திரம் பெரியது.

ஓர் அபிப்பிராயம் விலகினாலும், பிரச்சினை உடனே விலகும்.

ஒருவர் முதுகில் cept கட்டி போன்ற உருண்டை 5 வருஷமாக இருந்தது.

டாக்டர் கண்ணில் அது பட்டவுடன் அதை அறுத்துவிடச் சொன்னார்.

அவர் தமக்குத் தெரிந்த அன்பரிடம் இதைக் கூறினார்.

அன்பர் 1 வாரம் பொறு என்றார்.

மறுநாள் அது தானே உடைந்துவிட்டது. டாக்டர் அறுத்து எடுப்பார் என்ற அபிப்பிராயம் மனத்திலிருந்து விலகியவுடன், கட்டி உடைந்துவிட்டது.

விஷயம் எதுவானாலும், அதில் பிரச்சினை எழுந்தால், அதைப் பற்றி நமக்குள்ள அபிப்பிராயங்களை விலக்கினால், பிரச்சினை தீரும்.

பிரச்சினையே நம் அபிப்பிராயம்.

அபிப்பிராயத்தை விலக்குவது சிரமம்.

அன்னையை நம்பியவருக்கு அதை விலக்க முடியும்.

Pride & Prejudiceஇல் எலிசபெத் தன்அபிப்பிராயத்தை மாற்ற படும் போராட்டம் எவ்வளவுஎன நாம் கண்டோம். டார்சிக்கு அவள்மீது காதல் எழுந்தாலும், எலிசபெத் அபிப்பிராயம் மாறமறுக்கிறது. பெம்பர்லிதான் அதை மாற்றியது.

                --------------------------------

முறை:

  நல்லபடியாக நடப்பதை ஆழத்திற்குக் கொண்டு போ.

முறைக்கான விளக்கம்:


எல்லோரிடமும் நாம் நல்லபடியாகப் பழகுகிறோம்என்று நமக்குத் தெரியும், அனைவரும் ஏற்கின்றனர். அவ்வகையில் எந்த ஆபீஸுக்குப் போனாலும், எந்த விசேஷங்களுக்குப் போனாலும் நமக்கு வேலை நடக்கிறது, நம்மைச் சுற்றிப் பலர் சூழ்ந்து பிரியமாக விசாரிக்கிறார்கள் எனில், அங்கு நாம் மேலும் செய்யக்கூடியதுண்டு.

இதனுள் உள்ள தத்துவங்கள் சில:

1) இது மேலெழுந்தவாரியான பழக்கம். நிலைமை உயர்ந்தபொழுது நம் பழக்கமும் உயராவிட்டால், இது எதிராக மாறும் வாய்ப்புண்டு.

2) இந்த நல்ல பழக்கத்தை ஆழத்திற்குக் கொண்டுபோனால், அன்னை நம்மை MLAயிலிருந்து மந்திரியாக மாற்றுவதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவருவார்.

3) இந்த நல்ல பழக்கம் ஆழத்தில் எதிரான பழக்கமிருப்பதால் ஏற்பட்டதாகும்.

அனைவரும் நம் பழக்கத்தை ஏற்கும்பொழுது, நமக்கு மட்டும் இது நம் பழக்கமன்று. உள்ளே நான் எதிராக இருக்கிறேன்எனத் தெரியும். சமயத்தில் நாம் நம் உண்மையை மறந்து, பிறர் சொல்வதையே ஏற்றுக் கொள்வோம். அதைச் செய்தால், அத்துடன் எல்லாம் முடிந்துவிடும்.

உள்ளே உள்ள பழக்கத்தை' நாம் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். பிரமோஷன் வந்தவரைப் பாராட்டும்பொழுது நம்மனம் அதை வெறுத்துக் கரித்துக் கொட்டும். வாழ்க்கை அதைக் காட்டத் தவறாது. அந்த நேரம் ஒருவர் கதவைச் சாத்துவார். பாராட்டுப் பெறுபவர் விரல் நசுங்கும். இது நம் எண்ணத்தைப்' பிரதிபலிக்கும். வராண்டா வழியே பேசிக்கொண்டு போகின்றவர்கள் "இத்தனையும் வேஷம், நம்பாதே'' என அவர்கட்குள் பேசிக்கொள்வார்கள். அது நம்மனநிலையைக் காட்டும்.
ஒவ்வொரு தரம் பிறர் நம்மைப் பாராட்டும்பொழுது உள்ளேயுள்ளதை நினைவுபடுத்திச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் உதட்டளவிலிருந்தால் வருஷம் 20 ஆனாலும் எதுவும் நகராது. உண்மையான சமர்ப்பணம் உடலையே உலுக்கும். தொடர்ந்து செய்தால் சில நாட்களில் உள்ளே சந்தோஷம் வரும். அதே நேரம் அன்னை செயல்படுவார்.
அப்படி அன்னை செயல்படும்பொழுது கம்பனி சேல்ஸ்மேன் MLAஆகி, அடுத்த பீரியடில் மந்திரியானதுபோலிருக்கும்.
டிகிரியும் எடுக்காதவருக்குப் பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர் கிடைக்கும்.

ஆழம் அற்புதம். அற்புதம் செயல்பட அன்னை கண்ணில் நம் ஆழம் பட வேண்டும்.

ஆழத்தின் உண்மை தவறாது, அன்னை தவறமாட்டார்.

அற்புதம் வரக்காத்திருப்பது தவறாது. அதற்குத் தவறத் தெரியாது.

நம் உண்மை தவறக்கூடாது.

                     --------------------------------

முறை:

 உன்னை அழிக்க விரும்புபவன் தரும் பெரிய பரிசை மறுத்துவிடு.

முறைக்கான விளக்கம்:


உன் சொத்தைப்போல 10 மடங்கு சொத்தை வலிய உனக்குத்தர அன்புடன் ஒருவர் கூறுவதை எப்படி மறுக்க முடியும்?

உனக்கு வரஇருக்கும் உலகப்புகழை அச்சொத்து அழிக்கும்என்று தெரிந்தால் அதைப்பெறலாமா? பெற முடியுமா?

அதை ஏற்க மறுக்கும் எண்ணம் அருள்.

வாழ்க்கையில் இதை மனிதன் தெரிந்து செய்வது குறைவு.

தானே நடப்பதைத் தலைவிதிஎனக் கொள்கிறான்.

தகுதிக்கு மேல் வரும் பரிசை, அதிர்ஷ்டம்என ஏற்பது வழக்கம்.

பெறும்பொழுது மனத்தைச் சோதனை செய்தால் பின்னால் வரப்போகும் பெரிய நஷ்டத்தை மனம் தன்உணர்ச்சியால் வெல்லும். அதேபோல் அன்னையிடமிருந்து வருவதைப் பெரும்பாலோர் அடக்கமாக மறுத்துவிடுவர். அதை ஏற்பது ஆத்ம விளக்கம் தரும்.

மனிதன் மறுக்க வேண்டியதை ஏற்பான்; ஏற்க வேண்டியதை மறுப்பான்.

பிரதம மந்திரி பதவி, முதலமைச்சர் பதவி சிறிய மனிதர்களை அழித்தது உண்டு. பாரம் தாங்கும் பர்சனாலிட்டி வேண்டும்.

வாழ்வில் இப்படி எவரும் நடப்பார்என எதிர்பார்க்க முடியாது.

தகப்பனார் மத்திய மந்திரியாக இருந்தவர். மகன் முனிசிபல் சேர்மனாக ஆசைப்பட்டு, பிரம்மப்பிரயத்தனப்பட்டு ஜெயித்தான். கவுன்சிலில் நடைமுறையில் அவனுக்குக் கேவலமான திட்டு கிடைத்தது. ராஜினாமா செய்தான்.

கொடுத்தால் பெறக்கூடாததை இந்த அப்பாவி தேடிக் கண்டுபிடித்து எதிர்காலத்தை நாசம் செய்து கொண்டான்.

இந்தநிலைமை இலட்சியவாதிக்கு வருவதற்கும், சாமான்யனுக்கு வருவதற்கும், ஆத்ம விளக்கம் பெற்றவனுக்கு வருவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளுதல் பலன் தரும்.

ஒரு படி உயர வாழ்நாள் முழுவதும் காத்திருக்கவேண்டிய உயர்வை 6 படி உயர்த்தித் தேடிவந்து வாழ்வு தருகிறது. அது இலட்சியவாதியின் நிலை.

சாமான்யனுக்கு 100 மடங்கு சொத்தாக வருகிறது.

இறைவனே சாவித்திரிக்கு அதுபோன்ற பெரிய பரிசை சொர்க்கலோக வாழ்வாக அளித்தார். அவள் மறுத்துவிட்டாள்.

இது எல்லோருக்கும் நடப்பதில்லை.

அடுத்த லோக அற்புதம் ஆண்டவனால் அனுமதிக்கப்பட்டபின், வாழ்வு

அப்படிப்பட்டவர்க்கு இதை அளிக்கும்.

சிறியவர், பெரியவர், நல்லவர், கெட்டவர், அனைவருக்கும் சட்டம் ஒன்றே.

             ----------------------------------

முறை:

 ஒரு குறையை அடிபட்டவர் திருப்திப்படும் அளவுக்கு அகற்று.

முறைக்கான விளக்கம்:


ஒரு குறை நமக்குக் குறையெனத் தெரிய அக்காரியம் கெட்ட பிறகே தெரியவரும். பிரமோஷன் தகுதியுள்ளவரை விலக்கி, தகுதியற்றவருக்குக் கொடுத்தது மனத்தில் படாது. காரியம் கெட்டுப்போய், தகுதியற்றவன் நிலை தடுமாறும்பொழுதுதான் அது தெரியும். ஒரு பையனைத்தான் படிக்க வைக்க முடியும் என்றால், படிப்பு வரும் பையனை விட்டு, நமக்கு வேண்டிய பையனைக் காலேஜில் சேர்த்து, அவன் முடிக்காமல் வந்தபின்தான் தவறு தெரியும். அப்பொழுது அது தெரியாதவருண்டு. அவனுக்குத் திசை சரியில்லை, இல்லாவிட்டால் டிகிரியுடன் வந்திருப்பான் என்பார்கள். புத்திசாலிப் பையனைப் படிக்க வைக்கவில்லை. அவன் சர்க்காரில் குமாஸ்தாவாக இருக்கிறான். படிக்க வைத்தவனுக்கு படிப்பு வரவில்லை. வருடம் 4 போயிற்று. இந்த நிலையில் குறையை ஒருவர் உணர்ந்தால், செய்வதற்கு ஒன்றில்லை. அடிபட்ட மகனுக்கு, இப்பொழுதாவது என்னைத் தகப்பனார் நினைக்கிறாரே' என்று ஆறுதல் வரும்.

அன்பர்கட்கு முழுநிலைமையும் சீரடையும்; சற்று உபரியும் வரும்.

அதற்குரிய முக்கிய நிபந்தனை: தவற்றை மனம் உணர வேண்டும். தவற்றைச் செய்தவர் உணர்ந்தால் நஷ்டப்பட்டவருக்கு ஆறுதல் வரும். நஷ்டப்பட்டவர் மனம் திருப்திப்படும் அளவு தவறு செய்தவர் உணருவது - சொல்லை விலக்கி, செயலையும் விலக்கி, மனத்தால் மாறினால் - sincerity உண்மை. அந்த உண்மை பூரணம் பெறும்வரை மனம் அமைதியாக இருக்கும். பலன் வாராது. 

பூரணமான அதே நேரம், நிலைமை மாறும். சர்க்காரில் குமாஸ்தாவாக வேலை செய்பவனுக்கு special selection புதுச் சட்டப்படி டிகிரி எடுத்திருந்தாலும் எது கிடைக்காதோ அந்த வேலை தேடிவரும். இது தவறாது நடக்கும். ஆசிரியராக ஓய்வு பெற்றவர்க்கு பாங்க் ஏஜெண்ட் வேலை தேடிவந்தது. முதல் வருஷம் கல்லூரிப் பரிட்சையில் பெயிலானவர் டெபுடி கலெக்டர் ஆனார். அவை வாழ்வில் நடந்தவை. அன்னையிடம் அன்னை முத்திரையுடன் நடப்பவை நடந்தபின்னும் நம்ப முடியாது.

குறையைக் குறையாக உணர்வது reversal தலைகீழ் மாற்றம்.

அறிவு மனநிம்மதி தரும்.
உணர்வு சூழலை மாற்றும்.
அடிபட்டவர் மனம் திருப்திப்படுவது சூழல் நிலைமையை மாற்றும்
அளவுக்குத் திறன் பெறும்.
மனம் மாறும் நேரமும், நிலைமை மாறும் நேரமும் ஒன்றாக இருக்கும்.
தெரியாமல் செய்த தவற்றால் ஏற்பட்ட குறை ஒன்று.

வேண்டுமென்றே செய்த தவற்றால் ஏற்பட்டது வேறு குறை.
மனமாற்றம் செயலுக்குத் தகுந்தாற்போலிருக்க வேண்டும்.
அப்படி மாறும் நேரம் அற்புதம் நிகழும் தருணம்.

மனத்தின் ஆழ்ந்த உணர்வு, சூழல் செயலை மாற்றும் திறனுடையது.
அவை சந்திக்குமிடம் சூட்சும வாழ்வு.


 --------------------------------------

முறை:

அழிச்சாட்டியத்தை ஆதரிக்க வேண்டும்.

முறைக்கான விளக்கம்:


இந்த முறை வாழ்க்கைக்குரியதன்று. வாழ்வைக் கடந்தது. இவை வாழ்வில் வரக்கூடாது. வந்தால் அதற்கு முடிவில்லை. அதற்கும் அன்னையிடம் முடிவுண்டு என்பது இம்முறை.

தமிழ்நாட்டிலேயே முதன்மையான செல்வர் 1960இல் "நான் எதுவும் சம்பாதிக்கவில்லை. தகப்பனார் கொடுத்ததைக் காப்பாற்றினேன்'' என்றார். அவர் மகன் உலகில் ஒரு பெருநகரம் தவறாமல் ரேஸ் நடத்துகிறான்.

50ஆம் வயதில் 6 பிள்ளைகளை விட்டுவிட்டு 3 பிள்ளைகள் உள்ள பெரிய மனிதன் மனைவியைத் திருமணம் செய்து பகிரங்கமாக வாழ்கிறார் ஒருவர்.

பெரிய முழுச் சொத்தையும் அதிவிரைவில் அழித்து ஆனந்தப்படுகிறான் ஒரு சிறுவன்.

எந்த எந்தக் குற்றங்களைச் செய்யக்கூடாதோ, அத்தனையும் கணவர் ஒன்றுவிடாமல் செய்து பெருமைப்படுகிறார்.

இதுபோன்ற செய்திகளை 50 ஆண்டில் ஒன்று கேள்விப்படுகிறோம்.

அவற்றைத் தீர்க்க முடியாது.

அவர் செயல் அருணகிரிநாதர் செயல் போன்றது.

இப்படிப்பட்ட சிக்கலில் உள்ளவர் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்மூலம் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்தால் முதற்காரியமாக நமக்கு இது தவறு. ஆண்டவனுக்கு இது தவறில்லை' என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் அவர் செய்வதை மனதாலும் வெறுக்காமல், ஏற்று ஆதரிக்க வேண்டும். அதே நிமிஷம் மனம் மாறும், நிலைமை மாறும், அனைத்தும் மாறும். என்அனுபவத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் பல எழுந்துள்ளன. அவை எனதுவாழ்வுக்குள் ஏற்பட்டவையல்ல. என் பார்வையில், பொறுப்புக்கு வெளியில் எழுந்தவை. ஒரு விஷயத்தில் நான் அதை ஏற்று மனதால் ஆமோதித்துக் கடிதம் எழுதினேன். பதிலுக்கு வாழ்க்கையை தலைகீழே மாற்றி, வாழ்வின் பாதைக்குள் வந்துவிட்டதாகச் செய்தி வந்தது. நான் ஏற்றவை அத்தனையும் சிறிது காலம் அல்லது நீண்ட நாளில் மாறிவிட்டன. பிறருக்குக் கொடுமை செய்வதையே ஆனந்த அனுபவமானவர் உறவை - தேவையில்லாததை - யோகப்பயிற்சியாக ஏற்றேன். பலன் உடனே தெரிந்தாலும், முழுப்பலன் எழ 14 வருஷமாயிற்று. அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் உலகம் வியக்கத்தக்க மாற்றம்.

இதையும் கடந்த பொய்யின் இருள் உண்டு.

அதை mean, perverse. falsehood கயமையான குதர்க்கத்தின் இருண்ட பொய் எனலாம்.
அவை வாழ்வில் வருவதில்லை. யோகத்தில் ஒரு கட்டத்தில் வரும்.
அவர்கள் தங்களை அறிவார்கள். பிறரைப் பொறி வைத்துப் பிடித்து கொடுமைப்படுத்துவார்கள். அவர்களை மாற்றுவது யார் கடமையும் இல்லை. அவர் பிடியில் சிக்கியவர் விடுதலை பெறும் வழி அவரை மனம் ஆமோதித்து ஏற்பது.
அநியாயம் ஆண்டவன் நியாயம் என்பது இச்சட்டம்.

             -------------------------------


முறை:

 மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்டு.

முறைக்கான விளக்கம்:



  • பெண்ணுக்குத் திருமணம் செய்தால் அவள் வருமானம் போய்விடும் என்று திருமணம் செய்யாமலிருப்பது;

  • நேருவை இந்த நாட்டில் பேர், ஊர் தெரியாத தலைவர்எனப் பேசுவது; 

  • மகாத்மா காந்தியை 1945இல் சிலர் பின்பற்றினர் என்பது;

  • மகன் முதல் மார்க் வாங்கியபொழுது இக்காலத்தில் மார்க்கை அள்ளிப் போடுகிறார்கள்' என்பது; 

  • ரூ.200 சம்பாதிக்கும் தகப்பனாரிடம் 1960இல் தான்பெற்ற 62 ரூபாய் சம்பளத்தில் 1 ரூபாயும் எடுத்துக்கொள்ளாமல் கொண்டுவந்து கொடுத்ததால், அப்படி வை' என்று சொல்லி 5 மணி நேரம் அதைத் தொடாமலிருப்பது;

  •  ஊரிலேயே பெரிய சொத்து சம்பாதித்தவரை அவருக்கு வருமானமில்லை, சும்மா உட்கார்ந்திருக்கிறார்' 

 -     என்பது அனைவரும் காணமுடியாத அற்புதங்கள். 

இவை மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத குற்றங்கள்.

வாழ்க்கையில் இதற்குப் பொதுவாகக் கிடைக்கும் பலன், பெண் தானே திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள்; உள்ள பெரிய பதவி அழிவது (சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தபொழுது நேருவை அப்படிப் பேசினார். இங்கிலாந்தின் பிரதமர் அன்று உலகப் பிரதமர். அவர் போரில் நாட்டையும், உலகையும் காப்பாற்றினார். போர் முடியும்முன் பதவி போய் விட்டது); காந்திஜீயை அப்படிப் பேசியவர் அல்பாயுசாகப் போனார்; தகப்பனார் அலட்சியம் செய்த சம்பளம் அடுத்த மாதத்திலிருந்து அவருக்கு வாராது; சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனக் கூறியவருக்கு சாப்பாடில்லாமல் சும்மா உட்காரும்நிலை தண்டனையாக வரும்; மன்னிக்க முடியாதவையென்னும் இவை வாழ்வின் வண்ணங்கள். நாம் செய்யக்கூடியவை அவற்றைவிட்டு விலகலாம்; ஆத்திரமாக எதிர்த்து சண்டையிடலாம்; நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அவை சரி. ஏற்பதும், பாராட்டுவதும் தேவையில்லை. இவை நமக்கு ஏன் வந்தனஎன அன்னை நோக்கத்தில் கண்டால், இப்படிப்பட்டவருள்ளும் அன்னை வசிக்கிறார்; அவரைக் கண்டறிவது அன்னையின் அதியுயர்வைக் காண வாய்ப்பு என ஓர் அன்பர் புரிந்துகொண்டால், இது அவருக்குரிய முறை.

அப்படிச் செய்த பெண்தான் தன்இஷ்டப்படி திருமணம் செய்து, கடைசி வரைப் பெற்றோரைக் காப்பாற்றினாள்.
அலட்சியம் செய்யப்பட்ட மகன் தகப்பனாரைக் கடைசிவரைக் காப்பாற்றியதுடன், அவர் ஆசை - கற்பனைக்கெட்டாத ஆசையையும் பூர்த்திசெய்தார்.

சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனப் பேசிய உத்தமருக்கு ஒரு பக்கம் வருமானம் 15 மடங்கு அதிகரித்தது; செல்வாக்கு பெருகியது. உலகில் உள்ள அவ்வளவு வியாதிகளும் ஒன்று தவறாமல் வந்து பெரும்பாலும் ஆஸ்பத்திரி, மருந்து, குறை சொல்வதுடன் வாழ்கிறார்.

குணம் வியாதியாகப் பரிமளிக்கும்என இவர் வாழ்வு நிரூபிக்கிறது.

அன்னை அவற்றுள்ளும், அவற்றைக் கடந்தும் தெரிவார். அதைக் காண்பது யோக பாக்கியம். இப்படிப்பட்டவரிடம் நல்லபேர்என எவரும் பெற்றிருக்கமாட்டார்கள். அதை ஒரு நண்பர்பெற முனைந்தார், பெற்றார். அவர் வாழ்வு பரிமளித்தது. மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்ட பரந்தமனம் தேவை. பரந்தமனம் பல கோணங்களிலும் வரும்.
.............................தொடரும்.

Read the previous Part of this Series : (Yoga Sakthi in our Life) யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Sri. Karmayogi Avarkal - Part 28


Thanks,
AuroMere Meditation Center,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்




         

No comments:

Post a Comment

Followers