நமது தவற்றை உணர்வதன் மூலமும், மனநிலையை உயர்த்துவதன் மூலமும், அன்னையிடம், நம் பிரார்த்தனை பலிக்கும்.
வாழ்வில் முரணானவை ஆயிரம். அவற்றை நாம் சந்திக்கும்பொழுது, நாம் ஒரு பகுதியுடன் சேராமல், மனத்தை உயர்த்தி, முழுமையை நாடினால், எதிர்ப்பு அடங்கும். இல்லறமும், துறவறமும் எதிர் முனைகள். ஆனால் இரண்டும் சேர்ந்தது வாழ்வு. இல்லறத்திலிருந்து துறவறத்தைத் எதிர்க்காமல் -- துறவறத்திலிருந்து இல்லறத்தைத் துச்சமாக நினைக்காமல் -- மனநிலையை வாழ்வின் முழுநிலைக்கு உயர்த்தினால், துறவறத்தின் தூய்மை இல்லறத்தின் வளத்திற்கு வந்து வாழ்வு வளம் நிறைந்த தூய்மையுடையதாகும். முரண்பாடு விலகும்.
பிறர் நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்தால் அவர்கள் மதிப்பதில்லை. இதன் பின்னால் வேறொரு உண்மையுண்டு. பிறர் மதிப்பதில்லை என்பது நடைமுறை நிகழ்ச்சி. பார்வைக்கு அது உண்மை. நாம் மனதைச் சோதனை செய்தால் அங்கு வேறோர் உண்மையிருக்கும். என்னை அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று நாம் ஆழ்ந்து நம்புகிறோம் என்று தெரியும். அது தெரிந்தால் அதன் பிரதிபலிப்பே பிறர் நடைமுறை என அறிய முடியும். நம் எண்ணம் ஒரு பகுதி, அவர்கள் நடத்தை மறுபகுதி. இவற்றுள் எதையும் வலியுறுத்தாமல், இவையிரண்டும் நம் உறவின் இருபகுதிகள் என நினைத்தால் மனத்தின் நிலை உயருகிறது. அடுத்தவர் மரியாதையோடு பழகுகிறார் என்பதே உண்மை.
சத் + அசத் = பிரம்மம் என்பது தத்துவம்.
நம் நடைமுறை வாழ்வில்,
இரவு+பகல்=நாள்
சொர்க்கம்+நரகம்=மோட்சம்
வெற்றி+தோல்வி=காரியம்
மரியாதை+அவமானம்=வாழ்வு
நாம் பகுதியிலிருந்து முழுமைக்குப் போனால் மனிதவாழ்வு யோகவாழ்வாகிறது.
வாழ்வில் எல்லா முரண்பாடுகளையும் கடக்கும் மனநிலை மனமாற்றத்திற்குரிய உண்மை நிலை.
பக்தர் ஒருவர் 650ரூபாய் பணத்தைத் தொலைத்து விட்டார். இரண்டு நாள் தேடியாயிற்று. பணம் வீட்டை விட்டுப் போக வழியில்லை. ஆனால் கிடைக்கவில்லை. உடனே தாம் செய்த வேறொரு தவறு நினைவுக்கு வந்தது. அந்தத் தவற்றைத் திருத்தாமல் பிரார்த்தனை எப்படி பலிக்கும் என்று தோன்றியது. சில வருஷங்கட்கு முன் தாம் ரூ.150 தொலைத்தபொழுது, சமாதி தரிசனம், ஸ்ரீ அரவிந்தர் அறை தரிசனம், 3 நாள் இடைவிடாத பிரார்த்தனை செய்தும் பலிக்கவில்லை. அப்பொழுது பணம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். ஆனால் பர்ஸை ஜன்னல் பக்கத்தில் வைத்ததால் தொலைந்து விட்டது. ஆனால் தாம் தவறு செய்தவர் என்பதை அவர் மனம் அன்று ஏற்கவில்லை.
தினமும் வைக்கும் இடம்தானே. இத்தனை நாள் தொலையாதது இன்று தொலைந்தால் தவறு என்னுடையது எப்படியாகும் என்று நினைக்கும்வரை எதுவும் பலிக்கவில்லை. அத்தவற்றை அன்று உணர்ந்தவுடன் பர்ஸ் கிடைத்தது என்று, இன்று நினைவுக்கு வந்தது. எனவே தம் மனம் நினைவு படுத்திய தவற்றை உடனே திருத்திக் கொண்டார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. எனவே எதுவும் புரியவில்லை. தவற்றைத் திருத்தினால் பிரார்த்தனை பலிக்கவேண்டும். ஏன் பலிக்கவில்லை? என விளங்கவில்லை.
இதே நிலைமையில் மற்ற இருவர் செய்வது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு எல்லாம் பலிக்கின்றன. அன்னையிடம் சொன்னேன். பலித்தது என்பார்கள். அம்முறையைக் கையாளலாம் என நினைத்து, எனக்கு எதுவும் புரியவில்லை. பணம் தொலைந்து விட்டது. அன்னையே நீங்கள் அதைத் தேடிக் கொடுங்கள்' என்று பிரார்த்தனை செய்தார். 10 நிமிஷம் கழித்து கைப்பையைத் திறந்தார். இதுவரை அதில் பணத்தைப் பலமுறை தேடியாயிற்று. இப்பொழுது பணம் அதில் இருந்தது. கிடைத்த பின்னும் எதுவும் புரியவில்லை, கிடைத்தது புரிகிறது. எப்படி என்பது புரியவில்லை.
தன் தவற்றை உணர முடியாத அறியாமை மூலம் அன்னை பலிக்க முடியாது. உணர்ந்தவுடன் முதல் முறை பலித்தது.
இரண்டாம் முறை மனம் 'தவற்றைத் திருத்தினால் பர்ஸ் கிடைக்கும்''என்ற சட்டத்தை நம்புகிறது. கடந்த வருஷங்களில் தன் மனம் வளர்ந்துவிட்டது. இனி சட்டத்தையும் நம்பக் கூடாது. சட்டத்தை நம்பாமல், அன்னையை நம்புவது மேல் என்று தன்னையறியாமல் தெரிந்தவுடன், அன்னை செயல்பட்டார்.
தவற்றைத் தவறு என ஏற்கமாட்டேன் என்பது ஒரு நிலை.
தவற்றை உணர்வது அடுத்த நிலை.
சட்டத்தை நம்புவது அதனால் ஏற்பட்ட மனநிலை.
சட்டத்தை நம்புவதைவிட அன்னையை நேரடியாக நம்புவது அதை விட உயர்ந்த நிலை.
-நூறு பேர்கள் முதல் பாகம் - திரு. கர்மயோகி அவர்கள்
|
Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India
Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, எல்லாம் தரும் அன்னை, ஸ்ரீ அன்னை , ஸ்ரீ அரவிந்தர்
|
No comments:
Post a Comment