ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 8
அன்பர்களுக்கு, இயற்கை சீற்றங்களில் இருந்து, ஸ்ரீ அன்னை எவ்வாறு பாதுகாப்பு தருகிறார்?
இயற்கை சீற்றங்களான அசுரச் சூறாவளி, சுனாமி, இவைகளில் இருந்து விலங்குகளுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு அதனுள் மறைந்துள்ள ஞானம் கொடுக்கிறது. அவைகள் கேட்டுப் பெறுவதில்லை. ஆனால் மனிதன் பாதுகாப்பு வேண்டிப் பெறவேண்டும். அதை human choice என்று கூறுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் அன்பர்களுக்கு அன்னையின் பாதுகாப்பு எவ்வாறு கிடைக்கிறது என்பதை கீழ்க்கண்ட வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம்.
அசுரச் சூறாவளி:
இந்தியப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சொற்பொழிவாற்ற பல வருடங்களாகச் சென்று வருவார். அதுபோன்று ஒரு முறை சென்றபோது அமெரிக்க நண்பரான கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்க அவர் இருந்த ஊருக்குப் போனார். அவருடன் இரு நாட்கள் தங்கினார். மறுநாள் திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு 100 மைல்களுக்கு அப்பால் உள்ள கல்லூரியில் சொற்பொழிவு. ஞாயிறு மாலை புறப்பட்ட அவரை விஞ்ஞானி நண்பர் மறுநாள் காலையில் போகலாம் எனக் கேட்டுக்கொண்டதை மறுத்து, பேராசிரியர் புறப்பட்டுச் சென்றார். திங்கள்கிழமை காலை 8.00 மணிக்குச் செய்தியில் முதல் நாள் அவர் தங்கி இருந்த பகுதியில் சூறாவளியால் சேதம் என்று அறிவித்தார்கள். பேராசிரியர் நண்பரைப் போனில் கூப்பிட்டு விசாரிக்க நினைத்த அதே நேரத்தில் நண்பரிடம் இருந்து போன் வந்தது. விஞ்ஞானி நண்பர் போனில் பேசினார். தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஆபத்து இல்லை என்றார். பேராசிரியருக்கு நிம்மதி ஏற்பட்டது. தாம் முன்னிரு தினங்களும் நண்பர் வீட்டில் தங்கியிருந்த பொழுது அன்னை படத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தது நினைவுக்கு வந்தது. அன்னைக்கு நன்றி தெரிவித்து விட்டு சொற்பொழிவு ஆற்றப்போனார். அது முடிந்தவுடன் நேரே நண்பர் தங்கிய இடத்திற்குச் சென்றார். 90 வீடுகள் மட்டுமே கொண்ட செல்வர் காலனி வீடுகள் தரைமட்டமாக இருந்தன. மரங்களைக் காணவில்லை; எங்கும் காற்றின் அமர்க்களம்; உயிர்ச்சேதம் அதிகம். நண்பருடைய மாடிவீடு மட்டும் நிலைகுலையாமல், ஆடாமல், அசையாமல் இருப்பதைக் கண்ட பேராசிரியர் ஸ்தம்பித்துப் போனார். அவர்கள் வீடும் காரும் அருகில் உள்ள 150 அடி மரமும் சேதம் அடையவில்லை. மரத்தின் ஒரு கிளை உடைந்து காரின் கண்ணாடிக்குச் சிறியசேதம். பேராசிரியரை விஞ்ஞானி நண்பர் மீண்டும் மீண்டும் கேட்டார், "எப்படி நான் காப்பாற்றப்பட்டேன்?'' பேராசிரியர் அன்னையின் அற்புதங்களை 20 ஆண்டுகளாகப் பலவகைகளில் பார்த்திருக்கிறார். 'இப்பொழுது நடந்தது நம்பமுடியாத ஒன்று. நண்பரின் வீடும், அதன் உறுப்பினர்களும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டார்கள் எனில் அன்னையின் அருள் அவருடைய வீட்டை இரும்புக்கவசமாகச் சூழ்ந்திருக்கவேண்டும்' என்றெல்லாம் நினைத்த பேராசிரியர், "அன்னையின் படம் 2 நாள் உங்கள் வீட்டில் இருந்தது; அதனுடைய பலன்தான் இது'' என்றார்.
- அன்னையின் படம், பேராசிரியர் தியானம் இவை அன்னைச் சூழலை அங்குக் கொண்டு வந்தது. அன்னைச் சூழல் அன்னையின் அருள். பேராசிரியர் 20 ஆண்டுகளாக அன்னையின் அன்பர்.
- அவருக்குச் சூறாவளியின் அசுரத்தனம் தெரியாமல் இருக்க அந்த இடத்தைவிட்டு சூறாவளி வரும் முன் அகற்றப்படுகிறார்.
- அன்னை அன்பர்களை அன்னை காப்பாற்றுவதில் எப்பொழுதும் ஓர் உயர் தனிச்சிறப்பு இருக்கும்.
சுனாமி:
சுனாமி பேரிடர் வந்தபோது கடற்கரையில் அமர்ந்திருந்தார் ஒருவர். அவர் எதிர்பாராதவகையில் பேரலைகளால் தாக்கப்பட்டார். தன்னால் எதுவும் செய்யமுடியாத நேரம் - உண்மையில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்த நேரம் அன்னையை அழைத்தார். க்ஷண நேரத்தில் ஒரு பேரலை வந்து கடற்கரையில் அவரைச் சேர்த்தது. பிறகு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருக்கிறார். அவர் அன்னைச் சூழலில் இருப்பவர்; அன்னையை மறந்துவிட்டார். "நீங்கள் எல்லாம் என்னை மறந்துவிட்ட போதிலும் உங்கள் வாழ்வினுள் நானிருப்பேன்'' என்று அன்னை கூறியிருக்கிறார். அன்பர் அன்னையை மறந்திருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றிய அன்னைக்கு நன்றிகூற மறக்கவில்லை. எல்லாம் இனி அன்னைதான் அவருக்கு.
வேளாங்கண்ணி டூர்:
டிசம்பர் 26ஆம் தேதி விடுமுறையில் தம் நான்கு நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு டூர் சென்றார். அவரும் நான்கு நண்பர்களும் வேளாங்கண்ணிக் கடற்கரையில் சுனாமி பேரலைகளால் பிரிந்தனர். ஒருவர் மட்டும் பேரலையால் ஒரு மேட்டிற்குத் தூக்கி எறியப்பட்டார். கண் விழித்துப் பார்க்கையில் நண்பர்களைக் காணவில்லை. அவர் மட்டும் காப்பாற்றப்பட்டதற்கு ஏதோ ஒரு விசேஷம் இருக்கவேண்டும் அல்லவா? அவர் அன்னை அன்பர் தோட்டத்தில் வேலை செய்பவர். அன்பருக்காக அன்னைக்கு வேண்டிய மலர்களை அவர் தோட்டத்திலிருந்து பறித்துக் கொடுப்பவர். அவர் அறியாமல் செய்தது அன்னைக்கு மலர்ச் சேவை.
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது:
அன்பர் தோட்டத்தில் வேலை செய்வது, அன்னையின் சூழலில் தங்கியிருப்பது, அவர் அன்னையை அறியாவிட்டாலும் அன்னையின் சூழல் அருளாக வந்து காப்பாற்றியது.
இந்த சுனாமி பேரலைகளால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கண்மூடியாக இல்லாமல் விழிப்பாய் இருந்திருந்தால் இவர்களும் நிச்சயமாகப் பாதுகாக்கப்பட்டு இருப்பார்கள்.
- ஸ்ரீ கர்மயோகி அவர்கள்
மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2007 » 07.சுனாமி - பறவைகளின் நுண்ணறிவு
Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, |
No comments:
Post a Comment