Click here to read in image format
ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 2 ஆரோவில் நகரம் ஆசிரமத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. ஆன்மநேய ஒருமைப் பாட்டின் சக்தியை உள்ளடக்குவதைப் போல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் எடுத்து வரப்பட்ட மண், ஆரோவில்லின் அஸ்திவாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அஸ்திவாரக் கல்லுக்கும் மாத்ரி மந்திருக்கும் நடுவில் அன்னையிடம் முறையிட்டுக் கொண்ட வயதி முதிர்ந்த அந்த ஆலமரம் இருக்கிறது. அன்னையின் ஆக்ஞையை நிறைவேற்ற உடனே ஆரோவில்லுக்குப் புறப்பட்டு வந்த சாதகர், நேராக ஆலமரம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அப்பொழுது மாலை மறைந்து இருள் பரவிக் கொண்டிருந்தது. மரத்தைத் தெளிவாகக் பார்க்கக் கூடிய அளவுக்கு தெரு விளக்குகள் கூட இல்லை. மரத்திற்கு நேர்ந்த துன்பம் என்ன என்பது சாதகருக்கு தெளிவாகவில்லை. மற்றவர்கள் கண்ணில் படக்கூடிய ஒன்றாக அது இருக்குமானால், அங்குள்ளவர்கள் ஏற்கனவே அதைக் கவனித்து இருப்பார்கள். விஷயத்தையும் அவருக்குச் சொல்லி இருப்பார்கள். புதிராக உள்ள இந்த மரத்தின் துயரை எப்படி புரிந்து கொள்வது எனத் தோன்றாமல் அவர் மரத்தடிக்கு வந்தார். அங்கு வேலை செய்த யாரோ ஒருவர், தம்முடைய கோடரியை ஆலமரத்தின் அடிப்பாகத்தில் கொத்தித் தொங்கவிட்டிருந்தார். அதனால் அந்த மரம் எந்த அளவிற்குப் பாதிக்கப் படுகிறது என்பதை அப்படிச் செய்தவரால் உணர முடியவில்லை. அங்கு மரத்தில் காயத்தை விளைவித்தவாறு தொங்கிக் கொண்டிருந்த கோடரியைப் பார்த்தவுடன் அந்த சாதகருக்கு, தம்மிடம் அன்னை என்ன செய்யச் சொனார் என்பது ஒரு வினாடியில் விளங்கி விட்டது. உடனே கோடாரியைப் பிடுங்கி எடுத்தார். பிறகு, அந்தக் கோடரிக்கு உரியவர் யார் என விசாரித்து, அவரைக் கண்டுபிடித்து, கோடரியைக் கொடுத்து விட்டு, "இனி இது போல் செய்ய வேண்டாம்" என்று கூறி விட்டு ஆசிரமத்திற்குத் திரும்பி அன்னையிடம் நடந்ததை விவரித்தார். "அந்தக் கோடரியை மரத்திலிருந்து எடுத்த அந்தக் கணத்திலேயே என்னிடத்தில் துயரம் நீங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது" என்று கூறினார் அன்னை. அன்னையின் அற்புதங்கள் தொடரும்.... |
No comments:
Post a Comment