மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி தொழில் நுணுக்கங்களை ஆராய்ந்து 3 புத்தகங்கள் எழுதக் காரணமாயிருந்தது. இப்புத்தகங்கள் அமெரிக்காவில் பிரசுரமாகியுள்ளன. மூன்றாவதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை Garry Jacobs உம் Robert Macfarlane உம் சேர்ந்து எழுதியுள்ளார்கள். இலாபத்தை இரட்டிப்பது எப்படி, தொழிலை இருமடங்காக்குவது எவ்விதம் என்பதே புத்தகத்தின் முக்கிய கருத்துகள். Vital Corporation என்பது புத்தகத்தின் பெயர்.
அப்புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.....
மூலதனத்தின் அம்சங்கள், அது நம்மை நாடிவர நாம்செய்யக்கூடியது, அம்முறைகளின் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் முயற்சியே இக் கட்டுரை.
விரயத்தை விலக்க வேண்டும்
பத்து ரூபாய்க்கு வாங்க கூடிய பொருளைப் பதினொரு ரூபாய்க்கு வாங்கினால் அது பெரிய நஷ்டமாகாது. ஆனால், தொழிலில் அப்பொருள் தினமும் 1000 பயன்பட்டால் நஷ்டம் ஒரு ரூபாயில்லை. ஆயிரம் ரூபாய்; வருஷத்தில் 3 லட்சம் ரூபாய் நஷ்டமாகும். அது சரிவாராது. பத்து ரூபாய்க்கு விற்கும் பொருளை எந்த முதலாளியும் பதினோரு ரூபாய்க்கு வாங்கமாட்டார். அத்துடன் மொத்தமாக வாங்குவதால் 8½ ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குவார். இதில் எவரும் தவறு செய்வதில்லை. ஆனால் எந்தத் தொழிற்சாலையிலும் 10,000 ரூபாய் சரக்கு பல காரணங்களால் பல மாதம் பயன்படாமலிருப்பதுண்டு. அது இருப்பது தெரியாமல் மேலும் ஒரு 10,000 ரூபாய் சரக்கு வாங்குவதுமுண்டு. அதுபோன்ற விரயங்கள் அநேகம். ஒரு ஸ்தாபனத்தில், ஆரம்பித்த 6 மாதத்தில் 18 லட்சம் செலாவணியாகியிருந்தது. அவர்கள் எலக்டிரிக் பில் 5½ லட்சம் கட்டியிருக்கிறார்கள். அங்குள்ள எலக்டிரிக் பொருள்கள் எல்லாம் 24 மணி நேரம் செயல்பட்டாலும் 12 லட்சமே மொத்த பில்லாக இருக்கும். இதை யாரும் கவனிக்கவில்லை. ஒரு வீட்டில் போன் பில் 75,000 ரூபாய் ஆயிற்று. கேட்க, நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. உச்சகட்ட உதாரணங்கள் இவை. நம் ஸ்தாபனத்தில் எலக்ட்ரிக் பில் 15,000 வரவேண்டும். அது 15,500 ரூபாயாக இருந்தால் அதைக் கவனித்து விலக்குவது அவசியம். அதுவே பணத்திற்கு நாம் செலுத்தும் கவனம். நாம் எப்பொருளைக் கவனிக்கின்றோமோ, அப்பொருள் நம்மை நாடி வரும் என்பதுகொள்கை. 30 வருஷமாக அனுபவத்தில் கண்ட உண்மை.
கணக்கு எழுதுவது
நாள் தவறாமல் கணக்கு எழுதுவதாலும், பிழையில்லாமல் எழுதுவதாலும் நாம் செய்த செலவுக்கு நம் கவனத்தைச் செலுத்துவதாகும். கணக்கு எழுத பாக்கியிருந்தால், அதை எழுதி முடித்தவுடன் பல திசைகளிலிருந்தும் பணம் வருவதைக் காணலாம். கணக்கைத் தவறாமல் எழுதும் தொழிலில் பணத்தட்டுப்பாடு இல்லை என்பதைக் காணலாம்.
நாம் செய்யும் தொழிலில் 10 பாகங்களிருந்தால், எதனால் லாபம் வருகிறது, எங்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று விளக்கமாகப் புரியுமாறு கணக்கை எழுதுவது மேலும் சிறப்பு.
Zazanias
ஸஸானியாஸ் என்பவர் தம் வியாபாரத்தை 10 கோடியிலிருந்து 18 கோடிக்கு உயர்த்தினார். திவாலாகப் போனவர் கடை ஒன்றை வாங்கினார். தம் தொழிலில் பயன்படுத்திய முறைகளை இங்கும் கடைப்பிடித்தார். வாடகை, எலக்டிரிக் பில், சம்பளம், சரக்கு விலை, ஸ்பேர் செலவு, பயணச் செலவு போன்ற தொழிலின் செலவுகளைப் பட்டியலாக எழுதி அவை மொத்த வியாபாரத்தில் எத்தனை சதவீதம் என்று கணக்கிடுவது அவர் பழக்கம். 15 ஆண்டு தொழிலில் ஒவ்வொரு செலவும் மொத்தத்தில் எத்தனை சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று அவர் கணக்கிட்டிருந்தார். அவற்றுள் எலக்டிரிக் பில் 2½% என்பது அவரது புள்ளி. திவாலான கடையில் அது 6% ஆக இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்கு அங்குக் கோளாறு என்பது புரிந்தது. அத்துடன் அதே கோளாறு மற்ற இடங்களிலுமிருக்கும் என்று நினைத்து அக்கடையை வாங்கி, கோளாற்றை விலக்கினால் இலாபம் என்று கணக்கிட்டார். முதலில் எலக்டிரிக் பில்லை 2½% க்குக் கொண்டு வர பெருமுயற்சி செய்தார். அதில் வெற்றி பெற்றவுடன், மற்ற அம்சங்களையும் தம் திட்டப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். ஓரிரு மாதங்களில் கடை இலாபகரமாக மாறிவிட்டது.
ஒவ்வொரு செலவுக்கும் உரிய பங்கை நிர்ணயித்தால் பணம் விரயமாகாது. அது நாம் பணத்திற்கு உரிய கவனம் செலுத்துவதாகும்.
சுத்தம்
அன்னை பக்தர்களுக்குச் சுத்தத்தின் முக்கியத்துவம் தெரியும். தொழில் செய்யும் பக்தர்கள், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் சுத்தத்தை மேற்கொள்வது வழக்கம். சுத்தம் முடிந்தவுடன் பணம் வருவதைக் காணலாம்.
தரையை மட்டும் பெருக்கும் சுத்தம் முதல் நிலை. பொருள்களைத் துடைத்து வைக்கும் சுத்தம் அடுத்த நிலை. பொருள்கள் உள்ள அலமாரியில் சுத்தத்தை ஏற்படுத்துவது அடுத்த நிலை. அது போல் சுத்தத்திற்கு 6 அல்லது 7 நிலைகளைக் குறித்து நம் தொழில் எந்த நிலையிலிருக்கின்றதோ அதிலிருந்து அடுத்த நிலைக்குச் சுத்தத்தை உயர்த்த வேண்டும்.
பழைய பாக்கியைத் திருப்பித் தருவது
பழைய பாக்கியைத் தருவது அவசியம். பிறருடைய பணம் நம்மிடம் பாக்கியாக இருக்கும் வரை, நமக்கு வர வேண்டியது வாராது. எவ்வளவு சிறு தொகையானாலும் எவ்வளவு நாள்பட்டதாக இருந்தாலும், பழைய கடனை அறவே அழிக்கவேண்டும்.
சேர வேண்டியதை வசூல் செய்யவேண்டும்
பாக்கியைத் தருவது போல், நமக்குச் சேரவேண்டியது பிறரிடம் நாள் கடந்து தங்கியிருந்தால், அதனால் மற்ற தொகைகள் நிலுவையாகும். நிதானமாக, முறையோடு, வாடிக்கைக்காரர்களுக்குச் சலிப்பு ஏற்படாத முறையில் நமக்குரியதை தவறாமல் வசூலிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். சிறு தொகை என, பாராமுகமாக இருக்கக்கூடாது.
சிப்பந்திகளுக்குச் சம்பளம்
சம்பளம் நாள் தவறாமல், தாமதமில்லாமல் கொடுக்கப்படவேண்டும். அதற்குரிய முயற்சியைச் சிரமப்பட்டு எடுத்த நிறுவனம், தங்கள் பணத்தட்டுப்பாடு 90% விலகியதைக் கண்டனர்.
Payables
நாம் கொடுக்க வேண்டியவற்றைத் தாமதமின்றிக் கொடுக்கவேண்டும்.
பணம் இல்லாமல் தாமதமாவது வேறு. 30 நாள் தவணைக்கு வாங்கிய தொகை 25ஆம் நாள் கிடைத்து விட்டால், 30ஆம் நாளன்று செலுத்துவது வழக்கம், அதற்குப் பதிலாக கிடைத்த அன்றே செலுத்துவது நல்லது.
கடன் வாங்குவது தவறு என்ற கொள்கையுடையவர்களுண்டு. அது தனிப்பட்ட விஷயம். இது தொழிலுக்குப் பொருந்தாது. 6 இலட்ச ரூபாய் செலாவணியுள்ளவர் பாங்கில் 60,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அவரது மூலதனம் 1 இலட்சம். மேலும் கடன் பெற அபிப்பிராயம் உண்டு. ஆனால் வழி புரியவில்லை. பாங்க் பல சமயங்களில் சிறு கடனும் தரமாட்டார்கள். சில சமயங்களில் தாராளமாகவும் தருவார்கள். 6 இலட்சம் செலாவணிக்கு அதில் பாதியான 3 இலட்சம் கடன் எந்தப் பாங்க்கும் கொடுக்கும். இவருக்கு அனுபவமில்லை. அதனால் இதற்கு மேல் கிடைக்காது என்ற நம்பிக்கையில் முயலவேயில்லை. நம் தொழிலில் மற்றவர்கள் பணம் புரட்டும் முறைகள் அனைத்தையும் நாம் அறிவது அவசியம். அதில் நமக்குப் பொருத்தமானவற்றைப் பயன்படுத்தி பலன் பெற முழுமுயற்சி எடுப்பது அவசியம். தெரிந்து கொள்ளாமலிருப்பது தவறு.
செலவைக் குறைப்பது எப்படி?
விரயத்தை விலக்குவது ஒரு வகை. அறிவாலும், அனுபவத்தாலும், பிறரைப் பார்த்துத் தெரிந்து கொள்வதாலும், யோசனையாலும், புதுமுறைகளாலும், இன்று அத்தியாவசியம் என நாம் கருதும் செலவுகளில் பலவற்றைக் குறைக்கலாம். அவை அனைத்தையும் குறைப்பது ஒரு முறை. முழுமுயற்சி எடுப்பவர் 10% செலவைக் குறைக்க முடியும். 10% செலவைக் குறைத்தால் இலாபம் 100% உயரும். ஒரு கோடி செலாவணிக் கம்பெனியில் 9 லட்சம் இலாபமானால் 9% இலாபம். ஒரு கோடியில் செலவை 10% குறைத்தால் 90 லட்சமாகும். குறைந்தது10 லட்சம் இலாபமாகும். புதிய இலாபம் 19 இலட்சம். 9 இலட்ச இலாபம் 19 லட்சமாகிறது.
Purchase கொள்முதலை முறைப்படுத்துவதால் வருஷத்தில் இரண்டுமுறை புரளும் பணம், மூன்று முறை புரண்டால் அது இலாபம். வருஷத்தில் 2 கோடி ஸ்டோர் சாமான் இருப்புள்ளவர் அத்தொகையை இருமுறைக்குப் பதிலாக மும்முறை பயன்படுத்தினால் பலன் என்ன? இரண்டு கோடி மூலதனம் 4கோடி சரக்கு வாங்கப் பயன்படுகிறது. மூன்று முறையில் 6 கோடி சரக்கு வாங்கப் பயன்படும். ஸ்டோர் சரக்கு வருஷத்தில் scientific monitoring முறையாகப் பயன்படுத்தப்பட்டால் 6 முறை புரண்டு வரும் என்பது சட்டம்.
புதிய இடங்களில் பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்
ஆலையில் விழும் குப்பையை வெளியே போட இடமில்லாமல் முனிசிபாலிட்டியுடன் 3 ஆண்டுகள் தகராறு செய்த இடத்தில் இம்முறையைக் கையாள ஒரு யுக்தியைக் கண்டு, குப்பையைப் பயன்படுத்த வழி கண்டு அதைப் பிரபலப்படுத்தியபின், குப்பையால் தொந்தரவில்லை. அது பணமாகி விட்டது. இப்பொழுது குப்பைக்கு டெண்டர் ஏற்பட்டு விட்டது.
பெரிய கம்பெனிகள் பணம் சேகரிக்கும் முறைகளைச் சிறுகம்பெனிகள் அறிவதில்லை. இவர்களுக்கும் அது பயன்படும்.
தொழிலையும், விவசாயத்தையும் மேற்கொண்ட கம்பெனி, மானேஜ்மெண்ட் முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தி இந்தியாவிலேயே தங்கள் துறையில் அதிகபட்சம் இலாபம் பெற்றனர்.
நமக்குரிய மானேஜ்மெண்ட் முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். பணத்தைத் தவறாக மட்டுமே சம்பாதிக்கலாம் என்பதை விட்டு, நேராகச் சம்பாதித்தால் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று அறியவேண்டும்.