ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம்.
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
முறைகள்:
- பெருமை தரும் அடக்கம் பெரியது.
- எதைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறோமோ, அதை விட்டுக்கொடுக்க வேண்டும்.
- பரம எதிரியின் வாயால் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
- துரோகத்தைப் போற்று.
- நல்லவரையும், பொல்லாதவரையும் சமமாக மனத்தில் பாராட்டு.
இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம்.
-------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி.
----------------------------------------------------------------------------------
முறை:
பெருமை தரும் அடக்கம் பெரியது.
முறைக்கான விளக்கம்:
அறிவில்லாதவர் அடக்கமாக இருப்பது அடக்கமாகாது.
It is the vegetarianism of a toothless tiger.
அறிவுஎன ஏற்பட்டால், அது தன்னை வெளிப்படுத்தியபடியிருக்கும்.
ஒளியால் ஒளிந்துகொள்ள முடியாது. அது தானிருப்பதை வெளிப்படுத்- தியபடியிருக்கும். இது ஒளியின் இயல்பு; அறிவும் அதைப்போன்றது.
அடக்கம் இயல்பன்று; நாகரீகம் வந்தபின் மனிதன் கற்றது.
வாழ்வு (existence) எனில் சக்தி சலனத்தால் செயல்படுவது.
மேட்டிலிருந்து நீர் பள்ளத்திற்குப் போவதைப்போல், தெளிவான அறிவு தெளிவில்லாதவரை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது இயல்பு.
மேட்டில் நீரைத் தேக்க முயல வேண்டும். தேக்கினால் அதற்கு சக்தி (power) உண்டு. தானே தண்ணீர் மேட்டில் சேராது.
மனம் அறிவின் சிறப்பை அறிந்து, அதை வெளிப்படுத்தாமலிருப்பது நாகரீகம்என உணர்ந்து, அறிவை வெளிப்படுத்தாமலிருப்பது அடக்கம்.
வெளிப்படும் அறிவு (sharp) காரமாக இருக்கும்.
பிறர் பொருளை அபகரிக்க (extortion) அது பெரும்பயன்படும்.
வறுமையுள்ள இடத்தில் அறிவு வன்முறையை நாடும்.
தானே அடக்கம் வாராது; முயன்று பெற வேண்டும்.
நாம் அடக்கமாக இருக்கிறோம்என அறியாத அளவுக்குள்ள அடக்கமே அடக்கம்.
பரம்பரைப் பணக்காரனுக்குத் தன்செல்வம் நினைவு வாராது.
பரம்பரையாகப் பிரபலமான அந்தஸ்துடையவர்க்கு அப்பெருமையிருக்காது.
தாம் அக்குடும்பத்தினர்என அறிமுகப்படுத்திக்கொள்ளத் தோன்றாது.
அளவுகடந்து படித்தவர்க்கு தம்படிப்பின் உயர்வு நினைவு வாராது.
தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வைஷ்ணவ வித்வான், ஈடு வியாக்கியானத்தில் பாண்டித்யம் பெற்றவர் 50 ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியராக இருந்தார். தம் பாண்டித்யத்தின் பெருமை அவர் அறியாதது. அது வெளிவந்தவுடன் அவரைப் பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவியில் அமர்த்தி 260/- ரூபாய் சம்பளம் கொடுத்தனர். அடக்கம் அடக்கமானால் அது பெருமை தரும்.
பட்டம் பெறாத படிப்பின் பெருமையை உலகம் அறியாது. தானும் அதைப் பாராட்ட மறுத்தால் அதற்குரிய பெருமை தேடிவரும்.
அழகு, செல்வம், அந்தஸ்து, பிரபலம், உடல்வலிமை, பாண்டித்யம் போன்றவற்றைப் பெற்றவர் அதைப் பாராட்டாமலிருப்பதுண்டு; அது அரிது.
தகப்பனார் பெயர் தமிழ்நாடு முழுவதும் தெரியும் என்றாலும் தன்னை அவர் மகன்எனக் கூறி அறிமுகப்படுத்தத் தோன்றாத அடக்கம் உண்மையான அடக்கம்.
---------------------------------------------------------------------------
முறை:
எதைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறோமோ, அதை விட்டுக்கொடுக்க வேண்டும்.
முறைக்கான விளக்கம்:
குடும்பம், உத்தியோகம், பணம், நாணயம்என ஏதாவது ஒன்றை மனிதன் பலமாகப் பிடித்துக்கொண்டிருப்பான். அவன் உயிர் அதிலிருக்கும். அதுவே ஜீவநாடி. அது போனால் எல்லாம் போய்விடும்.
நண்பன், சீட்டு, ரேஸ், வைப்பாட்டி, கருமித்தனம், நடிப்பு, பொய்க் கதையைப் பொருத்தமாகச் சொல்லுதல், உரிமையற்ற சௌகரியத்தை முழுமையாக அனுபவிப்பது, மந்திரத்திலுள்ள நம்பிக்கை, தெய்வபக்தி, பிரார்த்தனை, விருந்தினரை உபசாரம் செய்வது, வேலையைப் பவித்திரமாக செய்வது, உயர்ந்த தமிழ்ச் (phrases) சொற்களை உருவாக்குவது, கதை படிப்பது, TV பார்ப்பது, பேரக்குழந்தையைப் பேணுவது, தாயார்சொல்லைத் தலைமேல் ஏற்பது, மனைவிசொல்லைத் தட்டாதது, கட்சி, கொள்கை என வாழ்வில் பல உண்டு. உயிர் போனாலும் மெய் சொல்லத் தவறுவதில்லை, உயிரைக் கொடுத்தாலும் ஒரு மெய் சொல்லக் கூடாது என்ற தீர்மானம் ஆகியவற்றுள் ஒன்றை மனிதன் ஆணித்தரமாய்ப் பிடித்திருப்பது வழக்கம்.
அன்னையை அணுக இவற்றுள் எதுவும் தடை.
மெய் உயர்ந்தது; பொய் பொல்லாதது; மெய் அன்னையை அணுக உதவும்; பொய் தடைசெய்யும்; மெய்யும் அன்னையை அணுக ஓரளவுதான் உதவும்; 80 பங்கு, 90 பங்கும் உதவும்; 100 பங்கு அணுக அதுவும் பயன்படாது. மெய்யைக் கெட்டியாகப் பிடித்து 90 பங்கு அன்னையை அணுகியபின் கெட்டியாகப் பிடித்திருப்பது தடைஎனப் புரியும்.
மெய் நமக்கு இயல்பாக அமையவில்லை என்பதால் கெட்டியாகப் பிடித்திருக்கிறோம்என்பது உண்மை. நாம் மெய்யைக் கைவிட்டாலும், பிடித்துக்கொள்ளாவிட்டாலும், மெய் நம்மை விட்டகலவில்லை எனில் நமது ஜீவியம் மெய்க்கு உரிய ஜீவியம்எனப் பொருள்.
அதனால் பிடித்திருப்பது, பிடி தடை.
எந்த நல்லதும் இயல்பாக அமைவது சரி. மெய்யும் அதற்கு விலக்கன்று.
நாம் சரணாகதியை ஏற்றால், மனம் அதில் மட்டுமிருந்தால் அன்னையை அடைவோம்.
நாம் அன்னையை அடைந்தபின், அன்னை நம்மை ஏற்று, நம்மைப் பிடித்துக் கொள்கிறார்.
அது பேரருள். அதுவும் அன்னையாவதாகாது.
அன்னையாக நாமே மாற சரணாகதியும் தடை; இரண்டறக் கலப்பதும் ஓரளவு தடை; அன்னையே மறந்துபோவது நாம் அன்னையானதற்கு அறிகுறி.
----------------------------------------------------------------
முறை:
பரம எதிரியின் வாயால் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
முறைக்கான விளக்கம்:
அப்படி ஒரு காரியம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் நமக்குப் பெரும்பலன் தரும்.
சுத்தம் வருமானத்தை உயர்த்துவதற்கு எத்தனையோ காரணங்களுண்டு.
அவற்றுள் ஒன்று, சுத்தத்திற்கு நாம் எடுக்கும் முயற்சியால் அதிக சக்தி உள்ளே வருகிறது; அது பணம்.
சாஸ்திரிக்கு சமஸ்கிருதம் தெரியும்; செட்டியாருக்குப் பணம் உண்டு;
புரொபஸர் படித்தவர்; ரெட்டியாருக்கு செல்வாக்குண்டு; நடிகை அழகி; அரசியல்வாதிக்குக் கூட்டம் வருகிறது.
சாஸ்திரியைப்போல் 5, 6 மடங்கு சமஸ்கிருதம் படித்த பட்டேலை சாஸ்திரி ஏற்கமாட்டார். செட்டியாருக்கு 1 கோடியிருந்தால், நாயுடு 5 கோடி சம்பாதித்தாலும் செட்டியார் வாயால் நாயுடுவைப் பணக்காரன் என்று கூறமாட்டார். புரொபஸர் M.A. படித்தவர். பட்டம் பெறாமல் M.Phil.,Ph.D., D.Litt. பாடங்களைப் படித்தவரை புரொபஸர் தம்வாயால் படித்தவர்என ஏற்கமாட்டார். ரெட்டியார் பஞ்சாயத்து பிரஸிடெண்ட். அவர் குத்தகைக்காரன் M.L.A. ஆனாலும், M.P. ஆனாலும் அவனுக்கு பிரபலம் உண்டு என ஏற்கமாட்டார்.
சீனுவாச ராமானுஜம் எழுதியவற்றை இன்றுவரை உலகில் புரிந்து கொள்ள ஒருவரும் (Mathematician) இல்லை. அவர் கேம்பிரிட்ஜிலிருந்த பொழுது பெரிய மனது செய்து அவருக்கு B.A. பட்டம் கொடுத்தனர். பிறகு M.A.யும் கொடுத்தனர். (Establishment) ஏற்கனவே உலகில் செல்வாக்குடன் வாழ்பவன் அவனைவிட 100 மடங்கு பெரியவனையும் ஏற்கமாட்டான்என்பது அனுபவம். சர்ச்சில் நேருவை leader of a tiny minority சிறுபான்மையோர் தலைவர் என்றார். இவையெல்லாம் உண்மையானாலும், எதிரானவையும் உண்மை.மாமியார் தாயார் போலும் இருக்கிறார். Max Muller ஐரோப்பியர் என்றாலும் Max Muller பவன் கட்டி, அவர் பாண்டித்யத்தைப் பாராட்டுகின்றனர்.
காமராஜை இராஜாஜி பிரபலமான முதல்வர் என்றும் கூறினார்.
வாழ்வில் ஆயிரத்திலொருவருக்கு நடப்பது அன்பர்கள் அனைவருக்கும் நடக்கும்.
நமக்கு எதிரி என்று ஒருவர் ஏற்பட்டுவிட்டால், அவர் வாயால் நல்ல பெயர் வாங்க முனைந்தால் அது அன்பனை அன்னைக்குகந்தவராக்கும்.
"உங்கள் நாணயத்தை உலகம் மெச்சும்'',
"உயிரை விட்டு ஸ்தாபனத்திற்கு உழைத்தீர்கள்'' எனப் பரம எதிரி, அன்பர்களைச் சொல்யதுண்டு.
----------------------------------------------------------முறை:
துரோகத்தைப் போற்று.
முறைக்கான விளக்கம்:
சர்வம் பிரம்மம் எனில் துரோகமும் பிரம்மம்.
அனுபவத்தில் கடந்தகால துரோகம் பெரிய காரியம் சாதித்ததை அறியலாம்.
பிறர் நமக்குச் செய்ததும், நாம் பிறருக்குச் செய்ததும் அப்பலன் கொடுத்தன.
ATM முதலாளியின் அனுபவம் தெளிவானது.
ஆழ்ந்து புதைந்துள்ள ஆத்மாவை துரோகம் மட்டுமே வெளியில் கொண்டு வரும்.
கொலை, கொடுமை, சூன்யம், துரோகம் அழிப்பதையும் காணலாம்.
பலன் பெரியது என்பது மட்டும் உறுதி.
துரோகம் செய்பவர் ஏதோ ஒரு சமயம் உயர்வதும் உண்டு; இது விதிவிலக்கு.
விலக்கு விளக்குவதுபோல் சொல்நயம் விளக்காது.
செய்பவர் மனநிலைக்கேற்ப பலன் வரும்.
சண்டிக்குழந்தையை அடித்து வளர்ப்பது நல்லது.
எந்த மனப்பான்மையுடன் அடிக்கிறோம் என்பதின் பலனை அடிப்பவர் பெறுவார்.
குழந்தை முன்னுக்கு வரும் மனப்பான்மை நல்லது.
துரோகம் ஒருவர் முன்னேறப் பயன்படும் என அறியாமல் செய்பவருக்கு ஆழ்ந்த நல்ல எண்ணமோ, கெட்ட எண்ணமோ இருக்கலாம்.
பகவான் அன்னைக்குத் தடைகளை ஏற்படுத்திய வண்ணமிருந்தார்.
நல்லது என்ற அறிவில்லாமல் சுபாவத்தால் துரோகம் செய்து பலியானவர் உயர்ந்தால், துரோகம் செய்பவரும் உயர்வார்.
கெட்ட எண்ணம் கெட்ட பலனை அவருக்குத் தரும்.
T.E.Lawrence of Arabia அனுபவம் அடிப்படை உண்மை.
உண்மையில் ஆரம்பித்தால் உண்மை வளரும்.எதில் ஆரம்பித்தாலும் அது வளரும்.
பொய்யில் ஆரம்பித்தால் பொய் வளரும்.
துரோகியை அன்னையாக அறிவது ஆத்மஞானம்.
துரோகி தம்மை உயர்ந்த கருவியாகவும் செய்யலாம்.
திருவுருமாற்றம் பெரியது; உலகம் அறியாதது. துரோகிக்குக் கிடைக்கும்.
எல்லோருக்கும் திருவுருமாற்றம் உண்டு.
துரோகியின் திருவுருமாற்றம் முடிவான பெரியது.
எந்த நேரம் உண்மையை உணர்ந்தாலும் பலன் உடனே வரும்.
மனம் துரோகத்தை நாடக்கூடாது.
எதிரியின் துரோகத்தைப் பாராட்டினால் துரோகம் வளரும்.
துரோகம் செய்வது மனிதரானாலும், வாழ்வானாலும் அதைச் சேவையாக நினைப்பது திருவுருமாற்றத்திற்குரிய நினைவு.
எதுவும் நல்லதே.
துரோகம் பெரிய நல்லது.
--------------------------------------------------------
முறை:
நல்லவரையும், பொல்லாதவரையும் சமமாக மனத்தில் பாராட்டு.
முறைக்கான விளக்கம்:
டாக்டர், வக்கீல், ஜோஸ்யன், கடை, பஸ் ஆகிய இடங்களில் நம்மை பேஷண்டு, கட்சிக்காரன், ஜாதகன், வாடிக்கைக்காரர், டிக்கட் என்பர். நல்லவரா, கெட்டவராஎன யோசிப்பதில்லை;
பணம் கொடுக்க வேண்டும். சம்பந்தம் செய்ய வேண்டும்எனில் நல்லவரா, கெட்டவரா என யோசிக்க வேண்டும். அந்த இடங்களிலும் அந்த வேலைக்குரியவற்றைமட்டும் கருதினால் பிரச்சினையிருந்தால் குறையும். கடன் வாங்குபவர் நல்லவரா, கெட்டவரா என்பதைவிட அதற்குரிய சொத்துள்ளவரா, மாதாமாதம் வட்டிகட்டும் தொழில் வருமானம் உள்ளவராஎனக் கருதினால் பிரச்சினை எழாது.
ஆண்டவன் சிலரை ஒரு பாதையிலும், அடுத்தவரை அடுத்த பாதையிலும் வரச்சொல்லியிருக்கிறான். இருவரும் அவனிடமே வருகிறார்கள்.
பார்லிமெண்ட்டிற்கு ஒருவர் M.P.ஆகவும், அடுத்தவர் மந்திரியாகவும், வேறொருவர் நிருபராகவும் வந்தால் அனைவரும் பார்லிமெண்ட்டிற்கு வருகிறவர்தாம். பாதை வேறு, இடம் ஒன்று, பலன் வேறு.
நல்லவரை அனைவரும் அறிவர். பொல்லாதவரையும் அனைவரும் அறிவர். இருவரையும் உலகம் அறியும். எப்படி உலகம் நம்மையறிய நாம் பிரியப்படுகிறோமோ, அப்படி நாம் போகலாம். ஆனால் அது நம்கையில் இல்லை. அது நம் சுபாவத்தைப்பொருத்தது.
நிலைமை மாறினால் தோற்றம் மாறும், பலன் மாறும். பஸ்ஸில் ஒருவரை கண்டக்டர் இடம்மாறி உட்காரச் சொன்னார். அவர் மறுத்தார். போலீஸ்காரன் அவரை மிரட்டினான். அவர் மிரளவில்லை. அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் விலாசம் கேட்டார்கள். அவர் மாஜிஸ்ட்ரேட்எனத் தெரியவந்தது. போலீஸ்காரனுக்கு உடல் ஆடியது. எனக்குத் தெரியாது என்றான். பஸ்ஸில் அனைவரும் பயணிகள். ஒரு பயணியை மிரட்ட அதிகாரம் எவருக்கும் இல்லை. அப்பயணி மாஜிஸ்ட்ரேட்டானால் நிலைமை மாறுகிறது. ஏன் அனைவரையும் சமமாக நடத்தக்கூடாது? நாம் சமமாக நடத்துவதில்லை. ஆண்டவன் அனைவரையும் சமமாக நடத்துகிறான்.
சமமாக நடத்தும் மனம் சரியாக இருக்கும்.
என்றும், எவரையும் அவருக்குரிய மரியாதையுடன் நடத்தினால் பிரச்சினை எழாது; எழுந்தால் பாதிக்காது.
தோற்றத்தைக் கருதினால் ஏமாற வழியுண்டு.
தோற்றத்தின் பின்னுள்ள விஷயத்தைக் கருதினால் ஏமாற முடியாது.
டிரஸ் தோற்றம் தரும்; அது சிறியது.
பட்டம், வேலை, பணம், வயது தோற்றத்தை நிர்ணயிக்கிறது.
படிப்பு, மனிதத்தன்மை, திறமை, நாகரீகம் விஷயத்தைக் கருதுகிறது.
தோற்றத்தையோ, அந்த நேரத்தின் விசேஷத்தையோ கருதுபவர்க்கு ஏமாற்றம் வரலாம்.
விஷயத்தையும், என்றும் நிலையானநாணயம், மனிதத்தன்மை போன்றவற்றைக் கருதுபவர் ஏமாற வழியில்லை.
ஆண்டவனுக்கு அனைவரும் ஆத்மா.
அனைவரையும் ஆத்மாவாகக் கருதுபவர் ஆண்டவனாவார். ------------------------------------------------ |
.............................தொடரும்.
Read the previous Part of this Series : (Yoga Sakthi in our Life) யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 26
Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India
Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life,
|