ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 9
அன்னையின் தரிசனம், பாவ விமோசனம்; ஏற்றங்களை அருளும் அரியாசனம்.
(திரு. கர்மயோகி அவர்களின் ஓர் அனுபவம்.)
காலை மணி பத்து. என் நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் வெள்ளையருக்குச் சொந்தமான ஒரு பெரிய ஆலையில் வேலை பார்த்து வந்தார். வந்தவர் பதற்றமாகக் காணப்பட்டார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு தம்முடைய கம்பெனியின் மிகப்பெரிய அதிகாரி என்னைக் காண வந்திருப்பதாகச் சொன்னார். அவர் சொல்லி முடிப்பதற்குள் குறிப்பிட்ட அதிகாரியே அங்கு வந்துவிட்டார். அந்த மனிதர் மிகவும் அடக்கமாகவும், மரியாதையாகவும் காணப்பட்டார். அவர் எதற்காகவோ தயங்குவது எனக்குத் தெரிந்தது. எதற்காக அப்படித் தயங்குகிறார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இதற்கிடையில் என் நண்பர் நின்றுகொண்டே இருந்தார். அவருக்குத் தம் மேலதிகாரியின் எதிரே உட்காருவதற்குப் பயம்! அது மட்டுமன்று, நானும், அவருடைய அதிகாரியும் பேசுவதைக் குறிப்பு வேறு எடுத்துக்கொண்டு இருந்தார்.
அந்த அதிகாரி, மரியாதை காரணமாக என் நலத்தை விசாரித்துவிட்டு, ‘நீங்கள் ஆசிரமத்துக்குப் போவதாக நான் கேள்விப்பட்டேன்’என்று ஆச்சரியத்தோடு விளித்தார். அவர் பேச்சின் த்வனி, ஏதோ செய்யக்கூடாத ஒரு காரியத்தை நான் செய்துகொண்டிருப்பதைச் சுட்டிகாட்டுவதைப் போல இருந்தது. ‘சிலரைப் போல இவரும் ஆசிரமத்தின் புனிதத்தைப் புரியாதவர்’என்று நான் தெரிந்துகொண்டேன்.
ஆனால், நான் பதிலிறுக்கவில்லை. அவரும் என் பதிலை எதிர்பார்க்கவில்லை. ‘ஆசிரமத்தால் நடத்தப்படும் விடுதிகளில் நான் அடிக்கடி தங்கியிருக்கிறேன். அங்கு நிலவும் புனிதமான அமைதியை உணர்ந்திருக்கிறேன். அந்த விடுதிகளிலேயே அவ்வளவு அமைதி இருக்குமானால், ஆசிரமத்தில் எவ்வளவு அமைதி இருக்கும்?’என்று கேட்டார் அவர்.
அதைக் கேட்டதும், அவரைப் பற்றி எனக்கு எழுந்த அபிப்பிராயம், ‘இவர் ஏதோ ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறார். அதனால்தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்’என்பதாகும்.
என் கணிப்பை உறுதிப்படுத்துவதைப்போல் தமக்குள்ள சிரமத்தைக் கூறினார் அவர். ‘பொதுவாக, நிதானமாகச் செயல்பட முடியவில்லை. ஆசிரம விடுதிகளில் நான் தங்க ஆரம்பித்ததிலிருந்து இந்தச் சிரமம் குறைந்து காணப்படுகிறது’.
மேலும், நான் ஏன் ஆசிரமத்துக்குப் போகிறேன், எனக்கும் ஏதாவது அவருக்குள்ளன போன்ற சிரமங்கள் உண்டா என்றெல்லாம் கேட்டுவிட்டு, மேலும் மேலும் கேள்விகளை அடுக்கிக்கொண்டேபோனார் அவர். கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவர் கேள்விகளைக் கேட்பதாகப்பட்டது எனக்கு. ஏதோ ஒரு வேதனை என் தலை மூலமாக இறங்கி, என் உடல் முழுவதும் பரவியதை உணர்ந்தேன். என் கழுத்துப் பகுதியில் வேதனை அதிகமாகத் தொடங்கி, தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது.
அவரோ தாம் ஒரு பெரிய அதிகாரி என்பதைக் கவனத்திற்குக் கொண்டு வந்தவரைப்போல, ஆரம்பத்தில் வெளிப்பட்ட விரும்பத்தகாத தம் மன உணர்வினைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மிக அமைதியாகக் காணப்பட்டார். அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.
நான் என்ன சொல்வது? அவருக்கு ஏற்பட்டுள்ள சிரமம் சாதாரணமானதில்லை, நாள்பட்ட ஒன்று என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. அவரோ எனக்குப் புது அறிமுகம். எதையும் கேட்டுக்கொள்ளக்கூடிய நிலையில் அவர் இல்லை. ஆனால் அவருடைய பிரச்சனையோ மிகச்சிக்கலானது. அதே சமயத்தில் அவரிடம் உள்ள ஏதோ ஒன்று ஆசிரமத்தில் உள்ள அமைதியை நாடுகிறது; அதில் ஆர்வம் கொண்டுள்ளது. இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த என் நண்பருக்குப் பாதி வேதனை, பாதி சந்தோஷம்.
தம்முடைய மேல்அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள இன்னலை அறிந்துகொண்டபோது அவருக்கு வேதனை. அதே சமயத்தில் அவரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்ததில் ஒரு சந்தோஷம். நான் அன்னை அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.
‘அன்னை என்றால் அமைதி, ஆனந்தம், அன்பு, இன்பம்’என்று விளக்கினேன்.
‘அன்னையின் சாந்நித்யம் ஆசிரமத்திலும், மற்றப் பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் பூரணமாக வியாபித்து உள்ளது’என்பதை எடுத்துக் கூறினேன். ‘எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்துவைக்கும் இடம் மகான் ஸ்ரீ அரவிந்தரின் சமாதி’என்பதையும் அவருக்கு விளக்கினேன். அவர் நான் சொன்னவற்றை எல்லாம் மிகவும் கவனமாகக் கேட்டார். பிறகு என்னிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார். தம் ஜீப் வரை சென்ற அவர், மீண்டும் திரும்பி வந்து, நான் எப்பொழுது அவர் ஊர் பக்கம் வந்தாலும், தம்மைத் தம் கம்பெனியில் சந்திக்கும்படிக் கேட்டுக்கொண்டார். எனக்கோ கழுத்தில் உள்ள வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது.
பிறகு அவர் என்னை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தார். அப்பொழுது எல்லாம் அவர் தமக்குள்ள வேதனைகளையும், விவகாரங்களையும் விவரிப்பார். பல கோடி ரூபாய்களை மூலதனமாகக்கொண்ட ஓர் ஆலையில் ஜெனரல் மானேஜருக்கு அடுத்த நிலையில் பெரும்பதவி வகிப்பவர் அவர். நூறாண்டு காலத்திற்கும் அதிகமாக நல்ல நிலையில் நடைபெற்றுக்கொண்டுவந்த அந்த ஆலையில் உள்ள அவருக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம்; அதோடு பங்களா; ஆலையில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் செல்லுபடியாகின்ற வரையறை இல்லாத அதிகாரம், மற்றும் உயர் வசதிகள் பலவற்றை ஆலை நிர்வாகம் அவருக்கு அளித்திருந்தது. முப்பது வருடங்களுக்கு முன்னால் அவருடைய தந்தையும், அவருக்கு முன்னால் அவருடைய தந்தையும் இதே ஆலையில், இதே உத்தியோகம் பார்த்தவர்கள். அதனால் வழிவழியாக அவருக்கு நிறையச் சொத்துகள் சேர்ந்திருந்தன.
அவருடைய குடும்பம் வைதிகச் சம்பிரதாயத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்ற ஒன்றாகும். மேலும் அது பரம்பரைப் புகழில் நிலைபெற்ற குடும்பம். தான, தருமங்களில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் கொடை நலம் மிகுந்த குடும்பம். வைதிகச் சடங்குகளை வழுவாது பின்பற்றக்கூடிய அவருக்கு, வேதங்களின் சில முக்கியப் பகுதிகள் நன்கு பாடம். ஆனால் வேதங்களை அவர் முறையாகப் பயிலவில்லை. ஆனாலும், அவை எத்தனை முக்கியம் வாய்ந்தவை என்பதை உணராவிடினும், அவற்றை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படி ஏற்றுக்கொண்ட பலவற்றையும் அவர் தீவிரமாகப் பின்பற்றினார். நாங்கள் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, தம்முடைய பிரச்சினையையும் பற்றி அவர் வெளிப்படையாகச் சொல்லலானார்.
அவருக்குச் செல்வத்தில் ஒருவிதக் குறைவும் இல்லை. ஆனால் அவரை இனம் தெரியாத, எதனால் என்று புரியாத ஒரு வகை எரிச்சல் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அசுரத்தனமான ஒரு கோபாவேசத்திற்கு அவர் அடிமைப்பட்டிருந்தார். குணநலமும், குடும்பப்பாங்கும் நிறைந்த நல்ல மனைவி; ஒரே குழந்தை; நோய் நொடியற்ற ஆரோக்கியமான குடும்பம்; உயர்ந்த உத்தியோகம்; திறமை, நேர்மை, அயராத உழைப்பு ஆகியவை காரணமாக அலுவலகத்தில் நல்ல பெயர்.
இத்தனைச் சிறப்புகள் அவரைத் தழுவி நின்றபோதும், அவருக்கு அமைதி இல்லை, நிம்மதி இல்லை. எப்பொழுதும் அவர் மனத்தில் போராட்டமும், எரிச்சலும் துவம்சப்படுத்திக்கொண்டிருந்தன. எல்லாரும் அவரை மென்மையானவர் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கோ யாரைக் கண்டாலும் ஓர் எரிச்சல். நாளாக, நாளாக அவருடைய எரிச்சல் அதிகமாயிற்றே தவிர, குறையவில்லை. சில சமயங்களில் அவர் கட்டுப்பாட்டையும் மீறி தம்மிடம் வேலை பார்க்கம் அதிகாரிகளிடம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபக்கனலை அள்ளி வீசிவிடுவார். பிறகு தனிமையில் தம் செய்கைக்காக வருந்துவார். அவர்களை மறுபடியும் அழைத்துப் பேசிச் சமாதானப்படுத்துவார். நிம்மதியாகத் தூங்குகிற ஒருவரைக் கண்டால் அவருக்குப் பொறாமை பொங்கும். அமைதியாகக் காட்சி அளிக்கின்ற ஒருவரைப் பார்த்தால் அவருக்கு எரிச்சல், எரிச்சலாக வரும். இது அவர் விரும்பாத வேதனை. ஆனாலும் தம்மை விட்டு விரட்டி அடிக்க முடியாத வேதனை. இந்த வேதனையிலிருந்து மீள அவர் போகாத கோயில் இல்லை, வழிபாடாத தெய்வம் இல்லை, ஏற்காத நோன்பில்லை, செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. பதிலாக, அவருடைய எரிச்சல்தான் அதிகமாகிக்கொண்டிருந்தது.
இதற்கு ஒரு விதிவிலக்காக அவர் ஆசிரமத்தின் விடுதிகளில் தங்கி இருந்தபொழுதெல்லாம் வேறெங்கும் கிடைக்காத அமைதி அவருக்குக் கிட்டியது. ஆனாலும் அதை நிலையாகப் பெறுவதற்காக ஆசிரமத்துக்குப் போக அவருக்கு மனம் இல்லை. அதற்குக் காரணம், அவர் வைதிக மார்க்கத்தில் வைத்திருந்த பற்றுதல்தான். இந்த நிலையில் நான் அவருக்கு எந்த யோசனையையும் சொல்கிற அளவில் இல்லை.
மனத்தின் போரை மனிதர் எத்தனை காலம்தான் தாங்கிக்கொண்டு இருப்பார்? இறுதியில் விரக்தி நிலைக்கே வந்துவிட்டார். ‘வேலையை விட்டுவிட்டு ஏதேனும் ஒரு கிராமத்தில் குடியேறினால் எனக்கு அமைதி கிடைக்குமா? அல்லது ஏதாவது ஓர் ஆசிரமத்தில் சேர்ந்து தெய்வகைங்கர்யம் செய்தால் வேதனை நீங்கி, எனக்கு அமைதி கிடைக்குமா?’என்று என்னிடம் கேட்ட அவர், தொடர்ந்து ‘அரவிந்தாசிரமத்தில் சேர்ந்தால் என்னுடைய பிரச்சினைக்கு நிரந்தர வழி கிடைக்குமா?’என்று கேட்டார்.
‘இந்தச் சிறிய விஷயத்திற்காக நீங்கள் இத்தனை பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம்’என்றேன் நான்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய தலையாய பிரச்சினையை ‘ஒரு சிறு விஷயம்’என்று நான் சொல்லவே, அவருக்கு அது புரியவில்லை. ‘தரிசனக் காலங்களில் அன்னையிடமிருந்து வெளிப்படும் அளவிட முடியாத சக்தியோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, உங்களுடைய துன்பம் ஒரு சிறு விஷயம்’என்று கூறி, அன்னை வழங்கும் தரிசனத்தில் பங்குகொள்ளுமாறு அவரிடம் சொன்னேன். அவர் தரிசனத்திற்குப் போனார். அதிலிருந்து அவருக்கு ஒரு பெரிய அளவில் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைத்தது. அதை அடுத்து அன்னையை நேராகக் கண்டு ஆசிகளைப் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்ளவே, நான் அவரை அன்னையிடம் அழைத்துச் சென்று, அவருடைய பிரச்சினையை எடுத்துச் சொன்னேன். அன்னை அவருக்குத் தரிசனம் கொடுத்து, ஆசிகளை வழங்கினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு நானும், அந்த அதிகாரியும் சந்தித்தோம். ‘அன்னையைத் தரிசித்தபோது நிகழ்ந்ததை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது’என்று கூறி, நடந்ததை விவரித்தார். அன்னை அவருக்குத் தரிசனம் கொடுத்தது ஒரு சில விநாடிகள்தாம். அவர் அன்னையாரின் அறைக்குச் சென்றவுடன், அன்னை திரும்பி அவரை ஒரு கணம் பார்த்தார். அந்தக் கணமே அவரைப் பிடித்து ஆட்டிய அசுரத்தனமான கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. அன்னையைத் தரிசித்துப் புதுப் பிறவியை எடுத்தவராக வந்தார்.
--------------------------------------
தெரிவிக்காமலே தெரிந்து கொள்ளக்கூடிய அருட்சக்தி அன்னைக்கு உண்டு
ஒரு நாள் தம்முடைய டிரஸ்டிகளில் ஒருவரை அழைத்தார் அன்னை. பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஆசிரமத்துக் கட்டடத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
டிரஸ்டிக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்ச காலமாகவே அந்தப் பிள்ளையார் கோயிலுக்குச் சிறிது இடம் தேவை என்று கோயில் நிர்வாகிகள் அந்த டிரஸ்டியிடம் கேட்டுவந்தார்கள். அவர்கள் கோரிக்கையை அன்னையின் முன் வைத்து அவருடைய அனுமதியைப் பெற டிரஸ்டி எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அன்னையே அவரை அழைத்து பிள்ளையார் கோயிலுக்கு இடம் கொடுக்கத் தீர்மானித்துவிட்டதாகக் கூறிகிறார்! அவரைத் தவிர அன்னையிடம் இந்த விஷயம் பற்றி வேறு யாரும் பேசி இருக்க முடியாது. பிறகு இந்த விஷயம் அன்னைக்கு எப்படித் தெரிந்தது? தெரிவிக்காமலே தெரிந்து கொள்ளக்கூடிய அருட்சக்தி அன்னைக்கு உண்டு என்பது அந்த டிரஸ்டிக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான்.
அந்தச் சமயத்தில் அந்தப் பிள்ளையார் கோயிலைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கோயில் மக்கள் அதிகமாக வசிக்கின்ற ஒரு பகுதியில் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் அது இடிந்தும், பாழடைந்தும்போய் இருந்தது. அங்கு பக்தர்கள் அதிகமாக வருவதில்லை.
அந்தக் கோயிலைப் பற்றி ஒரு கதை உலவிவந்தது. ‘இந்தியர்கள் விக்கிரக வழபாடு என்னும் மூடப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அதற்கு மூலகாரணமான விக்கிரகத்தை அப்புறப்படுத்திவிட்டால் அவர்களுடைய மூடப்பழக்கமும் ஒழிந்துபோகும்’என்று நினைத்த ஒரு பிரெஞ்சுக்காரர், அந்தக் கோயிலிலிருந்த பிள்ளையாரைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் நடுக்கடலில் போட்டுவிட்டார். இது அக்கோயிலைச் சுற்றி இருந்தவர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ‘ஒரு பிரெஞ்சுக்காரர்தாம் பிள்ளையார் காணாமல்போனதற்குக் காரணம்’என்பது மக்களுக்குத் தெரிந்தது. ஆனாலும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரின் அடாத செயலைக் கண்டிக்கக்கூடிய நிலையில் இல்லை இந்த அடிமை மக்கள். அவர்கள் மறுநாள் தம் மௌனப் புரட்சியை வெளிக்காட்டுவதைப்போல ஆலயத்தில் கூடினார்கள்.
என்ன அதிசயம்! கடலில் வீசப்பட்ட விநாயகர் எதுவுமே நடக்காதது போல ஆலயத்தில் வீற்றிருந்தார்! அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இந்தக் கோயில் பெரும்புகழ் பெற்றது. பக்தர்களும் நாளுக்கு நாள் பெருகி வழிந்தனர்.
இப்பொழுது அந்தக் கோயிலைப் புதுப்பிக்கின்ற பணியைத் தொடங்கி இருந்தார்கள். கோயிலின் முன்புறத்தில் இடம் இல்லாத காரணத்தால், தெருவின் கிழக்கு, மேற்குப் பக்கங்களில் தூண்களை எழுப்பி, அவற்றின்மேல் மண்டபத்தைக் கட்டினார்கள். பிரகாரத்திற்குப் போதிய இடம் இல்லை. தெற்குப் பக்கத்தில் கொஞ்சம் இடம் தேவையாக இருந்தது. அக்கம்பக்கத்தில் குடியிருப்புகள் இருந்ததால் போதிய இடம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் கோயிலைச் சுற்றி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்கள் இருந்தன. அந்த இடங்களிலும் கோயிலுக்கு வேண்டிய இடத்தைப் பெற முடியவில்லை.
அன்னை, டிரஸ்டியிடம், தாம் தியானத்தில் இருந்தபொழுது விநாயகர் தோன்றி, தம்முடைய கோயிலுக்குச் சிறிது இடம் வேண்டும் என்று கேட்டதாகக் கூறினார். ஆகவே, கோயிலுக்கு வேண்டிய இடத்தைக் கொடுப்பதற்குத் தீர்மானித்துவிட்டதாகவும், அதற்குரிய உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாகவும் மொழிந்தார் அன்னை.
--------------------------------------
கடல் தேவதையிடம் பேசிய அன்னை
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ‘செல்வராஜ் செட்டியார்’என்பவர் பாண்டிச்சேரியில் மேயராக இருந்தார். அவர் பெரிய இறக்குமதி வியாபாரியும்கூட.
‘மேயர்’என்ற மேன்மையான பதவி காரணமாக, அவருக்கு பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் அரசியலிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் இறக்குமதி செய்த நிலக்கரியைச் சேமித்து வைப்பதற்காகக் கடல் ஓரமாக ஒரு பெரிய கிடங்கைக் கட்டி வைத்திருந்தார். சிறிது காலத்தில் கடல் அலைகள் அந்தக் கிடங்கின் சுற்றுப்புறச் சுவர்களைத் தகர்த்துவிட்டன. அங்கு மீண்டும் சுவர்கள் எழுப்பப்பட்டன. கடல் அலைகள் மீண்டும் அச்சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டன. மறுபடியும் சுவர்களை எழுப்ப, மறுபடியும் கடல் அலைகள் அவற்றை நாசம் செய்ய, இப்படிப் பல தடவை நடந்துவிட்டன. ‘இனிச் சுவர் எழாது’என்ற நிலைமை ஏற்பட்டது.
செல்வராஜ் செட்டியார் விலை மிகுந்த அந்தக் கிடங்கைக் காப்பாற்ற எண்ணி, பிரான்ஸ் நாட்டிலுள்ள புகழ்பெற்ற என்ஜினீயர்களைக் கலந்து ஆலோசித்தார். சூயஸ் கால்வாயை நிர்மாணித்த பிரெஞ்சு என்ஜினீயர்கள், கடல் சம்பந்தப்பட்ட என்ஜினீயரிங் தொழிலில் உலகப்புகழ் பெற்றவர்கள், அவர்களுடைய ஆலோசனையின்பேரில், தம் கிடங்கைச் சுற்றி மீண்டும் சுவர்களை எழுப்பினார் செட்டியார். அந்தச் சுவர்களும் கடல் அலைகளின் தாக்குதலால் தகர்ந்து விழுந்துவிட்டன. ‘இனி, கடல் அரிப்பைத் தடுக்க முடியாது’என்பது தெளிவாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகக் கிடங்குக்குள் கடல் புகுந்துவிடும் அபாயம் அதிகமாயிற்று. பல லட்சங்கள் மதிப்புள்ள அந்தக் கிடங்கு கடல் அரிப்பில் சிக்கிக்கொண்டுவிட்ட செய்தியே அன்றைய நாளில் புதுவையின் முக்கிய செய்தியாகவும், பரபரப்பான செய்தியாகவும் உலவியது.
செட்டியார் பயனற்றுவரும் அந்தக் கிடங்கையும், அதைச் சார்ந்த இடத்தையும் விற்க முடிவு செய்து விலை பேசினார். ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. இனி அதை விற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. செட்டியார் இறுதியில், அந்தக் கிடங்கை அன்னை வாங்கிக் கொள்வாரா என்று கேட்டனுப்பினார். அந்தச் செய்தியை அன்னையிடம் கொண்டு சென்ற சாதகர்கள், அந்தக் கிடங்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் கூறினார்கள். எல்லாருமே ‘அந்த இடத்தை அன்னை வாங்கக் கூடாது’என்று நினைத்தார்கள். ஆனால், தமது கருத்தை அன்னையிடம் வலியுறுத்திப் பேசி அவர்களுக்குப் பழக்கம் இல்லை. அன்னை என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
சற்று ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு அந்தக் கிடங்கை வாங்க ஒப்புக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறினார் அன்னை. அதைக் கேட்டவுடன் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘அந்தக் கிடங்கு சிறிது காலத்திற்குள் கடலால் அழிக்கப்பட்டுவிடும்’என்று எண்ணினார்கள். அதே சமயத்தில் அன்னையின் அபரிமிதமான சக்தியில் அவர்கள் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆகவே, அன்னை கூறியபடி அந்தக் கிடங்கை விலைக்கு வாங்கிவிட்டார்கள். பிறகு, ‘இனி அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்?’என்று அன்னையிடம் கேட்டார்கள். அதற்கு அன்னை சுற்றுப்புறச் சுவர்களைக் கட்டச் சொல்ல, அப்படியே கட்டப்பட்டன. வழக்கம்போல அவை இடிந்துவிட்டன. மீண்டும் கட்ட, மீண்டும் இடிந்து விழ, இது தொல்லையின் தொடராக வளர்ந்துகொண்டு இருந்தது. இதை அறிந்த அன்னை, கட்டுமான வேலையை நிறுத்திவைக்கும்படிச் சொல்லி அனுப்பினார். அவ்வாறே செய்யப்பட்டது.
அன்று மாலை கிடங்கு இருந்த இடத்திற்கு அன்னை வந்தார். ஒரு நாற்காலியைக் கொண்டுவரச் செய்து, கடல் ஓரமாகப் போட்டு, அதில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து வந்தார். சாதகர்களை அழைத்து அச்சுவர்களைத் தொடர்ந்து கட்டுமாறு கூறினார். மறுநாள் சுவர் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு அது இடியவில்லை. இன்றவரை அது உறுதியாக இருந்து வருகிறது.
கடற்கரையில் தாம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபொழுது என்ன நடந்தது என்பதை பின்னொரு காலத்தில் விளக்கினார் அன்னை. அப்பொழுது கடல் தேவதை அன்னையிடம் வந்து, ‘கிடங்கு உள்ள இடம் எனக்குச் சேர வேண்டும். ஆகவே அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ள நான் முடிவு செய்து விட்டேன்’என்று கூறியது. ‘இந்த இடம் எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே கடல் நீர் அதில் நுழையக்கூடாது’என்று அன்னை கேட்டுக்கொண்டார். பொதுவாக, எந்தத் தெய்வமாக இருந்தாலும் அன்னையின் சொல்லுக்கு உடனே கட்டுப்பட்டுவிடும். ஆனால் கடல் தேவதையோ தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் மறுத்தது. நீண்ட நேரம் அதோடு விவாதம் செய்து, ‘ஆசிரமத்தில் நடக்கும் பணிக்கு இந்த இடம் தேவை’என்று விளக்கவே, கடல் தெய்வம் தன் முடிவை மாற்றிக்கொண்டு, அந்த இடத்தை அன்னையிடம் ஒப்படைத்தது.
- அன்னையின் தரிசனம் - ஸ்ரீ கர்மயோகி அவர்கள்
Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, |
No comments:
Post a Comment