Pages

Friday, October 5, 2012

இரண்டாம் உலகயுத்தம் - Message of the Day, Oct 5, 2012


  

இரண்டாம் உலகயுத்தம்

இங்கிலாந்திலிருந்து இளைஞர் ஒருவர் வந்தார். ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இடமும், சூழலும் பிடித்திருந்தது. இவருடைய தகப்பனார் யுத்தகாலத்தில் சென்னையில் ஒரு கம்பனி நடத்தினார்.


ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் இவரை ஆசிரமத்திற்கு அழைத்துவந்தன. முதலில் 1970இல் வந்தார். அப்பொழுது இவர் வாரம் ஒரு முறை வந்து என்னைச் சந்திப்பார். ஆர்வமான இளைஞர். ஆனால் ஆங்கிலேயர். 4,5 முறை என்னைச் சந்தித்த பின் தம் தகப்பனார் நடத்திய கம்பனியைப் பற்றிச் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டா என்று கேட்டவர், நான் பதில் சொல்ல முடியாமல் தயங்குவதைப் பார்த்து "நீங்கள் கேள்விப்படவில்லை என்று தெரிகிறது'' என்றார்.

இரண்டாம் மகாயுத்தத்திற்கு ஸ்ரீ அரவிந்தர் தம் யோக சக்தியை அனுப்பி, ஜெயித்ததைப் பற்றிப் படித்துள்ளார். "நீங்கள் அதை நம்புகிறீர்களா?'' எனக் கேட்டார். நான் பதில் சொல்லுமுன் "உங்கள் தயக்கம், நீங்கள் நம்புவதைக் காட்டுகிறது'' என்று கூறி மேலே பேசினார். 

"எவ்வளவுதான் விபரம் தெரிந்தாலும் இந்தியர்களில் படித்தவர்களும் மூடநம்பிக்கையுடனிருக்கிறார்கள்' என்பது ஆன்மீக விவரம் தெரிந்த மேல் நாட்டாருடைய அபிப்பிராயம்.

சூட்சுமமானவற்றை நம்புவது மூடநம்பிக்கை என்பது இவர் போன்றவர் நினைப்பது, சந்திரனில் மனிதன் இறங்கினான் என்பதை நம்ப மறுக்கும் M.A. படித்த சமஸ்கிருத பண்டிதருக்கும் இந்த ஆங்கிலேயருக்கும் வித்தியாசமில்லை. இதில் உள்ள உண்மை பெரியது.

சூட்சும ஆன்மீகச் சக்திகள் செயல்படுவதை பல முறை கண்டாலும், அது உண்மை எனத் தெரிந்தாலும், அவற்றை நம்புவது மூடநம்பிக்கை என்பது பரவலான மேல் நாட்டுக் கருத்து.

அன்னை அருள் ஆயிரம் முறை செயல்பட்டுக் காரியம் நிறைவேறுவதைக் கண்ட அன்பர், அடுத்த முறை ஒரு காரியம் நடக்கவேண்டும் என்றால், அருளை நம்புவதில்லை. டாக்டரை நம்புவார், பணத்தை நம்புவார், பதவியை நம்புவார் என்பது நம் அன்றாட அனுபவம்.

100 சொற்பொழிவுகள் அருளைப்பற்றி நிகழ்த்தினாலும், அருள் மேல் நம்பிக்கை வருவதில்லை என்பதே ஆன்மீக உண்மை.

ஆங்கிலேயரிடம் நான் கூறாத விளக்கம், கூற விருப்பப்படாத விளக்கம் எளியது. எவ்வளவு பெரிய சண்டை, கலாட்டா, கலவரமானாலும், அது அன்பர் உள்ளத்தைத் தொடும் விஷயமானால் அன்பர் - ஸ்ரீ அரவிந்தரில்லை - அன்னையின் சாந்தியை அனுப்பினால், கலவரம் அடங்குவதைக் காணலாம். மனத்தைத் தொடுமளவுக்கு உணர்வு கலந்திருந்தால் தவறாமல் பலிக்கும்.

உள்ளூர் கலாட்டாவும், உலகயுத்தமும் ஒன்றா என்பது கேள்வி? ஆன்மீகரீதியாக ஒன்றே. எறும்புப் புற்றும், சூரியமண்டலமும் ஒன்று என்று பகவான் கூறுகிறார். உலகமகாயுத்தம் நமக்கு பயத்தை உண்டுபண்ணும். உணர்ச்சியைத் தொடாது. பகவான் உலகத்தை உள்ளத்தில் ஏற்றவர். அதனால் அவர் செய்தது பலித்தது.

நாமே சோதனை செய்து பலித்தபின் மனம் நம்புவதும் பெரிய காரியம். நாட்டின் எந்த பகுதியில் எப்படிப்பட்ட சண்டை நடந்தாலும், அதனால் பாதிக்கப்பட்ட அன்பர் பிரார்த்தனை செய்தால் அது 50வருஷம் சண்டையாக இருந்தாலும், நின்றுவிடும்.


சிறு குறிப்புகள் - Sri Karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
             

No comments:

Post a Comment