Pages

Monday, October 29, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் -25


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

முறைகள்:

  • தவறு சரியென மாறும்பொழுது செய்ய மறுக்காதே.
  • அனைவரும் அர்த்தமில்லாமல் போற்றுவதை நீயும் போற்றாதே.
  • உன் சுபாவத்தை சுட்டிக்காட்டும் உடற்குறை சிறியதானாலும் அதை அகற்ற முயல வேண்டும்.
  • வெட்கத்தைக் கடந்த மனநிலையை நாடு.

இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை:

தவறு சரியென மாறும்பொழுது செய்ய மறுக்காதே.

முறைக்கான விளக்கம்:

கோபம், ரௌத்திரமாகும்பொழுது தடை செய்யாதே.



  • மகன் போதைமருந்து சாப்பிட்டால், அதைத் திருடிக் குப்பையில் போடுவது திருட்டுஎன நினைப்பது தவறு. இந்நிகழ்ச்சியில் திருட்டு புண்ணியமாகிறது.

  • திருமணமானபின் கணவன் 6 மாதம் வடநாட்டில் ஜெயிலிலிருநதான் என்ற செய்தி வெளிவந்தால் அதை வெளியில் கூறுவது உண்மையாகாது. அதைக் கூற மறுப்பது பொய்யாகாது. இந்நிகழ்ச்சியில் பொய் மெய்யாக மாறுகிறது. செய்தி பெண்ணுக்கு வந்து தம் வீட்டாருக்குச் சொல்லாமலிருப்பது, செய்தி வீட்டாருக்கு வந்து பெண்ணுக்குச் சொல்லாமலிருப்பது, அனைவரும் குடும்பத்தில் அறிந்து வெளியில் சொல்லாதது பொய்யன்று; மெய். தவறன்று; சரி.

ஈஸ்வரன் அன்பு பேரன்பாகி, அது பூர்த்தியாகச் சக்திக்குச் சரணடைய முடிவு செய்து சரணாகதியை மேற்கொண்டால், சக்தி அளவுமீறிச் செயல்படுவதும் உண்டு. அதைச் சற்று அடக்க வேண்டும்என பகவான் எழுதியுள்ளார்.

கோபம் வந்தால் அடங்க நேரமாகும்; சமயத்தில் நாளாகும்.

கோபம் தெய்வாம்சம் பெறுவது ரௌத்திரம். நரசிம்ம அவதாரம் போன்றது.

நரசிம்மனுக்கு அது அடங்க 6 மாதமாயிற்று.

அன்னை அன்பருக்குக் கோபம் ரௌத்திரமானால் க்ஷணத்தில் முகம் மலரும்.

சக்தி ஈஸ்வரனிடம் அத்துமீறி நடப்பதுபோல் நிகழ்ச்சிகள் எழுவதுண்டு.

அப்பொழுது கோபம், ரௌத்திரமாகும்.

கோபம் தவறு என்ற கொள்கை அங்குச் சரியாகாது.

அக்கோபத்தை வெளியிட்டால் பிரச்சினை கரையும்.

10,000 ரூபாய் செலவாகும் வீட்டில் ஒருவர் 30,000 ரூபாய் வீண்செலவு செய்வதைப் பொறுத்துக்கொள்வது கடினம். அது 15 வருஷம் தொடர்ந்து வீட்டில் 1 இலட்சம் ரூபாய் செலவாகும்பொழுது வேட்டை விட்ட தொகை 31/2 கோடி என்றால், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்என்று நினைப்பது தவறு.

பணத்தை அவனிடமிருந்து எடுப்பதும்,

அவனை அளவுகடந்து கண்டிப்பதும்

சரி, தவறன்று.

அதைச் செய்யாதது தவறு.

செய்வது புண்ணியம்.

அப்படிப்பட்ட புண்ணியத்தை எந்த பாவ'மான காரியம்மூலமும் செய்வது அவசியம்.

அபாண்டப் பொய்யை 50 வருஷமாகச் சொல்லி, அது 1000த்தைக் கடந்தபின், அவர் மனம் புண்படும்எனத் தயங்குவது தவறு. அவர் மனம் புண்பட வேண்டியது அவசியம். உலகத்தில் பொய்யை அழிக்க நாம் செய்யும் புண்ணியம் அது.


----------------------------------------------------


முறை:


அனைவரும் அர்த்தமில்லாமல் போற்றுவதை நீயும் போற்றாதே.


முறைக்கான விளக்கம்:

கடைக்குப் போகச் சந்தர்ப்பம் வந்தால் மனமும், உணர்வும், உடலும், ஜீவனும் பூரித்துப் புளகாங்கிதமடைபவருண்டு.

ஆசிரமம் வந்து அன்னை வாழ்வை மேற்கொண்டபின் மனம் விசேஷங்களை நாடுகிறது. சிறியதாய் ஆரம்பிக்கும் விசேஷம் வீட்டைக் கல்யாண வீடாக்குகிறது. ஜென்மம் சாபல்யமடைகிறது.

M.A., Ph.D. பட்டம் பெற்றவர் வாரப்பத்திரிகைகளைத் தமிழில் படித்து ஒரு நோட்டில் அதில் வரும் பொன்மொழி'களை எழுதி வருவது அவர் மனவளர்ச்சியைக் (retarded) காட்டுகிறது.

அர்த்தமற்றவை அர்த்தமற்றவர்க்கு அர்த்தபுஷ்டியுள்ளதாகும்.

நாம் அவர்களை விமர்சனம் செய்வது சரியில்லை.

நாம் அவர் போலிருப்பது சரியென நினைத்தால், நினைப்பே சரியில்லை.

உலகில் பெரிய (intellectuals) அறிஞர்கள் 15 பேர் வரலாற்றை ஒருவர் எழுதினார்.

அத்தனை பேரும் உலகப் புகழ்பெற்றவர்கள்.

ஒருவர் பல ஆண்டுகளாக, ஆண்டில் 300 புத்தகம் படித்தவர்.

அடுத்தவர் தத்துவப் பேராசிரியர். அவர் இங்கிலாந்து பிரதமரின் பேரன்.

அவர் எழுதிய தத்துவத்தைவிட அவர் ஆங்கில நடை ஆற்றொழுக்காக அமைந்ததால் தத்துவத்திற்கு இல்லாத நோபல் பரிசை அவருக்குரிய ஆங்கிலப் புலமைக்கு அளித்தனர்.

வேறொருவர் எழுதிய நூல் உலகை இன்று அடியோடு சோஷலிஸப் பாதைக்கு மாற்றியது.

இத்தனை பேரும் ஓர் அந்தப்புரம் வைத்திருந்தனர்.

மேதாவிலாசமும், நடத்தையும் வேறு என்று அதை உலகம் புறக்கணித்து அவர்கள் பெருமையை ஏற்றது.

எவர் வேண்டுமானாலும் (irrational) அறிவுக்குப் பொருத்தமில்லாமல் பேசலாம். இவர்களில் ஒருவரும் அப்படிப் பேசக்கூடாது. இவர்களில் ஒருவர் ஆயுளில் குளித்ததேயில்லை.

அது அவர் நாட்டுப் பழக்கம்எனக் கொள்ளலாம்.

ஆனால் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லை இவர் போன்றவர் ஒருவர்கூட, ஒரு முறைகூடப் பேசக்கூடாது.

அப்படிப் பேசினார்கள்.
அது மன்னிக்க முடியாதது.
எனக்குப் பெரியவர்கள் குறையைப் பற்றிப் பேசுவது நோக்கமன்று. அவர்களிடம் இது இருப்பதால், நம்மிடமில்லைஎனக் கூற முடியாது.

அதைக் களைவது அவசியம்.
அதுபோன்ற செய்கை மனிதனைப் பூரிப்படையச் செய்யும். அர்த்தமற்ற பூரிப்பு, நம்மை அர்த்தத்திலிருந்து விலக்கும்.

மனம் அதை நாடுவதையும் நாம் அனுமதிக்கக்கூடாது.

இம்முறையைக் கைக்கொள்ள முயன்றால் நம் சுபாவம் நம்மை மீறுவது தெரியும். ஒரு முறையும் கட்டுப்படாது.

முழுவதும் கட்டுப்படுவது அவசியம்.

---------------------------------------------------------------------------------

முறை:


உன் சுபாவத்தை சுட்டிக்காட்டும் உடற்குறை சிறியதானாலும் அதை அகற்ற முயல வேண்டும்.


முறைக்கான விளக்கம்:

நம்வியாதி நம்குணத்தைக் குறிக்கும்.

அளவுகடந்து உணர்ச்சியில் பயம் உள்ளவர்க்கு ஏராளமாகத் தும்மல் வரும்.

பாசம் அதிகமானவர்க்கு மலச்சிக்கலுண்டு.

சிடுமூஞ்சிக்கு வயிறு எரியும் வியாதி வரும்.

திடீரென ஜுரம் வருவது insecurity பாதுகாப்புப் போய்விடும் என்ற பயத்தால் வரும்.

உடல் உள்ள மரு, மச்சம் ஆகியவை குறிப்பிட்ட துர்அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

பெற்றோர், உடன்பிறந்தோர் மரணத்தைக் குறிப்பவை - மச்சம் - உண்டு.

வறுமையைக் கைரேகை காட்டும்.

தனரேகை அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

வறுமைக்கேயுரியவர் - தரித்திரம் - அன்னையை ஏற்றுச் செல்வம் பெற்றால், தனரேகை உற்பத்தியாகும்.

ரேகை நம்முள் ஆழத்திலிருப்பது.

வியாதி லேசானது.

பிரார்த்தனையாலும், குணத்தை மாற்றுவதாலும், மனம்மாறச் சம்மதிப்பதாலும் உடற்குறை - மலச்சிக்கல், மச்சம் - குறையும், மறையும்.

ஏதாவது ஒரு விஷயம் அப்படி நம் முயற்சியால் மாறினால் இப்பயிற்சி பலன் தரும்.

தீயசக்தியின் ஆக்ரமிப்பில் உள்ளவர் கண்மூடினால் அது தொடர்ந்து சிமிட்டும்.

சர்க்கரை வியாதி, B.P. பிரார்த்தனையால் குணமாகியிருக்கிறது.

Kidney sone சிறுநீரகக் கல் பிரார்த்தனையால் மறைந்துள்ளது.

கோபம் தன் குறியை உதடு துடிப்பதில் காட்டும்.

ஏதாவது ஒரு மச்சத்தை அடிக்கடி சமர்ப்பணம் செய்தால் அது மறையும்.

அன்னையிடம் வந்து நாளானால் பல மச்சங்கள் மறைந்தது தெரியும்.

Ulcer வயிறு எரிவது சிடுமூஞ்சித்தனத்தால்;

குணத்தை இதமாக, இனிமையாக மாற்றினால் ulcer இருக்காது.

வியாதியை, சமர்ப்பணத்தால் விலக்குவது பெரியது.

ஒரு கை விரல் படபடப்பது tension படபடப்பு இருப்பதால்;

முயன்று படபடப்பை விலக்கினால் கை ஆட்டம் குறைந்து, மறையும்.

திடீரென முழுவதும் மறைவதும் உண்டு.

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் (vital) குணத்தோடு அதிகத் தொடர்பு உள்ளவை.

பயம் உள்ளவர்க்கு வயிற்றுப்போக்கு எழும்.

பயத்தைத் தைரியமாக மாற்றினால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வியாதியைக் குணப்படுத்துவது வேறு; குணத்தைக் குறிக்கும்

வியாதியைக் குணப்படுத்துவது வேறு.

எந்த முயற்சிக்கும் பலன் உண்டு.

இந்த முயற்சிக்குப் பெரும்பலன் உண்டு.

எதுவும் செய்யாவிட்டாலும் அன்னையை அறிந்தபின் ஏராளமான பலன் தொடர்ந்து வந்து நிறையும்.


-----------------------------------------------------------------------------------
முறை:


வெட்கத்தைக் கடந்த மனநிலையை நாடு.

முறைக்கான விளக்கம்:

கோபிகைகள் வெட்கத்தைவிட்டு கிருஷ்ணனை நாடினர்.

மனிதன் விலங்காக இருந்து மனிதனாக மாறியபொழுது முதல் பெற்ற உணர்ச்சி வெட்கம்.

இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள தடைகள் சொத்து, குடும்பம், பாசம், தர்மம், ஆசை என்பவை. வெட்கம் அவற்றைக் கடந்தது.

அனைத்தையும் விடலாம். வெட்கத்தை விட முடியாது.

அதையும் விட்டவனுக்கே இறைவன் தரிசனம் உண்டு.

இதை ஏற்கும் மனம் பெரியது.

இதே கருத்தை வாழ்வை இலட்சியமாக நடத்துபவனுக்குப் பொருத்திக் கூறுவது இக்கட்டுரை.

வெட்கப்படுபவர்க்கு மேடையில் நின்று பெறுபவையில்லை.

பலரைச் சந்திக்க உடல் வெட்கப்படுபவர்க்கு அப்பிரபலமில்லை.

அடுத்த நிலையில் உணர்ச்சியின் வெட்கம்.

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்பதும் நாவிற்கு வெட்கப்படக் கூடிய குறை என்பது குறள். அது நம் வேதம்.

அனுசுயாவும் தன் வெட்கத்தைக் காப்பாற்றும் வகையில் திருமூர்த்திகளை வென்றாள்.

சுதந்திர இயக்கத்திற்குப் பணம் வசூல் செய்ய வெட்கப்பட்டிருந்தால் சுதந்திரம் வந்திருக்காது.

1920 வாக்கில் குடும்பப் பெண்கள் பாட கூச்சப்படுவார்கள். நடனம் ஆடுவது என்ற பேச்சேயில்லை. அது தேவதாசிக்குரியது என்பது அன்றைய கருத்து.

ருக்மணி அருண்டேல் அதை மீறி கலையை வளர்த்ததால் இன்று நடனக்கலை வீடுதோறும் முழங்குகிறது.

எந்த இலட்சியத்தை நிலைநாட்டவும் வெட்கம் தடை.

எவரும் செய்யாதவற்றைச் செய்ய வெட்கப்படுபவருக்கு எந்த இலட்சியமும் இல்லை.

அன்னை முறைகளும், வழிகளும் எவரும் பின்பற்றாதவை.

அவற்றுள் சிலவற்றைப் பின்பற்ற வெட்கப்பட வேண்டும்.

திருமண விழாவுக்குப் போய் வந்தபின் 1 ஆண்டு தியானம் கரையும்.

இருந்தாலும் உறவினர் அவசியம் என்பவருண்டு.

1 ஆண்டு தியானப்பலனை இழக்க விரும்பாவிட்டால் திருமணங்களுக்குப் போக முடியாது. போகாமல் சமூகத்தில் பழக வெட்கப்பட வேண்டும்.

திருமண விழாவிலும் தியானப் பலனழியாமலிருக்கும் நிலை அரிது.

திருமணங்கட்குப் போகாவிட்டால் பலரும் பலவகையாக நினைப்பார்கள்.

அவை மானம் போகும் விஷயங்களாகவுமிருக்கும்.

இவரை எவரும் அழைக்கமாட்டார்' எனவும் நினைப்பார்கள்.

வெட்கத்தைக் கடந்த மனநிலை வாராமல் வெளியுலகில் தைரியமாகப் பழகமுடியாது.

மனம் வெட்கத்தைக் கடந்தால், வெட்கப்படக்கூடிய நிலை எழாது.




.............................தொடரும்.

Read the previous Part of this Series : (Yoga Sakthi in our Life) யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 24


Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, 
         

No comments:

Post a Comment