Pages

Wednesday, September 25, 2013

பொறுமையின் பெருமை

-திரு கர்மயோகி அவர்கள்


மேல் நாடுகள் நம்மைவிட அளவுகடந்து சாதித்ததாக நாம் நினைக்கின்றோம். ஆன்மீகத் துறையில் நாம் சாதித்ததாக மேல் நாட்டார் நினைக்கின்றார்கள். வசதியாக வாழ்பவனை பிழைக்க முடியாதவன் தான் சாதிக்காததை சாதித்ததாக அறிகிறான். பல தொண்டர்களில் ஒருவன் தலைவனானால், மற்றவர் அவன் சாதனைப் போற்றுகின்றனர். கல்லூரியின் ஒரு ஆசிரியர் IAS பாஸ் செய்து போய்விட்டால், அதைப் பெரும் சாதனையாகப் பாராட்டுகின்றனர். இவை சாதனையின் பல நிலைகள்.

திறமையாலும், தலைமையாலும், அறிவாலும், உழைப்பாலும், இவற்றின் கலப்பாலும் சாதித்தவை இவை. மேற்சொன்ன அத்தனை சாதனைகட்கும் அடுத்த கட்ட உயர்வுண்டு.

அவ்வுயர்ந்த சாதனையைப் பொறுமை பெற்றுத் தரும்.

பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள். உழைப்பாளி சம்பாதித்தால், பொறுமையான உழைப்பாளி அதிகமாக சம்பாதிப்பான். அறிவுள்ளவன் IASபாஸ் செய்தால், அத்துடன் பொறுமையுள்ளவன் மந்திரியாவான்.

எந்த காரியத்தை முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.

அதை சிறப்பாக முடிக்க திறமையுடன் பொறுமையும் வேண்டும்.



பொறுமை எப்படி எழுகிறது ?

1. விபரம் தெரிந்தால் பொறுமை உற்பத்தியாகும்.

2. அனுபவம் பொறுமையைத் தரும்.

3 உஷாராக இருப்பது பொறுமையைப் பெற உதவும்.

4. மனம் உறமாக இருந்து, உடல் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியுமானால், பொறுமை வரும்.

5. சமத்துவம் (equality)யை உற்பத்தி செய்ய முயன்றால் முன் நிலையில் பொறுமை எழும்


வாழ்வுக்குரியது அவசரம்

தவத்திற்குரியது பொறுமை

தெய்வீக வாழ்விக்குரியது பூரணப் பொறுமை.


1.  செயலை சமர்ப்பணம் செய்

உதாரணமாக கார்க்கைத் திறப்பது - எப்பொழுது கார்க்கைத் திறக்க முயன்றாலும் எனக்கு எரிச்சல் வரும். சில சமயங்களில் கையைக் கிழித்துக் கொள்வேன். ஒரு முறை பாட்டிலே விழுந்து உடைந்து விட்டது. நல்லபடியாக திறந்த சமயங்களிலும் திறந்தபிறகு எரிச்சல் எரிச்சலாக வரும் என்பவர் கார்க்கைத் திறந்தபின் அரை மணி நேரத்திற்கு எரிந்து விழுவார். அதைவிட முக்கியமானது.

- அந்த பாட்டிலை அடுத்தாற்போல் அவர் எடுக்கும் தொறும் அவருக்கு காரணமின்றி எரிச்சல் வரும்.

- எவர் அதை எடுத்தாலும் படபடப்பு வரும்.

- கார்க்கைத் திறக்க முயலும் முன் அன்னையை சற்று நினைவு கூர்ந்தால், மனம் அமைதியடையும். கவனித்துப் பார்த்தால் அந்த அமைதி மனத்திலிருந்து கைக்குப் பரவும் செயலை சமர்ப்பணம் செய்து கார்க்கைத் திறக்க முயன்றால் பழைய அனுபவத்திற்கு எதிராக கார்க் கழன்று வரும். அத்துடன் எரிச்சலின் சுவடு இருக்காது. இந்த பொறுமை அப்பாட்டிலை எடுக்கும் தொறும் மீண்டும் வருவதைக் காணலாம்.

2. குறை கூறுதல் : நம் மனம் முழுவதும் பலகுறைகளால் நிரம்பியுள்ளது. அதில் முதன்மையானது நம் மீதுள்ள குறை. பெற்றோர் மீதும், பிள்ளைகள், கணவன், மனைவி, நண்பர்கள், மற்றவர் மீதும் குறையில்லாதவரில்லை. குறை கூறுவது தனி விஷயம். பொறுமைக்கும் குறை கூறுவதற்கும் உள்ள தொடர்பு மட்டும் இங்குள்ள விஷயம். பொறுமையில்லாமல் நாம் ஒரு குறையை கூறினால், அது அதன்பின் நிரந்தரமாக நம் மனதிலிருக்கும். அப்படி நிரந்தரமாக நம் மனதில் தங்கும் குறைகள் நம் தெம்பை எடுத்துக் கொள்வதால், நாம் சாதிப்பது பாதிக்கப்படும்.

- அவசரப்பட்டால், விவரம் தெரியாது, அல்லது தவறாகத் தெரியும்:

ஒரே பெயர் உள்ள இருவர் வேலை செய்யுமிடத்தில் ஒருவர் செய்தியை அடுத்தவர் செய்தியாக அறிந்து ஏற்படும் குழப்பங்கள் எழுவதுண்டு. அதுவே தவறான செய்தியானால், முதலாளிக்கு பொறுமையில்லாவிட்டால், விசாரிக்கும் அளவுக்கும் பொறுமையில்லாவிட்டால், தவறு செய்யாதவர் மீது தண்டனையை ஏற்றி பிறகு அதன் வழியே போய் அவதிப்பட்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்த பின்னும் முதலாளிக்கு மனத்தில் ஏற்பட்ட எண்ணம் முழுவதும் மாறாது. அதனால் அவருடன் முதலாளிக்குள்ள உறவு பாதிக்கப்படும். ஸ்தாபனம் சற்று பலஹீனமாகும்.

- பொறுமையாக கேட்டுக்கொள்ள முடியாத அதிகாரி, தம்மை புகழ்ந்து பேசவந்தவர் தெளிவில்லாமல் பேசும்பொழுது தம்மைக் குறை கூறுவதாக நினைத்து ஒரு புயலைக் கிளப்பிவிடுவார்.

- நண்பரை நாம் அதிகமாக விரும்பினாலும், நம் கருத்தை அவர் ஏற்காத இடத்தில் மனத்தில் குறையிருக்கும். 50 விஷயத்திலுள்ள நட்பைவிட இந்த ஒரு விஷயத்திலுள்ள

குறையே முக்கியமான நேரங்களில் உறவை நிர்ணயிக்கும்

3. ஆர்வமான வேலைகளைச் செய்யும் பொழுதுள்ள அக்கறை பொறுமையாகாது. அது ஆர்வமாகும். ஆர்வமற்ற வேலைகளைச் செய்யும்பொழுது தான் அது நம் பொறுமையை சோதிக்கும் அன்னையின் சட்டம். ஆர்வமான வேலையை நாடாமல், உள்ள வேலையில் ஆர்வம் காண்பிக்க வேண்டும் இது பொறுமையை சோதிக்கும். அன்னை மீது நம்பிக்கையோடு முயன்றால் பொறுமையை உற்பத்தி செய்யும்.

4. பழி வாங்கும் எண்ணம். இது பொறுமைக்கு எதிரி. உள்ள பொறுமையையும் அழித்துவிடும். ஏன் பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகிறது. நம்மை ஒருவர் நஷ்டத்திற்குள்ளாக்கியிருந்தாலும், கஷ்டத்தை கொடுத்து இருந்தாலும், அது ஏற்படுகிறது. நமக்கு வலிமையிருந்தால் அவர்களால் நஷ்டம், கஷ்டம் ஏற்படுத்த முடியாது. வலிமையில்லாததால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதே இதனுடைய வேர். இன்று ஒருவர் அதை நினைவு படுத்தினாலும், நமக்கே நினைவு வந்தாலும், எப்படி பழிவாங்கும் மனநிலையைவிட முடியும் என்று படித்தாலும்,

அதைக் கேட்டுக் கொள்ளவோ, சிந்திக்கவோ பொறுமை இருக்காது. பொறுமையாக கேட்டால், யோசனை செய்தால், நம் தவறு புரிய சந்தர்ப்பம் உண்டு. அந்த மனுஷனைப் பற்றிப் பேசாதே. அந்த விஷயத்தைக் கிளப்பாதே. எனக்கு தாங்காது என்பதே பொதுவாக இந்நேரம் எழும் பதில்.

பொறுமையைக் கைக்கொண்டால் விஷயம் புரியும், புரிந்தால் தவறான மனப்பான்மை விலகலாம். அது விலகினால் அன்னையை நெருங்கலாம். இதற்கெல்லாம் உதவும் கருவி பொறுமை.


பொறுமை அன்னையை நெருங்கும் கருவி.

பொறுமை மனத்தூய்மையை அளிக்கவல்லது

பொறுமை நம்முள் இறைவன் உறையும் கோயில்.




No comments:

Post a Comment