Pages

Thursday, July 25, 2013

பேரம் பேசுதல் என்ற சுபாவம் அன்னை அன்பர்களுக்கு உகந்ததா?

பேரம் பேசுதல் என்ற சுபாவம் அன்னை அன்பர்களுக்கு உகந்ததா? - திரு. கர்மயோகி அவர்கள்

அன்னை முறை பெரிது; அன்னையை மட்டும் நம்பி நடக்க வேண்டுமென்பது. நாம் மாற்றத்தை நாடுகிறோம், சுபாவத்தை மாற்ற முயல்கிறோம் என்பதால் நம் சுபாவம் மாறும் வகையில் நாம் எதிரியிடம் பழக வேண்டும்.

நமக்குப் பதிலாக ஆன்மாவை (அன்னையை) வேலை செய்யச்சொன்னால், ஆன்மிகச் சக்தி எழுந்து செயல்படும். அவர் நம்மைத் தேடி வருவார். நாம் பேரம் பேசவேண்டியதை, நாம் கேட்பதற்கு முன் கொடுப்பார்.

அன்னையின் பொது முறை காரியத்தை முடிக்கும். நம் மாற்றத்திற்கேற்ற அன்னை முறை காரியத்தை முடிப்பதுடன், அதன் மூலம் மாற்றத்தையும் தரும்.

பேரம் பேசும் சந்தர்ப்பம் வந்தால், எதிராளியின் சௌகரியங்களையும், தேவைகளையும் ஆராய்ந்து பார்த்துப் பேசும் பழக்கத்தை மேற்கொள்ளுதல் நலம்.

பேரம் பேசும் மனநிலை உயர்ந்த மனப்பான்மைக்கு எதிரி.

உயர்ந்த மனப்பான்மை என்பது, கேட்டதைக் கொடுப்பது, அதுவும் கேட்கும் முன் கொடுப்பது, கேட்பதைவிட அதிகமாகக் கொடுப்பது. இவை அன்னையின் போக்கு. பேரம் என்பது, எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு குறைவாகக் கொடுக்க முயல்வது. இவை எதிரெதிரான நோக்கங்கள். நாம் அன்னையை நெருங்கிவர வேண்டுமானால் பேரம் பேசும் மனநிலையை விட்டுவிட வேண்டும். இன்றைய உலகில் பேரம் பேசாவிட்டால், நாம் சீக்கிரம் திவால் ஆகி விடுவோம். நம் சம்பளம் முதல் வாரத்தில் செலவாகும். பேரம் பேசக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடையவர் பேரம் பேசாவிட்டால், அதற்குப் பதிலாக நாம் நஷ்டப்படாமலிருக்க ஒரு வழி சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்.

நடைமுறை வாழ்வில் இதற்குப் பதில் இல்லை. ஆனால் பதிலேயில்லை என்று சொல்ல முடியாது. பதிலை அறிய நாம் பேரத்தின் உட்கருத்தை அறிய முன்வர வேண்டும்.

பேரம் பேசுவதன் மூலம் நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோம்? அநியாய விலைக்கு வாங்கக் கூடாது. நம் பொருளை அநியாயமாக இழக்கக் கூடாது என்று எதிர் பார்க்கின்றோம். இதற்கு, நமக்குத் தேவையானது வலிமை.

மார்க்கட்டில் ஒரு பொருளின் விலையை அதன் தரம், அடக்க விலை, பயன் ஆகியவற்றை மட்டும் கொண்டு நிர்ணயிப்பதில்லை. விற்பவர் யார்? ஏழை விற்றால் பொருளுக்கு விலை குறைவு. பணக்காரனிடமிருந்தால் அதே பொருளுக்கு விலை அதிகம். மார்க்கட் நிலவரப்படி ரூ.5000 பெறுமான சொத்தை, திவாலானவன் விற்பதால், ஏலம் எடுப்பதற்கு எவரும் முன் வரவில்லை. ரூ.1200 கடன் கொடுத்தவர் தம் கடனுக்காக அந்தச் சொத்தை ஏற்கவும் மறுத்தார். விலை விற்பவனைப் பொருத்தது. விற்பவன் ஏழையானால், அல்லது வெளியூர்க்காரனானால், அல்லது அவசரப்பட்டால், சொத்தின் விலை பாதியாகும். இதுவே பேரத்தின் உள்ளுறை உண்மை.

வலிமை என்பது பணத்தாலும், அந்தஸ்தாலும் வருவது. நமக்கு அதே வலிமை அன்னையால் வரும். அது பொறுமை, நிதானம் தெளிவு மூலமும் வரும். மனம் தெளிவு பெற்று, நிதானமாகப் பொறுமையாய்ச் செயல்பட்டால் அன்னை அதன் மூலம் பேரத்தில் நமக்கு வலிமையைத் தருகிறார் என்பதை பக்தர்கள் பார்க்காத நாள் இல்லை.

பெரிய உத்தியோகத்திலுள்ள நண்பரை அணுகி, உதவி கேட்டால் கொடுப்பாரா என்ற நிலையில், நண்பரை அணுகியவுடன், மனம் அன்னைக்குரியதாக இருந்தால், என்ன வேண்டும் என்று சொல்லுங்கள், செய்கிறேன் என்றவர் செய்த முறை தமக்கே செய்து கொண்டதைப் போலிருந்தது. மேலதிகாரிக்கு அவர் கீழ்ப்படிதல்போல் தாழ்ந்த பதவியிலுள்ள பழைய நண்பருக்கு உதவினார்.

காய்கறி வாங்க கொத்தவால் சாவடிக்குப் போன பெண்மணி சில நண்பர்களுடன் சென்றார். எல்லோரும் பேரம் பேசினர். இவர் பேரம் பேசவில்லை. வெண்டைக்காய் 1 கிலோ வாங்கினார். மறுநாள் சமையல் காய் மிகப் பிஞ்சாக, இனிமையாக இருந்ததை, இவர் கண்டார். மற்றவர்கள் வாங்கியதில் ஒரு பகுதி முற்றல், மீதியை உபயோகப்படுத்தினர்.

பேரம் என்பது பேச்சு முறை.
மனம் தெளிவானால், வலுவாக இருக்கும்.
அன்னைக்குரியவை நிதானம், பொறுமை.
பொறுமையும், நிதானமும் வலிமையைத் தரும்.
வலிமை நியாய விலையைப் பெற்றுத் தரும்.
பேரம் பேசும் அவசியம் அன்பர்க்கில்லை.

No comments:

Post a Comment