Pages

Tuesday, June 4, 2013

சிறு கதை : அன்பர் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நாள் (மலர்ந்த ஜீவியம் Feb - 2002) தமிழாக்கம் : N. அசோகன்.


பரிணமிக்கின்ற ஒரு ஜீவனின் வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு நாள் நிகழ்ச்சிகள்

“அன்னை இலக்கியம்”

பரிணமிக்கின்ற ஒரு ஜீவனின் வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு நாள் நிகழ்ச்சிகள்

(ஆங்கிலக் கதை Mr.Roy Posner என்ற அமெரிக்கரால் எழுதப்பட்டது. தமிழாக்கம் N. அசோகன்.)

       (Growth Online என்ற இணையதளத்தில் பர்சனாலிட்டி வளர்ச்சி என்பது பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகளை விளக்கும் வகையில் ஒரு கற்பனையான கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கின்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.)

       சென்னை மாநகரத்தில் அடையாற்றில் குடியிருந்த சாந்தி என்ற இளம் பெண் ஒரு நாள் காலை தூக்கம் கலைந்து படுக்கையிலிருந்து எழுந்தபொழுது திடீரென்று அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாக உடம்பில் தெம்பு இருப்பது தெரிந்தது. பொதுவாக ஒரு கப் காப்பி குடித்தால்தான் அவளுக்குக் காலை சோம்பலிலிருந்து விடுபட முடியும்.

       இந்த எனர்ஜியை அவளுக்கு வழங்கியது எது? அவளுடைய வேலையைச் செய்வதால் அவளுக்கொரு எனர்ஜி கிடைத்திருப்பது அவளுக்குத் தெரியும். ஒரு சில மாதங்களுக்கு முன்னால்தான் தனக்கேற்ற வேலையைச் சிரமப்பட்டுத் தேடிக் கொண்டிருந்தாள். அச்சமயம் மூன்று மாதத்திற்குள் தன்னுடைய கரியரில் (career) அடுத்த கட்டத்திற்கு உயர்வதென்று தீர்மானித்து இருந்தாள். அப்படி முன்னேறுவதற்கான வழிமுறைகள் உண்டு என்றொரு கருத்தை கேள்விப்பட்டிருந்தாள். அவ்வழி முறைகளைக் கடைப்பிடித்து தன் பணிநிலையை உயர்த்துவதென்று தீர்மானித்தாள்.

       முதற்படியாக மேனேஜ்மெண்ட் துறையில் பல புதிய திறமைகளை வளர்த்துக் கொண்டாள். அப்படிக் கற்றுக் கொண்டவைகளில் project management skills and software skills இரண்டும் அடங்கும். அதன் பிறகு இத்துறையில் தனக்கேற்ற பதவியை அடைந்தே தீர்வதென்று தீர்மானித்து, அதற்கேற்றபடி தீவிரமாக வேலை தேடுவதில் இருந்த தயக்கத்தை விடுவதென்று மனதிற்குள் முடிவு செய்த பிறகு, தனக்கெல்லாம் சரியாக நடப்பதைக் கண்டாள். இதனால் அவளுடைய பணியில் அவளுக்கொரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அப்பட்சத்தில் அன்று காலை அவளுடைய எனர்ஜி லெவல் அதிகமாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதுபோக உண்ணும் உணவில் மாவு சத்தைக் (carbohydrate) குறைத்து அதன் விளைவாக 20 பவுண்டு தன்னுடைய எடையையும் குறைத்திருந்தாள். மேலும் தன்னுடைய துணிமணிகளை அதிகரித்துமிருந்தாள். இவை எல்லாம் சாந்தி தன்னைத் தயார் நிலையில் வைத்திருந்தாள் என்பதைக் காட்டுகின்றன.

       சாந்தி குளித்துவிட்டு, தான் புதிதாக வாங்கிய துணிமணிகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள். Integral Net என்ற தன்னுடைய அலுவலகத்திற்கு அன்று வந்திறங்கியபொழுது ஹாலில் தூரத்தில் தன்னுடைய சக பணியாளர் லலிதாவைக் கண்டு கையாட்டினாள். முதலில் அந்த வேலைக்கு வந்திருந்தபொழுது இந்த லலிதாவுடன் சேர்ந்து பணியாற்றுவதில் தனக்கொரு டென்ஷன் வருவதை உணர்ந்திருந்தாள். அதாவது லலிதாவைப் பற்றிய ஏதோவொன்று சாந்தியை சங்கடப்படுத்தியது.

       ஆனால் அதிர்ஷ்டவசமாக இம்மாதிரியான எரிச்சலிலிருந்து விடுபட்டால் நல்ல பலன் கிடைக்குமென்றவொரு கருத்தைத் தான் கேள்விப்பட்டது அவளுக்கு நினைவிற்கு வந்தது. உண்மையில் சென்ற மாதம் ஒரு நாள் லலிதா மேல் தனக்கு எரிச்சல் வந்ததும், அதைத் தான் கட்டுப்படுத்தி பிறகு ஓரளவிற்கு நல்லெண்ணமாக மாற்றியதும் நினைவிற்கு வந்தது. (மேலும் அதைப் பற்றிச் சிந்தித்து பார்த்தபொழுது, நல்லெண்ணத்தை கொண்டு வந்த அன்றே அவளுடைய மேலதிகாரி அவளை அழைத்து அக்கம்பெனியின் மிகப் பெரிய project-ற்கு அவளை project மேனேஜராக நியமிப்பதாகச் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது). அதன் விளைவாக அவளுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. சம்பளமும் உயர்ந்தது. அச்சமயம் தன் மனோபாவம் மாறியதற்கும் புதிய வாய்ப்பு வந்ததற்கும் தொடர்பிருக்கிறது என்று ஏற்றுக் கொள்வது சிரமமாகவிருந்தது.

       ஆனால் இப்பொழுது மனோபாவத்தை மாற்றுவதும் அதற்குண்டான Life response விளைவுகளைப் பார்ப்பதும் சாந்திக்குப் பழக்கமாகிவிட்டது. தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தன் வேலை சம்பந்தமான நிகழ்ச்சிகளில் இத்தொடர்பைச் சில தடவைகள் பார்த்திருக்கிறாள். ஒவ்வொரு தடவையும் தன்னுடைய எரிச்சலை வென்றபொழுது நல்லது நடந்ததையும், அந்நிகழ்ச்சிகள் அதிசயம்போல நிகழ்ந்ததையும் கவனித்திருக்கிறாள்.
       இப்பொழுது தவறான மனோபாவத்தை முறியடிப்பதை விவரமாக கடைப்பிடிக்க முடிவு செய்ததை நினைவு கூர்ந்தாள். இனி எரிச்சல் தலையெடுக்கும்பொழுதெல்லாம் அடுத்தவருடைய குறையைப் பற்றி நினைக்காமல், இவ்விஷயத்தில் தன்னுடைய குறையென்ன என்று சிந்திப்பது என்று முடிவு செய்திருந்தாள். இத்தகைய முடிவு, புதிய சூழ்நிலைகளை நல்லவிதமாக சமாளிக்க அவளுக்கு உதவியாக இருந்தது.

       (மேலும் இத்தகைய முடிவெடுத்தபின் தன்னுடைய மனநிலையில் அமைதி அதிகரித்திருப்பதையும் உணர்ந்தாள்). உதாரணமாக குமார் என்ற சக பணியாளர் ஒரு நாள் அவளைத் தேடி வந்து அளவிற்கு அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தபொழுது, எரிச்சல்படாமல் வேலையைத் தொடர்ந்து அவளால் செய்ய முடிந்தது. உண்மையில் தன் மனநிலையை அன்று மிகவும் மாற்றி குமார் வழங்கும் யோசனைகளை ஏற்குமளவிற்கு அன்றவள் நடந்து கொண்டாள். தன்னுடைய எரிச்சலின் காரணமாக குமாரை விலக்காமல், அதற்கு பதிலாக தான் வளர்த்துக் கொண்ட அமைதியின் காரணமாக குமார் வழங்கிய புதிய யோசனைகளைக் கேட்டுக் கொள்ள முடிந்ததை உணர்ந்தாள். (பின்னால் அந்த யோசனைகள் அந்த பிராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு எவ்வளவு உதவியாக இருந்தது என்பதையும் உணர்ந்தாள்.)

       திட்டத்தின் துவக்கத்தில் அவளுக்குப் பிடித்தமில்லாத வேலைகள் கொடுக்கப்பட்டபொழுது, அவற்றை அவள் அலட்சியம் பண்ணியிருந்தாள். பின்னர்தான் அந்த வேலைகள் அத்திட்டம் வெற்றிபெற எந்த அளவிற்கு உதவியாகவிருந்தன என்பதை அவளால் உணர முடிந்தது.

       இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்பொழுது ஒரு கட்டத்தில் அவள் Growth Online உடைய website அதாவது இணையதளத்தைப் பார்வையிட்டு நம்முடைய மறுப்புகளை (reluctance) முறியடிக்கும் அவசியத்தைப் பற்றிப் படித்திருந்தாள். பயத்தாலோ, அவ நம்பிக்கையாலோ, அறிவின்மை மற்றும் திறமையின்மையாலோ நாம் சந்திக்க விரும்பாத சூழ்நிலைகளை வாழ்க்கை நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்றறிந்தாள். மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைகளைவிட வாழ்க்கை தானாகக் கொண்டு வருவது மேலும் முக்கியமென்று உணர்ந்தாள். சில சூழ்நிலைகளை துவக்கத்தில் தவிர்த்தபொழுது எப்படி அச்செயல் தனக்குச் சிரமங்களைக் கொண்டு வந்தது என்பதை உணர்ந்த பின்பு, திட்டத்தில் வாழ்க்கை புதிதாகக் கொண்டு வரும் சூழ்நிலைகளில் அக்கறை காட்டினாள். அதாவது சூழ்நிலையைத் தவிர்க்காமல் அதை ஏற்றுக் கொண்டாள். அப்படிச் செய்த பொழுது முன்னேற்றம் அதிகரித்தது. மேலும் எந்த வேலையைச் செய்வதற்குப் பயந்தாளோ அதே வேலை அவள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்தது.

       இந்தளவிற்கு வந்துவிட்ட பிறகு மனோபாவத்தில் மாற்றம் கொண்டு வருவதென்ற விஷயத்தில் சாந்திக்கு உண்மையிலேயே ஆர்வம் பிறந்தது. இப்பொழுது லலிதாவைப் பார்க்கும்பொழுது வெளியில் மட்டுமில்லாமல் தன் மனதிற்குள்ளும் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். Life Response பற்றிய கருத்துகள் வெறும் தத்துவங்களில்லை என்று அவளுக்குப் புரிந்தது. நடைமுறையில் அவளுடைய வாழ்க்கையில் அக்கருத்துகள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தன. (அதுவும் குறிப்பாக மனநிலை மாறும்பொழுது வெளியிலிருந்து மந்திரமாயம்போல் response வருவது அவளுக்கு விந்தையாகவிருந்தது.) இப்படியெல்லாம் சிந்திக்கும்பொழுதே தன்னுடம்பிற்குள் புது எனர்ஜி வருவதை அவளால் உணர முடிந்தது.

       இதே நினைவுகளுடன் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து தனக்கு அன்று “E-mail” வந்துள்ளதா என்று பார்க்க முடிவு செய்தாள். அப்பொழுது உடனடியாக connection button என்பதை அழுத்தாமல், தான் செய்யப்போகும் வேலையை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தாள். சமர்ப்பணத்தைப் பற்றி படித்திருந்ததால் இந்நேரம் அதைச் செயல்படுத்திப் பார்க்கலாமே என்றவளுக்குத் தோன்றியது. சில நிமிடங்கள் கழித்து E-mailஐத் திறந்து பார்த்தபொழுது தன்னுடைய மேற்பார்வையாளர் இடமிருந்து ஒரு செய்தி வந்திருப்பதைக் கண்டாள். அதைத் திறந்து படித்தபொழுது தன்னை ஒரு உயர்மட்ட மீட்டிங்கிற்கு அழைத்திருப்பதை அறிந்தாள். அந்த meeting இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கவிருப்பதையும் அறிந்தாள்.

       மீட்டிங்கிற்குப் போவதைப் பற்றி அவளுக்கு ஒரு பக்கம் தயக்கமிருக்கத்தான் செய்தது. ஏனென்றால் அந்த மீட்டிங்கில் பேசவிருக்கின்ற விஷயங்களைப் பற்றி அவளுக்கு முன்னனுபவம் கிடையாது. இருந்தாலும், சற்று முன்னர் பயன்படுத்திய சமர்ப்பணத்தை மீண்டும் செய்துவிட்டுத்தான் மீட்டிங் நடக்குமறைக்குள் நுழைந்தாள்.
       ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்தபொழுது மீட்டிங் எவ்வளவு நல்லபடியாக நடந்ததென்பதை நினைத்துப் பார்த்து வியந்தாள். மீட்டிங்கில் பேசப்பட்ட விஷயங்கள் எல்லாம் தெளிவாகவிருந்தன. எல்லோரும் ஒத்துழைத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் அந்த மீட்டிங்கில் நிறைய பங்கேற்றாள். அன்னைக்கு சமர்ப்பணம் செய்வது உண்மையிலேயே வேலை செய்கிறதென்பதை நன்றாகவே உணர்ந்தாள்.

       மதிய உணவிற்குப் பிறகு சாந்தி மீண்டும் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய பெரிய திட்டம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபட்டாள். தன்னுடைய Microsoft Project Manualஐத் தேடினாள். அதைக் கண்டுபிடிப்பது சிரமமாகவிருந்தது. அப்பொழுது ரமா என்ற சக பணியாளர் எதேச்சையாக அங்கு வந்தாள். சாந்தி குழம்பிப் போயிருப்பதைக் கவனித்தாள். சாந்தி அவளைப் பார்த்து, ‘இங்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று வருத்தப்பட்டுக் கொண்டாள். ரமா அதைக் கேட்டு அனுதாபத்துடன் புன்னகை செய்தாள். ‘உனக்கு எல்லாம் சுலபமாக இருக்கிறது. ஏனென்றால் நீ எல்லாவற்றையும் முறையாகச் செய்வாய். ஆனால் இவ்விடமோ குப்பையாகவிருக்கிறது’ என்று குறைபட்டுக் கொண்டாள். சாந்தி தன்னுடைய ஆசனத்தில் சரிந்து அமர்ந்தாள். இப்பொழுதே ஏதேனும் செய்ய வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. மீண்டும் Growth Online Websiteஇல் உள்ள personal organisation என்ற பிரிவைப் பற்றி அவளுக்கு நினைவு வந்தது. அப்பிரிவை, தான் மீண்டும் பார்த்துப் படிக்க வேண்டுமென்று தனக்கொரு நோட் போட்டுக் கொண்டாள்.

       ஒரு மணி நேரம் கழித்து தன்னுதவியாளர்கள் இருவரிடமும் தனக்குச் சிறிது அமைதி தேவைப்படுகிறதென்று சொல்லிவிட்டுக் கம்பெனியினுடைய நூலகத்திற்குச் சென்றாள். அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டரின் முன்னமர்ந்து Growth Online Websiteஇல் பர்சனல் ஆர்கனைஷேஷன் என்ற பிரிவிற்கு நேரடியாகப் போனாள். அப்பிரிவில் அவளுடைய கவனத்தை ஈர்த்தவை பின்வரும் விஷயங்களாகும்.

நாமிருக்குமிடம், நாம் செய்யும் வேலை சம்பந்தப்பட்ட பேப்பர்கள் மற்றும் நம்முடைய பணவரவு, செலவு கணக்குகள் என்றிவற்றை நாம் முறைப்படுத்தும் விதம்,
• நம்முடைய நேரம், நம்முடைய வேலைக்காக நாம் போடும் work schedules போன்றவற்றை நாம் கையாளும் விதம்.

       இவ்விஷயங்களை அவள் குறித்துக்கொண்டு இவ்விடங்களில் எல்லாம் தன் வாழ்க்கையில் தவறாகப் போனவற்றை நேர்பண்ணிக் கொள்வதென்று தீர்மானித்தாள். அடுத்த நிமிடம் அவள் நிமிர்ந்து பார்த்தபொழுது குமாரைக் கண்டாள். அவளைத் தேடிக் கொண்டு தான் அங்கு வந்ததாகச் சொன்ன குமார் உனக்கொரு நல்ல செய்தி கொண்டு வந்துள்ளேன். நீ சம்பந்தப்பட்டுள்ள projectஇன் முதற்கட்டம் மூன்று நாள் முன்னதாகவே முடிந்துவிட்டது என்றறிவித்தான். இதைக் கேட்டு சாந்திக்கு சந்தோஷம் அதிகரித்தது. அப்பொழுதுதான் தன்னுடைய செயல்பாடுகளை முறைப்படுத்திக்கொள்ளவேண்டுமென்று தான் தீர்மானத்திருந்ததை நினைவு கூர்ந்தாள். மனோபாவத்தை மாற்றிக் கொள்வது என்று முடிவு செய்யும்பொழுது உடனே Life responseஇல் அது தெரியும் என்று தான் படித்தது நினைவிற்கு வந்தது. இப்படி தன்னுடைய திட்டத்தின் முதற்கட்டம் மூன்று நாள் முன்னதாகவே நிறைவேறியது என்று தனக்கு உடனடியாக கிடைத்த செய்தி தான் படித்ததை உறுதிபடுத்துவதாக அமைந்தது.

       சாந்தி மீண்டும் தன்னுடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பினாள். நடந்த நிகழ்ச்சிகளால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்த அவள் மெதுவாகத் தனக்குள்ளேயே பாட்டுப் பாடத் துவங்கினாள். இருக்கையிலிருந்து எழுந்தவள் மேசையின் ஓரத்தில் காலை இடித்துக் கொண்டாள். கால் உடனே வலித்தது. தன்னுடைய காலுக்கு ஊறு விளைவித்துவிட்டோமோ என்ற பயம் அவளுக்கு வந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு தனக்கு அடிபட்டுவிட்டதென்ற எண்ணத்தை மனதிலிருந்து விலக்கினாள். அதன்பிறகு அடிபட்டதைப் பற்றி தனக்கு வலிக்கவே இல்லை என்றுணர்ந்தாள். மேலும் அடிபட்டதை நினைத்துக் கொண்டிருந்தால் வலி அதிகமான பழைய சம்பவங்களையும் நினைத்துப் பார்த்தாள். இம்மாதிரியே மீண்டுமொரு நாள் இடுப்பில் வலியேற்பட்டபொழுது அதை அலட்சியம் செய்த பொழுது அவ்வலி விலகியதைக் கண்டாள்.

       அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் தன் வாழ்க்கை எப்படித் தன் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறதென்பதை உணர்ந்தாள். வாழ்க்கையின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் கிடைத்த மகிழ்ச்சி அவளுடைய ஜீவனுக்கு மேலும் மெருகேற்றியது. இப்படித் தன் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்வதோடு மேலும் இந்த வாழ்க்கை ரகசியங்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று உறுதி பூண்டாள். அதாவது இதுவரை என்ன சாதித்துள்ளோம், எப்படிச் சாதித்தோம், மேலும் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எல்லாம் அறிய ஆவல் கொண்டாள். Life Responseகளை எப்படிக் கொண்டுவருவது, தினசரி வாழ்க்கையை எப்படி அவற்றால் நிரப்புவதென்றல்லாம் சிந்தித்தாள்.

       இச்சிந்தனைகளுக்குப் பிறகு ஒரு மௌனம் அவளிடம் குடிகொண்டது. எண்ணங்களையும், உணர்வுகளையும் தாண்டிய நிலையிலிருந்த அம்மௌனம் தெய்வ சாந்நித்தியத்திற்கு அவளை அழைத்துச் சென்றது.

No comments:

Post a Comment