Pages

Wednesday, June 5, 2013

நாம் வாழும் இந்த பூமி, தவறாமல் மழை பெற அன்னை அன்பர்கள் செய்ய வேண்டியது என்ன?

- மழை - Article by Sri Karmayogi Avarkal.

அன்னையும் மழையும் 

அன்னை, மழை "overmental gods'' என்ற பெருந் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொல்கிறார். அன்னை இவர்களைத் தாண்டி சத்தியஜீவிய நிலையில் இருப்பவர். அன்பர்கள் மழை வேண்டி அன்னையிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது அன்னை அப்பிரார்த்தனையை நிறைவேற்றும்பொருட்டு மழையை நிர்வகிக்கும் பெருந்தெய்வங்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் அன்னையின் ஆணைக்குப் பணிந்து மழை பெய்ய வைப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மழைக்காக அன்பர்கள் அன்னையிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது எல்லாம் மழை தவறாமல் பெய்தால் மேற்சொன்னபடி பெருந்தெய்வங்களுக்கு கட்டளையிட்டு அன்னை நம்மை மகிழ்விக்கின்றார்என்று நாம் யூகிக்கலாம். ஆனால் பிரார்த்தனை சில சமயங்களில் தான் பலிக்கின்றது; பல சமயங்களில் பலிப்பதில்லை என்னும்பொழுது எந்தக் கட்டத்தில் தடை வருகிறதென்பதை நாமாராயவேண்டும்.

அன்பர்கள் கேட்குமளவிற்கு, கேட்கும் வேகத்தில் மழை வருவதில்லை என்றால் அன்பர்களே மழையில்லைஎன்ற பிரச்சினையை அந்த அளவிற்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டும்.

மழையும், நம் மனோபாவமும் 


மழைஎன்பது இயற்கை நமக்கு வருடந்தோறும் அளிக்கும் கொடை என்றொரு கருத்து பரவலாக மக்களிடையே நிலவி வருகிறது. இயற்கையின் கொடைஎன்ற நிலையையும் தாண்டி மழைஎன்பது இறைவனின் அருளின் வெளிப்பாடு என்றொரு கருத்தை அன்னை வெளியிட்டுள்ளார். மழை அருளின் வெளிப்பாடுஎன்றால் அதை நாம் வரவேற்கக் கடமைபட்டவராகிறோம். மழை பெய்யும்பொழுது நம்மால் வெளியில் போகமுடிவதில்லை என்னும்பொழுது, மழையை நாம் ஒரு தொந்தரவாக நினைப்பதுண்டு. அப்படித் தொந்தரவாக நினைப்பது தவறு என்று இப்பொழுது புரிகிறது. மழைநீர் நம்மேல் பட்டால் சளி பிடிக்குமென்று நாம் குடை பிடித்துக்கொண்டு போகிறோம். அப்படிக் குடை பிடிப்பதுகூட தவறாக இருக்கலாம். கேரளாவில் மக்கள் மழையில் நனைந்துகொண்டே வேலைக்கு சந்தோஷமாகச் செல்வார்கள் என்று ஓர் அன்பர் கருத்து தெரிவித்தார். அங்குப் பெய்கின்ற ஏராளமான மழைக்கு ஏற்றாற்போன்ற மனோபாவத்தை அம்மாநில மக்கள் வெளிப்படுத்துவதை நாமிதிலிருந்து பார்க்கிறோம்.

உணர்ச்சிகளின் சின்னம் தண்ணீர் 

தண்ணீர்என்பது ஆன்மீகத்தில் உணர்ச்சிகளின் சின்னமாக விளங்குகிறது. Water stands for emotions. ஒரு நாட்டில் நீர்வளம் அபரிமிதமாக இருக்கிறதென்றால் அந்நாட்டு மக்களும் மனவளம் மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்றாகிறது. மனவளம்என்பது இங்கு அன்பு, கருணை, பக்தி, நல்லெண்ணம், இரக்கம் போன்ற உணர்வுகளைக் குறிக்கிறது. நீர்வளம் மிகுந்த இடங்களில் பயிர் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும். நன்றாகப் பயிர் விளைகின்ற இடங்களில் மக்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். பசி, பட்டினி இல்லாதபொழுது மக்கள் மனநிலை சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தின் விளைவாக அவர்களுடைய மனவளமும் சிறந்து மேற்கண்ட மாதிரி அன்பு, இரக்கம், நல்லெண்ணம், பக்தி ஆகியவை மேலோங்கி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலும் நாம் இதைப் பார்க்கலாம்.

ஏன் இந்த வறட்சி?

தற்பொழுதுள்ள வறட்சியை life response கண்ணோட்டத்தில் பார்ப்போம். நீர்வறட்சி அதிகமாகியிருக்கிறதென்றால் அதற்கீடாக மனவறட்சி அதிகமாகிவுள்ளதென்றாகிறது. இப்பொழுது எவ்விதத்தில் மனவறட்சி அதிகமாகிவுள்ளதென்பதை பார்ப்போம். அவரவருடைய குடும்பத்தாரிடம் காட்டும் அன்பு, பரிவு, நல்லெண்ணம் போன்றவை பெருமளவில் குறைந்து உள்ளதாகத் தெரியவில்லை. கணவன்-மனைவிஎன்று தம்பதியரிடையே வெளிப்படுகின்ற பரஸ்பர அன்பு மற்றும் பெற்றோர்-பிள்ளைகளிடையேவுள்ள அன்பு ஆகியவை என்றும்போல சகஜமாகவே உள்ளதாகத் தெரிகிறது. பெற்றோர் தம் சிறுபிள்ளைகள்மேல் காட்டுமன்பு குறையவில்லை என்றாலும், வளர்ந்த பிள்ளைகள் வயதான பெற்றோர்மீது காட்டும் அன்பு, அக்கறை ஆகியவை நன்றாகவே குறைந்துபோய்தானுள்ளன.

முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவருவதே இதற்கு போதுமான சாட்சி. சென்னை மாநகரைப்பொருத்தவரை பக்தி வழிபாடு பெருகி வருவதாகத்தான் தெரிகிறது. சென்னையில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில்களுள்ளன. இங்கு தெய்வ வழிபாட்டிற்காக வருகின்ற மக்கள் கூட்டம் பெருகிவருவதைத்தான் நாம் பார்க்கிறோம். கூட்டம் அதிகரித்து இருப்பதால் பக்தி ஆழ்நிலையில் பெருகிவுள்ளதென்று நாம் வைத்துக் கொள்ள முடியாது. தெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனையை மெக்கானிக்கலாக, ஜீவனில்லாமல் செய்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அர்ச்சனை செய்யும்பொழுது நமக்கு நினைவெல்லாம் தெய்வத்தின் மேல்தானிருக்கவேண்டும். ஆனால் அப்படியில்லாமல் தெரிந்தவர்கள் யார், யார் வந்துள்ளார்கள், புதிதாக என்ன புடவை உடுத்தியுள்ளார்கள், என்ன நகை போட்டுள்ளார்கள் என்று கவனிக்கும் பக்தி உள்ளவர்கள் நிறையவுள்ளார்கள். கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம்வரும்பொழுது தெரிந்தவர்களைச் சந்தித்து வீட்டு விஷயங்களைப் பேசுபவர்களும் உண்டு. கார், வேன் என்று எடுத்துக்கொண்டு குடும்பமாக, திருப்பதி சென்று, வசதியான கெஸ்ட் ஹவுசில் நாலைந்து நாட்கள் தங்கியிருந்து, பல ஆயிரங்களை செலவழித்துவிட்டு வருவதைப்பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ளும் பெருமாள் பக்தர்களுண்டு. இப்படி இறைவழிபாட்டில் ஆடம்பரமும் மற்றும் பெருமையுணர்வுகளும், போட்டி மனப்பான்மையும் வந்து கலந்து கொள்வதால் வழிபாட்டிலுள்ள பக்தி மற்றும் புனிதமிரண்டும் பின்னுக்குப் போய் விடுகின்றன.

பொருளை விரயம் செய்தால் அது விலகிப் போகும்



எந்தவொரு பொருளையும் விரயம் செய்தால் அது நம்மை விட்டு விலகிப் போகும் என்பது life response நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பெரிய உண்மையாகும்

. பணத்தை விரயம் செய்தால் வருமானம் குறையும்
மூலப் பொருளை விரயம் செய்தால் தொழிற்சாலைகளுக்கு வரும் ஆர்டர் குறையும்என்பதை அனுபவத்தில் பலர் பார்த்திருக்கின்றனர்
. அதே ரீதியில் இன்று தமிழக மக்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறையாகிவுள்ளது என்றால்
தண்ணீர் நிறைய கிடைத்த காலத்தில் அதை நிறைய விரயம் செய்துள்ளார்கள் என்றாகிறது
. Overhead tank நிரம்பிய பின்னும் தண்ணீரை வழியவிடுவது
தண்ணீர் கசிகின்ற குழாய்களை ரிப்பேர் பண்ணாமல் தொடர்ந்து தண்ணீரை ஒழுகவிடுவது
முனிசிபல் குழாய்களை மூடாமல் மணிக்கணக்காக தண்ணீர் போகவிடுவது
இலவச மின்சாரம் கிடைப்பதால் பம்ப்செட்டுகளை தேவைக்குமேல் ஓடவிடுவது என்று பலவகைகளில் தமிழக மக்கள் தண்ணீர் அபரிமிதமாகக் கிடைத்த நாட்களில் அதை விரயம் செய்துள்ளார்கள்

அந்த கர்மபலனைத்தான் இன்று நாம் வறட்சியாக அனுபவிக்கின்றோம்

தமிழக அரசு மழைநீரின் அருமையை உணர்ந்துமழைநீர் சேகரிப்பு திட்டங்களைத் தமிழகம் முழுவதும் அவசரமாக அமுல்படுத்தியுள்ளது.

நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள கர்மபலனைக் கரைப்பதற்கு இது உதவியாக இருக்கும்.


குடியரசு தினத்தன்று குஜராத்தில் வந்த நிலநடுக்கம் காரணமாக விளைந்த பேரழிவு, பருவமழை தவறுதல் மற்றும் குறைந்துபோதல், காவிரி போன்ற நதிகளில் நீர்வரவு குறைந்துபோதல், கோடைவெப்பம் கடுமையாக அதிகரித்தல் ஆகியவையெல்லாம் பூமாதேவி நமக்கு வழங்கும் எச்சரிக்கைகள் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த எச்சரிக்கைகளை புரிந்துகொண்டு, நம் நாட்டு மக்களும் அரசாங்கமும் மனோபாவத்தையும் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டு, இயற்கைக்கும் பூமாதேவிக்கும் ஒத்துழைக்கும் வகையில் நடந்துகொண்டால், நாமிழந்த மழையெல்லாம் நமக்குத் திரும்பக் கிடைப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment