Pages

Thursday, June 20, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் - 9



ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -9

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பொதுவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வதுபோலத்தான் குறிப்பான சமர்ப்பணமும். அதேபோன்றுதான் தொந்தரவான பிரச்சினையின் சமர்ப்பணமும் என நினைக்கத் தோன்றும். தொந்தரவு வந்து அதைச் சமர்ப்பணம் செய்யும்வரைதான் இந்த நினைவெல்லாம்.

தொந்தரவு பல வகைகளில் வரும். உத்தியோகத்திற்கு ஆபத்து வரும் போலிருக்கிறது; இருமல் வருவதைப் பார்த்தால், டாக்டர் செய்யச் சொல்லும் test எல்லாம் நினைத்தால் T.B. என டாக்டர் சந்தேகப்படுகிறார்; மகனுடைய நடவடிக்கையை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை. இதுபோன்ற தொந்தரவுகள் வந்து பல நாள் ஆனபின் யாராவது "சமர்ப்பணம் செய்தீர்களா?'' எனக் கேட்கும் போதுதான் இத்தனை நாளாகச் சமர்ப்பணம் செய்யவில்லை என்பது நினைவு வரும். தொந்தரவு அஸ்தியில் ஜுரத்தை ஏற்படுத்தியபின் தொந்தரவு மட்டும்தான் நினைவிருக்கும். சமர்ப்பணம் நினைவுக்கு வாராது; அன்னைகூட நினைவுக்கு வாராது; நினைவுபடுத்திய பின்னும் சமர்ப்பணம் செய்யும் நிலையில் மனம் இருக்காது. "என்னை ஒன்றும் தொந்தரவு செய்யாதீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போது சமர்ப்பணத்திற்கெல்லாம் நேரமில்லை. இதெல்லாம் ஒரு வழியாக அடங்கட்டும்'' என்று சொல்லத் தோன்றும். அப்படியும் மீறி சமர்ப்பணம் செய்ய முனைந்தால், சமர்ப்பணம் மூன்று நிமிஷத்தில் மறந்துபோகும். பிரச்சினை ஆயிரம் கோர ரூபங்களில் மனக்கண் முன் தாண்டவமாடும். இந்த நிலையில் என்ன செய்வது? நம் மனத்தை இரண்டாம் பேர்வழியாகச் செய்து அதனுடன் வாதாட வேண்டும். அதனிடம், "எத்தனை முறை அன்னை பெரிய சிக்கல்களிலிருந்து உன்னை விடுவித்துள்ளார்கள்? ஏன் இம்முறை இப்படி பிடிவாதம் செய்கிறாய்? அன்னையை நீ உனக்குத் துணையாக அழைக்காவிட்டால், உனக்கு யார் துணை இருப்பார்கள். உன் மகன் நடத்தை சரியில்லை என்றால், நீ இரவு, பகலாய் கவலையில் மூழ்கினால், அவன் மாறப்போகிறானா? உன்னால் அவனை வெளியில் அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பியபின் அவன் நடத்தை உன் கட்டுப்பாட்டில் இருக்குமா? அவனைத் திருத்த யார் இருக்கிறார்கள்? எவரும் இல்லை என்று சொன்னால், அன்னையாலும் முடியாது என்று பொருள் அல்லவா? அன்னையை அழைத்தால் பிரச்சினை தீரும் என்று உனக்குத் தெரியாதா? மற்றவர்களைப்போல் பிரச்சினையை நினைத்தால், அது தானே வளரும். சமர்ப்பணம் சிரமமானால், முடியாதது என்று அர்த்தமா? எல்லோரும் செய்யும் தவற்றை நீ செய்யலாமா? மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அன்னையை அழைக்க முடிவு செய். அது மட்டுமே சரியான பாதை. அடம் பிடிக்காதே. கவலையைக் கருதாதே. அன்னையை நினைவுகூர். நீயே இப்படி இருந்தால், உனக்கு யார் சொல்வது? எழுந்திரு. அன்னையிடம் வா. மனதை மாற்று'' என்று மனதை அன்னையிடம் செலுத்தவேண்டும். 

தொந்தரவான பிரச்சினை கிளம்பிவிட்டால், மனிதன் நிலையிழந்து விடுவான். அன்னையை மறந்துவிடுவான். நினைவு வந்தாலும், அன்னையிடம் முறையிடும் அளவுக்குத் தெம்பிருக்காது. அந்நிலையில் முதலாவதாகச் செய்ய வேண்டியது மனதை அன்னையிடம் திருப்பி, அன்னை மீதுள்ள நம்பிக்கையைப் புதுப்பித்து, அன்னை நம் பிரச்சினையைத் தீர்ப்பார் என உறுதிபூண்டு, சமர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். இதுவே கடினமான கட்டம். இதைச் செய்துவிட்டால் பெரும்பகுதி வெற்றி கிட்டியதாகும்.

அடுத்த கட்டத்தில் சமர்ப்பணத்தை நினைவு கூரும் அளவுக்குப் பிரச்சினை இடம் கொடுக்காது. பிரச்சினையை ஒதுக்கி வைத்து, எண்ணம், உணர்வு, செயல் ஆகிய மூன்றையும் சமர்ப்பணம் செய்தால்,

பூரண சமர்ப்பணத்தின் கீழ் கொண்டு வந்தால், பிரச்சினை நகர ஆரம்பிக்கும்; தீரும். அப்படியும் தடை இருந்தால் ( past consecration) அப்பிரச்சினையின் பூர்வோத்திரத்தைச் சமர்ப்பணம் செய்தால், பிரச்சினை முழுவதும் கரையும்; பூரணமாக விலகும்.

ஒருவரால் தொந்தரவான பிரச்சினை வந்தபின்னும், அன்னையை நினைவு கூர முடியும் என்றால், அதைச் சமர்ப்பணம் செய்ய முடியும் என்றால், அவரால் செய்ய முடியாதது ஒன்றில்லை எனலாம். இது பெரிய திறன். இத்திறன் கைக்கு வந்தால், அன்னையிடம் பெரிய பேறுகளைப் பெறலாம்.

---------------------------------------------------------------------

வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் சம்பந்தப்பட்டவரை வாய்ப்புதான் (opportunity) மிகவும் கடினம். வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது எளிதன்று; மிகக் கடினம். தொந்தரவான பிரச்சினை வந்துவிட்டால், அன்னையை மறந்துவிடுவோம். அதன் பிறகும் அன்னை நினைவுள்ளவர் சிறந்த பக்தர். வாய்ப்பு அதைவிடச் சிரமம். ஒரு வாய்ப்பு வந்தபின் அன்னை நினைவு இருப்பது அரிது. அதன் பின்னும் அன்னை நினைவு இருந்தால், அவரைவிடச் சிறந்த பக்தர் இல்லை எனலாம்.

தாசில்தார் போன்ற ஆபீசரை முனிசிபல் சேர்மன் நிறுத்தி விசாரித்து, "எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்'' என்று சொன்ன பிறகு, தாசில்தாருக்கு அன்னை நினைவு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மனிதன் சாதாரணமானவன். வழியில் போய்க்கொண்டு இருக்கும் ஒருவனைக் காரில் அவன் போகுமிடத்திற்குக் கொண்டு போய்விட்டால், பாங்க் ஏஜெண்ட், வாடிக்கைக்காரருக்கு "உங்களுக்குப் பாங்கில் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணம் கொடுக்கலாம்'' என்று சொல்விட்டால்; கதாசிரியரைப் பார்த்து ஒரு புத்தகம் வெளியிடுபவர், "உங்கள் கதையை நான் வெளியிட விரும்புகிறேன்'' என்றால்; நம் தெருவில் வசிக்கும் பார்லிமெண்ட் மெம்பர் தம் வீட்டு


விருந்துக்கு அழைத்துவிட்டால்; மனிதன் தன் நிலையிழந்துபோகிறான். அன்னை மட்டும் அல்லர், அவனுக்கு எல்லாம் மறந்துபோகிறது. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது என்ற பிரச்சினைக்கு இடமில்லை. அன்னை இவை போன்ற வாய்ப்புகளை மட்டும் கொடுப்பதில்லை. மலை போன்ற மனத்திடம் உள்ளவனுக்கும், நிலைகுலையும்படியான வாய்ப்பை அளிப்பது அன்னையின் வழக்கம். அன்னையின் இராஜ்யத்தில் பள்ளி ஆசிரியரை, துணைவேந்தர் வீடு தேடி வந்து பார்ப்பார். பிரதம மந்திரியின் அந்தரங்க நண்பர் எளிய பக்தனை நெருங்கி வந்து, "உங்களைப் பார்க்கவே வந்தேன். இன்னும் கொஞ்ச நாழி உங்களுடன் பேசப் பிரியப்படுகிறேன்'' என்பார். "எங்கள் நாட்டு பார்லிமெண்டில் நீங்கள் வந்து உரையாற்ற வேண்டும்'' என்று சொந்த ஊர் அசெம்பிளியிலும் பேசாதவருக்கு அழைப்பு வரும். இவை போன்ற வாய்ப்புகள் வந்தபின்னும் அன்னையை நினைந்து, சமர்ப்பணம் செய்து, தொடர்ந்து எல்லா எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் அந்த வாய்ப்புடன் தொடர்பு உள்ள அனைத்தையும் ஒருவர் சமர்ப்பணம் செய்கிறார் எனில், அது பெருஞ்சிறப்பு. உயர் தனிச்சிறப்பு. அவர்கள், நிகழ்ச்சிகளால் பாதிக்கப்படாதவர்கள், தன்நிலை குலையாதவர்கள். அப்படிப்பட்ட ஒரு (discipline) கட்டுப்பாட்டை நாம் மேற்கொண்டு, சாதித்தால், அது பெருஞ்சாதனையாகும்.

-------------------------------------------

இடையறாத அன்னை நினைவு:
  • வாயால் ஒரே ஒரு வார்த்தையும் பேசுதல் கூடாது.
  • எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனதைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.
  • உடல் அசையும்பொழுது, அசையுமிடத்தில் அன்னையைக் காணுதல் அவசியம்.
  • எந்தப் பொருளைத் தொடுமுன்னும் அதன் மீது அன்னையின் உருவத்தைக் காண வேண்டும்.
  • கண்ணில் படும் காட்சிகள் மனதைத் தீண்டும் முன் அன்னையின் உருவம் மனதைத் தொட வேண்டும்.
  • ஓர் எண்ணம் தோன்றினால், அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.
  • எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி மனதில் பளிச்சிட வேண்டும்.


  • ஒரு கவலை மனதில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
  • ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதை விட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.
  • ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.
  • நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

  • நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும், நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • யார் நினைவுக்கு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற முயல வேண்டும்.

  • ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்யிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.
  • பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.

  • ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றையெல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக, அன்னை நினைவு சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என அறிய வேண்டும்.

  • குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்படாமல், நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை, நம்பிக்கை வளரும் வகையில் கொண்டு வர வேண்டும்.

  • யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

  • கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.




-------------------------------------------------------------------------------



             

- தொடரும் ...

No comments:

Post a Comment