Pages

Wednesday, May 8, 2013

அன்னைக்கு சேவை செய்ய மனப்பக்குவம் எப்படி இருக்க வேண்டும் ?

Copperpod




Flower Copper pod   - Peltophorum Pterocarpum  - இயல்வாகை  - பெருங் கொன்றை;
Significance : Service - சேவை



தம்  ஆன்மாவைக்  காண்பதும், பிறர் அவர் ஆன்மாவைக் காண உதவுவதும்   ஆன்மீக சேவை.


சேவை செய்யும் பக்தனது உடல் விளக்கம் பெறுகிறது. யோக நூலைப் படிப்பவர்க்குத் தியானம் சித்திக்கிறது. உணர்வால் பெருகுபவர்க்கு உள்ளம் சிறப்படைகிறது. பொதுவாக ஒருவரிடம் இந்த எல்லா அம்சங்களும் கலந்து, ஒன்று அதிகமாகவும், மற்றது குறைந்தும் காணப்படும். ஆனால் இந்த எல்லா நிலைகளும் வாழ்வைவிடப் பெரியவை; பெரிய ஊற்றுகளாகும். வாழ்க்கையின் பிடியில் உள்ள பக்தன் பிரச்சினை வரும்பொழுது அன்னைக்குப் பிரார்த்திக்கின்றான். நேரம் கிடைத்தபொழுது யோக நூலைப் படிக்கிறான். முடிந்தால் சேவை செய்கிறான். அவனது முயற்சிக்குத் தக்கவாறு அன்னை அவனை நாடி வருகிறார். அப்படியின்றி அன்னையை அன்னைக்-காகவே விழைந்து அன்னையை நோக்கி ஆத்மா விரைந்து செல்லுமானால், அவனது ஆத்மாவில் அன்னை தோன்றி, நின்று, நிலைக்கின்றார். இது பெரும்பேறு எனினும், பலருக்குக் கிடைக்கக் கூடியது. 

குறிப்பாகப் பக்குவமான ஆத்மாக்களுக்கும், சேவையை அர்ப்பணிப்பவர்களுக்கும் கிடைக்கக்கூடியது. அந்தப் பேற்றைப் பெற்றவர்கள் அதன்பின் தங்கள் சுபாவத்தையும், பிரியத்தையும், அறிவையும் வெளிப்படுத்தாமல் அன்னையின் ஒளியை மட்டும் வெளிப்படுத்த முயன்றால், அவர்கள் வாழ்வு அன்னையின் அருள் சுரக்கும் அமுதசுரபியாக மாறுகிறது. அவர்கள் வாழ்வைவிடப் பெரியவர்கள். வாழ்க்கையால் அவர்களுக்குச் சேவை செய்ய முடியாது. அவர்களே வாழ்க்கைக்கு வளத்தைக் கொடுத்து சேவை செய்வார்கள்.

எந்தத் துறையில் அவர்கள் செயல்பட்டாலும் அந்தத் துறையில் அவர்களது செயல் அமுதசுரபியாக இருக்கும். பல துறைகளில் செயல்பட்டால் அவர்களது ஆன்மீக வாழ்வு அமுதசுரபிகள் ஜனிக்கும் அமுதசுரபியாக விளங்கும்.

அன்னையை நாடி வந்த செயல் திறம் மிக்கவர்க்கும், நேர்மை நிறைந்தவர்க்கும், பண்பால் பக்குவம் அடைந்தவர்க்கும், அறிவின் பிழம்பானவர்க்கும், சேவையை ஏற்றுக்கொண்டவர்க்கும் இந்த நிலையை அடையும் வாய்ப்புண்டு.


அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள்


  • நம் கையால் செய்யும் காரியங்கள் பூரணம் பெற வேண்டும். முழுமையான நாணயம்;
  •  
  • மனித உறவுகள் அனைத்தும் இனிமையாகவும், இசைவாகவும் இருக்க வேண்டும்.
  •  
  • காரியங்களில் குறையிருந்தால், ‘நமக்கு மட்டுமே பொறுப்பு' என்ற மனநிலை வேண்டும்.
  •  
  • மற்றவர் குறைகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக்கொள்ளும் தெளிவு வேண்டும்.
  •  
  • அதிகப்பட்ச அறிவுடன் செய்யும் காரியங்களில் 100% அறியாமை கலந்திருப்பது தெரிய வேண்டும்.
  •  
  • பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, குறையில்லை என்றுணர வேண்டும்.
  •  
  • பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, நிறை என்ற அறிவு வேண்டும்.
  •  
  • முழுத் தவறு, பாவம், குற்றம் என்ற அளவில் கண்ணால் கண்ட நிகழ்ச்சி, காதால் கேட்ட சொல், தீர்க்கமாக விசாரித்து முடிவு செய்தது, இவை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதனுள் முழு உயர்வு, புண்ணியம், சேவை நிரம்பியுள்ளன என்று அறிவு உணர வேண்டும். அறிவு உணர்ந்ததை நம்முள் அனைத்தும் யோக ஞானமாக விரும்பி, விழைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இத்தனையும் சேர்ந்துள்ளவை கீழ்க்கண்டவை: 
  • மெய்சிலிர்க்கும் நன்றியறிதல்;
  • இலட்சியமான கடமையுணர்வு;
  • உயிரைக் கொடுக்கும் விஸ்வாசம்;
  • நெகிழ்ந்த, நிறைவுள்ள ஆத்மானுபவமான பக்தி;
  • இனிமையான உள்ளுணர்விலிருந்து எழும் மென்மையான சொல்;
  • அனைவரும் போற்றும் ஆன்மீக அடக்கம்;
  • மனச்சாட்சியைவிட உயர்ந்த தூய்மை;
  • புனிதமான நல்லெண்ணம் பூரணம் பெறுதல்;
  • சேவை உணர்வு செறிந்த அன்றாடச் சிறு செயல்கள்;
  • பிறரைக் குறையே சொல்ல முடியாத நெகிழ்ந்த இனிமை உணர்வு.
- ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் பி ஸ்ரீ கர்மயோகி அவர்கள் 


No comments:

Post a Comment