Pages

Friday, May 24, 2013

நாம் நம்மைப் பற்றி முழுமையாக அறிந்து, நமது சுயரூபத்தை உணர்வது எப்போது?



 - யோகவாழ்க்கை விளக்கம் - திரு. கர்மயோகி அவர்கள் 

எதை நாம் நாடுகின்றோம், எந்த நிலையில் நாடுகிறோம் என்றறிவது நம்மை நாம் உணர்வதாகும்.

நாம் எதை நாடுகிறோமோ அதுவே நாம். 

நல்லவர்களுண்டு. நல்லவராக இல்லாமல் தம்மை நல்லவர் என நினைப்பவருண்டு. கெட்டவராக இருந்து தம்மை நல்லவராகக் கருதுபவருண்டு, தாம் கெட்டவர் என்று தெரிந்தும் பிறர் தம்மை நல்லவன் என்று நினைக்க வேண்டும் என்று பிரியப்படுபவருண்டு. சிலருக்குத் தம் உயர்வு தெரியாது. மற்றவருக்குத் தம் தாழ்வு தெரியாது. தன் நிலையை உண்மையாக உணர்ந்த பின்னரே முன்னேற்றத்திற்கு வழியுண்டு. தம்மைத் தாம் அறிய வேண்டுமானால், நாம் எதை நாடுகிறோம், எந்த முறையில் நாடுகிறோம் என்பதைக் கவனித்தால் அது நம் நிலையை விளக்கும்.

எதை நாம் நாடுகிறோம் என்பது நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.

நாடுவதே நாம். 

நாம் நல்லவரா, கெட்டவரா என்றறிய முயல்வதைவிட நாம் யார் என்று அறிய முயன்றால் நல்லது. 

பழக்கத்தால் நாம் யார், சுபாவத்தால் நாம் யார், பரம்பரையால் நாம் யார், ஆபத்தான நிலையில் நம்முள்ளிருந்து எது கிளம்புகிறது, யார் கண்ணிலும் படமாட்டோம் என்றவுடன் மனம் முதலில் எதை நாடுகிறது, நிச்சயமாகத் தண்டிக்க ஒருவருமில்லை என்ற பின் எந்தக் காரியத்தை செய்யத் தயங்க மாட்டோம், அவசரம் எப்பொழுது புறப்படுகிறது, அயல்நாட்டிலிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் மனம் நினைக்கின்றது, நிர்ப்பந்தமேயில்லை என்றால் எந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வோம், எந்தக் கடமைகளைப் புறக்கணிப்போம் என்று தன்னையறிய முற்பட்டால் நாம் யார் என்பது நமக்கு விளங்கும். அதை நாம் நாடும் பொருள் விளக்கும். நம்மைப்பற்றி பிறர் சொல்வதைவிட, நம்மைப்பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நாம் நாடும் விஷயங்கள் நம் உண்மையை நமக்கு அறிவுறுத்தும்.



அத்தியாவசியமான உதவி தேவைப்பட்ட நேரம், ஆசை பூர்த்தியாக நல்ல சந்தர்ப்பம் கிடைத்த சமயம், இதுவரை வாழ்வில் கிடைக்காத பொருள், பதவி, நட்பு கிடைக்கும் நிலை ஏற்பட்ட சமயம் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம், எப்படி நினைத்தோம் என்று ஆராய்ந்தால், மனம் எதை நாடுகிறது என்பது தெரியும், எந்த முறையில் நாடுகிறது என்பது தெரியும். அதுவே நம் மனநிலை.



No comments:

Post a Comment