Pages

Thursday, March 7, 2013

அன்னை மீதான, நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை பெறுவதற்கான முறைகள் - 1



நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை எப்படிப் பெறலாம்?

- திரு. கர்மயோகி அவர்கள்

ஒரு முறை, அன்னையை எப்படி வழிபடுதல் சிறந்தது என்ற பிரச்சினை பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டபொழுது ஒரு பிரஞ்சுக்காரர் அன்னையிடம் இது பற்றி குறிப்பிட்டார். "Why do you want to worship the divine? Why don't you become the divine?'' இறைவனாகவே நாம் மாற முடியும் எனும்பொழுது, ஏன் நாம் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை அன்னை வெளியிட்டார். அன்னை நாம் அவரிடம் பிரார்த்திகாமலே அளித்துள்ள தெய்வீக வரப்பிரசாதம் அது: சாதகன் யோகத்தால் இறைவனாக மாறலாம்; அன்னையாகவும் மாறலாம்.

இந்த யோகச் சிகரத்திருந்து படிப்படியாக 100 நிலைகளில் உள்ள சித்திகளை அன்னை சாதகனுக்கு அளிக்க விரும்புகிறார். அவற்றுள் கடைசி நிலையில் உள்ளதுகூட மனிதனுக்கு மிகப் பெரியதாகத் தோன்றக்கூடியது. அவையெல்லாம் யோகத்திற்கே தம்மைச் சர்வபரித்தியாகமாக அர்ப்பணித்துக்கொண்ட சாதகர்களைச் சேர்ந்த இலட்சியங்கள்.

ஒரு வருஷமாக மாதம்தோறும் அன்னையின் சூழல் (atmosphere) திரண்டு தியானம் செய்து வரும் அன்பர்கள் அதைப் பொருத்தவரை சிறப்பானவர்களே. அவர்கள் யோக இலட்சியத்தைத் தேடும் சாதகர்கள் இல்லை. ஆனால், அன்னை மீதும், பகவான் ஸ்ரீ அரவிந்தரிடமும் தீராத பக்தியும், குறைவில்லாத நம்பிக்கையும் உடையவர்கள். இவர்களுடைய வீடுகளில், அல்லது பூஜை அறையில் அன்னையின் சமாதிச் சூழல் ஓரளவுக்குத் தெரியக்கூடும்.


அதுபோல நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை எப்படிப் பெறலாம் என்பதற்குச் சில யோசனைகளையே நான் சொல்லுகிறேன். அவற்றை வரிசைப்படுத்தி முதலில் சொல்லிவிட்டு பிறகு விளக்கங்களைத் தனித்தனியாகவும், சேர்த்தும் சொல்லுகிறேன்.


  • நம் பக்தியின் திறனுக்குரிய அன்னையின் அருள் பிரசாதங்கள் எவை என்பதை ஓரளவு தெளிவாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது அவசியம். இது தெரிந்துவிட்டால் அளவுக்கு மீறிய செயலைத் தவிர்க்கலாம். நமக்கு உரியதை விட்டுப் போகாமல் காப்பாற்றலாம்.

  • அன்னையின் முறைகளில் நம்மால் தொடர்ந்து ஏற்றுப் பயிலக்கூடியவை எத்தனை என்பதை உத்தேசமாகவோ, அனுபவத்திலோ நிர்ணயித்துக்கொள்ளுதல் நலம்.

  • நமக்குரிய முறைகள் எவை (to what type I belong & what methods are best suited for me) என தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

  • தினமும் எவ்வளவு நேரம் நிச்சயமாகத் தியானத்திற்கு ஒதுக்க முடியும் என்பதை நிதானம் செய்து தீர்மானிக்க வேண்டும். அந்தக் கால அளவு (duration) குறிப்பிட்ட நேரத்திலேயே இருக்க முடியுமானால் அது சிறந்தது.
  • அன்னையின் எந்த முறையும் பக்குவமானவர்களுக்கே உரியது. அதனால் நமக்குப் பக்குவம் எந்த அளவுக்கு இருக்கின்றதோ, அதே அளவுக்குரிய முறைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • (சில்லறையான மனப்பான்மை, சிறிய புத்தி, விளையாட்டு புத்தி, நினைத்து நினைத்துச் செயல்படுதல், எடுத்ததற்கெல்லாம் மனம் உடைந்து போவது போன்ற குணங்களுக்கும் அன்னை முறைகளுக்கும் ஒத்து வாராது. அப்படிப்பட்டவர்கள் இம்முறைகளைக் கையாள விரும்பினால் தங்கள் குண விசேஷங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்).

  • எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், எந்த அளவில் எடுத்துக்கொண்டாலும், கடைசிவரை அதைத் தவறாமல், முறையாக, நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேற்சொன்னவற்றைக் கடைப்பிடித்து, ஒரு முறையைத் தேர்ந்தெடுத்துப் பயின்றால் தினமும் தரிசனம் போல் பெரிய அளவுக்கு மனம் உணரும். 

அதற்குரிய வாழ்க்கைச் சிறப்பும் இருக்கும். அப்படி நாம் கையாளக்கூடியவை சுமார் 30, 40 வழிகள் உள்ளன. அவை யாவன:


  1. காலை, மாலையில் தியானம்.
  2. நாம ஜெபம்.
  3. அழைப்பு (calling Mother).
  4. பொதுவான ஆத்ம சமர்ப்பணம்.
  5. ஒரு குறிப்பிட்ட செயலைப் பூரண சமர்ப்பணத்துக்கு எடுத்துக்கொள்ளுதல் (complete consecration of one type of act).
  6. நம் முக்கியப் பிரச்சினையைச் (major work) சமர்ப்பணம் செய்தல்.
  7. தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்.
  8. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது.
  9. தரிசனங்களுக்கு ஆசிரமம் செல்வது.
  10. மாதந்தோறும் காணிக்கை செலுத்துவது.
  11. நினைவே வழிபாடு.
  12. சுத்தம்.
  13. ஒழுங்கு.
  14. தணிவான பேச்சு.
  15. சண்டைகளைத் தவிர்த்தல்.
  16. குறை கூற மறுத்தல்.
  17. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னையின் கருத்தை அறிந்து கொள்வது.
  18. மற்றவர் நோக்கில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயல்வது.
  19. நம் வீட்டில் அன்னையை எல்லா அறைகளிலும் பிரதிஷ்டை செய்வது.
  20. நம் குடும்பத்தினர் அனைவர் உள்ளத்திலும் அன்னையை நிரந்தரமாகப் பிரதிஷ்டை செய்வது.
  21. பகவான் ஸ்ரீ அரவிந்தர் நூல்களை முறையாகப் பயில்வது.
  22. பராசக்தி அன்னையின் கட்டுரைகளைப் பயனடையும் வண்ணம் படித்து உணர்வது.
  23. மந்திர ஜெபம்.
  24. புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக அறிதல்.
  25. நமக்கு அமைந்த கடமையில் முழு ஆர்வம் காட்டுதல்.
  26. புரளி பேசாதிருத்தல், சில்லறையாக நடப்பதில்லை என்ற முடிவு.
  27. ஒவ்வொரு நாளும் அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தல்.
  28. நன்றியறிதல்.
  29. செயல்களுக்குள்ள அர்த்தபூர்வமான தொடர்பு.
  30. சிந்தனைக்குரிய ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சிக்குரிய சிந்தனை.
  31. தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலுதல் .


சில முறைகளைக் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் பல சேர்க்கலாம். ஒருவர் ஒரு முறையை முழுவதுமாக, பூரணமாகக் கடைப்பிடிப்பது சிரமம். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை எல்லோராலும் பூரணமாகக் கடைப்பிடிக்க இயலாது. முயற்சி தீவிரம் உள்ளவர்களால் மட்டுமே முடியும். எனவே, ஒவ்வொரு முறையாக எடுத்துக்கொண்டு, அம்முறை பூரண பலனைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்த நினைக்கிறேன். நாம் பெறும் பலன் நம் முயற்சியைப் பொருத்தது. இந்த முறை - உதாரணமாக சமர்ப்பணம் - எந்த அளவு பலன் கொடுக்கும் என்பதை இங்கு முக்கியமாகக் கருதாது இம்முறை எனக்கு, நான் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதிகபட்சம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே நமக்கு முக்கியம். முறைக்குரிய அதிகபட்சத் திறன் வேறு, நமக்கு அதே முறை கொடுக்கக்கூடிய அதிகபட்சப் பலன் வேறு. நமக்குரிய அதிகபட்சப் பலன் கிடைக்க, நாம் நம் முழுச் சக்தியையும் (energy) நமக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்; சிதறவிடக்கூடாது. சக்தியின் (energy) அளவு பலனின் அளவை நிர்ணயம் செய்யும். நம் பங்குக்குச் சக்தியை முழுமையாகக் கொடுத்த பின், அந்த அளவு சக்தியால் நாம் எடுத்துக்கொண்ட முறை அதிகபட்சப் பலனைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே கீழே காணும் முக்கியக் கருத்தாகும்.


- தொடரும் ...

No comments:

Post a Comment