Pages

Monday, November 12, 2012

தீபாவளி - திருவுருமாற்றம் - Message of the Day - Nov 12, 2012

(நவம்பர் 17, 2002 அன்று கும்பகோணம் தியான மையத்தில் திரு. P.Vசங்கர் நிகழ்த்திய உரை)


தீபாவளி - திருவுருமாற்றம்


நரகாசுரன் அழிந்த நாள் தீபாவளி. தீபாவளி கொண்டாடப் படுவதைப்போல் நம் நாட்டில் எந்தப் பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இதை மகாலட்சுமியின் வருகையாகக் கொண்டாடும் சம்பிரதாயமும் உண்டு. அசுரன் அழிந்து அதிர்ஷ்டம் வரும் நாள் தீபாவளி என நாம் கொள்ளலாம்.

தீமையை அழிக்க வேண்டும் என்பது உலகம்.

தீமை என்பது தீமையில்லை, திருவுருமாறும் நன்மை என்பது ஸ்ரீ அரவிந்தம்.



மனிதன் நாகரீகம் பெற்றால், வெளியிலி ருந்து அசுரன் வந்து நாகரீகத்தை அழிக்கிறான். அதுபோல் ரோமாபுரி அழிந்தது என்கிறார். இது உலக வரலாற்றின் வழக்கம் என்கிறார். ஸ்ரீ அரவிந்தர் 1919இல் The Life Divineஇன் கடைசி அத்தியாயத்தில் உலகம் புற அசுரனால் அழிக்கப்படும் நிலை மாறினால் அகஅசுரன்  அவ்வேலையை மேற்கொள்வான் என்கிறார்.

அசுரன் அழிந்த தீபாவளி அனைவருக்கும் அளவுகடந்த சந்தோஷம் தரும் நேரம் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இது புற அசுரன். உள்ளேயுள்ள அசுரன் அழிவது "சாவித்திரி'யில் எமன் அழிவதாகும். நாம் தீபாவளியைக் கொண்டாடும்பொழுது நரகாசுரனை நினைப்பதில்லை. அவன் அழிந்ததையும் கருதுவதில்லை. நாம் நம் குதூகலத்தைக் கொண்டாடுகிறோம். 


வேதம் அசுரர்களைப் பற்றிப் பேசுகிறது. தவம் செய்யும் விஸ்வாமித்திரரை தொந்தரவு செய்ய மேனகை வருகிறாள். அசுரன் காமக்குரோதமாக மனத்துள்ளிருந்து எழுகிறான். சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன்அறுக்கலாம். உள்ளிருந்து விஸ்வாமித்திரருக்கு எழும் பொறாமையை அவரே அழிக்க வேண்டும். மேனகை வெளியிலி ருந்து வந்து உள்ளேயுள்ள காமவுணர்வை எழுப்பி அவர் தவத்தை அழிக்கிறாள். அசுரன் எப்படி உள்ளே வந்தான்? அஞ்ஞானம் அசுரனாக உள்ளே கொலுவிருக்கிறது.




நாம் அறிந்த வழிபாட்டு முறைகள் உள்ளேயுள்ள அசுரனை சுபாவம் என அழைக்கிறது. மனிதனால் சுபாவத்தை எதிர்க்க முடியாது, அழிக்க முடியாது. அவன் தன் சுபாவத்தையொட்டியே போக வேண்டும் என நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். அன்னை கூறுவது திருவுருமாற்றம். இது உலகுக்குப் புதிய கருத்து. நாட்டு வழக்கில் life-styleஅநேகமாக எல்லாமும் மாறுகிறது. ஆனால் மதவழிபாடு எந்த மதத்திலும் மாறும் அறிகுறிகளில்லை. ஸ்ரீ அரவிந்தம் அதைச் செய்ய முன் வந்தது. அது வழிபாட்டை மாற்ற முயலவில்லை. அதற்குப் பதிலாக ஆன்மீகப் பயிற்சியை ஏற்கும்படிக் கூறுகிறது.



. மதம் தீமையை விட்டு விலகுகிறது.

. ஆன்மீகம் தீமையை திருவுருமாற்றுகிறது.


இவையெல்லாம் தத்துவங்கள்.
தீபாவளிப் பண்டிகை. நடைமுறைக்கேற்ப தத்துவம் பேசுமா? பேசும்.


வீட்டில் திருமணம் வந்தால் மனஸ்தாபங்கள் விலகி மனம் இணையும். திருமணம் மனஸ்தாபத்திற்கு ஆரம்பமாகவும் இருப்பதுண்டு. பண்டிகை சந்தோஷமான நேரம். சந்தோஷத்தை யார் அனுபவிப்பது என்பதில் மனிதச் சுபாவம் - போட்டி, பொறாமை -வெளிப்பட்டால் பண்டிகையே விகற்பத்திற்கு வித்தாகும். அன்னை மனிதனைத் தெய்வத்தைக் கடந்த இறைவனுக்கும், யோகத்திற்கும் அழைக்கின்றார். மனிதன் அவனுக்கே இயல்பான சுபாவத்தை நாடுகிறான்.


. சுபாவம் திருவுருமாறும் என்பது அன்னை கொள்கை.

 ஸ்ரீ அரவிந்தம் மனிதன் சுபாவத்தைவிட உயர்ந்தவன் எனக் கொள்கிறது.
. தான் எங்கிருக்க வேண்டும் என மனிதனால் நிர்ணயிக்க முடியும் என்று அன்னை கூறுகிறார். அதனால் திருவுரு மாறும்.

 "நாங்கள் எளிய மனிதர். எங்களுக்குப் புரியும்படி ஸ்ரீ அரவிந்தத்தைக் கூற முடியுமா?'' என்பது அன்பர்கள் நிலை. முடியும் என்பது அன்னை பதில். அது முடிந்தால் புற அசுரனும், அக அசுரனும் அழிந்து தீபாவளி தினமும் கொண்டாடி, நாமும் உலகமும் தீமையிலிருந்து விடுபடுவோம்.

-மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2003 » 06. தீபாவளி - திருவுருமாற்றம்

Thanks,

AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Message, Diwali, Deepavali, Tamil Article, Malarntha Jeeviyam, The Mother Aurobindo

No comments:

Post a Comment