தாயம்மாள்
- இல.சுந்தரி
காலை 11-மணி சுமாருக்கு வழக்கம்போல் தாயம்மா தயிர்க்கூடையுடன் கோமுட்டித் தெருவிற்குள் நுழைந்து வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு வரிசையாய்த் தயிரோ, மோரோ கொடுத்துக்கொண்டு வருகிறாள். டாக்டர் (L.M.P.) சத்தியநாராயண செட்டியார் வீட்டில் கூடையை இறக்கி "டாக்டரம்மா'' என்று குரல் கொடுத்தாள். டாக்டரின் மனைவியை இவள் இப்படி அழைப்பது வழக்கம். "இதோ வந்துட்டேன் தாயம்மா. கடிகாரமே பார்க்க வேண்டாம். தாயம்மா வந்தால் மணி 11'' என்று சொல்லியவண்ணம் மோர் வாங்கும் பாத்திரத்துடன் வந்தாள் ரெங்கநாயகி. எதைப் பார்த்தாலும் என்னவென்று கேட்காமல் இருக்கமுடியாத ஒரு குணம் அவளுக்கு. "என்ன தாயம்மா? இரண்டு பானைகள்தானே கொண்டு வருவே ஒண்ணு தயிரு, ஒண்ணு மோரு. புதிதாக ஒரு கலயம் எதுக்கு? மோரும் தயிரும் கலந்த கலப்படமா? என்றாள். ''இது இஸ்பெசல் தயிறு'' என்றாள் தாயம்மா "இஸ்பெசலா?அது என்ன ஸ்பெஷல்?'' என்றாள் ரெங்கநாயகி. செட்டியார் சம்சாரம் எங்க குலதெய்வத்துக்கு நேந்துகிட்டு தினமும் தயிர் நேவித்தியம் வைக்குது. அதுக்குத்தான் இந்த தயிர்'' என்றாள் தாயம்மா. "எதுக்காக நேந்துகிட்டாங்களாம்?" என்றாள் ரெங்கநாயகி. "கிருஷ்ணன்சாமியாண்ட என்ன நேந்துக்குவாங்க எல்லாம் புள்ளவரம்தான்'' என்றாள் தாயம்மா இயல்பாக. "ஏதேது செட்டியார் சம்சாரம் புள்ளவரம் வேண்றாங்களா?'' என்று ஏளனமாய்க் கேட்டாள். "ஏன் டாக்டரம்மா அப்படி கேக்குற. செட்டியார் சம்சாரத்துக்குப் புள்ள பொறந்தா ஆவாதா?'' என்று அவள் நொடிப்பைத் தன் வினாவால் வீழ்த்தினாள் தாயம்மா. "அது சரி'' என்றவண்ணம் உள்ளே சென்றாள் ரெங்கநாயகி. செட்டியார் பொஞ்சாதி தங்கம். அதும் மனசுக்கு அதுக்குப் புள்ள பொறக்காம போகுமா? எங்க குல (இடையர்குல) தெய்வம் அதும் பிரார்த்தனையை நெறவேத்தாம போவுமா! என்று பொருமியவண்ணம் கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாள்.அடுத்தது சங்கர் செட்டியார் வீடு. "செட்டியாரம்மா! தயிர் கொணாந்திருக்கேன்", என்று சப்தமிட்டு அழைத்துக்கொண்டே கூடையை இறக்கித் திண்ணையில் வைத்து விட்டு தலைச் சும்மாட்டைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள். செட்டியார் மனைவி இரண்டு பாத்திரங்களுடன் உள்ளிருந்து வெளிப்பட்டாள். "இந்தா தாயி. நீ சாமிக்கு நேந்துகிட்டேனதும் நானும் பயபக்தியா தனியா ஒரு சட்டியிலே ஒரையூத்தி கொணார்ந்திருக்கேன். ஒன் தவம் பலிக்கணும். எங்க சாமி ஒங்க வூட்ல வந்து பொறக்கணும். நா கண்குளிரப் பாக்கணும்'' என்று அளவு கடந்த ஆர்வத்துடன் கூறினாள். குற்றமற்ற குலம் இடையர் குலம் என்பது எவ்வளவு உண்மை. மோரை அலுமினியப் பாத்திரத்திலும், தயிரை வெள்ளிப் பேலாவிலும் வாங்கிக்கொண்ட செட்டியார் மனைவி, இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு எனக்குக் குழந்தை பிறக்கும் என்று இவள் கற்பனை செய்கிறாள்.உண்மையில் நான் பிள்ளைவரம் வேண்டியா விரதமிருக்கிறேன்? வந்திருக்கும் "அதிதி'' வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதால் அதிகப்படி தயிர் வாங்குவதற்கு ஒரு காரணமாக கடவுளுக்குப் படைப்பதற்கு என்று ஒரு பொய் சொன்னேன். இதை இவள் இவ்வளவு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள் என்று எண்ணியவாறு உள்ளே சென்றாள். தாயம்மாவின் கற்பனை செட்டியார் மனைவியையும் தொற்றிக் கொண்டது. அப்படியொரு சின்னக் கண்ணன் இந்த வீட்டில் தவழ்ந்தால் எப்படியிருக்கும் என்றெண்ணியபோதே நினைவு இனித்தது. இல்வாழ்வில் புகுந்த பெண் ஒரு பிள்ளைச் செல்வத்தை எதிர்பார்ப்பதில் தவறென்ன இருக்கிறது? "மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன், நன்கலம் நன்மக்கட் பேறு'' என்று வள்ளுவர் சொல்லவில்லையா? பொன் அரைஞாணும், பூந்துகில் ஆடையுமாய்ப், பொற்சதங்கை ஒலிக்கத் தவழ்ந்து வந்து குழந்தை காலைக் கட்டிக் கொண்டதுபோல் ஒரு பிரமை. முகம் பிரகாசித்து மெய்மறந்து நின்றாள் செட்டியாரின் மனைவி. மாடியில் பகவான் புன்னகை புரிந்தார். உண்மையில் இவர்கள் வீட்டிற்குச் சிலர் வந்திருக்கின்றனர். அன்றிரவு ஏழு மணியிருக்கும், மாலை மறைந்து இருள் தொடங்கிவிட்டது. செட்டியார் பரபரப்பாய் இருந்தார். மனைவியை அழைத்து, "இங்கு முக்கியமான ஒருவர் வரப் போகிறார்.மேலே மாடியிலே அவருக்கு அறை ஒதுக்கியிருக்கிறேன். அவர் இங்குதான் தங்கப் போகிறார். அவர் இங்கிருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது. பெண்களிடம் ரகசியம் தங்காது என்பார்கள். இதை நீ வெளியிட்டால் நமக்குத் தெய்வக்குற்றம் வந்து சேரும்'' என்றார். பணிவுடன் ஏற்றுக் கொண்டாள் செட்டியாரின் மனைவி. "போ, நீ உள்ளே போ'' என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வருபவரை வரவேற்கச் சென்றார். வருபவரைக் காணும் ஆவலுடன் சமையலறை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு நின்றாள். நான்கைந்து பேர் வருகிறார்கள். நடுநாயகமாய் வந்தவர்தாம் முக்கியமானவர்போலும். வேட்டியை மூலக்கச்சம் வைத்துக் கட்டியிருந்தார். முழுக்கை ஜிப்பா அணிந்திருந்தார். மேலே குறுக்காக ஒரு துண்டு அணிந்திருந்தார். குறுந்தாடி வைத்திருந்தார். பின்புறம் அலையலையாய் சிகை கழுத்துவரை நீண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஏதோ தெய்வீகமானவர் என்று காண்போர் புரிந்து கொள்ளும்வண்ணம் கண்களில் அசாதாரண ஒளி. இத்தனைக்கும் அக்காலத்தில் அவரை ஓர் ஆன்மீக மனிதராகக் கூட யாரும் அறிந்திருக்கவில்லை. மேலே தங்கியிருக்கும் ரகசிய விருந்தாளிக்கு அதிகப்படி தயிர் வாங்கினாள்.தாயம்மா நீண்ட காலமாய் தயிர் கொடுப்பவள். சிறிது அதிகப்படி வாங்கினால்கூட "யாரு விருந்தாளி?'' என்பாள். உண்மையைச் சொல்லமுடியாத நிலையில் ஸ்ரீகிருஷ்ணருக்கு நிவேதனம் செய்வதாய் நேர்ந்து கொண்டதாய்ச் சொன்னாள். அதைத் தாயம்மா தன் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்தில் பெரிய சித்திரமாய்த் தீட்டிவிட்டாள். மேலேயுள்ள விருந்தினர்க்கு மிக அக்கறையுடன் சிரத்தையுடன் சமைத்தாள். தயிரை மட்டும் ஒரு வெள்ளிப் பேலாவில் பத்திரமாக அனுப்புவாள். கடவுளுக்கு நிவேதனம் என்று தாயம்மாவிடம் சொன்னது பொய்யாகக்கூடாது என்பதால் மானசீகமாய் ஸ்ரீகிருஷ்ணர் ஆவலுடன் அத்தயிரை உண்பதுபோல் கற்பனை செய்துகொள்வாள். மேலே போகும் ரசம், குழம்பு, கூட்டு, பொரியல் யாவும் உண்ணப்பட்டிருக்கும். தயிர்மட்டும் மீதம் திரும்பி வரும். ஒரு நாள் மேலேயிருந்தவர்களில் ஓரிளைஞர் கீழே வந்தபோது செட்டியார் மனைவி அவரிடம் சாப்பாடு நன்றாக உள்ளதா என்று பிரியமாய்க் கேட்க, அவரும் வித்தியாசமான தமிழில் ரொம்ப நல்லாயிருக்கு என்றார். தயிர் ஏன் மீந்துவிடுகிறது போட்டுக் கொள்வதில்லையா? என்று கேட்டதற்கு தாங்கள் யாவரும் தயிர் உண்ணும் பழக்கமில்லை யென்றும், அவர் (முக்கியமானவர்) மட்டும் அன்புடன் அளித்ததை உண்ணாதிருக்கக் கூடாது என உண்பதாகக் கூறினார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு மானசீகமாய்க் படைத்தது என்பதால் அந்த மீதித் தயிரை இவள் தவறாது உண்பது வழக்கம். அடிக்கடி இவள் கற்பனையிலும் கனவிலும் கூட கண்ணன் தவழ்ந்தான். இவள் நெஞ்சு நிறையும்வண்ணம் சிரித்தான். தாயம்மா, "ஏதேனும் விசேஷமுண்டா?'' என்று கேட்கத் தொடங்கிவிட்டாள். கல்யாணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? முப்பது வயதுக்குமேல் பிள்ளைப் பேறா? அவளுக்கு வெட்கமாயிருந்தது. "என்ன தாயம்மா இது? இத்தனை வயதிற்குமேல் உண்டாக முடியுமா?'' என்றாள். "ஏன் தாயி அப்பிடி சொல்லுற. எங்க குலதெய்வம் நம்புறவங்கள, நல்லவங்கள ஏமாத்தாது. உனக்காக இல்லாங்காட்டியும், தெனமும் பக்தியா தயிர் கொணாந்து தர்ரேன்னே எனக்காகவாச்சும் ஒன் வீட்ல என் சாமி வந்து பொறக்கும் பாரு. சாமியை வேண்டிக்கினா நம்பிக்கை வேணும். எங்க கொலத்து சனங்களப் பாரு. ஒரு கொறையில்லாம இருக்கோம்'' என்று கூறிச் சென்றாள். தாயம்மாவைப்போல் கள்ளமில்லாத உள்ளங்களுக்குத்தான் கடவுள் புலப்படுவார் என்றெண்ணிக் கொண்டாள் செட்டியார் மனைவி. சில மாதங்களில் இரவோடிரவாக வேறு வீடு மாறிச் சென்று விட்டனர் அந்த விருந்தினர். போகும்போதும் அந்தப் புனிதரின் பார்வையை செட்டியாரின் மனைவி தரிசித்தாள். திடீரென தன் கனவிலும், கற்பனையிலும் வரும் ஸ்ரீ கிருஷ்ணர் முகம்போல அவர் கண் தோன்றியது. உடம்பு சிலிர்த்தது. வீடு வெறுமையானது. நாளையிலிருந்து அந்தப் புனிதருக்கு உணவு படைக்கும் பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் எழுந்தது. மறுநாள் காலை, செட்டியார் இவளிடம், "சாமி வீதியுலாவுக்கு வெளியே சென்றதும் கோயில் வெறிச்சென்றிருக்கும் அதுபோலல்லவா இருக்கிறது?'' என்றார். "எனக்கும் சமையல் செய்ய ஆர்வமாய் இல்லை'' என்றாள் அவர் மனைவி. "இன்று முதல் நிவேதனத்தயிர் வேண்டாம்'' என்றாள் தாயம்மாவிடம். "ஆறு மாதம் நேந்துக்கினியா தாயி'' என்றாள் தாயம்மா. வேறு வழியில்லாமல் "ஆமாம்" என்று சொல்லி வைத்தாள் செட்டியார் மனைவி. இரண்டு மாதம் கழித்து செட்டியார் மனைவி மயக்கமடைந்தாள். திடீரென கீழே விழப் போனவளை அவளுடன் பேசிக்கொண்டிருந்த செட்டியார் பதறிப்போய் கீழே விழாமல் பிடித்து படுக்கையில் சாய்த்தார். பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து துணைக்கு வைத்துவிட்டு நான்கைந்து வீடுகள் தள்ளியிருக்கும் டாக்டர் சத்தியநாராயணனை அழைத்து வந்தார். அக்காலங்களில் கார், டோக்கன், க்கியூ என்ற பந்தாக்களில்லை. தெருவிற்குப் பத்து டாக்டர்களிலர். நோயாளிகளும் இலர். செட்டியார் தம் தெருக்காரர் என்பதால் அழைத்தவுடன் டாக்டர் வந்து விட்டார். "ஏன் இப்படி நேர்ந்தது? என்ன செய்தாள்?'' என்று செட்டியாரிடம் டாக்டர் விசாரித்தார். பேசிக்கொண்டே நின்றவள் திடீரென மயங்கி விழப்போனாள், என்று கூறினார் செட்டியார். மனைவிக்கு என்ன நோயோ என்று கலங்கி நின்றிருந்தார். நாடியைப் பிடித்துப் பார்த்த டாக்டர், "செட்டியாரே உம் மனைவியின் விரதம் பலித்துவிட்டது" என்று குறும்பாய்ச் சிரித்தார். "என்ன சொல்கிறீர்கள்" என்று விழித்தார் செட்டியார். "சரிதான் உம் மனைவி பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீகிருஷ்ணருக்குத் தயிர் நைவேத்யம் செய்த கதை தெரியாதா உமக்கு?" என்றார். "சரி, நீர் அப்பாவாகப் போகிறீர். மனைவியை நன்றாய்க் கவனியும்", என்று டானிக் எழுதிக் கொடுத்துவிட்டு ஊசியும் போட்டுவிட்டுப் போனார். செட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. வியப்பு ஒருபுறம், மகிழ்ச்சி ஒருபுறம். அவள் விழித்தெழ நெடுநேரம் ஆகிவிட்டது. செட்டியார் தூக்கமும், விழிப்புமாய்க் காத்துக் கிடந்தார். திடீரென விழித்தவள் "மணி என்ன? நான் ஏன் படுத்திருக்கிறேன்! சாப்பிட நேரமாகி விட்டதா?'' என்றாள். "சாப்பிடும் நேரமெல்லாம் தாண்டிவிட்டது. இந்தா இந்தப் பாலைக் குடி சற்றுத் தெம்பாக இருக்கும்'' என்று பரிவுடன் கொடுத்தார் செட்டியார். "நல்லாயிருக்கு நீங்க எனக்குப் பணிவிடை செய்யறது'' என்று வெட்கத்துடன் எழுந்திருக்கப் போனாள். "நீ இப்ப எழுந்திருக்க வேண்டாம். உனக்கு ஓய்வு வேண்டும் என்றார் டாக்டர்'' என்றார் "டாக்டரா? எனக்கு என்ன உடம்புக்கு? நான் நன்றாகத்தானேயிருக்கிறேன்'' என்றாள். "சரிதான் நீ ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக்கொண்டது டாக்டருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லையே'' என்றார் செட்டியார். செட்டியார் மனைவிக்கு மிகவும் வெட்கமாய்ப் போய்விட்டது. "அதெல்லாமில்லீங்க மாடியில் தங்கி இருப்பவரை யாரும் அறியக்கூடாது என்றீர்களா அவருக்கு வாங்கும் தயிரை எதற்கு என்று தாயம்மா கேட்டாள். உண்மையைச் சொல்ல முடியாமல் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்யம் என்றேன். தாயம்மா தானே பிள்ளை வரம் என்று கற்பனை செய்துகொண்டு தெருப்பூரா சொல்லி விட்டாள்'' என்றாள். "கள்ளமில்லாதவள் சொல்லல்லவா?பலித்து விட்டது", என்றார் செட்டியார். "என்ன சொல்றீங்க?" என்றாள் இன்ப அதிர்ச்சியுடன். "நான் அப்பாவாகப் போகிறேன். நீ அம்மாவாகப் போகிறாய்" என்றார். "எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் வீரசைவர்களுக்கு ஓரிடத்தில் பந்தி போஜனம் நடைபெற்றதாம். பசி மிகுதியால் ஒருவன் அந்தக் கூட்டத்தில் புகுந்தானாம். ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு கயிற்றில் வெள்ளைத் துணியில் ஏதோவொன்று சுற்றி கட்டித் தொங்கியதாம். அது இன்னதென தெரியாத இவன் ஒரு கத்தரிக்காயை வெள்ளைத் துணியால் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு வரிசையில் நின்றானாம். உள்ளே பந்தியில் உட்கார்ந்தவுடன் ஒவ்வொருவரும் கழுத்திலுள்ள வெள்ளைத் துணியால் சுற்றிய சிவலிங்கத்தைப் பிரித்தெடுத்து மகேசுவர பூஜைக்காக இலைக்கு முன் வைத்தனராம். அப்போதுதான் இவனுக்குத் தோன்றியதாம், "கடவுளே என்னை மன்னித்துக் காப்பாற்று'' என்று வேண்டியவண்ணம் கழுத்துக் கயிற்றில் தொங்கிய வெள்ளைத்துணியைப் பிரித்தபோது கத்தரிக்காய் லிங்கமாக மாறியிருந்ததாம். நீயும் ஊரார் முன் தலைகுனிய வேண்டாமெனக் கடவுள் வரம் தந்துவிட்டார்'. உண்மையைச் சொல்லக்கூடாது என்று ஒரு பொய் சொன்னாள். பொய்யை மெய்யாகத் திருவுரு மாற்றம் செய்ய வந்தவரல்லரோ பகவான். தம்பொருட்டு செட்டியாரும் அவர் மனைவியும் மேற்கொண்ட பொய்யை மெய்யாக்கிவிட்டார். - மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2000 » தாயம்மாள்Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.
TN, India.
Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam |
Pages
▼
No comments:
Post a Comment