Pages

Thursday, August 16, 2012

Message of the Day - மேல் மனது - ஆழ் மனது



கல்லூரியில் படித்த காலத்தில் லட்சிய மனப்பான்மையுடன் மாணவர் தலைவராகச் செயல்பட்டவர்கள் பிற்காலத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது, கல்லூரி நாள்களில் அவர்களோடு பழகியவர்கள் இப்பொழுது அவர்களைச் சந்திக்கும்பொழுது, "அந்நாள்களில் உங்கள் கண்களில் தெரிந்த லட்சியக் கனல் இப்பொழுதில்லை'' என்பார்கள். வயதும், அனுபவமும் கொடுக்கின்ற அமைதியை, ஆர்வக்கனல் குறைந்துவிட்டதாக மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். திருமணம் ஓரளவுக்கு ஆர்வக்கனலைக் குறைக்கத் தான் செய்கிறது. "பர்சனாலிட்டி'யில் வரும் முதிர்ச்சியை, லட்சியத் தீவிரம் குறைந்துவிட்டதாகத் தவறாக எடுத்துக்கொள்கின்றனர். மனிதனுடைய "பர்சனாலிட்டி'யின் அமைப்பில் அவனுடைய மேல்மனது அவனுடைய ஆழ்மனத்திற்கு நேர் எதிராகச் செயல்படுவதைப்போல் அமைந்துள்ளது. அவனுடைய ஆழ்மனதுதான் மேல்மனத்தைவிடப் பரந்தது; உண்மையானதும்கூட. அவனுடைய மேல்மனது எதை வெறுத்து ஒதுக்குகிறதோ, அதை அவனுடைய ஆழ்மனது நாடவும் செய்கிறது. அவரவர்களுக்கு அமைகின்ற வேலை மற்றும் திருமணத்தில் இதை நாம் பார்க்கலாம்.

நிறைய பேசக்கூடிய பழக்கம் உடையவர் குறைந்த அளவிற்குப் பேசுகின்ற பெண்ணை மனைவியாக நாடுகிறார். தாராளமாகச் செலவு செய்பவர், சிக்கனமாகச் செலவு செய்கின்ற பெண்ணை மனைவியாக நாடுகிறார். இப்படி மேல்மனம் நாடுவதும், ஆழ்மனம் தேடுவதும் எல்லா விஷயங்களிலும் வேறுபட்டு நிற்கிறது. "திருமணங்கள் வானுலகில் நிச்சயிக்கப்படுகின்றன' என்று இத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றவர்களை மற்றவர்கள் தேற்றுகின்றார்கள். இப்படி முரண்பாடான சுபாவமுள்ள தம்பதியர்கள் தம்முடைய கடைசிக் காலத்தில் தமக்கிடையேயுள்ள முரண்பாடுகள் உடன்பாடுகளாக செயல்பட்டு வந்துள்ளன என்று புரிந்துகொண்டு, தம்முடைய திருமண வாழ்க்கையைப் பாராட்டிக்கொள்கிறார்கள். சில பேருடைய வாழ்க்கை ஒரு கட்டத்தில் அமைதியாகவும், பின் அதைத் தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பாகவும் இயங்குவது உண்டு. இப்படி அமைதியும், ஆர்ப்பாட்டமும் அடுத்தடுத்து வருவதை எவரும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. எல்லாம் விதியின் செயல்பாடு என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.

படேல் பற்றி ஸ்ரீ அரவிந்தர் பேசும்பொழுது காங்கிரஸ் தலைவர்களில் படேல் ஒருவருக்குத்தான் மனோபலம் இருந்தது என்று குறிப்பிட்டார். அவர் இங்கிலாந்தில் இருந்தபொழுது அவருடைய காலில் ஓர் ஆபரேஷன் செய்யவேண்டி இருந்தது. மயக்கமருந்துகூட இல்லாமல் அந்த ஆபரேஷனைச் செய்துகொண்டார். மனிதர்களிடம் அவர் காட்டிய கடுமையையும், பாரதமாதாவிடம் அவர் காட்டிய கனிவையும் எப்படி நாம் சேர்த்து வைத்துப் புரிந்துகொள்வது? இதுதான் வாழ்க்கையின் ரகசியம். காஷ்மீர் ஒரு பிரச்சினையாக மாறியபொழுது நேருஜி சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறினார். அந்த ஆரம்பத் தடுமாற்றத்தைத் தொடர்ந்து காஷ்மீர் இன்றுவரை பிரச்சினையாக உள்ளது. படேல் கடுமையானவர்;
நேரு தடுமாறக்கூடியவர் என்று குறை சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வதற்கு இடம் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் நாம் தவறான முடிவுகளுக்கு வருவோம். நேரு மற்றும் படேல் விஷயத்தில் இவ்உண்மைகள் தெளிவுபடாது.கடுமையும், கனிவும் இரண்டுமே நம்மிடத்திலேயே இருக்கின்றன.நம்முடைய குறைகளுக்காக நாம் நம்மை நொந்துகொள்கின்றோமா? அல்லது நம்முடைய வலிமைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றோமா? சில சமயம் நாம் இரண்டையுமே செய்கிறோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இரண்டையுமே உணராமல் நாம் வாழ்க்கையை நடத்துகிறோம். இதுதான் வாழ்க்கையின் அந்தரங்க ரகசியம். தம்முடைய ஆழ்மனத்தின் போக்கைப் புரிந்துகொள்ளக் கூடியவரால்தான் தம்முடைய வாழ்க்கையின் போக்கைப் புரிந்துகொள்ள முடியும்.


- Sri Karmayogi Avarkal

Tags: Sri Aurobindo Message Sri Karmayogi Sri Mother Sri Aurobindo's Symbol Message of the Day Aurobindo Message Poorna Yoga Integral Yoga sadhana Sri Aurobindo's Birthday AuroMere Meditation Center AuroMere Center Annai Aravindar Center Birthday Message of  Sri Aurobindo Tamil article Yoga

No comments:

Post a Comment