அன்னை இலக்கியம் - மலர்ந்த ஜீவியம் Nov -2000
கனவில் வந்த கண்கண்ட தெய்வம்
- S. அன்னபூரணி
"His soul was free and given to her alone" என்று பகவான் எழுதிய சாவித்ரியில் "The Adoration of the Divine Mother" என்ற முக்கியமான அத்தியாயத்தில் கடைசி வரியைப் படித்து முடித்து அன்னையை வணங்கிய ரகுநாதனை வாசல் "காலிங் பெல்'' சத்தம் அழைத்தது. வழக்கம்போல் அந்தச் சத்தத்தையும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுக் கதவைத் திறந்த ரகுநாதனின் முகம் மகிழ்ச்சியால் விகசித்தது. "ஹாய் ஹரிதாஸ்! வா வா உன்னிடம் இருந்து கடிதமே வரவில்லையே, ஏப்ரல் தரிசன நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறதே, இதுவரையில் நாம் அதைத் தவற விட்டதேயில்லையே என்று நினைத்து அன்னையிடம் இப்பொழுதுதான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். பிரார்த்தனை முடியவும் நீ வரவும் சரியாக இருக்கிறது.'' "All sincere prayers are granted, every call is answered" என்ற அன்னையின் மந்திரம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிவிட்டது.
"ரகு திடீரென்று வந்து இறங்கி உன்னை திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்றுதான் கடிதம் போடவில்லை. முதலில் நான் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு அன்னையை நமஸ்கரித்து விட்டு, சாவித்ரியைப் படித்துவிட்டு வருகிறேன்.'
ஹரிதாஸ் பிரார்த்தித்து முடித்து வருவதற்கும் ரகுநாதன் ஆவி பறக்க காபி கலந்து எடுத்து வரவும் சரியாக இருந்தது.
"ரகு உன்னுடைய இந்தக் காபிக்காக என் நாக்கு எவ்வளவு ஏங்குகிறது தெரியுமா? அண்ணி பார்வதி பத்து வருடம் முன்பு இறந்து போனதிலிருந்து நீயே ஒண்டிக்கட்டையாக உன் ஒரே பெண் சந்தியாவையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து
கொடுத்துவிட்டாய். சமையலிலும் திறமைசாலியாக ஆகிவிட்டாய் உன் சமையல் பக்குவம் ஒரு பெண்ணுக்குக் கூட வராது. எப்படி உன்னால் முடிந்தது?'
"சமையலில் "நளபாகம்'' என்று கேள்விப்பட்டிருக்கிறாய். தமயந்தி பாகம்' என்று கேள்விப்பட்டதுண்டா? கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களில் கூட ஆண்கள்தான் சமைக்கிறார்கள். அது போகட்டும், தரிசன நாளுக்குப் போவதற்கு என்ன "பிளான்'' வைத்திருக்கிறாய்?' "நாம் என்ன பிளான் செய்வது? நாம் திட்டமிட்டால் நடந்து விடுமா? அம்மா மனசு வைத்தால் நாம் பாண்டி போக முடியும். வழக்கம்போல் சமர்ப்பணம்தான். இதுவரைக்கும் நாம் சமர்ப்பணம் செய்து ஏதாவது தரிசனநாள் தவறிப் போயிருக்கிறதா?'
"ஹரி கொஞ்சநேரம் "Life Divine" படித்துவிட்டு அன்னையிடம் அமர்ந்து தியானம் பண்ணலாமா?'
தியானம் முடித்து மதிய உணவையும் முடித்துவிட்டு ரகுநாதன் தன் வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்தார். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு "பான் பீடா' ஒன்றை எடுத்து ஹரிதாஸின் கையில் கொடுத்தார். ஹரிதாஸ் நெகிழ்ந்து போய் கண்களில் நீர் மல்க தன்னையறியாமல் ரகுநாதனைக் கட்டிக் கொண்டு விட்டார். ரகு, ரகு என்று நாத்தழுதழுக்கக் கூறிவிட்டு, ‘"நீயல்லவோ உண்மை நண்பன்! குறிப்பறிந்து ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதையறிந்து செய்வதில் உனக்கு நிகர் நீதான். ‘ நண்பன் என்றால் அவன் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்னை கூறியிருக்கிறார். என்னை அப்படி ஏற்றுக்கொண்ட ஒரே நண்பன் நீதான். நான் தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். என்னைச் சுற்றியிருப்பவர்களெல்லாம் இந்தப் பழக்கத்தை விட்டுவிடும்படி அட்வைஸ் செய்கிறார்கள். அவர்கள் சொல்வது என் நன்மைக்குத்தானென்றாலும் ஏற்கனவே குற்ற உணர்வில் பாதிக்கப்பட்டிருக்கும் என் மனம் அவர்கள் சொல்வதை
ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இந்தப் பழக்கத்தைத் தொடருகிறேன் என்கிறது. ஆனால் இப்பொழுது நீ எனக்காக இப்படி ‘ பானை வைத்து உபசரிக்கையில் ‘ ஓ இவனை நண்பனாக அடைய என்ன தவம் செய்தேன்? இதற்காகவே இந்தப் பழக்கத்தை விட்டுவிடலாமென்று தோன்றுகிறது. ரகு சில சமயங்களில் நான் உன்னையே அன்னையாகப் பார்க்கிறேன். ‘ தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று சொல்வார்கள். அந்த அன்னையைத் தரிசிக்க முடியாத குறை உன்னைப் பார்க்கையில் எனக்குத் தீர்ந்து விடுகிறது. இதுவரைக்கும் பெண்களிடம்தான் தாய்மை உணர்வைக் கண்டிருக்கிறேன். ஆனால் தாய்மையன்பு கொண்ட நான் சந்தித்த ஒரே ஆண் நீதான் ரகு', என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்.
இந்தப் புகழ்ச்சிகளினால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத ரகு தனக்கேயுரிய பாணியில் தஞ்சாவூர்வாசிகளுக்கேயுரிய ஸ்டைலில் வெற்றிலையைக் கடைவாயில் லாவகமாக செருகிக் கொண்டே பேசினார்.
"எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது ஹரி. எல்லா ஆத்மாக்களும் மகிழ்ச்சியோடு இருக்கணும். எல்லோருக்கும் அன்பை வாரி வழங்கணும். இதில் என் சுயநலம் கூட இருக்கிறது தெரியுமா? ஓர் ஆத்மாவைத் திருப்தி செய்யும்போது அந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிகிறது. அது என்னை மகிழ்விக்கிறது. The happiness you give makes you more happy than the happiness you receive என்று அம்மா சொல்லியிருக்காங்களே'.
"நான் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். குழந்தை சந்தியா எப்படி இருக்கிறாள்? அவளைக் கல்யாணத்தின்போது பார்த்தது. அவள் கணவர் சௌக்கியமா?'
"By Mother's grace அவள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறாள். அவள் மாமியார் அவளைப் பெற்ற தாயைப்போல் நடத்துகிறார். அவள் கணவன் ராம்குமார் மிகவும் நல்ல பிள்ளை, ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே, கூடிய விரைவில் நான் தாத்தாவாகப் போகிறேன்' என்றார் மகிழ்ச்சி பொங்கும் குரலில்.
"ஹையா' என்று ரகுநாதனே எதிர்பாராதவிதமாக அவரை ஒரு முறை மேலே தூக்கிக் கீழே இறக்கிவிட்டார்.
"ஏய் ஹரி என்ன இது சின்னக் குழந்தை மாதிரி?' "நீ சொன்னது சாதாரணமான விஷயமா என்ன? எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. எப்ப டெலிவரி டைம்? Scan எடுத்துப் பார்த்தாகி விட்டதா? பெண் என்றால் ‘ மீரா என்று பெயர் வைக்கணும், ஆண் என்றால் அரவிந் என்று பெயர் வைக்கணும். ரகு ஒரு விஷயம் நான் கவனித்தேன். நீ எல்லாவற்றிலும் பற்றற்ற ஒரு யோகியைப்போல் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கிறாய். ஆனால் நீ தாத்தாவாகப் போகும் விஷயத்தைச் சொல்லும்போது மட்டும் உன்னையறியாமல் அதீத மகிழ்ச்சியைக் காட்டிவிட்டது உன் முகம்'.
"நான் என்ன தெய்வப்பிறவியா? நானும் மனிதப் பிறவிதானே? நீதான் என்னை ஆண் வேடமணிந்த அம்மா என்று சொல்லி விட்டாய். எந்த அம்மாவிற்கும் தன் குழந்தையைப் பற்றிய விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படுவது சகஜம்தானே? ஏன் ஆதி சங்கரர் கூட எல்லாப் பற்றினையும் அறுத்த போதும், தாய்ப்பாசம் என்ற பற்றை அவரால் விட முடியவில்லையே'.
"சரி, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே, சந்தியா பெங்களூரிலிருந்து எப்பொழுது வருகிறாள்?' "அதுதான் எனக்கும் சரியாகத் தெரியவில்லை' சொல்லி முடிக்கவும், ‘ "சார் போஸ்ட்' என்று போஸ்ட்மேன் ஒரு கடிதத்தை வீசிவிட்டுப் போகவும் சரியாக இருந்தது. ஹரிதாஸ் ஓடிப் போய்க் கடிதத்தை எடுத்து வந்தார். அதில் எழுதியுள்ள விலாசத்தைப் பார்த்ததும், ‘ "ஹாய் இது சந்தியாவின் கையெழுத்துப் போலல்லவா இருக்கிறது? அன்னையின் அருளைப் பார்த்தாயா? நான் கேட்ட கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.'
"நீதான் பிரித்துப் படியேன்' "நானா?'‘ "ஏன் கூடாதா? நீ தோளில் தூக்கி வளர்த்த குழந்தையல்லவா சந்தியா? அவள் கடிதத்தைப் படிக்க உரிமையில்லையா?' என்றார் வாத்ஸல்யத்துடன். "நானா' என்று கேட்டதற்கு வெட்கப்பட்டுப்போய்க் கடிதத்தை உரத்த குரலில் படிக்க ஆரம்பித்தார்.
அன்புள்ள அப்பாவுக்கு,
சந்தியா அநேக நமஸ்காரங்கள். இங்கு நாங்கள் அனைவரும் சுகம். தாங்களும், தாங்கள் வழிபடும் அன்னையின் அருளால் சுகமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் நேற்று ‘ லேடி டாக்டரிடம் செக் அப்புக்குப் போயிருந்தேன். குழந்தை நல்லபடியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் மே மாதம் இரண்டாவது வாரம் டெலிவரி ஆகிவிடும் என்றும் டாக்டர் கூறினார். எனக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. ஆகையால் நான் பலஹீனமாக இருப்பதால் முடிந்தவரை ‘பெட் ரெஸ்டில் இருந்தால் நல்லது என்று டாக்டர் அபிப்பிராயப்படுகிறார். அதுதான் சிறிது கவலையைத் தருகிறது. மேலும் நம் வழக்கப்படி முதல் பிரசவத்திற்குப் பெண் தாய் வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பதால் என் கணவர் நாளை என்னை அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். என் புக்ககத்தினர் மிகவும் நல்லவர்கள். ‘ உன் வீட்டிலிருந்து யாராவது வந்துதான் அழைத்துப் போகவேண்டும் என்று சொல்லாமல் என் கணவரிடம் என் மாமியார் "ராமு, பாவம் சந்தியா தாயில்லாத பெண், நீயே கொண்டு போய் சென்னையில் விட்டுவிட்டு வா' என்று சொல்லிவிட்டார். எனவே நாங்கள் இரண்டு நாளில் கிளம்பி வருகிறோம். நீங்கள் ஸ்டேஷனுக்குக் கூட வரவேண்டாம். வந்த மறுநாளே என் கணவர் ஊர் திரும்பி விடுவார். ஹரி அங்கிள் கல்கத்தாவிலிருந்து எப்பொழுது வருகிறார்? அவரிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா? எனக்கு அவரைப் பார்க்க ஆவலாயிருக்கிறது. மற்ற விபரம் நேரில்.
கடிதம் படித்து முடித்தவுடன் நண்பர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ‘ "பாரேன் அன்னையின் மகிமையை! நான் சந்தியாவைப் பார்க்க வேண்டும்' என்று சொல்லி முடித்த உடனேயே அவள் வருவதாகச் செய்தி வருகிறது. என்ன ஆச்சரியம்?' சட்டென்று ரகுநாதனின் முகத்தில் இருள் கப்பியது. "ஹரி, கடிதம் வந்த மகிழ்ச்சியில் ஒரு விஷயத்தை மறந்தே போனேன்,
சந்தியாவுக்கு ஜான்டிஸ்' என்று எழுதியிருக்கிறாள். அவள் நல்லபடியாகப் பெற்றுப் பிழைக்க வேண்டும். தவிர, நிறைமாதம் கொண்ட, உடல்நிலை சரியில்லாத, bed rest - இல் இருக்க வேண்டிய கர்ப்பிணிப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு நான் எப்படி தரிசன நாளுக்கு பாண்டி வரமுடியும்? தரிசன நாளை இதுவரை தவற விட்டதேயில்லை. அதே சமயம் தாயில்லாத பெண்ணைத் தனியாக விட்டுவிட்டுப் போனால் கடமையிலிருந்து தவறியவனாவேன் என்ன செய்வது?''
ஹரிதாஸுக்கும் அப்பொழுதுதான் உண்மை நிலை உரைத்தது. சிறிதுநேரம் அவரும் கவலைப்பட்டாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, "ரகு அன்னை இருக்கையில் ஏன் கவலைப்படுகிறாய்? இதில் அம்மாவின் முடிவுதான் முக்கியம். நாம் தரிசன நாளுக்குப் போவதா வேண்டாமா என்பதையும் அவரே முடிவெடுக்கட்டும், ஈஸ்வரன் தாயுமானவராக வந்து பிரசவம் பார்க்கவில்லையா? அதுமாதிரி அம்மாவே வந்து பிரசவம் பார்ப்பார், கவலைப்படாதே, அம்மா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? மனிதன் வராத கஷ்டங்களையெல்லாம் வந்துவிடும் என்று நினைத்துக் கவலைப்படுகிறான். நாம் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். இப்பொழுது குழந்தை சந்தியாவை மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயார் செய்து கொள்ள வேண்டும், வா முதலில் கடைக்குப்போய் அவளுக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கிக் கொண்டு, அப்படியே நாளை சமையலுக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் வாங்கி வரலாம். முக்கியமாக ஒரு நல்ல லேடி டாக்டரைப் பார்த்து அப்பாயின்ட்மென்ட் பெற்றுக் கொண்டு வரலாம்'.'
"ஆமாம், நீ சொல்வதும் சரிதான். பார்வதி உயிரோடு இருந்திருந்தால் எந்த அளவுக்குக் குழந்தையை வரவேற்பாளோ, அந்த அளவுக்குக் குறையாமல் அவளை வரவேற்க வேண்டும்.'
மறுநாள் ஆட்டோ வாசலில் வந்து நின்றது. சந்தியாவைக் கைத்தாங்கலாகப் பிடித்துப் பரிவுடன் இறக்கிவிட்டான் அவள் கணவன் ராம்குமார். ஏற்கனவே அழகிய சிவந்த அவள் முகம்
தாய்மை பூரிப்பினால் இன்னும் மெருகு ஊட்டப்பட்டு மிளிர்ந்தது. ஆனாலும் முகத்தில் சிறிது களைப்பும், பாரத்தைச் சுமக்கும் சிரமமும் வெளிப்பட்டது. சிவந்த விரல்களில் மருதாணி; கைகளில் கலகலத்த கண்ணாடி வளையல்கள், அம்பாளின் பாதங்களைப் போல் சிவந்த பாதம். உள்ளே நுழையப் போனவளைத் தடுத்து நிறுத்தியபடி "அப்படியே நில்லு சந்தியா பக்கத்து வீட்டுப் பெண்ணை ஆரத்தி கரைத்து வரச்சொல்லியிருக்கிறேன். அப்பொழுதுதான் திருஷ்டி கழியும். வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா. மாப்பிள்ளை நகருங்கள். Luggage எல்லாம் நீங்கள் தொடக்கூடாது, நான்தான் எடுத்து வருவேன் என்று சொல்லி ஆட்டோவிற்குப் பணம் கொடுக்க பர்ஸைத் திறந்த ராம்குமாரை வலுக்கட்டாயமாகத் தடுத்து பர்ஸை அவரது சர்ட் பாக்கெட்டில் சொருகிவிட்டுத் தாமே ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தார். சந்தியாவிற்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.
"ஹரி அங்கிள், என்ன இது என்னை இப்படி ஆனந்தக் கடலில் மூழ்க்கடிக்கச் செய்து விட்டீர்களே. வாசலில் மாக்கோலம், மாவிலைத்தோரணம், ஆரத்தியுடன் வரவேற்பு, உள்ளே அப்பாவின் சமையல் மணம் இங்கே வாசனை வீசுகிறது. உங்களைப் பார்த்த ஆனந்த அதிர்ச்சி'.
அவளுடைய உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை உள்ள ஒவ்வொரு அணுவும் பரவசப்படுவதை அவள் கண்ணில் பளிச்சிட்ட ஒளி வெளியிட்டது. மாப்பிள்ளை ராம்குமாருக்கும் ஏக மகிழ்ச்சி என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது, இப்படி ஒருவரால் அன்பை வெளிப்படுத்த முடியுமா? அன்று முழுக்க வீட்டில் ஒரே குதூகலம்தான், ஒருவரையொருவர் நன்கறிந்த நான்கு உள்ளங்கள் அன்பினால் பிணைக்கப்படும்பொழுது ஏற்படும் ஆனந்தத்திற்கு எல்லையேது? ரகுநாதன் விதம்விதமான மலர்களை வாங்கி வந்து சந்தியாவிடம் கொடுத்து, அம்மா! உன் கையால் மலர்களை அடுக்கி அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து நல்லபடியாக பிரசவம் ஆக வேண்டுமென்று வேண்டிக்கொள். உன் அம்மா பார்வதி இருந்தால்
கூட உன்னை அவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது. இந்தத் தெய்வீக அன்னை அதைவிடப் பன் மடங்கு அதிகமாக உன்னைக் கவனித்துக் கொள்வார்! என்று கூறினார். உடனே சந்தியா அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள்.
மறுநாள் ராம்குமார் ஊருக்குக் கிளம்பும்போது ஹரிதாஸ் அவசர அவசரமாக சூட்கேஸைத் திறந்து தம் சார்பாகச் சந்தியாவுக்கு வாங்கி வைத்திருந்த புடவை, ரவிக்கையையும், மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டி, சர்ட்டையும் வைத்துக் கொடுத்துத் தன் அன்பை வெளிப்படுத்தியதில் மிகவும் நெகிழ்ந்து போயினர் சந்தியாவும் அவள் கணவரும்.
ராம்குமார் ஊருக்குப் போய் இரண்டு நாட்களாயின. தரிசனத் தினத்திற்கு இன்னும் நான்கு நாட்களே பாக்கியிருந்தன. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் ரகுநாதன்.
"குழந்தாய், நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன், எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.'
"ஏனப்பா தயங்குகிறீர்கள்? நான் என்ன வேற்று ஆளா? என்னிடம் சொல்லத் தயங்குவதுதான் எனக்கு வேதனையைத் தருகிறது'.
"நான் தரிசன நாளுக்கு 24ஆம் தேதி பாண்டி போக வேண்டும். அதற்குத்தான் ஹரி அங்கிள் வந்திருக்கிறார். உன்னை எப்படித் தனியாகவிட்டுப் போவது என்று கவலையாக இருக்கிறது. ஆனால் நான் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டேனே என்று நீ வேதனைப்படக்கூடாது, அம்மா இருந்திருந்தால் இப்படித் தனியே விட்டுப் போவாளா என்று நீ நினைத்துவிடக் கூடாது'.'
"அப்பா, இத்தனை நாட்களாக நீங்கள் என்னைப் புரிந்து கொண்டவிதம் இதுதானா? அம்மா இறந்ததும் கண்ணுக்குக் கண்ணாக அம்மாவும், அப்பாவுமாக நீங்கள் என்ன வளர்க்க எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பீர்கள்? தாயில்லாத குறையே எனக்கு இதுவரை தெரிந்ததில்லை. நீங்கள் எனக்குக் கெடுதல் நினைப்பீர்களா? நீங்கள் போவதைப்பற்றி என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதமே, என்றாள் நிதானமாகத் தெளிவான குரலில்.
"அம்மா சந்தியா என் வளர்ப்பு வீண் போகவில்லை. மனதுக்கு எத்தனை இதமாகப் பேசுகிறாயம்மா? ஒரு 36 மணி நேரத்துக்குப் பொறுத்துக்கொள். பக்கத்து வீட்டுப் பெண்ணை உனக்குத் துணையாக வைத்துவிட்டுப் போகிறேன்'.' ‘"சரியப்பா'' அவளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிட்டு அமைதியான மனத்துடன் அன்னையின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுக் கிளம்பினர் நண்பர்கள் இருவரும்.
அற்புதமாகத் தரிசன நாளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்பிலாழ்த்தியது. சமையலறையிலிருந்து குக்கரின் விசில் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தால் சந்தியா கண்ணாடி வளையல் ஓசை கலகலக்க மிகுந்த தெம்புடன் முக்கால்வாசி சமையலை முடித்துவிட்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். என்ன இது நம்பவே முடியவில்லையே! போகும்போது ஓர் அடி எடுத்து வைக்கக்கூடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், மூச்சிறைக்க நடந்து கொண்டிருந்தவள், பெரும்பான்மையான நேரம் படுக்கையிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தவள், ஒரே நாளில் எப்படி இவ்வாறு மாறினாள்?
"என்னம்மா சந்தியா? ஒரு நாளில் எப்படி இவ்வளவு மாற்றம் வந்தது? போகும்போது இருந்த நிலை என்ன? இப்பொழுதுள்ள நிலை என்ன? என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்க்கடித்து விட்டாயே அம்மா, எப்படி நடந்தது இது?'
"சொல்கிறேன் அப்பா, ஹரி அங்கிள், நீங்கள் இருவரும் மிகவும் களைப்பாக இருப்பீர்கள். முதலில் இந்தக் காப்பியைக் குடித்துவிட்டு, குளித்துவிட்டு உங்கள் பூஜையை முடித்துவிட்டு வாருங்கள்.
அதற்குள் சமையலை முடித்துவிட்டு நானே என் கையால் உங்களுக்குப் பரிமாறப் போகிறேன். சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டே பேசலாம்'.' ஹரியும், ரகுவும் ஒருவரையொருவர் ஆனந்தமாகப் பார்த்துவிட்டு அவள் சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவள் சுவையுடன் சமைத்துப் பரிமாறிய உணவை உண்டுவிட்டு அவள் சொல்லப் போவதைக் கேட்கும் ஆவலில் அமர்ந்தனர். இன்னும் அவர்களுக்குத் தாம் காண்பது கனவா நனவா என்று புரியவில்லை. தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். சுவரில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டிக்கொண்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள் சந்தியா.
‘ "அப்பா உங்களைப் பாண்டிக்குப் போகச் சொல்லிவிட்டேனே தவிர உள்ளூர எனக்கு பயம்தான். நீங்கள் வரும்வரை உயிரோடு இருப்பேனோ என்று சந்தேகப்பட்டேன். திடீரென்று என்னையறியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். அழுதுகொண்டே என்னையறியாமல் தூங்கிவிட்டேன். அப்பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கனவு என்றும் சொல்ல முடியாது. ஒரு அயல் நாட்டுப் பெண்மணியைப் பார்த்தேன். அவர் புடவை அணிந்திருந்தார். தலையைச் சுற்றி வட்டமாக band மாதிரி ஏதோ கட்டியிருந்தார். அவர் என்னருகே வந்து அமர்ந்து என் தலையை அதீத அன்புடன் வருடிக் கொடுத்தார். அப்புறம் தன் இனிய குரலில் என்னிடம் பேசினார்.'
‘ "குழந்தாய், கவலைப்படாதே கூடிய சீக்கிரம் நீ குணமாகி விடுவாய், உனக்குச் சுகப்பிரசவம் ஆகும்''. எத்தனை நேரம் அவர் என்மேல் தன் அன்பை சொரிந்தார் என்று எனக்குத் தெரியாது. எப்பொழுது என்னை விட்டுப் போனார் என்றும் எனக்குத் தெரியாது. என்னையறியாமலேயே நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியான தூக்கத்தில் ஆழ்ந்து போனேன். மறுநாள் காலை எழுந்தவுடன் மிகவும் தெம்புடனிருந்தேன். எனக்கு நானே சிரமமில்லாமல் சமைத்துக்கொள்ள முடிந்தது. இப்பொழுது மிகவும் தெம்புடன் இருக்கிறேன்'.'
ரகுநாதன் அவசர அவசரமாகத் தன் மேஜை இழுப்பறையைத் திறந்து அன்னையின் விதம்விதமான படங்களைக் காட்டி, "அம்மா சந்தியா, நீ பார்த்த பெண்மணி இந்தப் படங்களில் இருப்பதுபோல் இருந்தாரா?'
அவற்றிலிருந்து அன்னையின் ஒரு குறிப்பிட்ட படத்தை எடுத்துக்காட்டி, "இவங்களைத்தான் நான் பார்த்தேன், இவங்க யாரு?'
"இவர்கள்தான் என்னுடைய குரு, அன்னை. இவர்களுடைய தரிசனத்திற்காகத்தான் உன்னுடைய மோசமான நிலையிலும் உன்னை விட்டுப் போனேன். அவருடைய அருளால்தான் நீ குணமாகி இருக்கிறாய்?'
உடனே சந்தியா ஆர்வத்துடன், "அப்பா எனக்கும் அவரின் படம் ஒன்று இருந்தால் கொடுங்களேன். நானும் இனி அவர்களை வணங்க ஆரம்பிக்கிறேன்'.
இது நடந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து மாப்பிள்ளை ராம்குமார் திடீரென்று வந்து இறங்கினார்.
"என்ன மாப்பிள்ளை ஆச்சரியமாக இருக்கிறது?' "மாமா, நான் தவறு செய்து விட்டேன். நான் இங்கு வந்து இறங்கியவுடன்தான் ஒரு விஷயம் என் மூளைக்கு எட்டியது. பெண்களே இல்லாத வீட்டில் நீங்கள் எப்படிப் பிரசவம் பார்க்க முடியும்? முதல் பிரசவம் பிறந்த வீட்டில்தான் பார்க்க வேண்டும் என்பது உண்மையென்றாலும், அந்த மரபைக் கட்டிக் காப்பதற்காக என் மனைவியைத் துன்புறுத்த விரும்பவில்லை. தாயில்லாத அவளுக்குத் தாயாக இருந்து என் அம்மாவே பிரசவம் பார்ப்பார். அவளை என்னுடன் தயவு செய்து அனுப்பி வையுங்களேன்'.
ரகுநாதன் இதையும் அன்னையின் அருளாக ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக மரபு வழக்கத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்காத சமூகத்தில் இது வழக்கத்திற்கு விரோதமாக இருக்கையில் அதை அன்னையின்
அருளன்றி வேறு என்ன சொல்ல? மகிழ்ச்சியுடன் சந்தியாவை அவள் கணவனுடன் அனுப்பி வைத்தார்.
அடுத்த வாரத்தில் அவருக்குத் தந்தி வந்தது. "சந்தியா சுகப்பிரசவத்தில் ஓர் அழகான ஆரோக்யமான ஆண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்' - ராம்குமார்.
தந்தி வாசகத்தைப் படித்து ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்த ரகுநாதன் அதை அன்னையின் பாதத்தில் வைத்து வணங்கி நன்றி செலுத்தும்விதமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ‘ நானிருக்க பயமேன்?' என்று கேட்பதுபோல் அன்னை படத்திலிருந்து மோகனப் புன்னகை புரிந்தார்.
‘ அன்னையின் மந்திரங்கள்' என்ற புத்தகத்திலிருந்து கீழ்க்கண்ட வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.
இறைவனின் அருளின் மேல் உள்ள நம்பிக்கையின் மூலம் எல்லா இடையூறுகளையும் எதிர்த்துச் சமாளிக்க முடியும்.