ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம்.
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------
..............இந்த 93 முறைகளையும் விவரித்து எழுதினால் கட்டுரை நீளும். எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை என்பதால், கேள்வி எழும் இடங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன். மீண்டும் மையக் கருத்தைக் கூறுகிறேன். நாம் ஓரளவு அன்னையை அறிந்துள்ளோம். அவரைப் பற்றி முழுமையாக அறிவது கடினம். யோகம் பயின்றால் தெரியும். ஏதோ காரணத்தால் விவரமாகத் தெரியும் பொழுது "இவையெல்லாம் நமக்கில்லை" என மலைப்பாகத் தோன்றும். அது உண்மை இல்லை. 30 ஆண்டுகட்கு முன் கனவு காணமுடியாதவை இன்று ஏராளமான பேருக்குப் பலிக்கிறது.
அன்னையின் சிறப்பை உச்சக்கட்டத்தில் அறிந்தவர் மலைத்துப் போவதற்குப் பதிலாக அதுவும் நமக்கு முடியும் எனக் கூறும் வாயிலாக இக்கட்டுரை எழுதுகிறேன். பேராசையால் பெரிய விஷயத்தைக் கருதுபவர் வேறு. அவர் என் பிரச்சினையில்லை. நம்மைப் போன்றவர் எட்டிய பெரிய நிலையை நாமும் எட்டவேண்டும் என்பது நியாயமான எண்ணம். அதற்குரிய முயற்சி பலிக்கும் என்பதை இக்கட்டுரை கூறும். அதற்குரிய முறை எது என்ற கேள்விக்கு - எதுவும் முறை என்பது பதில்.
முறை எதுவானாலும், பூரணமாகச் செய்தால் பலிக்கும் என்பதே கருத்து.
வாழ்வில் அனைவரும் விரும்புபவற்றை இலட்சியம் கருதி நினைக்க, பேச மனம் கூசும். இந்தியர் பணம் சம்பாதிக்க முழுவதும் விரும்பினாலும் அதை இலட்சியமாகப் பேச கூச்சப்படுகின்றனர். நான் கூறுவது வேறு. சுபிட்சம், சௌபாக்கியம், வசதி, செல்வம் (prosperity) என்பவை தெய்வ அம்சமுடையவை. நாம் அவற்றை லக்ஷ்மிகரமானவை என்கிறோம். அன்னையைப் பின்பற்றிச் சம்பாதிக்கும் செல்வம் அருட்பிரசாதம், அவரையடைய உதவும். அதற்குப் பெருமைப்படுவது ஞானம்; கூச்சப்படுவது அஞ்ஞானம். எளிய மனிதர் மனத்தில் உள்ள நேர்மையான அபிலாஷைகளைக் கீழ்க்கண்டவாறு கூறலாம். இவற்றுள் எந்த ஒரு முறையையும் (perfect) சிறப்பாகப் பின்பற்றினால் கீழேயுள்ள எண்ணங்கள் பலிக்கும். கீழே கூறியவர் பலர் கடைப்பிடித்த முறைகள் நமக்கு உதவா. அவர் எய்திய லட்சியங்களை நாம் அன்னை முறைகளால் எய்துவது யோக இலட்சியம்.
- வர்கீஸ் குரியன் என் பால்ய நண்பன், நான் அவர்போலாக முடியுமா? குரியனுக்கும் எனக்கும் சந்தர்ப்பம் ஒன்றே. அவர் சாதித்ததை நான் சாதிக்க வேண்டும்.
- நான் ஹோட்டல் நடத்துகிறேன். அது சரவண பவன் ஆகமுடியுமா? பம்பாயில் பியூன் மந்திரியானார். வேறொரு பியூன் உபஜனாதிபதியானார்.
- நான் பியூன் வேலை செய்கிறேன். நான் அதுபோல் உயரவேண்டும்.
- நானும் நாராயணமூர்த்திபோலக் கம்பெனி ஆரம்பித்தேன். அவர் சாதித்ததை நான் சாதிக்க வேண்டும்.
- என்னுடன் படித்தவர் I.A.S ஆனார். நான் ஆக முடியுமா?
- என்போன்றவர்போல நான் உயர முடியும் என்று படிக்கிறேன். அதை நான் சாதிக்கும் முறையை அறிய விரும்புகிறேன்.
93 முறைகளுக்குரிய விளக்கம்:
முறை :
காரியம் கூடிவரும்பொழுது மேலே போக வேண்டும். Raise the rising aspiration. காரியம் கூடிவந்தவுடன் நாம் அனைத்தையும் மறந்து காரியத்தைப் பார்க்கிறோம். அந்த நேரம் நெஞ்சு ஆர்வமாக இருப்பது தெரியும். அந்த ஆர்வம் உயரும்படி உள்ளே மனம் செயல்பட வேண்டும்.
முறைக்கான விளக்கம் :
காரியம் கூடிவரும் நேரம் பெரிய நேரம். பெரிய நேரம் வந்தது பெரிய மனநிலை எழுந்ததால். பெரிய நேரம் தொடர நாம் பிரியப்படுகிறோம். அது தொடர பெரிய மனநிலைத் தொடர வேண்டும். காரியம் கூடிவரும் அதே க்ஷணம் மனம் பழைய நிலைக்குப் போகும்.
நாத்திகவாதி உள்பட காரியம் நடக்க வேண்டியபொழுது தங்கள் பழக்கங்களைக் கைவிட்டு
,காரியத்திற்குரிய முறையை நாடுவது, அது நம்மை மறந்து ஆண்டவனை நம்புவது. நமக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அது தெய்வ நம்பிக்கை. இது பெரிய ஆன்மீக உண்மை. பொதுவாக நாம் அறியாதது. அவனின்றி அணுவும் அசையாது என்பதை விளக்குவது இது. எதுவும் அவனிச்சையால்தான் நடக்கிறது. ஆண்டவனை நிந்திப்பவர்களும் அவனால் மட்டுமே செயல்படுகிறார்கள் என்பது உண்மை. காரியம் நடக்கும்வரை நாம் காரியத்திலிருக்கிறோம். அது முடிந்தவுடன் பழைய மனநிலைக்கு வருவோம். பழைய மனநிலையில் வாழ்வை நடத்தலாம். ஆண்டவனையடைய முடியாது.
வாழ்வில் சாதனை என்பது ஆண்டவனையடைவது. வாழ்க்கையில் சாதிக்க முடியாதவன் ஆண்டவனை அடைய முடியாது; நினைக்கவும் முடியாது. அவனால் வாழ்வை மட்டுமே நினைக்க முடியும். அன்னையை அறிவது பாக்கியம் என்பதின் பொருள் அதுவே. அருகிலேயே இருந்தாலும் அறிய முடியாது.
காரியம் கூடி வருவது,
திருமணம்போல ஒரு விசேஷம் குறையின்றி நடப்பது,
திருமணம் ஆயுள் முடிய அற்புதமாக அமைவதாகும்.
காரியம் முடியும் நேரம், கடவுள் வரும் நேரம்.
காரியம் முடிந்தபின் அதே மனநிலை (concentration) இருக்க முயன்றால் அது நமக்கு மறந்துபோவதுத் தெரியும்.
.......................தொடரும்.